எட்டு குடம் பனி நீர்!

அஸ்தினாபுரத்தில் மன்னர் திருதராஷ்டிரன் பிள்ளைகள் நூற்றுவரும், ‘கௌரவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டுவின் ஐந்து புதல்வர்களும், ‘பாண்டவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் துரோணர். எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி கற்பித்தும், தங்களுக்கு ஓரவஞ்சகமாகக் குறைவாகக் கல்வி கற்பித்த தாகக் குற்றம்சாட்டினான் கௌரவர்களில் மூத்தவனான துரியோதன். திருதராஷ்டிரர் துரோணரைக் கூப்பிட்டு விசாரித்தார்.
முடிவில் இருவருக்கு மிடையே அறிவுத் தேர்வு நடத்துவ தென்று தீர்மானிக்கப்பட்டது. இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பிவைக்க வேண்டுமென்று கூறினார்.
துரியோதனன் அறை முழுக்க வைக்கோலை வாங்கி அடைத்து வைத்திருந்தான். பீஷ்மர், விதுரர், கிருபர் போன்றோர் வந்து அறையைத் திறந்ததும் தும்மல்தான் வந்தது.
பஞ்ச பாண்டவர்களின் அறையைத் திறந்ததும் அறை முழுவதும் கோலங்கள். அதில் நேர்த்தியாக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மலர்த் தோரணங்கள், பழங்கள், பால், சந்தனம் எல்லாம் தயாரா இருந்தன. அகில் வாசனை மனதை நிறைத்தது.
பாண்டவர்களின் மதி நுட்பத்தை எண்ணி அனை வரும் வியந்தனர். தாங்கள் தோற்றதை எண்ணிக் கோபமுற்ற துரியோதனன், ஒரே தேர்வில் முடிவு செயலாகாது" என வாதிட்டான்.
துரோணரும் அதற்கிசைந்து நூற்றைந்து பேரையும் அழைத்து, இன்று முதல் பத்து நாட்களுக்குள் கௌரவர்கள் எட்டு குடங்களிலும், பாண்டவர்கள் எட்டு குடங்களிலும் பனி நீரை நிரப்ப வேண்டும். பத்தாம் நாள் காலை சூரியன் தோன்றுவதற்கு முன் நாங்கள் வந்து பார்ப்போம்" என்றனர்.
‘சரி’ என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒன்பதாவது நாள். அது மார்கழி மாதம். நடு இரவில் பனி பெதது. கௌரவர்களும், சகுனியும், பணியாட்களும் தோட்டத்து இலைகளில் தங்கிய பனி நீரைத் திரட்டி குடத்திலிட்டும், அவர்களால் அரை குடமே நிரப்ப முடிந்தது. மற்ற ஏழு குடங்களிலும் மாமா சகுனி சொற்படி, சாதாரண நீரை நிரப்பினான் துரியன். பனி நீருடன் இருந்த அரைக் குடத்திலும் சாதாரண தண்ணீரை நிரப்ப உத்தரவிட்டான்.
பாண்டவர்கள் ஒன்பதாம் நாள் இரவு ஊரடங்கியதும் செடி, கொடிகள், மரங்களையெல்லாம் துணியால் போர்த்தியிருந்தனர். விடியுமுன் எழுந்து கவனமாக அகலமான பாத்திரங்களில் பிழிந்து, அதைக் குடங்களில் ஊற்றினர். எட்டு குடங்களும் நிரம்பி வழிந்தன.
சபையில் இந்தக் குடங்களைக் கொண்டு வந்து வைத்தனர். திருதராஷ்டிரர், துரோணரே, எனது மைந்தர்களும் குடத்தை நிரப்பியுள்ளனரே" என்று கேட்டார்.
சூரியன்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்" என்றார் துரோணர். சூரியன் உதித்தான். அவரவர் குடங்களைத் தனித்தனியே வெயிலில் வைக்கச் சொன்னார் துரோணர். பனி நீர் சூரியனைக் கண்டால் மறைந்து போகுமல்லவா? பாண்டவர்களின் குடங்கள் காலியாகி விட்டன. கௌரவர் குடங்களில் ஏழரைக் குடம் நீர் மிஞ்சியது. துரோணர், குறுக்கு வழியில் கௌரவர்கள் ஏழரைக் குடம் தண்ணீரைக் கொண்டு வந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
எப்படிப் பனி நீரைச் சேகரித்தீர்கள்" என்று பாண்டவர்களைக் கேட்டார் பீஷ்மர். தருமபுத்திரர் பனி நீர் சேகரித்த விதத்தைச் சொல்லவும், திருதராஷ்டிரர் தலை கவிழ்ந்தது.

 

Comments