அகல்விளக்கேற்றுவது ஆன்மசக்தியைக் கூட்டும்!

விளக்கு வகைகளில் ஒன்பது வகைத் தூக்கு விளக்குகள் உள்ளன. வாடா விளக்கு, துதிமத் தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, ஓதிம நந்தா விளக்கு, கூண்டு விளக்கு, புறாவிளக்கு, நந்தா விளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு, கிளித்தூக்கு விளக்கு ஆகியன.
எதற்காகச் சொக்கப்பனை?
திருக்கார்த்திகை நாளில் அனைத்து சிவாலயங்கள், முருகன், அம்மன் கோயில்களின் எதிரில் பனை ஓலைகளை ஒரு மூங்கில் கம்பில் கட்டி,
கோபுரம்போலச் சொக்கப்பனை அமைப்பார்கள். இதை, சுவாமிக்கு பூஜை செய்த விளக்கைக் கொண்டு ஏற்றி, எரியச் செய்வார்கள். இந்தச் சொக்கப்பனை ஏற்றப்பட்டு எரியும்போது அஞ்ஞானமும் ஆணவமும் எரிக்கப்படுவதாக சிவ தத்துவம் சொல்கிறது. சிவன் முப்புறம் எரித்த பாவனையைக் காட்டுவதற்காகச் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றுவர். சிவபெருமானை ஜோதி வடிவாகவும் காண்பர். சொக்கன் என்ற பெயரும் சிவனுக்கு இருக்கிறது.
இரவில் அகல் விளக்கு:
நம் வீடுகளில் ஏதேனும் சொல்ல முடியாத துயரங்கள், வறுமை, பணக் கஷ்டம் வந்தால் அதைத் தீர்ப்பதற்கு, சீக்கிரம் நற்பலன் தருகின்ற விளக்கிடல் வழிபாடு ஒன்று பழங்காலத்திலிருந்தே சாஸ்திர விதியோடு இருக்கிறது. நெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்து மண் அகலில் தீபம் ஏற்றி அதை ஒரு மண் உருண்டைமேல் வைத்து ஆயிரம் முறை இந்த மந்திரத்தைக் கூற வேண்டும்.
‘ஓம் நமோ பகவதி பத்ம நேத்ரௌ வஜ்ர விக்ராயச
ப்ரத்யட்சம் பவதி’
கார்த்திகை தீபமிடும் முறை:
கார்த்திகை நட்சத்திரத்திற்கு அதிதேவதை அக்னி பகவான். ‘அக்னி க்ருத்திகா ப்ரதமம்’ என்று வேதத்தில் கார்த்திகையை முதலாவதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்நட்சத்திரத் துடன் கூடிய பௌர்ணமி தினத்தில் இறைவனுக்கு தீபம் ஏற்றல் வேண்டும்.
திருக்கார்த்திகை தினத்தன்று ஒரு வீட்டில் குறைந்தது 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும். ஆகாயத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்கும், சமையல் அறையில் ஒன்று, வாசற்படிக்கு முன் நடையில் இரண்டு, பின்கட்டில் நான்கு, திண்ணையில் நான்கு, மாடங்களில் இரண்டு, நிலைப்படிக்கு இரண்டு, சாமிப் படத்துக்கும் கீழாக இரண்டு, வாசலில்யம தீபம் என ஒன்றும், கோலம் போட்ட இடத்தில் ஐந்தும் ஏற்றி வைக்க வேண்டும். மாலையில் ஏற்றப்படுகிற போது சந்தியா கால தீபத்துதியைக் கூறவேண்டும்.
சிவம் பவது கல்யாணம்
ஆயுர் ஆரோக்ய வர்தனம்
மம துக்க விநாசாய
ஸந்த்யா தீபம் நமோ நம:
தீபம் ஏற்றும்போது பாடும் பாடல்!
பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற்படியே வருக
முழுஞானப் பெருக்கே வருக!
பிறை மௌலிப் பெம்மான் முக்கண் சுடர்க்கு நல்விருந்தே வருக!
முழுமுதற்கும் வித்தே வருக!
வித்தின்றி விளைந்த பரமானந்தத்தின்
வினைவே வருக!
பழுமறையின் குருந்தே வருக!
அருள் பழுத்த கொம்பே வருக!
திருக்கடைக்கண் கொழித்த
கருணைப் பெருவெள்ளம் பிடைவார்
பிறவிப் பிணிக்கோர் மருந்தே வருக!
பசுங்குந்தழலை
மழலைக்கிளியே வருக!
மலையத்துவசன் பெற்ற
பெருவாழ்வே வருக வருகவே!
அகல் விளக்கின் தொன்மை:
கார்த்திகை தீபத்திருநாள் வரும்போது ஆலயங்களிலும் இல்லங்களிலும் களிமண்ணால் செய்யப்பட்டு ஏற்றப்படுகிற அகல் விளக்குகள் தொன்மை வாய்ந்தவை. ஆதி கால மனிதனுக்கு இருட்டை விலக்கிட விளக்கு தேவைப்பட்டது. அதற்காக ஈரமானகளிமண்ணைக் கையால் பிசைந்து குழியாக்கிச் சிறு விளக்காகப் பயன்படுத்திக் கொண்டான். இந்த சிறு அமைப்பு தான் ‘அகல்’ ஆனது. அடுத்ததாக வந்த இரும்பு பயன்படுத்தும் காலத்தில் சிறு விளக்குகள் செய்யப்பட்டன.
பின்னர், ஈரக்களிமண் அகல் செய்து, சூளை அமைத்து அதில் அதைச் சுட்டுப் பயன்படுத்தினான் மனிதன் என்று அகழ்வாராய்ச்சிகள் மூலமாக அறிய முடிகிறது. அகநானூறு, புறநானூறு, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்களில் கார்த்திகை தீப நாளில் சுடுமண் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றி வைத்திருந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. 10, 11ம் நூற்றாண்டுகளில்களிமண் அகல் விளக்குகளில் 8, 4, 6 திரிகள் போட்டு ஏற்றும் அளவுக்குக் கூர்முனையோடு செய்து பயன்படுத்தப் பட்டது போளுவாம்பட்டி, திருவாமாத்தூர், தாரா சுரம், பழையாறை போன்ற தலங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. செம்பினால் செய்யப்பட்ட 32 அகல் விளக்குகள் திருச்சோற்றுத்துறை சிவாலயத்துக்கு வழங்கப் பட்டதைக் கல்வெட்டுகளில் அறியலாம். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அகல் விளக்குகளை தானமாக அளித்ததைக் காணலாம். அகலில் தீபம் ஏற்றுவது மிகுந்த சக்தியைப் பரவச் செய்வதாக ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.

 

Comments