அர்ச்சனைக்குப் பிறகு அர்ச்சகர்களுக்கு கண் உள்ள மூடியைத் தராமல் நுனி மூடியைத் தருவதன் பொருள் என்ன?

அர்ச்சனைக்குப் பிறகு அர்ச்சகர்களுக்கு கண் உள்ள மூடியைத் தராமல் நுனி மூடியைத் தருவதன் பொருள் என்ன?


கண் உள்ள மூடியில் இறைவனது கண்கள் உடையது என்றும், நுனி மூடி மீதமானது என்றும் பொருள். அதனால் அர்ச்சகர் விபூதி, குங்குமப் பொட்டலத்தை அதன் மேல் பூவுடன் வைத்துத் தருகிறார். இதற்கு வேறு பொருள் கிடையாது.


கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் புதிதாக கொலு வைக்கலாமா? விதிமுறைகள் ஏதேனும் உண்டா?


வருடத்துக்கு ஒருமுறையே வருகின்ற அம்பிகையின் அருள் பெற்றுத் தருகின்ற சாரதா நவராத்திரி கொலுவை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். தனக்கும், தங்கள் குடும்பத்துக்கும் பழக்கமில்லை என்று புறக்கணிக்கத் தேவையில்லை. ஏன்? தீபாவளி, பொங்கல் பண்டிகை, அட்சய திருதியை போன்ற நாட்களைப் பழக்கமில்லை என்று புறந்தள்ளி இருக்கலாமே! இவற்றைத் தள்ளி விட்டால் புடைவை, நகை வாங்குவது தடைபடும். கொலு வைத்து அடுத்த ஆண்டிலிருந்தாவது சுமங்கலிகளை அழைத்துக் கொண்டாடுங்கள். குதூகலம் குடும்பத்தில் பிறக்கும்.


தர்ப்பணம் செய்யும் நாள் தவறி விட்டது. இதற்குப் பரிகாரம் உண்டா?


ஒரு மாதத்தில் திதி, தர்ப்பண நாள் தவறி விட்டால் அந்த மாதத்தில் வரும் அமாவாசை அன்று முறைப்படி திதி, தர்ப்பணம் செய்து காக்கைக்கு அன்னம் வைக்கலாம். இந்து தர்ம சாஸ்திரப்படியும் அபரப்ரயோக விதிகள் என்றும் ஸ்ரார்தாங்கக் கருத்துப்படியும் சிரத்தையுடன் விடாமல் செய்வதே சிராத்தம் எனப்படுகிறது. அருகில் உள்ள புஷ்கரணி (ஆலயத் திருக்குளம்)க்குச் சென்று, விட்ட திதி தர்ப் பணத்தை அமாவாசை அன்று செய்து, ஒரு வேத பண்டிதருக்கு வேட்டியும், தாம்பூலமும் தானம் கொடுப்பதோடு, இனிவரும் நாட்களில் தவறாமல் தர்ப்பணம் கொடுக்கலாம்.


நாம் வழிபடும் இறைவனின் உருவங்களை நம் முன்னோர்கள் எப்படித் தேர்வு செய்தார்கள்?


புராணக் காலத்தில், நாம் அன்றாட வாழ்வில் என்னென்ன பிரச்னைகள் வருமோ, அதற்குத் தீர்வளிக்கும் வகையிலான கடவுள் உருவங்களைப் படைத்தனர். அழுகின்ற குழந்தை முன் அழகான ஒரு பொம்மையைக் காட்டினால் அடுத்த கணம் சிரிக்கிறது. அதேபோல அரக்க பரக்கக் குணம் படைத்தவர்களைச் சமாளிக்க வாள், வேல் தேவைப்பட்டது. முருகனை உருவகப்படுத்தினர். பணம் பெற்றுக் கொண்டு தராமல் ஏமாற்றியவர்களைப் பயப்படுத்த வாள் கையில் கொண்ட வீரனை உருவகப்படுத்தினர்.
பொருள், வறுமை விலக தாமரை மலரில் அமர்ந்த திருமகளை வழிபட கொண்டு வந்தனர். மகாவிஷ்ணு, சுழலும் உலகு, வெண் சங்குடன் உருவாக்கப்பட்டு மனித வாழ்வியல் தர்மத்தைப் போதித்தனர். தெய்வ வடிவங்களில் கைகளில் கொடுக்கப்பட்ட பாசம், அங்குசம், டமருகம், வில், அம்பு ஆகிய சக்தி பிம்பங்களைக் குழந்தைகள் காண்பதால் அறிவுஜீவிகளாக விளங்குவார்கள் என்ற விதியும் வகுக் கப்பட்டுள்ளது.


கிரஹண காலத்தின் போது ஜபம் செய்தால் பல மடங்கு பலன் என்பது எதனால்? எதைக் கொண்டு சொல்லப் படுகிறது?


கிரஹண காலத்தை சூர்ய உபராக புண்ய காலம், சந்திர உபராக புண்ய காலம் என்பார்கள். இந்தக் காலத்தில் சந்திரனின் ஆதிக்கக் குணம் குறைவாக இருக்கும். அப்போது நாம் ஜபிக்கின்ற மந்திரம் அதிக சக்தி பெற்று இறைவனிடம் சேரும் என்பது நம்பிக்கை. ஜபம் செய்வதில் வைகரீ, உபாம்சு என்ற இரு முறைகளில், அமைதியான உபாம்சு முறையில் ஜபங்களைச் செய்ய வேண்டும்.


வீட்டில் தினமும் விளக்கேற்றி சாமியை மனதாரக் கும்பிடுகிறேன். பணம் வீட்டில் தங்க வில்லை. வழி கூறுங்களேன்?


பெண்களின் பழக்க வழக்கங்களும் செலவு செய்யும் விதமுமே காரணம். வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்றும்போது தெய்வ சிந்தனையோடு ஏற்றுங்கள். பிடிக்காத விஷயங்களை நினைத்தபடி ஏற்றுவதைத் தவிர்க்கவும். வெள்ளிக்கிழமைதோறும் ஒரு சுமங்கலிப் பெண்ணை அழைத்துத் தாம்பூலம் கொடுங்கள். மகாலட்சுமி தேவியை நினைத்து, பௌர்ணமிதோறும் விரதம் இருந்து ஒரு வருடத்தில் நிறைவு செய்யவும்.
லக்ஷ்மி மூலிகை எனப்படும் கல்லால மரத்தின் இலையைப் பணப் பெட்டி, பர்ஸ், பூஜை அறையில் வைத்து வணங்கி வர, வீட்டில் பணம் தங்கும். கணவனது வருமானத்துக்கு ஏற்ற செலவு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். வீட்டு வரவேற்பறையில் எண் வகை மங்கலங்களை வைத்து அழகு பாருங்கள். சங்கு, ஸ்வஸ்திகம், மரச்சீப்பு, சக்தி சூலம், கொடி, கண்ணாடி, தாமரை, யானை ஆகியவை அஷ்டமங்கலங்கள். அதிகாலை குளித்து, மடி உடுத்தி, தீபம் ஏற்றி, சௌபாக்யலக்ஷ்மி துதி படித்து வரவும்.


உடல் தானம், கண் தானம், இதய தானம், ரத்த தானம் என்றெல்லாம் கூறப்படுகிறதே... சாஸ்திரம் இவற்றை அனுமதிக்கிறதா?
பிறர் உயிரைக் காப்பதற்காக அங்கங்களில் உள்ள பகுதிகளைத் தானமாகத் தருவது புராணக் காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. கண்ணப்ப நாயனார்தன் கண்களையே இறைவனுக்குக் கொடுத்துள்ளார். கர்ணன், தன் கவசக் குண்டலத்தையே இந்திரனுக்குத் தந்தான். மகாவிஷ்ணு மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் பெற்றாரே. உடல் மொத்தத்தையும் தானமாகக் கொடுக்க முடியாது. உயிர் போய் விட்டால் அது சவம் ஆகும். தானங்களை நமது சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன.

Comments