சிறுநீரகக் கோளாறுகள் அகலும்!

ஊட்டத்தூர் ஸ்ரீசுத்த ரத்னேஸ்வரர்
வியாதிகளே வராமல் இருக்க வேண்டும் என்றால், புலன் கட்டுப் பாடு, உடற்பயிற்சி மட்டும் போதாது. இவற்றைத் தாண்டி இறைவனின் அருளாசியும் வேண்டும்.
நித்தமும் ஆலயம் சென்று இறைவனை ஆத்மார்த்தமாக வணங்கி வந்தாலே, நோய் நொடி இல்லா நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். நம் முன்னோர்கள் அப்படித்தானே வாழ்ந்தார்கள்!
‘பலன்களை அருளும் பரிகாரத் தலங்கள்’ வரிசையில் இந்த இதழில் தரிசிக்கக் கூடிய ஆலயம், இன்றைக்குப் பலரும் அவஸ்தைப்படக் கூடிய சிறுநீரகக் கோளாறுகளுக்கு நிவாரணம் அருளுகின்ற அற்புதமான ஒரு சிவாலயம்
திருச்சிக்கு அருகே ஊட்டத்தூர் என்கிற கிராமத்தில் அமைந்திருக்கிறது. முன் காலத் தில் ‘ஊற்றத்தூர்’ என்று வழங்கப்பட்டு இப்போது ‘ஊட்டத்தூர்’ ஆகி உள்ளது.
எங்கே இருக்கிறது ஊட்டத்தூர்?
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்து பாடாலூர் வரும். இங்கிருந்து புள்ளம்பாடிக்குப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவு பயணித்தால் ஊட்டத்தூர் வந்து விடும்.
திருச்சியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் ஊட்டத்தூருக்கு ஐந்து சர்வீஸ் நகரப் பேருந்துகள் உள்ளன.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பிய மன்னன் ராஜராஜசோழன் கட்டிய பிரம்மாண்ட ஆலயம் இது. ரொம்பவே விஸ்தாரமாகக் கட்டி இருக்கிறான்.
எத்தனையோ ஆண்டுகளாக ஏற்கெனவே வழிபாட்டில் இருந்து, சிதிலமாகி - மண்ணோடு மண்ணாகிப்போன இந்த ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்கிற பெரும் பேற்றை ஈசனே ராஜராஜனுக்கு வழங்கினான்.
ஒருமுறை இந்த ஊர் (ஊட்டத்தூர்) வழியே ராஜராஜன் செல்ல வேண்டி அந்தப் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள் படை வீரர்கள். அப்போது புதர் போன்ற ஓரிடத்தில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீரிட்டுக் கிளம்ப ஆரம்பித்தது. பயந்து போன படை வீரர்கள் அந்த இடத்தைக் கவனமாகத் தோண்டிப் பார்த்தனர் - உள்ளே சிவலிங்கம்!
மண்வெட்டி பட்டு சிவலிங்கத்தின் தலை பாகத்தில் இருந்து ரத்தம் பீரிடுகிற விஷயம் ராஜராஜனுக்குப் போனது. சிவ பக்தனான மன்னன் அதிர்ந்து போய் விரைந்து வந்தான். பூமிக்குள் இருந்து கிடைத்த சிவ லிங்கத்தைத் தரிசித்தான். தலை பாகத்தில் வெட்டுப் பட்டதற்கு இறை வனிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டான்.
அதன்பின், அதே இடத்தில் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பிரமாண்ட ஆலயம் எழுப்பினான். இதுவே இன்றைக்கு நாம் தரிசிக்கும் ஊட்டத்தூர் அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் ஆலயம்.
சுயம்பு திருமேனி. தூயமாமணீஸ்வரர், மாமணீஸ்வரர் என்கிற திருநாமமும் இவருக்கு உண்டு.
இன்றைக்கும் இந்த சிவலிங்க பாணத்தின் உச்சிப் பகுதியில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட தழும்பைக் காணலாம்.
ராஜராஜனுக்குப் பிறகு ஆண்ட சோழர்கள், பாண்டியர்கள், விஜய நகர மன்னர்கள் போன்றோரும் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்துள்ளார்கள்.
ஆலயத்தில் அருளும் பிரதான ஈசனான சுத்த ரத்னேஸ்வரரை விட இன்னொரு திருமேனிக்கு இங்கே சிறப்பு அதிகம்.
அவர்தான் - ஸ்ரீநடராஜப் பெருமான்.
வேறு எங்கும் அதிகம் தரிசித்திட முடியாத கல்லால் ஆன நடராஜர். அது வும் ‘பஞ்ச நதனம்’ என்று சொல்லப்படும் விசேஷக் கல்லால் ஆனவர். இந்தக் கல் மிகவும் ஆற்றல் கொண்டது.
பார்த்தாலே பிரமிக்க வைக்கும் சிற்ப வடிவமைப்பு. எட்டடி உயரத்தில் - அருகில் சிவகாமி அன்னையோடு அற்புதக் காட்சி தருகிறார் இந்த நடராஜர்.
ஊட்டத்தூரில் அருள்கின்ற அருள்மிகு நடராஜப் பெருமான், சகலவிதமான நோய்களையும் தீர்த்து அருள்கின்றவர். பிணிகளைப் போக்கி அருள்கின்ற வரப்ரசாதி என்று ஆலய அர்ச்சகர் பல்வேறு நிகழ்வுகளை உதாரணங்களாகக் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக - சிறுநீரகத் தொந்தரவுகளால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள், நடராஜப் பெருமானை
வணங்கி, அனைத்துப் பிரச்னைகளும் அகலப் பெறுகிறார்கள்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இங்கே எப்படி வழிபட வேண்டும்?
அத்தகைய அன்பர்கள் இங்கே வந்து ஆலயத்திலேயே விற்பனைக்குக் கிடைக்கும் வெட்டிவேரை ஒரு கிலோ வாங்கிக் கொள்ள வேண்டும். அவற்றை அர்ச்சகர்கள் சொல்கிறபடி 48 துண்டுகளாக்கிக் கொண்டு ஒரு மாலை போல் கட்ட வேண்டும். இந்த வெட்டிவேர் மாலையை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
வழிபாடுகள் பூர்த்தி ஆகி, ஆரத்தி ஆன பின், நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட வெட்டிவேர் மாலையைச் சம்பந்தப்பட்ட வருக்கே பிரசாதமாகக் கொடுத்து விடுவார் ஆலய அர்ச்சகர்.
ஆலயத்தில் சுத்த ரத்னேஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரில் ‘பிரம்ம தீர்த்தம்’ என்ற கிணறு காணப்படுகிறது. பெரும்பாலும் எந்த ஒரு சிவாலயத்திலும் ஈசனுக்கு நேராக தீர்த்தம் காணப்படாது. ஆனால், இது இந்த ஆலயத்தின் சிறப்பு.
பிரம்மதேவன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்தைப் போக்கிக்கொள்வதற் காக சுத்த ரத்னேஸ்வரரை வணங்கி, நிவர்த்தி பெற்றான். அப்போது அவன் ஸ்தாபித்த தீர்த்தமே ‘பிரம்ம தீர்த்தம்’. உலகில் உள்ள புனிதமான தீர்த்தங்களை இங்கே கொண்டு வந்து கலந்தான் பிரம்மதேவன் என்றும் சொல்லப் படுகிறது.
எந்த ஒரு கோடையிலும், காவிரி ஆற்றில் நீர் வற்றினாலும், பிரம்ம தீர்த்தக் கிணற்றில் நீரானது வற்றவே வற்றாது. இந்தப் புனிதமான நீரைப் பருகித் தான் ஒருமுறை மன்னன் ராஜராஜனுக்கு இருந்த நோய் முற்றிலும் அகன்றதாம். அதன்பின் அவனது இறுதிக்காலம் வரை நோயினால் படுக்கவே இல்லை. அப்பேர்ப்பட்ட சிறப்பு பிரம்ம தீர்த்தத்துக்கு உண்டு.
வெட்டிவேர் மாலையைப் பிரசாதமாகப் பெற்ற பக்தர்கள் இந்த பிரம்ம தீர்த்தத்தில் அர்ச்சகர் சொல்கின்ற அளவு தீர்த்தத்தை ஒரு கேனில் எடுத்துச் செல்ல வேண்டும்.
வீட்டில் தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் சுத்த ரத்னேஸ்வரர் மற்றும் நடராஜப் பெருமானை மனமார வணங்கி, சுத்தமான ஒரு தம்ளரிலோ அல்லது சிறு பாத்திரத்திலோ இந்த நீரை விட வேண்டும். அதில் ஒரு துண்டு வெட்டிவேரைப் போட்டு விட வேண்டும்.
மறுநாள் எழுந்த பின் பல் விளக்கி விட்டு, வீட்டு பூஜையறைக்குச் சென்று நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு, இந்த நீரை ஒரு சுத்தமான துணியில் வடிகட்ட வேண்டும். பிறகு, வெறும் வயிற்றில் இதைப்பருக வேண்டும்.
தண்ணீரில் ஊறிய வெட்டிவேர் துண்டைத் தனியே பத்திரப்படுத்தவும். இப்படித் தொடர்ந்து 48 நாட்கள் பக்தி உணர்வுடன் பருகி வந்தால்,
சிறுநீரகக் கோளாறுகள் முற்றிலும் நீங்கி, பரிபூரண ஆரோக்கியத்தை அடையலாம்.
பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் நாட்களில் இந்த நடைமுறையைத் தவிர்த்து விட வேண்டும்.
48 நாட்கள் முடிந்த பின், தினமும் சேகரித்த வெட்டிவேர்த் துண்டுகளை எடுத்துப் போய் ஏதேனும் ஒரு நீர்நிலையில் சேர்த்து விடவும்.
வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் இந்த ஆலயம் வந்து, சுத்த ரத்னேஸ்வரரையும், நடராஜப் பெருமானையும் வணங்கி, தங்கள் நோய் அகலப் பெறுவதைக் காண முடிகிறது. நிவாரணம் பெற்ற வர்கள் மீண்டும் ஆலயம் வந்து சுத்த ரத்னேஸ் வரருக்கும், நடராஜப் பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனைத் தெரிவிக்கிறார்கள்.
ஆலயத்தில் இருக்கின்ற அம்பாளின் திருநாமம் - அகிலாண்டேஸ்வரி.
சிவாலயத்துக்கு உண்டான அனைத்துத் திருச்சந்நிதிகளும் இங்கே ஒருங்கே காணப்படுகின்றன.
தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 4.30 முதல் 8 மணி வரையிலும் ஆலய நடை திறந்திருக்கும்.

Comments