துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்!

பிறையூருஞ் சடைமுடி எம்பெருமான் ஆரூர்   
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே.


கருத்து: பிறை தவழும் சடைமுடி கொண்ட சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப் புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடராது.

திருநாவுக்கரசர் அருளிய 6-ம் திருமுறை 71-வது பதிகத்தில், மகா சக்தியும் அதிசயங்களும் கொண்ட துடையூர் தலத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். ஈசன் இருந்து அருளும் தலங்களில், ‘ஊர்’ என முடியும் தலங்களையெல்லாம் தொகுத்து அப்பர் பெருமான் பாடியுள்ளார்.
அளவில் மிகச் சிறிய கிராமம் துடையூர். அதில் அமைந்திருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வரர் ஆலயமும் பரப்பளவில் மிகவும் சிறியது. ஆனால், இந்த ஆலயத்தில் நிறைந்திருக்கும் அற்புதங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின் சக்தியும் மகத்தானவை.

நாம் சென்ற இதழில் பார்த்த திருவாசி கிராமத்துக்கு மிக அருகில் (ஒரு கிலோமீட்டர் தூரத்தில்) அமைந்துள்ள துடையூர்,  காலப்போக்கில் மருவி இப்போது தொடையூர் என்று அழைக்கப் படுகிறது. திருச்சிக்கு அருகே, காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது திருவாசி. அதன் அருகிலேயே ஓடும் அய்யனாற்றின் தென்கரையில் இருக்கிறது துடையூர்.

தினமும் வழிபட வரும் மகரிஷி!

கோயிலை வலம்வர 10, 15 நிமிடங்கள்கூட ஆகாது. ஆனால், உள்ளே நுழைந்துவிட்டால், மணிக்கணக்கில் நின்று தரிசிக்கவும் ரசிக்கவும் ஏராளமான இறை மூர்த்தங்களும் கலைநயமிகு சிற்பங்களும் உள்ளதால் வெளியே வரவே மனம் வராது. இக்கோயிலில் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகராக இருக்கும் குடும்பத்தின் தலைமுறை யில் இப்போது அர்ச்சகராக இருப்பவர் ஹரிஹர சிவாச்சார்யர். 300 வருடங்களாக இவருடைய முன்னோர்களில் தொடங்கி இவருடைய தலைமுறையினர்தான் இக்கோயிலில் அர்ச்சகர் களாக இருக்கிறார்கள்.

‘‘துடையூர் என்னும் சக்தி வாய்ந்த இந்த வைப்புத் தலத்தை அப்பர் பெருமான் மட்டுமல்ல; அகத்தியரும் பாடியிருக்கிறார். ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கிறார். சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு, ஜோதிடக் கலையில் தலைசிறந்த நிபுணனாகத் திகழ்ந்தான் என்றும் துரியோதனின் மனைவி பானுமதி இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அசல நிசுமித்ர மகரிஷி என்பவர், இன்றும் தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வருவதாக ஐதீகம் உண்டு. அதுமட்டுமல்ல, துரியோதனின் தாயார் காந்தாரி இந்த ஆலயத்துக்கு வந்து விளக்கு பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, விளக்கு பூஜையைத் தொடங்கி வைத்த திருக்கோயிலும் இதுதான். இங்கு பல்லவர்களுடைய சிற்பங்கள் இருந்தாலும், சோழ மன்னர்கள்தான் இந்தக் கோயிலைக் கட்டியது’’ என்று இந்தத் தலத்தின் பெருமைகளை விவரித்தார் ஹரிஹர சிவாச்சார்யர்.
வாத முனீஸ்வரர்

கோயிலின் நுழைவாயிலிலேயே ஆரம்பித்துவிடுகிறது இத் தலத்தின் மகத்துவம். ஆமாம்... கோயிலின் முதல் வாசலின் அருகில் இருக்கும் முனீஸ்வரர் அவ்வளவு விசேஷமானவர். சிவன் கோயில், பெருமாள் கோயில் எதுவாக இருந்தாலும் எல்லா கோயில்களிலும் கண்டிப்பாக முனீஸ்வரர் இடம் பெற்றிருப்பார். அவர்தான் முதல் காவல் தெய்வம். இங்கிருக்கும் முனீஸ்வரருக்கு, வாத முனீஸ்வரர் என்று பெயர். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் உள்ள அனைத்து வலி, வாதம், வியாதிகளைக் குணமாக்கும் வல்லமை படைத்தவர். அதனால்தான் இவரை வாத முனீஸ்வரர் என்று அழைக்கிறார்கள்.

‘‘சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் இவருக்கு நல்லெண்ணெயும் மூலிகைத் தைலமும் கலந்து அபிஷேகம் செய்து, அதை எடுத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள். தினமும் இரவில் அதை உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் அல்லது உடல் முழுவதும் பூசிக்கொண்டால்  உடல் அசௌகரியம் மறைந்து நிவாரணம் கிடைத்துவிடுவதை நாங்கள் அனுதினமும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். விசேஷமான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அந்தத் தைலத்தின் மருத்துவக் குணமும் அதற்கு மேலே முனீஸ்வரரின் சக்தியும் சேர்ந்து உடம்பின் வாத சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்க்கின்றன’’ என்கிறார் சிவாச்சார்யர்.

நிலமளந்த கோயில்!


வாத முனீஸ்வரரைத் தரிசித்து உள்ளே சென்றால் நந்தியெம்பெருமான் இருக்கிறார். மற்ற சிவாலயங்களில் இருப்பதுபோல தலையைச் சாய்த்திருக்காமல், தலையை நேராக வைத்தபடி இருக்கிற இந்த நந்தி, வித்தியாசமான அம்சம். அவரை வணங்கிச் செல்கிறோம். அர்ச்சகர் கோயிலின் பெருமைகளைக் கூறியபடி வருகிறார்.

‘‘முற்காலத்தில் இது மிகப் பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் எல்லாம் அழிந்து, இந்த அளவில் வந்து நிற்கிறது. அந்தக் காலத்தில், இந்தக் கோயிலில் காலசந்திக்கு மட்டும், கோயிலில் உள்ள விளக்குகளில் தீபம் ஏற்ற சுமார் எட்டு லிட்டர் எண்ணெய் செலவானதாகக் கல்வெட்டுகளில் இருக்கிறது. ஒருவேளை பூஜைக்கு மட்டும் இவ்வளவு எண்ணெய் செலவாகியிருக்கிற தென்றால், எவ்வளவு பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும். தெற்கே கொள்ளிடமும் வடக்கே அய்யன் வாய்க்காலுமாக, அதன் நடுவே இந்தக் கோயிலுமாக ஒரு காலத்தில் எழில்மிகுந்த பகுதியாக இருந்திருக்கிறது. 13-ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட கோயில் இது. ‘நிலமளந்த கோயில்’ என்றும் சொல்வார்கள்.
விஷ பாதிப்பை நீக்கிய ஈஸ்வரன்

இங்கேயிருக்கும் சுவாமி அருள்மிகு கடம்பவன நாதர் என்றழைக்கப்படும் விஷமங்களேஸ்வரர். இந்தக் கோயிலுக்கு ஒரு தல வரலாறு உண்டு. எப்போதும் சிவனையே சிந்தையில் நிறுத்தி, அனுதினமும் அவரையே தியானிக்கும் சிவனடியார் ஒருவர் இந்தக் கோயிலுக்கும் தினமும் வந்து ஈசனை வணங்கிச்செல்வார். அதன் பிறகுதான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்.

அப்படி ஒருமுறை சிவதரிசனம் முடிந்து பிராகாரம் வலம் வரும்போது, சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகே அவரை ஓர் அரவம் தீண்டிவிடுகிறது. ‘உன்னை மட்டுமேதானே வணங்கினேன் ஈஸ்வரனே... எனக்கு இந்த நிலையா?’ என்று கதறி, கண்ணீர் விட்டழுத சிவனடியார், ‘சிவமே கதி’ என்று நினைத்தவராக அங்கேயே அப்படியே கிடந்தார்.

என்ன அதிசயம். அவருடைய அன்பில் நெகிழ்ந்த பெருமானார் அவர் உடலில் ஏறியிருந்த பாம்பின் விஷத்தை முறித்து, அவரை உயிர் பிழைக்க வைத்தார். அதனால், விஷத்தை முறிப்பதற்கான சக்தி வாய்ந்தவர் இந்தப் பெருமான்.  வண்டுக்கடி மற்ற விஷ ஜந்துக்களின் கடியால் அவதிப்படுபவர்களுக்கான நிவர்த்தி தலம் இது. விஷக்கடி என்று வரும் பக்தர்களுக்கு, மூலவருக்கு விபூதியால் அர்ச்சனை செய்து அந்த விபூதியை பிரசாத மாகத் தருகிறோம். விபூதியை விஷக்கடிப்பட்ட இடத்தில் தடவிக்கொண்டு, உள்ளுக்கும் சாப்பிட வேண் டும். விஷத்தின் பாதிப்பு தன்னால் குறைவதைக் காண லாம்.. எல்லாம் அவன் சக்தி’’ என்று பக்தி பரவசத்தோடு கூறினார் ஹரிஹரன்.

பரமனுக்குப் பன்னிரு தீபங்கள்

‘`இத்தலம் ஒரு விஷக்கடி நிவர்த்தித் தலமாகக் கருதப்படுவதால், சுவாமிக்கு விஷமங்களேஸ்வரர் என்று திருப்பெயர். இவ்வூரில் விஷ ஜந்துக்கள் யாரையும் தீண்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விஷமங்களேஸ்வரரை ஒரு தாம்பாளத்தில் 12 தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால் விஷக்கடி துன்பங்கள் மற்றும் விஷக்கடியை விட கொடியதாய் கருதப்படும் பகைமை, குரோதம், விரோதம், பொறாமை, பேராசை, வன்முறை போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்தி பெறக்கூடும்.
கருவறையின் வாயிலிலே கனகம்பீரமாக துவார பாலகர்கள் காவல் நிற்க, மூலவர் கடம்பவனேஸ்வரர் சுயம்பு லிங்க மூர்த்தியாகக் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தைத் தன் கழுத்தில் நிறுத்தி உயிர்களைக் காப்பாற் றிய சிவபெருமான் இவர். கொடுமையான விஷத்தையே மங்கலமாக மாற்றியதால் விஷமங்களேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியிருக்கிறது அம்பாள் சந்நிதி. அம்பிகையின் திருநாமம் வீரமங்களேஸ்வரி என்ற மங்களநாயகி (மங்களாம்பிகை). சுவாமி, அம்பாள் இருவர் பெயர் களிலும் மங்கலம் இருப்பதால், இங்கு வந்து தரிசிப்ப வர்களுக்கு அனைத்து மங்கலங்களும் கிடைக்கும் என்பது உறுதி’’ என்றவர் தொடர்ந்து இன்னும் சில விசேஷங்களையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘அது மட்டுமல்ல; இங்கிருக்கும் அம்பாள், செவ்வாய் தோஷத்தையும் செவ்வாய் பார்வையினால் ஏற்படக் கூடிய இன்னல்களையும் போக்கக்கூடியவள். செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளுக்குச் செவ்வரளி மாலை சார்த்தி, 11 தீபம் ஏற்றி, 11 முறை பிரதட்சிணம் வந்தால், இவளிடம் கேட்டது கிடைக்கும். எத்தனை வாரங்கள் வர வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பம். ஆனால், தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கிடைக்கும்’’ புன்முறுவலோடு கூறுகிறார் சிவாச்சார்யர்.

அவரே தொடர்ந்து, ‘‘நாம் போகும் சிவன் கோயில்களில் இரண்டு அல்லது மூன்று சுவாமிகளைத் தம்பதி சமேதராகக் காணலாம். ஆனால், இங்கே ஆறு தெய்வத் தம்பதியர் அருள் பாலிக்கிறார்கள். எனவே, மிகவும் விசேஷமான தலம் இது. முக்கியமாகக் கல்யாணத்துக்கான பிரார்த்தனை தலமாகவும் இருக்கிறது. நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்பவர்கள், திருமணத் தடை இருப்பவர்கள் இங்கே வந்து, தங்களுடைய ஜாதகத்துடன் மஞ்சள்கிழங்கு, எலுமிச்சைப்பழம் வைத்து, குளித்துவிட்டு ஈர ஆடையுடன், கல்யாண சுந்தரேஸ்வரரை 11 முறை வலம் வந்து, 11 தீபம் ஏற்ற வேண்டும். இதுபோல ஐந்து வாரங்கள் தொடர்ந்து செய்தால், உடனடியாக நல்ல வரன் அமைந்து திருமணம் கூடிவரும் என்பது அழுத்தமான நம்பிக்கை. இந்தப் பிரார்த்தனையைச் செய்வதற்கு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் வர வேண்டும்’’ என்றார்.
ஆலயத்துக்குள் இருக்கும் அதிசயங்களைத் தரிசித்துவிட்டு, வெளியேவந்தால் அங்கே இருக்கும் புற்று நம் கண்களில் தென்படுகிறது. இதற்கு பூஜை செய்து வழிபட்டால் நாகதோஷங்கள் தீர்வதாக பக்தர்களின் நம்பிக்கை. அம்மன் தலங்களில் காணப்படும் புற்று, ஒரு சிவாலயத்தில் காணப் படுவதும் அதிசயம்தானே! நல்ல வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் பாம்புப் புற்றுக்கு உரித்தான விஷ்ணு நட்சத்திரத் தேவதையையும், காளிங்கன், சங்கமவள்ளி என்ற நாகதேவதை களையும் வழிபட கல்விக்குரிய நிரந்தரப் பணி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலுக்கு வேறொரு சிறப்பும் உண்டு. பொதுவாக  ஒரு தலத்துக்கான எல்லை தெய்வம் ஊரின் எல்லையில் கோயில் கொண்டிருக்கும். இங்கே இந்தத் தலத்தின் எல்லை தெய்வமான கலிங்காயி அம்மன், இந்தக் கோயிலுக்குள்ளேயே சந்நிதி கொண்டிருக்கிறாள்.

மணப்பேறு, மகப்பேறு, கல்வி, வேலை, ஆரோக்கியம் இப்படி அனைத்து வரங்களையும் ஒருசேர வழங்கும் அற்புதத் தலமான துடையூர், வஸ்திர தானம் செய்வ தற்கும், குழந்தைகளுக்கு முதன் முதலில் அரைஞாண் கொடி கட்டுவதற்கும், விளக்கு பூஜை செய்வதற்கும் உரிய சிறப்பான தலம். இப்படி ஒவ்வோர் அடிக்கும் ஓர் அதிசயத் தைத் தன்னுள் அடக்கியிருக்கும் அற்புதமான தலம் துடையூர். மேலும், இது தாளம் பிறந்த ஊர் என்பதால், சங்கீதத்துக்கும் முதன்மையானது.

துன்பப்பட்டு வருவோரின் துயர்களைத் துடைத்தெறியும் துடையூர், அனைவரும் வாழ்வில் அவசியம் ஒருமுறை சென்று தரிசிக்க வேண்டிய தலம். குறை களைத் தீர்க்கும் கோயிலாக மட்டுமல்லாமல், கண்களுக்குக் கலை விருந்து அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தெய்வ மூர்த்தங்களும், மற்ற சிற்பங்களும் அமைந்திருக்கும் ஆலயமாக இருப்பதால், பல்வேறு வகைகளில் சிறப்பான தலமாக விளங்குகிறது துடையூர்.

‘துடையூர் பெருமானைத் துதிப்போரின் வலமேறும் புடைத்த பெருந்துன்பம் புல்லாய்ப் போகுமே!’ என்று அகத்தியர் போற்றிப் பாடியுள்ள துடையூர் சென்றுவருவோம். தொடரும் இடர்கள் யாவும் தொலைந்து போகட்டும்!
.


வீணாதர தட்சிணாமூர்த்தி

சுவாமி சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் காட்சி தருகிறார் ‘வீணாதர தட்சிணாமூர்த்தி’. இவர் கரங்களில் ஏந்தியிருப்பது ‘திகி சண்டளா வீணை’ என்பதால், ‘திகி சண்டளா வீணாதர தட்சிணாமூர்த்தி’ எனப்படுகிறார். இதுபோன்ற நின்ற தோற்றம் மிக அரிதாகக் காணப்படுவது.

‘‘இவர் கண்களுக்கு ஒளி தரும் நரம்புகளைக் காக்கக் கூடியவர் என்பது நம்பிக்கை. கண் பிரச்னை உள்ளவர்கள், இங்கே வந்து இந்த சுவாமியை தரிசித்து மனதாரப் பிரார்த்தித்தாலே போதும். பார்வை பிரகாசமாகும். இந்தச் சந்நிதியில் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் விசேஷமானவை. உயர்கல்வி, குடும்ப நலன், மருத்துவச் சிகிச்சை போன்ற வேண்டுதல்கள் இத்தினங்களில் வழிபாடு செய்தால் நிறைவேறுகிறது...’’ என்கிறார் ஹரிஹரன்.



தேவ மயிலுடன் தேவ சேனாபதி

பொதுவாக முருகன் வைத்திருக்கும் மயிலில் தேவ மயில், அசுர மயில் என இரு வகைகள் உள்ளன. மயிலின் முகம் வலது புறம் இருந்தால் தேவ மயில். இடது புறமாக அதன் முகம் இருந்தால் அது அசுர மயில். இங்கே தேவ மயிலுடன், அதை அணைத்தபடி காட்சி தருகிறார் முருகன்.

சிவ துர்கை

சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய, சந்திரர்கள் காட்சி தருவர். இங்கோ சூரியன் உஷா, பிரத்யுஷா ஆகிய தேவியரோடு திருமால் அம்சமாக, சூரிய நாராயணராக வழிபடப்படுகிறார். வாயு மூலையில் தாயாரை மடியில் வைத்தபடி ஸ்ரீலட்சுமி நாராயணர் காட்சி தருகிறார். துர்கை தாமரை பீடத்தில், தீ ஜ்வாலைகளுடன்  சிவ துர்கையாகக் காட்சி தருகிறாள். வயிறு தொடர்பான கோளாறுகள் மற்றும் கர்ப்பம் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பவர்கள், இந்த சிவதுர்கைக்குப் பசும் வெண்ணெயைச் சார்த்தி, அதை எடுத்துச் சென்று தினமும் சிறிதளவு சாப்பிட கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.

யோக ஞான சரஸ்வதி

வீணாதர தட்சிணாமூர்த்தி அருளும் கோஷ்டத்திலேயே வீணை இல்லாமல் அருள்கிறாள் கலைவாணி. கரங்களில் வீணை இல்லாமல், அதற்குப் பதிலாக சின்முத்திரை, கமண்டலம், அட்ச மாலை மற்றும் சுவடி ஏந்தியவாறு, பத்மாசன கோலத்தில்,  குடையின்கீழ் அமர்ந்த இந்த ஞான சரஸ்வதியைக் காணக் கண்கோடி வேண்டும். சரஸ்வதியின் நாயகரான பிரம்மாவும் இக்கோயிலில் அருள்புரிகிறார்.

ஸ்ரீஉமா ஆலிங்கன மூர்த்தி

கருவறையின் பின்புற கோஷ்டத்தில் சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒன்றான உமா ஆலிங்கன மூர்த்தியைத் தரிசிக்கலாம். சிவபெருமான், வலது கையால் சின் முத்திரை காட்டியும் இடது கையால் பார்வதி தேவியை அணைத்தபடியும் அபூர்வமாகக் காட்சியளிக்கிறார். சுவாமியின் இடது கால் சுண்டுவிரல், அம்பாளின் வலது காலின் மேலிருப்பதை நன்கு உற்றுக் கவனித்தால் பார்க்கலாம். தம்பதி ஒற்றுமை, மணப்பேறு மற்றும் மகப்பேறு கிடைக்க அருள்புரிபவர் இந்த மூர்த்தி.

எப்படிச் செல்வது?

* திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சமயபுரம் டோல்கேட்டிலிருந்து 7 கி.மீ. தூரம்.  

* நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 12.30 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.

Comments