அண்ணாமலையானே போற்றி! போற்றி!

அருள் நேரம்’ மற்றும் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகளில்
‘கலைமாமணி’ ஸ்ரீகவியின் நேரடி வர்ணனையாக ஒலிக்கும் வசீகரக் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம்! கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை கோயில் பற்றிய இவரின் சிறப்புக் கட்டுரை இது!
புதிர் 1: ‘நீர், நிலம், நெருப்பு’ இவற்றில் எது பெரியது? இப்புதிர் இல்லையெனில்
இப்பூவுலகில் அமைந்த சம்பவம் உலகுக்குத் தெரிந்திருக்காது.
புதிர் 2: ‘செல்வம், கல்வி’ இவற்றில் எது பெரியது? இந்தப்புதிருக்கான சம்பவம் நடந்த பின்னர்தான் அனைவருக்கும் தெரியவந்தது, அந்தச் சம்பவம்... அது ஒரு திருவிளையாடல்...
வேதம் பிறந்த காலம் - அத்துடன் ஒரு நீதியும் பிறந்தது. நியாயம், நீதி பிறக்க வேண்டு மென்றால் அதற்கு அடிப்படையாக ஒரு கலகமும் பிறக்க வேண்டுமல்லவா? அந்தக் கலகமும் பிறக்கிறது. அதனைப் பிறப்பித்தவர்கள் பிரம்மனும், நாராயணனும். ‘இவர்களுள் யார் பெரியவர்’ என்ற விவாதம் வந்துவிட்டதாம். சாமான்ய மனிதர்கள் வாழ்விலேயே, அவர்களின் பரிபக்குவ ருசியை ஒட்டியே ஒரு நாடகத்தை நடத்துகின்றனர். தெய்வங்கள், எந்த மக்களுக்காக நாடகம் நடைபெறுகிறதோ அந்த மக்களின் பக்குவப்படிதான் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்.
நான்தான் பெரியவன்" வாக்குவாதத்தில் தன் வாதத்தை முன்வைத்தார் நாராயணன்.
உம்மிலும் நானே பெரியவன்" என்று பிரம்மன், உலகைப் படைப்பவன் நான். நீரோ, நான் படைத்த உயிர்களைக் காப்பவன். நான் படைக்காவிடில் உம்மால் எப்படிக் காக்க முடியும்?"
என் உந்தி தாமரையில் பிறந்தவன் நீ! உனக்கு அகந்தை ஏன்?"
நான் தாமரையில் பிறந்தேன் என்றால், நீர் தூணில் பிறக்கவில்லையா? நான் உம்மிடமிருந்து பிறந்தேன் என்பதற்காக சக்தியில் உம்மிலும் நான் தாழ்ந்தவன் என்று நினைக்க வேண்டாம். மூங்கில்கள் உரசுவதில்தான் நெருப்பு பிறக்கிறது. அந்த மூங்கில்களையே நெருப்பு எரிக்கிறது. அதுபோல் நான் உம்மிடமிருந்து பிறந்தாலும் உம்மிலும் வலியவன்!"
நீ மூங்கிலில் பிறக்கும் நெருப்பல்ல. உடலில் பிறக்கும் நோய். உடம்பில்தானே நோய் உருவாகிறது என்பதற்காக அதனை விடுவோமா? அழித்து அகற்றுகிறோம். அதுபோல் உன் ஆணவம் அழியப்போகும் வேளை வந்து விட்டது!"
- பிரம்மனும், நாராயணனும் மோதிக்கொள்ள அண்டசராசரங்களும் தடுமாறுகின்றன. அந்த வேளையில் உற்பாதங்களில் உச்சித எழுச்சியாய் எவரும் எதிர்பாராதவண்ணம் - வானத்துக்கும், பாதாளத்துக்குமாக ஓர் ‘அக்னி மலை’ எழுந்து நின்றது.
பிரம்மனே, நாராயணரே, இந்த அக்னி ஜோதியின் அடி முடியை எவர் காண்கிறாரோ, அவரே உங்களில் உயர்ந்தவர்! அடி முடியைக் கண்டுபிடித்து உங்கள் திறமையை உலகுக்கு உணர்த்துங்கள்!" என்று ஈசனின் அருள்வாக்கு அசரீரியாய் ஒலிக்கிறது. அதை ஏற்கின்றனர் பிரம்மனும், நாராயணனும்.
பிரம்மா மறுகணம் அன்னப் பறவையாகி ஈசனின் ஜோதி சொரூபத்தின் முடியைத் தேடிப்பறக்கிறார். நாராயணன் வராக அவதாரமெடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டு கீழே செல்கிறார்.
ஓரடியால் உலகம் அளந்த மாயவன், ஏழுலகமும் தேடிச் சென்றும் ஈசனின் ஜோதி மலையுருவின் அடியைக் காண முடியவில்லை. இது என்ன மாயம்? அந்த மாயவனுக்கு மட்டுமே புரிந்த மாயம் அது!
தான் என்ன முயன்றும் ஜோதி மலையின் ‘அடி’யைக் காண முடிய வில்லை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுவிட்டார் நாராயணன்.
ஆனால், பிரம்மாவோ... மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறார். அண்டத்தின் எல்லை வரை எழுந்து நிற்கும் ஈசனின் திருமுடியைக் காண முடியவில்லை. எதிரே ஒரு ‘தாழம்பூ’ மேலிருந்து இறங்கி வருகிறது. அதனிடம், எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்கிறார் பிரம்மன்.
ஈசன் முடியிலிருந்து வருகிறேன். நான் அவர் முடியிலிருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. வந்து கொண்டேயிருக்கிறேன். இன்னும் பூமியைப் பார்க்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?" என்கிறது தாழம்பூ.
தாழம்பூ கூறிய இச்செய்தியைக் கேட்டதும் ஆயாசப்பட்டுப் போகிறார் பிரம்மன். ஒரு குறுக்கு வழி தோன்றுகிறது பிரம்மனுக்கு. தாழம்பூவிடம், இனிமேலும் நான் இறைவன் முடியைத் தேடிச் செல்வது வீண் முயற்சி. அதனால் நான் இறைவன் முடியைக் கண்டதாக நீ பொய் சாட்சி சொல்" என்று அதை நிர்ப்பந்தித்து சம்மதிக்க வைத்தார் பிரம்மன்.
தாழம்பூவை உடந்தையாக்கிக் கொண்டு பிரம்மன் வந்து, நான் முடியைக் கண்டேன்!" என்று பொய்யுரைத்ததும், ஈசன் சினத்தால் பொங்குகிறார்.
உற்பாதமே உற்பாதங்கொண்டு விட்டதால், மறு கணம், அந்த ஈசனின் அக்னி மலை வெடித்துப் பொங்கிச் சிதறியது. அது வெடித்த ஓசையில் உயிரினங்கள் எல்லாம் நடுங்கி ஒளிந்தன. சூரியன்களை உருக்கிக் கொட்டியதுபோல், திசை யானைகளெல்லாம் ரத்தத்தைக் கக்கின. எங்கும் செந்நிறப் பிழம்பு. அந்தப் பிழம்பிலிருந்து உக்கிராவேசத்துடன் ஈசன் தோன்றினார்.
அனல் பொங்கி நின்ற ஈசனை நாராயணன் சாந்தப்படுத்தினார். அம்பாளின் அம்சமான நாராயணனன்றி இறைவனை வேறு யார் சாந்தப்படுத்த முடியும்?
படைப்பவனே பொய்யுரைத்தால் படைப்புயிர்கள் எங்ஙனம் தர்மம் காப்பர்? எனவே, நீ அவர்கள் பார்வையில் படாது ஒழிக. எந்த ஆலயத்திலும் நீ காட்சி தர வேண்டாம்!" என்று பிரம்மனையும், அவனுக்கு உடந்தையாயிருந்த தாழம்பூவை, நீ பூஜைக்கு உகந்ததாக இல்லாமல் போய்வாய்!" என்றும் தண்டித்த ஈசன், மாந்தருக்காக ஓர் அரிய வரத்தையும் அருளினார்.
இந்தச் சம்பவத்தின் நினைவை காலம் காலமாக,யுக யுகாந்திரமாக யாவரும் கண்டுணர்ந்து பூஜிக்கத் தக்கவாறு சிறிய அக்னி அம்ச மலையாகவே இங்குயாம் எழுந்தருளுகிறோம். இந்த மலையே நாம் கொண்டலிங்கத் திருவுருவம். இதில் ஒளியேற்றி என்னைப் பூஜித்து மனுக்குலம் உய்வடையட்டும்!" என்று அருள் வாக்களித்தார் ஈசன்.
அதன்படி, இறைவனே லிங்கமாய் அமர்ந்த அந்த அக்னித் தலம்தான் அண்ணாமலை. சோணாசலம்,
சோணகிரி, சோணாத்ரி, அருணாசலம், அருணாத்ரி, அனற்கிரி, திருவருணை என்று பல்வேறு திருநாமங்கள் பெற்றது திருவண்ணாமலை.
‘அருணாசலேசுவரர்’, ‘அண்ணா மலையார்’ என்ற திருநாமங்கள் கொண்டு ஈசனும், ‘உண்ணாமுலை அம்மை’, ‘அபீத குஜாம்பாள்’ என்ற திருநாமம் கொண்டு அம்பிகையும் எழுந்தருளி, ஒரு மலையையே லிங்கமாகவும், அதைச் சுற்றியுள்ள அகன்ற பகுதியையே திருக்கோயிலாகவும் கொண்டு, வேதகாலம் முதல், இன்று வரை ஈசன் அமர்ந்திருக்கும் இந்தத் திருத்தலமே திருவண்ணாமலை.
* * * * *
அந்த ஞான மலையின் அடியில் பக்தர்கள் வழிபாட்டுக்காக சுயம்புவாய் எழுந்தருளியுள்ள அருணாசலேசுவரர் ஆலயத்தினுள் பிரவேசிக்க, முதல் பிராகாரத்தைச் சுற்றுகிறோம்.
அந்த முதல் பிராகாரம் எது? மலையைச் சுற்றிச் செல்லும் கிரி பிரதட்சண வழிதான் முதல் பிராகாரம். ஆம், மலையே ஈசுவர லிங்கமாக அமைந்திருக்கும் போது, அந்த மலைப்பகுதி முழுவதுமே ஆலயமல் லவா? மலையைச் சுற்றும் அந்தக் கிரி பிரதட்சணத் தின்போது, வழிநடைக்கு ஆறுதலாய், அருளாய் நின்று நம்மை ஆற்ற எம்பெருமானே எண் திசையிலும் அஷ்ட லிங்கமாக அருள் சுரந்து நிற்கிறார்.
முதலில் இந்திரலிங்கம், இந்திர தீர்த்தம். பின் தொடர்ந்து அக்னி லிங்கம், அக்னி தீர்த்தம், எம லிங்கம், எமதீர்த்தம், நிருதி லிங்கம், நிருதி தீர்த்தம், சூரியலிங்கம், சூரியதீர்த்தம், வருண லிங்கம், வருண தீர்த்தம், வாயு லிங்கம், வாயு தீர்த்தம், சந்திரலிங்கம், சந்திர தீர்த்தம். இப்படி திசைகள்தோறும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
* * * * *
கிரி பிரதட்சணமாய் வரும்போது, பிருங்கி முனிவர் சன்னிதி அருகே வரும்போது ஒரு செய்தி மனதுள் தோன்றுகிறது. இந்த பிருங்கி முனிவரைத் தேடி இறைவனே ஆண்டுக்கொரு முறை இங்கு வருவாராம். ஏன்...?
அது ஒரு ரசனையான செய்தி. தன் பக்தனுக்காக அம்பாளின் பகையையே சுவாமி தேடிக்கொண்ட லௌகீகச் சுவை சொட்டும் கதை.
இந்த பிருங்கி முனிவர் சுவாமியைத்தான் வணங்குவார். அம்பாளை வணங்க மாட்டார். அந்த அளவு சுவாமி பேரில் ஈடுபாடு. சுவாமியும் அம்பாளும் இணைந்து சங்கமித்திருந்தாலும் ‘போனால் போகிறது, இரண்டு பேரையும்
சேர்த்து வணங்கி விடுவோமே!’ என்று நினைக்க மாட்டார். வண்டு உருவெடுத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே புகுந்து, சுவாமியை மட்டுமே வலம்வந்து வணங்கிவிட்டுப் போய் விடுவார். இப்படி ஒரு வைராக்கியம் அவருக்கு.
தன்னை ஒதுக்கிவிட்டு அப்படி சுவாமியை மட்டும் வணங்கும் அந்த பக்தர் மீது அம்பாளுக்குக் கோபம். இருந்தாலும், ஈசன் சாதகமாக இருக்கிறாரே. அதனால் அம்பாள், கண்டும் காணாதது போலிருந்து விடுவார்.
ஆனாலும், ஒருநாள் விவகாரம் வந்து விட்டது. தை மாதம் இரண்டாம் நாள், சுவாமி தன்னைச் சுற்றியுள்ள பக்தர்களுக்கு அருள் வழங்கிவிட்டு அம்பாளிடம், நம் பக்தன் ஒருவன் மலை ஓரத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்து, அவனுக்கு அருள் வழங்கி விட்டு வருவோமே!" என்று அழைக்க,யார் அந்த பக்தர்...?" அம்பாள் கேட்கிறாள்.
பிருங்கி முனிவர்..."
ஓ... அவனா? அவன் நம் பக்தன் இல்லையே! உங்கள் பக்தன்தானே! என்னைக் கண்டாலே அவனுக்கு ஆகாதே! நீங்களே உங்கள் அருமை பக்தனுக்குப் போய் அருள்புரிந்துவிட்டு வாருங்கள்!" என்று ஊடலுடன் கோபித்துக் கொண்டு, ஆலயத்துக்குள் பிரவேசித்து, தாளிட்டுக் கொண்டாள் அம்பாள்.
சுவாமி அலங்கார பூஷிதராக தன் அருமை பக்தன் பிருங்கி முனிவன் இருக்குமிடம் சென்று அருள்புரிந்து விட்டு வந்தார். அங்கே ஒரு சிக்கல். அம்பாளின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டுபோன கோளாறோ என்னவோ, தனியாகச் சென்ற சுவாமியை ஒருவேடன் மறித்து, அவருடைய ஆபரணங்களைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டானாம்!
ஆக, தன் ஆபரணங்களைப் பறிகொடுத்துவிட்டு ஆலயத்துக்கு வந்தார். போதாதா வினைக்கு? ஏற்கெனவே அம்பாளுக்குக் கோபம். போதும் போதாததற்கு ஆபரணத்தையும் தொலைத்துவிட்டு, ‘சிவனே’ என்று அந்தச் சிவனார் வந்து நின்றதும், எல்லாம் உங்கள் அருமை பக்தனைத் தேடிப் போனதால் வந்த கஷ்டம்தானே? அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எப்படியாவது தொலைந்த ஆபரணத்துக்கு ஈடு கட்டிக்கொண்டு வாருங்கள்! அப்போதுதான் உங்களுக்குக் கதவைத் திறப்பேன்!" என்று கூறி விட்டாள்.
மாற்று வழியில்லாமல் சுவாமி, கோயிலை விட்டுப் புறப்பட்டு, ‘கலசப்பாக்கம்’ என்ற கிராமத்துப் பக்கம்
யோசனையோடு வந்தாராம். சுவாமியின் நிலையறிந்து அந்த பக்தர்கள் ஆயிரம் பொன் எடுத்துக் கொண்டு வந்து அம்பாள் முன் ஈடுகட்டி சுவாமியை வீட்டோடு சேர்த்து, வீடும் குடியுமாக ஆக்கினார்களாம்.
* * * * *
இன்னொரு சன்னிதி அர்த்தபுஷ்டியுடன் அந்த கிரி பிரதட்சண வழியில் அமைந்திருக்கிறது. அதுதான் அடி அண்ணாமலை. அண்ணாமலைநாதர் சன்னிதிக்கு நேராக கிரிக்கு வெளியே அம்பாள் பூஜித்த லிங்கம் இங்கே அமைந்துள்ளது. இங்கே அம்பாள் தப சிலிருந்து ஈசனை பூஜித்தபோதுதான் ஒரு மகத்தான சம்பவம் நிகழ்ந்தது.
அதுதான் ஈசன் தன் இடப்பாகத்தை அம்மை உமையவளுக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராகத் திகழ்ந்த வரலாறு. அந்த அற்புதமும் இந்தத் தலத்தில், இந்த கிரிவலம் வரும் வழியில் அமைந்த பகுதியில் தான் நடந்ததாம். தேவிக்கு இடப்பாகத்தை அளித்து இறைவன் அர்த்தநாரீஸ்வரனாகத் திகழ்ந்த வரலாற்றை அங்குள்ள அருள் அன்பர்கள் கூறுகின்றனர்.
இத்தலம்தான் மகிடாசூரனை துர்காதேவி சம் ஹரித்த தலம் என்று ஆதாரமாக அருணாச்சல புராணத்தைக் காட்டுகின்றனர்.
மகிடாசுரனை துர்காதேவி மூலம் அம்பாள் சம்ஹரித்ததும், இறைவன் அம்பிகைக்கு இடப்பாகம் அளித்ததும், ஒரே நேரத்தில் நடந்த சம்பவங்கள்தானாம்.
* * * * *
காசியில் இறந்தால் முக்தி, காளஹஸ்தியில் பிரவேசித்தால் முக்தி, காஞ்சியை பற்றி உச்சரித்தால் முக்தி என்றால், இறைவனே லிங்க மலையாக எழுந்து நிற்கும் இந்த திருவண்ணாமலை திருத்தலத்தை நினைத்தாலே முக்தி கிட்டுமல்லவா?
இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் ‘வல்லாள மகா ராஜா கோபுரம்’, ‘கம்பத்திளையனார் சன்னிதி’ இவற்றைத் தரிசித்து நிற்கும் போதே, அங்கே அருணகிரிநாதரை ஆட்கொண்ட இன்னொரு தெய்வக் குழந்தையின் அருட் திருவிளையாடல்களெல்லாம் அமுதமாய் நெஞ்சில் உருகுகின்றன.
அந்த ஞானக்குழந்தை, தீனர்களின் காப்பாக திருவேல் ஏந்திய அந்த முருகக் குழந்தை, வெறுப்புற்று வாழ்ந்த அருணகிரியாரைத் திருப்புகழ் பாட வைத்தது. அருணகிரிநாதரைப் பெருமைப்படுத்த அழகன் முருகன் காட்சியளித்த அந்த சன்னிதிதான் கம்பத்திளையனார் சன்னிதி எனப் போற்றப்படும் அழகு சன்னிதி. புனித தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம். வல்லாள மகா ராஜா கோபுரம். அருணகிரிநாதரை அழகு குழந்தை முருகன் ஆட்கொண்ட இடம்.
அது மட்டுமல்ல, அங்கிருக்கும் அருணகிரிநாதர் சன்னிதியில்தான் திருவண்ணாமலையில் வாழ்ந்த மகா சித்தரான சேஷாத்திரி சுவாமிகள் தங்கியிருந்தாராம்.
திருச்சி மலைக்கோட்டையில் ஏழைப் பெண்ணொருத்திக்கு தாயுமானவராக பிரசவம் பார்த்த ஈசன், இத்தலத்தில் வல்லாள மகா ராஜாவுக்கு பிள்ளையாய் மாறினார். அது ஓர் மெய்சிலிர்க்கும் பக்தி வரலாறு.
* * * * *
அருணாசல தலத்தை ஆண்டு வந்த வல்லாள மகாராஜா, உண்மையில் ஒரு வள்ளல் மகாராஜா.
கேட்போருக்கு இல்லையெனாது வழங்கும் அருளாளன் எனப் பெயர் பெற்றவன் அந்த மன்னன். இவனைச் சோதித்து, அருள்புரியத் திருவுளம் கொண்டார் ஈசன். ஆம், வாழ்வில் அவர் நம்மைச் சோதிக்கிறார் என்றாலே, தொடர்ந்து அருள்புரிவதற்காகத்தானே!?
ஒரு சிவநெறி அடியவர்போல் உருக்கொண்ட ஈசன், வல்லாள மகாராஜாவிடம் வந்து ஒரு விசித்திர மான கோரிக்கையைக் கேட்டார். அது என்ன?
‘எனக்கு இரவில் படுக்கையில் துணையிருக்க ஒரு பெண் வேண்டும்!’ என்பதுதான்.
அரசன் முதலில் திடுக்கிட்டான். ‘அடியவர் அவர் கோலத்துக்கு ஒவ்வாத இப்படி ஒரு கோரிக்கையை தெரிவிக்கிறாரே?’ என்று.
ஆயினும், மறுகணம் தேர்ந்து, தனி அதிகாரிகள் மூலம் நகரிலுள்ள கணிகையரில் ஒருத்தியை அழைத்து வர உத்தர விட்டார்! ஆனால், நகரில் அன்றிரவு ஒரு கணிகையரும் தனித்திருக்க வில்லை. எப்படிக் கிடைப்பார்கள்?
சோதிப்பவர் ஈசன் அல்லவா?
சேதியறிந்ததும் வல்லாள மகாராஜா நொந்தார். அடியவரின் விருப்பத்தை நிறைவேற்றித் தர முடியாமல்தான் தோல்வியுற்றதை எண்ணி மெய் சோர்ந்தார்.
அச்சமயம், மன்னனின் வேதனையை அறிந்த அவருடைய இளையராணி
சல்லமாதேவி, அரசே, உங்கள் வேதனையை மாற்ற நான் என்னை அர்ப்பணிக்கிறேன்" என்றார்.
நீயா, எப்படி?" வியந்து கேட்டான் மன்னன்.
தங்கள் வாக்கைக் காப்பாற்ற என் மேனி பயன் பட்டால் அதுவும் உங்களுக்கான சேவையே. அதனால் அடியவர் விருப்பத்தின்படி நான் அவருக்குத் துணையாகிறேன்!" என்றாள்.
அரசன் நன்றியுணர்வு பொங்க, தன் இளைய ராணியை அனுப்ப இசைந்தான். ராணி சல்லமாதேவி அடியவர் இருந்த இடம் சென்றாள். இரவில் தனி யறையில் தியாகப் பெருநிதி மனதில் நிறைந்திருக்க, அடியவரின் பாதம் தொட்டாள்.
மறுகணம்... அடியவர் குழந்தையாக மாறினார்!
ஜோதி சூரிய எழிலுடன் மின்னிய அந்தக் குழந்தையை அரவணைத்து எழுந்த இளையராணி, இது என்ன அற்புதம்?" என்று வியந்தாள்.
ராணி, இது உன் தியாகத்துக்கு வரமான கனி. நான் அடியார் உருவில் வந்து, ‘இரவில் துணை வேண்டும்’ என்று கேட்டதும், உன் கண வரான அரசனும் நீயும் நான் வேறொரு உணர்வில் துணை கேட்பதாகவே நினைத்து, இப்படியொரு தியாகத்துக்கு நீ தயாரானாய். இரவில் ஒரு பெண்ணின் துணை குழந்தைக்கும் தேவை! அதைத்தான் மறைபொருளாகக் கேட்டேன்! ஆம், குழந்தை நிலையில் இருந்த நான் தாய்மை எனும் பெண்ணின் துணையைக் கேட்டேன்! தவ சீலர்களான உனக்கும், உன் கணவனுக்கும் குழந்தையில்லாக் குறையை நீக்கி, உங்களுக்கு, ‘நானே குழந்தை’ என்று உணர்த்தவே நான் உங்களைத் தேடி வந்தேன்!" என்றார் ஈசன்.
இறைவன் அந்த அரசத் தம்பதிகளுக்கு அளித்த வாக்கு இன்றும் ஆலயத்தில் நிறைவேறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று வல்லாள மகாராஜாவுக்கு உத்தரகிரியைகளை இறைவனே செய்யும் நிகழ்ச்சி இன்றும் திருவண்ணா மலை ஆலயத்தில் நடந்து வருகிறது.
* * * * *
வல்லாள மகாராஜா கோபுரத்தைத் தரிசித்து அதைக் கடந்து செல்கிறோம். எதிரே தோன்றும் கிளிக் கோபுரத்தைப் பற்றி ஒரு சுவையான செய்தி. சம்பந்தாண்டாருக்கும் அருணகிரி யாருக்கும் பகைமை முற்றியிருந்த நிலையில் ஒரு போட்டி முடிவு பெற்று, இன்னொரு போட்டிக்கு அருணகிரியாரை சம்பந்தாண்டார் அழைத்தாராம். அதன்படி அருணகிரியார், மன்னனுக்காக பாரிஜாத மலர் கொண்டுவர, கிளி வடிவம் தாங்கி விண்ணுலகம் சென்றாராம். அவர் வரும் முன் சம்பந்தாண்டார் அவர் விட்டுச்சென்ற உடலை எரித்து விட்டதாகவும், திரும்பி வந்த அருணகிரியார் கிளி வடிவிலேயே இந்தக் கோபுரத்தில் தங்கி விட்டதாகவும் அந்தச் செய்தி!
இந்தக் கிளி மண்டபத்தின் இருபுறத்திலும் கோபுரங்கள். ஒன்று திருமஞ்சன கோபுரம், மற்றொன்று அம்மணி அம்மாள் என்ற பக்தை அமைத்த அம்மணி அம்மாள் கோபுரம். அருண கிரியாரின் புகழ்பாடும் கிளிக் கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம்.
ஆலயத்தின் பிரம்மாண்டமான அமைப்பைக் கண்டு பிரமித்து நிற்கிறோம். அங்கே ஈசன் அண்ணாமலையார், அம்பாள் உண்ணாமுலை அம்மை, இருவரின் சன்னிதிகள் அமைந்திருக்கும் அந்தப் பிராகாரம் ஆலயத்தின் ஐந்தாவது பிராகாரம். மொத்தம் இந்த ஆலயத்துக்கு ஏழு பிராகாரங்கள்!
இங்கு இருக்கும் கோபுரங்கள் ஒன்பது! சம்பந்தாசுரனை வதைத்த சம்பந்த விநாயகர், காலபைரவர் சன்னிதிகள் அருகிருக்க, ஏழு பிராகாரங்களுக்கு அப்பால் நவகோபுரங்கள் அமைந்த திருவாலயத்தில் ஐயன் அண்ணாமலையானும், தாய் உண்ணாமுலை அம்மையும் எழுந்தருளியிருக்கும் அந்தத் திருத்தோற்றம் கண்டு தொழுது நிற்கிறோம்.
நம் மனத்தில் ஒரு பிரமை. பாவம் சுமந்து நிற்கும் நமக்கு ஜன்மாக்கள் ஏழு. நம் வல்வினைகளை இயக்குபவை ஒன்பது கிரகங்கள்! ‘உன் ஜன்ம பாரத்தையும் நவக்கிரக
தோஷங்களையும் தீர்த்து உன்னை ஆட்கொள்ளவே அருளே ஒரு மலையாக அண்ணாமலையில் வீற்றிருக்கிறேன்!’ என்று மாந்தர் குலத்துக்கு அருள்வாக்களித்து உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதற்கு அடையாளமாகத்தான், அங்கே இப்படி ஏழு பிராகாரங்களையும் ஒன்பது கோபுரங்களையும் கொண்டிருக்கிறானோ ஈசன்!
* * * * *
எதையும் ‘ஆம்’ என்று உறுதிப்படுத்துவதை ‘குன்றின் மேலிட்ட தீபம் போல் உறுதி’ என்பர். இந்த உவமானம் பிறந்தது இந்தத் தலத்தில்தான். ‘உன்னைக் காக்க நானிருக்கிறேன்’ என்று ஈசன் அளிக்கும்வாக்கை உறுதிப்படுத்தத்தான் அவனுடைய அண்ணாமலை உச்சியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஒளிர்கின்றதா...?
‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்ற நாமாவளி எங்கும் முழங்க, தீப தரிசனம் கண்டபின்தான் உணவு கொள்வது என்ற விரதம் காத்து, லட்சோப லட்சம் மக்கள் காத்திருக்க, அண்ணாமலையில் கார்த்திகை தீபம் தரிசனம் ஆகும் திருக்காட்சி. நம் ஆன்மாவில் ஒளியேற்றும் அபூர்வத் திருக்காட்சி!
ஏனென்றால், அது சாமான்ய அக்னி அல்ல. சாமான்ய அக்னியே, அழுக்கை எரித்து அதில் புதிதாக ஒரு புனிதத்தைத் தோற்றுவித்து, தன்னை பஞ்சபூதங்களில் உன்னதமானதாய் நிலைபெறச் செய்யக்கூடியது. தங்கத்தை பஸ்மமாக்கி சக்தியாக்குவதுபோல்... சாணத்தை எரித்து திருநீறாய் ஆக்குவதுபோல்... அப்படியிருக்க... கார்த்திகை தீபத் திருநாளில் அண்ணாமலையில் தரிசனமாகும் அந்த தீபம், அனைத்திலும் மேம்பட்ட ஆன்ம தீபமல்லவா?
ஐயன் அண்ணாமலை நாதர் ஜோதி சொரூபமாகத் திருக்காட்சி தந்ததை நினைவூட்டும் புனித தீபமல்லவா அது! செல்வச் செருக்கையும் கல்விச் செருக்கையும் அடக்கி சத்தியத்தைக் காக்க அண்ணாமலையார் அளித்த ஞான தீபமல்லவா அது!
ஜகத்ஜோதியாய்க் கார்த்திகை தீபம் ஒளிர்கிறது, அண்ணாமலையில். ஆம்... அம்பாளும் ஈசனும் இணைந்து நிற்கும்போதுதான் இந்த உலகம் உய்வுறுகிறது... ஒளி பெறுகிறது. அவர்கள் இருவரும் இணைந்த திருவருள் நம் நெஞ்சில் நிறையும்போது இந்த ஜன்மமும் ஒளி பெறுகிறது... கடைத்தேறுகிறது!
* * * * *
எத்தனையோ மகான்கள் யுக யுகாந்திரமாக அண்ணாமலையார் சன்னிதியில் தொழுது, பாடிப் பரவி நற்கதி கண்ட மெய்ஞ்ஞானக் காற்றை நாம் சுவா சிப்பது போலிருக்கிறது.
நேற்று ஞான ஒளியோடு, இறைவனோடு ஐக்கிய மடைந்த ரமண மகரிஷி... அதற்கு முந்தி ஞான சம்பந்தப் பெருமான், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரியார்... இன்னும் குரு நமசிவாய மகான்...
அதோ... அவர்கள் அந்த திருவண்ணாமலையின் ஞானவெளியெங்கும் சூழ்ந்து நின்று, அண்ணாமலையானையும் எம் தாய் உண்ணாமுலை நாயகியையும் மெய்யுருகப் பாடிப் பரவும் மோனக் குரல் கேட்கிலையோ...? அதோ கேட்கிறது...
‘சக்திக்கு ஒரு பாகம் கொடுத்து நின்ற மலை.
முக்திக்கு வித்தாய் முளைத்த மலை...!’ என் அண்ணா மலையை குருநமசிவாயர் குழையக் குழையப் பாடியது கேட்கிறதல்லவா?
அத்தலத்தில் உழவாரப் பணிபுரிந்து மகிழ்ந்த அப்பர் பெருமான் உளம் உருக, ‘பைம்பொன்னே! பவளக் குன்றே! பரமனே...! அணியண்ணாமலையுள்ளானே!’ என்று உருக உருகப் பாடிப் போற்றியது உங்கள் செவிகளில் கேட்கிறதல்லவா?
‘அரனே! பரனே! அண்ணாமலையானே!’ என்று நா மணக்க சுந்தரர் பாடியது கேட்கிறதல்லவா?
‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் ஆறுமே’ என்று சம்பந்தப்பெருமான் நெக்குருகப் பாடியது கேட்கிறதல்லவா?
‘அருணகிரிப் பெம்மானை அடிபணிந்து பிறவி தீர்ப்போம்’ என்று அருணாசல புராணம் படைத்த சைவ எல்லப்ப நாவலர் பெருமான் அழைப்பது கேட்கிறதல்லவா?
‘கண் ஆர்கழல் காட்டி, நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுங்காண் அம்மானாய்’ என்று மாணிக்கவாசகர் மனதுருகி அவன் திருவடியைச் சுட்டிக்காட்டுகிறாரே, அதைக் காண்கிறீர்களல்லவா...!
பாடுவோம் அவன் திருநாமம்... பாவம் தீரத் தொழுவோம்... விழுவோம் அவன் சீரடி! பற்றுவோம் அவன் திருக்கழல்! அண்ணாமலையானே, ஆதியே, அமரர் கோவே, போற்றி! போற்றி!

Comments