ஸ்ரீரேணுகாதேவி மேளா

வட இந்திய மாநிலங்களில் கார்த்தீகம் மாதத்தை ஒட்டி மூன்று முக்கிய நிகழ்வுகள் உற்சாகத் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிரம்மனைப் போற்றும் புஷ்கர் மேளா (ராஜஸ்தான்), கஜேந்திர மோட்ச வைபவத்தை அறிவுறுத்தும் ஹரிஹர கே்ஷத்ர விழா எனப்படும் சொனேபூர் மேளா (பீகார்), தாய் - மகன் பாசப்பிணைப்பை எடுத்துக்காட்டும் ஸ்ரீ ரேணுகாதேவி மேளா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவையே அவை. இவற்றில் மூன்றாவதாகச் சொல்லப்படும் உத்ஸவத்தைப் பற்றி இப்போது காண்போம்.
சாதுர் மாச விரதம் ஆரம்பிக்கும் ஆஷாட சுக்ல பட்ச சயனி ஏகாதசியில் உறங்கச் செல்லும் மகாவிஷ்ணு, கார்த்தீகம் வளர்பிறை பிரபோதினி (உத்தான, விழித்தெழுதல்) ஏகாதசி தினத்தில் துயில் எழுவதாக ஐதீகம். ஜமதக்னி ரிஷியின் ஐந்தாவது புத்திரர், திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராமர்!
கார்த்தவீர்யார்ஜுனனால் கவர்ந்து செல்லப்பட்ட ரேணுகா தேவி, ராம் சரோவரில் குதித்து ஜலசமாதி அடைந்தாள். அன்னை ரேணுகாவிடம் பரசுராமர் கொண்ட பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக கார்த்திகை மாதம், வளர்பிறை தசமி-ஏகாதசி திதியில் ஒன்றரை நாட்கள் ரேணுகா தேவி, மகன் பரசுராமரின் பாசத்தில் நெகிழ்ந்து போவாராம்! இச்சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு பெரிய திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசம் சிர்மௌர் மாவட்டத் தலை நகர் நஹானிலிருந்து 34 கி.மீ. தொலைவில் கீழ்த் திசைக் கோடியில் அமைந்துள்ளது ரேணுகாஜி தலம். அண்மையில் 113 கி.மீ. தூரத்தில் உள்ளது சண்டிகர் விமானத்தளம். அம்பாலா (ஹரியானா) ரயில் ஜங்ஷனிலிருந்து 106 கி.மீ. பேருந்து பயணம், இமாச்சலப் பிரதேசத்திலுள்ள 34 நீர் நிலைகளில் இது தான் மிகவும் பெரிது. ராம் சரோவர் என்பது ஆதி பெயர், இதன் சுற்றளவு 10,540 அடி.
‘நகரங்களின் பச்சை நுரையீரல்கள்’ எனும் அளவில் இந்த ஏரியும் அடங்கியுள்ளது. நீண்ட வால் வண்ணக்கோழி, மைனா, புல்புல் முதலிய 66 வகைப் புள்ளினங்கள், விலங்குகள், தாவரங்கள் என உள்ளடக்கிய, பதிவிரதை ரேணுகா தேவி குடியிருக்கும் இப்பிரதேசம், வெகு சுத்தமாகப் பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீன்களுக்கு உணவளித்தவாறு படகு சவாரியும் மேற்கொள்ளலாம்.
இதற்குப் பின்புறம் ஓங்கி, உயர்ந்துக் காட்சி யளிக்கிறது சிவனின் ஜடாமுடி என்றழைக்கப் படும் ஷிவாலிக் (மானக் பர்வதம்) மலைத் தொடர். இதில்தான் பர்ணசாலை அமைத்து ஜமதக்னி-ரேணுகாதேவி ரிஷி தம்பதிகள் தவ வாழ்வு மேற்கொண்டதாக அறிகிறோம். பரசுராமர் அவதரித்தப் புண்ணியப் பூமியும் இது தான்!
இந்த மேளா நடப்பதன் பின்னணியில் உள்ள தலபுராணத்தை அறிவோம். விதர்ப தேச மன்னன் ரேணு (விஜ்ரவித், பிரசன்னஜித் என்ற பெயர்களுமுண்டு)வுக்கு இரு மகள்கள். பார்வதி தேவியின் அம்சமாகக் கருதப்படுபவளும், ‘அயோனி’யா வேள்விக் குண்டத்திலிருந்து தோன்றியவளுமான ரேணுகா மூத்தவள், இளையவள் நேணுகா.
ஒருசமயம் மன்னன், அவர்களைச் சிறப்புற வளர்த்ததற்கு மூலகாரணமா இருந்தது யார் என வினவ, இளையவள் எல்லாம் தகப்பனார்தான்" என்று கூற, மன்னன் மனம் மகிழ்ந்தான். ஆனால் ரேணுகாவோ, எல்லாம் இறைவனின் அருள்" என்றுரைக்க வெகுண்டான்.
அதனால் மூத்தவளை ஒரு சாதாரண முனிவர் ஜமதக்னிக்கும், இளையவள் நேணுகாவை, சந்திரக்குல ஹைஹய வம்சாவளியைச் சேர்ந்த மால்வா தேசத்துப் பராக்கிரமசாலி மன்னன் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் மணமுடித்து வைத்தான்.
மானக் பர்வதத்தில் பர்ணசாலை அமைத்து முனிவர் ஜமதக்னி தன் பத்தினியுடன் தவ வாழ்வைத் தொடர்ந்தார். இங்குதான் அவர்களுக்கு மகேசனின் அருளால் ராமர் அவதரித்தார்.
ஈசனை வழிபட்டு அவரிடமிருந்து, ‘பரசு’ (கோடரி) வைப் பெற்றதால் பரசுராமர் என அழைக்கப்படலானார்.
ஒருசமயம் கார்த்தவீர்யார்ஜுனன் தன் சேனா வீரர்களுடன் மகரிஷியின் ஆசிரமத்தில் அவரது விருந்தினராகத் தங்கினான். ரேணுகாவோ, அவ்வளவு ஜனத்திரளையும் எப்படி உபசரிப் பது எனத் திகைத்தாள். உடனே, ஜமதக்னி ரிஷி, தான் பரா மரித்துவரும் காமதேனு பசுவிடம், மன்னன் பரிவாரத்தை உபசரிக்கும்படி ஆணையிட்டார். தெவப்பசுவின் உதவியுடன் மிக ருசியான விருந்தளித்து மன்னனை பிரமிக்க வைத்தார் ரேணுகா தேவி. முனிவரைச் சிறுமைப்படுத்த நினைத்த கார்த்தவீர்யார்ஜுனன், சிறுமைப்பட்டு நின்றான்!
இதற்கெல்லாம் காரணம் காமதேனுதான் என்றறிந் தவன், அதைத்தனக்கு அளிக்குமாறு ஆணையிட, இந்திரனுக்குரியதைத் தானமாக அளிக்க இயலாது என்று முனிவர் மறுத்தார். ஆக்ரோஷமடைந்தவன், ஜமதக்னி மற்றும் அவரது நான்கு புதல்வர்களையும் கொன்றுவிட்டான். பசுவையும்,ரேணுகாவையும் அவன் கவர்ந்து செல்ல முயலு கையில், பகவதி மலை முகட்டிலிருந்து கீழே ராம் சரோவரில் குதித்து விட்டாள் ரேணுகா.
நீர் பரப்பு இரண்டாகப் பிளவுபட்டு அதிலிருந்து நீரூற்று மேலெழும்ப,தேவி அதில் ஜலசமாதி அடைந்தாள். அதே சமயம் ஏரியும் ஒரு பெண் துயில் கொண்டிருக்கும் அமைப்பைப் பெற்று விட்டது!
மகேந்திர மலையில் தவத்திலிருந்த பரசுராமர் நடந்த விஷயத்தை அறிந்து, சினமுற்று முதலில் கார்த்த வீர்யனுடன் போரிட்டு அவனைக் கொன்றார். தன் தவ வலிமையால் தந்தை, சகோதரர்களை உயிர்ப்பித்த பின், ஏரிக்கு வந்து தாயை அழைத்தார். மகனின் ஆற்றாமையை அறிந்த அந்தத் தாய் ஏரியிலிருந்து வெளியே தோன்றி, தனக்கு மறு வாழ்வு அளிக்கும் மகனது எண்ணத்துக்குத் தடை போட்டாள்.
மாறாக, ‘ஆண்டுக்கு ஒருமுறை கார்த்தீகம் வளர்பிறை தசமி, அடுத்து பிரபோதினி ஏகாதசி ஒன்றரை நாட்களில் ஜல சமாதியிலிருந்து வெளிவந்து அளவளாவி மகிழ்விப்பேன்’ என வரமளித்தாள். அந்நியதி இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. சிரஞ்சீவி பரசுராமர் அந்நாட்களில் அமானுஷ்யமா பிரசன்னமாகி பகவதி ரேணுகாவுடன் அளவளாவுவதாகவும், பக்தர்களுக்கு அருளுவதாகவும் ஐதீகம்.
கூகுள் வரைபடத்தில் இந்த ஏரியைப் பார்த்தால் ஒரு பெண் ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் தத்ரூபமாக் காட்சி தருகிறது! ஏரியின் ஒருபுறம் சுற்றிலும் மரங்களடர்ந்த சொலையில் ரேணுகாஜியின் ஆலயம் உள்ளது. ‘மந்திர் மாதா ரேணுகாஜி’ என்ற வாசகத்துடன் வரவேற்கும் அலங்கார நுழை வாயிலில் பத்து படிகள் ஏறிச் செல்ல வேண்டும். எங்கும் மொசைக் கற்கள் பதிக்கப்பட்ட தரை. பன்னிரெண்டுத் தூண்கள் தாங்கிப் பிடித்துள்ள சதுர வடிவப் பிராகாரம். மத்தியில் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமின்றி, வெண்ணிறக் கூம்பு வடிவ விமானத்தின் கீழ் தேவியின் கருவறை. உயர்ந்த மேடை மீது நன்றாகச் சிங்காரிக்கப்பட்டு புடைவை அணிந்து நின்ற கோலத்திலுள்ள சலவைக் கல்லாலான ரேணுகா தேவியின் சிலையைத் தரிசிக்கலாம்.
கற்சுவற்றில் வடிக்கப்பட்டுள்ள மாதா மற்றும் சில தேவ, தேவியரின் மார்பளவுச் சிலைகளையும் காணலாம். இப்போதுள்ள இக்கோயில் 19ம் நூற்றாண்டில் கூர்கா ராணுவப் படைப் பிரிவினரால் ஒரே நாளில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆலயத்துக்கு வலப்புறம் லிங்கோத்பவ வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் சன்னிதி வியக்க வைக்கிறது.
தாமரைப் பூக்கள் நிரம்பியிருக்கும் ஏரியின் பாத விளிம்பைத் தாண்டிச் சற்று முன் நோக்கிச் சென்றால் பரசுராம் தீர்த்தம் உள்ளது. அதன் கரையில் முந்தையக் கோயிலைப் போன்றே தனயனுக்கும் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
இங்கு விமானம் ஸ்வஸ்திகா சின்னம் வரையப்பட்டு சாக்லெட் வண்ணத்தில் மிளிர்கிறது. கருவறையில் பரசு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முன்புறத் திறந்தவெளி முற்றத்தில் இடதுபுறமாகப் பரசுராமர் தவ மியற்றிய ஆயிரம் ஆண்டுகள் பழைமையானப் பாறை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்கருகேயாகக் குண்டமும் உள்ளது. ஏரி யைச் சுற்றிலும் ஆங்காங்கே ரிஷி, முனிவர்களின் சிலைகள் விரவிக் கிடக்கின்றன.
பிரபோதினி ஏகாதசிக்கு முதல் நாள் தசமியன்று காலையில், அருகிலுள்ள ஜாமுகோடி கிராமத்திலுள்ள புராதன ஆலயத்திலிருந்து பரசுராமரின் வெண்கலச் சிலை அலங்காரப் பல்லக்கில் வைத்து, மேள, தாளத்துடன், ‘ஷோப யாத்திரை’யாக ரேணுகாஜி கோயிலுக்கு அழைத்து வரப்படும். அதேசமயம், சுற்றுவட்டாரப் பிரதேசமான சுர்தாரிலிருந்து ஷிர்குல் தேவதை, சைந்தர் சீதளா தேவி,
சௌபல் நெர்வா மாசுஜியும் வந்து சேர்வர். தாயும், தனயனும் அவர்களுடன் ஏரிக்கரை யில் சந்தித்து, ஏகாதசி முடிய ஒன்றரை நாட்கள் அகமகிழ்ந்து போவது மட்டுமின்றி, குழுமியிருக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலிப் பார்களாம்! தாய்-சேய் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் விழாவாக இது கருதப்படுகிறது.

Comments