“கையில் உழவாரம்... வாயில் தேவாரம்!”

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு ஒருநாள் காஞ்சி மடத்தில், மகா பெரியவா தரிசனத்துக் காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந் தார்கள். வரிசையில் திருப்பூர் அன்பர் ஒருவரும் நின்றிருந்தார். அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். காஞ்சியில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவைத் தரிசிக்க வந்தவர்கள் அவர்கள். அதைவிடவும் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் தொடங்கிய திருப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கு மகா பெரியவாளின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதன்படி, காஞ்சி மடத்தில் வரிசையில் காத்திருந்தனர்.

வரிசை மெள்ள மெள்ள நகர்ந்தது...

திருப்பூர் அன்பர் மகா பெரியவா அருகில் வந்துவிட்டார். மகா பெரியவா, கனிவு ததும்பும் தம் திருவிழிகளால் அந்த அன்பரை நோக்கினார். பெரியவா அருகில் இருந்த பாரிஷதர், அந்த அன்பரைப் பார்த்து, ‘உங்களோட பிரார்த்தனை என்ன?’ என்று கேட்டார். அதற்கு அந்த அன்பர், ‘சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் அடியார்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, ‘கொங்குமண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டுத் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, சிவாலயங்கள்தோறும் உழவாரப்பணி செய்துவருகிறோம். அந்தப் பணி தடையின்றி தொடர பெரியவாளின் அனுக்கிரகம் வேண்டி வந்துள்ளோம்’ என்று கூறினார்.

அன்பர் கூறியதை பாரிஷதர் பெரியவாளிடம் கூறினார். மகா பெரியவாளின் திருமுகம் மலர்ந்தது. பாரிஷதரிடம் ஏதோ கூறினார். அவர் கூறியதை பாரிஷதர் அந்த அன்பரிடம் அட்சரம் பிசகாமல் அப்படியே கூறினார். பெரியவா கூறியதன் சாரம் இதுதான்... ‘தம்மைத் தரிசிக்கவரும் பக்தர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் ஏதேனும் கோரிக்கையுடன் வருகிறார்கள். ஆனால், இவர்தான் உயர்ந்த கோரிக்கையுடன் வந்திருக் கிறார். இவருக்கு என் ஆசிகளும் அனுக்கிரகமும் எப்போதும் இருக்கும்.’ இப்படிக் கூறிய பெரியவா, அந்த அன்பருக்கும் உடன்வந்தவர்களுக்கும் பிரசாதம் கொடுத்து ஆசி கூறினார்.

மகா பெரியவரின் வாக்கு, ‘தெய்வத்தின் குரல்’தான் என்று நிரூபிப்பதுபோல், இன்றுவரை சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டுத் திருக்கூட்டத்தினரின் உழவாரப் பணி. கடந்த வாரத்தில் ஒருநாள், திருப்பூர் `குன்று தோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழு' அமைப்பைச் சேர்ந்த அன்பர் சண்முகம் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், அக்டோபர் 29-ம் தேதியன்று, திருப்பூருக்கு அருகில் உள்ள இடுவாய் என்ற ஊரில் அமைந்திருந்த அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில், கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டுத் திருக்கூட்டத்தினரின் 438-வது உழவாரப் பணி நடைபெற இருப்பதாகவும் அவர்களின் திருப்பணியைப் பாராட்டி, குன்று தோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவின் சார்பில் கெளரவிக்க இருப்பதாகவும் தெரிவித்து, நமக்கும் அழைப்பு விடுத்தார்.
அவருடைய அழைப்பை ஏற்று நாமும் அந்தக் கோயிலுக்குச் சென்றோம். அங்கே, சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் உன்னதமான திருப்பணியை முகமலர்ச்சி யுடன் செய்துகொண்டிருந்தனர். ஒருவர் முகத்தில்கூட சிறிதளவும் சோர்வு இல்லை; மாறாக அளவற்ற பெருமிதமும் முகம் கொள்ளா பூரிப்பும் மட்டுமே தெரிந்தது. அடியார்களின் உழவாரத் திருப் பணிகளை மேற்பார்வை செய்தபடியும் தாமும் சில பணிகளைச் செய்தபடியும் இருந்த பெரியவர் ஒருவர், நம்மைப் பார்த்ததும் அருகில் வந்தார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அந்தப் பெரியவர்தான், மகா பெரியவாளின் பரிபூரண அனுக்கிரகம் பெற்ற, ‘அப்பரடிப்பொடி’ புலவர் வீ.சொக்கலிங்கம். `கையில் உழவாரம் வாயில் தேவாரம்' எனும் தாரக மந்திரத்தோடு செயல்பட்டுவரும் `கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டுத் திருக்கூட்ட'த்தின் தொடக்கம் மற்றும் பணிகள் குறித்து அவரிடம் கேட்டோம்.

‘‘சிறு வயதிலிருந்தே எனக்கு சிவபக்தி அதிகம். ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும்போதெல்லாம், பல கோயில்களில் புதர் மண்டி இருப்பதைக் கண்டேன். என்னால் முடிந்தவரை சுத்தம் செய்து விட்டு வருவேன். அப்போதுதான், நாவுக்கரசப் பெருமான் திருக் கோயில்தோறும் உழவாரப் பணி மேற்கொண்டதன் அவசியத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போதே, ‘பிற்காலத்தில் உழவாரப் பணிக்கென்றே ஓர் அமைப்பை ஏற்படுத்தி, சிவாலயங்கள் தோறும் சென்று உழவாரப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் எனக்குள் துளிர்விட்டது. 1981-ல் அது செயல் வடிவம் பெற்றது. தொடக்கத்தில் 700 முதல் 800 அன்பர்கள் வரை பங்கு பெற்றனர். தற்போது 200 அன்பர்கள் வரை உழவாரப் பணியில் பங்கேற்கிறார்கள்’’ என்றவரிடம், ‘`உங்கள் திருக்கூட்டத்தின் சார்பில் நடைபெற்ற உழவாரப் பணிகளின்போது நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள் ஏதேனும் உண்டா?’’ என்று கேட்டோம்.

‘`நிறையவே உண்டு. உதாரணத்துக்கு இரண்டு நிகழ்வுகளைச் சொல்கிறேன்'' என்றவர் அதுபற்றி விவரித்தார்.

‘`31.5.98 அன்று திருவண்ணாமலை திருக்கோயிலில் உழவாரப் பணி செய்வதற்காகச் சென்றிருந்தோம். அது எங்கள் திருக் கூட்டத்தின் 205-வது உழவாரத் திருப்பணி. கோயிலின் திருக் குளத்தைச் சுத்தம் செய்யச் சென்றபோது, ஓரிடத்தில் முடிக் காணிக்கை செலுத்தியவர்களின் முடிகள் குவிந்திருப்பதைக் கண் டோம். அந்த இடத்தைச் சுத்தம் செய்ய நினைத்தோம். ஆனால், அருகில் நெருங்கவே முடியாத அளவுக்குத் துர்நாற்றம்.

எனினும், எங்களின் அடியார் பெருமக்கள் எதையும் பொருட் படுத்தாமல் அந்த இடத்துக்குச் சென்றனர். அங்கே மனிதக் கழிவுகள் குவிந்திருந்தன. ஆனா லும், அதைக் கண்டு கொஞ்சமும் அசூயை அடையாமல், ‘இது பகவானின் திருக்கோயில். இதைச் சுத்தம் செய்வது நம் கடமை’ என்ற உணர்வுடன், அனைவரும் சேர்ந்து சுத்தம் செய்வதில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகம் மூலம் விவரம் அறிந்த நகராட்சி அதிகாரிகள், அவர்கள் வசம் இருந்த லாரிகளையும், ஊழியர்களையும் அனுப்பி, எங்கள் பணிகளில் உதவி செய்ய வைத்தனர். அப்போது கோயிலின் துணை ஆணையராக இருந்த ஆறுமுகம் அவர்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

நாங்கள் மனிதக் கழிவுகளை அகற்றிய சம்பவம் உடனே ஊருக்குள் பரவி, அந்த ஊரில் இருந்த ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆலயத் துக்கு வந்துவிட்டனர். அனைத்துத் தரப்பினரும் எங்கள் பணிகளைப் பெரிதும் பாராட்டினர்’’ என்றவர் தொடர்ந்து, சிதம்பரத்தில் நடைபெற்ற உழவாரப்பணி பற்றிக் குறிப்பிட்டபோது, கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டுத் திருக்கூட்டத்துக்கு தில்லையம்பலத்தில் அருள் நடனம் புரியும் ஆனந்தக்கூத்தனே நற்சான்றிதழ் வழங்கியதுபோல் இருந்தது.
‘`நாங்கள் சிதம்பரம் திருக்கோயிலில் 150-வது  உழவாரத் திருப்பணி மேற்கொள்வதற்காகச் சென்றோம். கோயில் என்றாலே சிதம்பரம்தானே. எனவே, எங்கள் அடியார்கள் சுற்றிச் சுழன்று உழவாரப்பணிகளை மேற் கொண்டார்கள்.

பணிகளை மேற்பார்வை யிட்டுக் கொண் டிருந்த கௌமார மடாலயம் சீர்வளர்சீர் சுந்தர சுவாமிகளிடம் வந்த தீட்சிதர் பெருமக்கள், ‘இப்படி ஒரு திருப்பணியை நாங்கள் கண்டதே இல்லை. சபையின் தூண்களை யும் கூரிய விளிம்புகளைக் கொண்ட தகடுகளையும்கூட விட்டுவிடாமல் சுத்தம் செய்த அன்பர்களின் உழவாரப்பணி போற்றுதலுக்கு உரியது’ என்று பரவசத்துடன் கூறினார்கள்.

தொடர்ந்து அன்று மாலை ஆறு மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் தாங்களாகவே ஒன்றுகூடிய தீட்சிதர் பெருமக்கள், அந்த மண்டபத்தை மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து, ஒரு பாராட்டு விழாவுக்கே ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
இந்த மண்டபத்தில் மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திர நாள்களில் தில்லை நடராஜப் பெருமான் எழுந்தருளி திருமஞ்சனம் காண்பார். சிறப்புமிக்க அந்த மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், தீட்சிதர் குழுவின் முக்கிய பிரமுகர் ஒருவர் எங்கள் அடியார்களின் உழவாரப் பணியைப் பெரிதும் சிலாகித்துப் பேசினார். மேலும் அவர் கூறும்போது, ‘இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வருடத்துக்கு இரண்டு முறை ஆனந்தக் காட்சி நடைபெறும். இன்று நடை பெறுவதை மூன்றாவது ஆனந்தக் காட்சி என்றே  சொல்லலாம்’ என்று சிலிர்ப்புடன் குறிப்பிட்டார். அப்போது எழுந்த  கரகோஷமும் வாழ்த்தொலியும் அடங்க நீண்ட நேரமானது.

இப்படி ஒரு பாராட்டு விழா நடந்தது,  தில்லையம்பலத்து ஆனந்தக் கூத்தப் பெருமானின் அருளாடலால்தான் என்பதைப் புரிந்து கொண் டேன்.  காரணம்,  சிதம்பரம் கோயிலில் உழவாரத் திருப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக அனுமதி கேட்கச் சென்றிருந்தேன். தில்லைக்கூத்தப் பெருமானிடம் அனுமதி கேட்டுத்தான் சொல்ல முடியும் என்று தீட்சிதர்கள் கூறிவிட்டார்கள். அதன்படி, ஆனந்தக்கூத்தனிடம் அனுமதி கேட்கச்சென்றவர்கள் சற்றைக்கெல்லாம் வந்து, ‘ஆடலரசன் அனுமதி கொடுத்துவிட்டார்’ என்று பரவசத்துடன் கூறினார்கள். அப்படி அனுமதி அளித்த ஆடலர சனின் அனுக்கிரகமே, தீட்சிதர் பெரு மக்களை எங்கள் அடியார்களுக்குப் பாராட்டு விழா எடுக்கும்படிச் செய்தது என்றே சொல்லலாம்’’ என்றார்.

பரவசமும் பூரிப்பும் மேலிட பெரியவர் சொக்க லிங்கம் விவரித்து முடிக்கவும், கோயிலில் நடை பெற்ற உழவாரப் பணி முடிவதற்கும் சரியாக இருந்தது. தொடர்ந்து இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றன.
தொடர்ந்து குன்றுதோறாடல் கூட்டு வழிபாட் டுக் குழுவின் சார்பில், உழவாரத் திருப்பணி அமைப்பின் தலைவர் புலவர் வீ.சொக்கலிங்கம் மற்றும் அவருடன் துணைநிற்கும் அடியார் பெரு மக்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவின் சார்பில் திருப்பூர் சண்முகம், உழவாரப் படைக் கலன் வழங்கி கௌரவித்தார்.  தொடர்ந்து கம்பன் கழகச் செயலர் ராமகிருஷ்ணன், தொழிலதிபர் கே.பி.கே.செல்வராஜ், சிவநேயச் செல்வர் ராம்நாத் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியும் பாராட்டியும் பேசினர். நிறைவாக ஏற்புரை வழங்கிய புலவர் வீ.சொக்கலிங்கம், தனக்கு நடை பெற்ற பாராட்டு விழா என்பது தனக்கானது அல்ல, தன்னுடன் சேர்ந்து இந்தப் புனிதப்பணியில் பங்கேற்ற அத்தனை அடியார்களுக்குமான பாராட்டு விழா என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விழா நிறைவில் அனைவருக்கும் கட்டமுது பிரசாதம் வழங்கப்பட்டது. பசியாற உண்டு, இறையருள் கிடைத்து விட்ட பூரிப்பில், மனம் கொள்ளா மகிழ்ச்சியுடனும் முகமலர்ச்சியுடனும் அடியார்கள் விடைபெற்றுச் சென்றனர்.

இந்தத் திருக்கூட்டத்தாரின் அடுத்த உழவாரப் பணி, 26.11.17 ஞாயிற்றுக்கிழமை அன்று, கோவை மாவட்டம், அன்னூர் அருகிலுள்ள எல்ல பாளையம்  முருகன் கோயிலில்  நடைபெறவுள்ளது (தொடர்புக்கு: 94869 23424).

`அடியார்க்கு அடியேன் போற்றி' எனும் சுந்தரமூர்த்தி நாயனாரின் வழியில் நாமும் இந்த அடியார்களைப் போற்றுவோம். அத்துடன், நீண்டநெடிய காலம் சிறந்தோங்கப் போகும் இந்த அடியவர்களின் திருப்பணியில் நாமும் சங்கமிப் போம். உழவாரத் திருப்பணி நம்மை மட்டுமல்ல; நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.


கட்டமுதுக்கு நிகர் வேறில்லை!

கொங்கு மண்டல அப்பரடிகள்  சிவநெறி வழிபாட்டுத் திருக்கூட்டத்தின் பணிகளில் பங்கேற்பவர்கள் அனைவருமே, உழவாரத் திருப்பணி எங்கு நடந்தாலும் தங்கள் சொந்தச் செலவில், சொந்தப் பொறுப்பில் சென்று பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உணவையும் அவர்களே கொண்டு வருகின்றனர். அப்படி அவர்கள் கொண்டுவரும் உணவு ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, அதுவே கட்டமுது பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதுபற்றி அடியார்களிடம் கேட்டால், ‘‘கட்டமுதுக்கு நிகர் வேறில்லை. நாங்கள் இப்படிச் செய்வது, அப்பர் சுவாமிகளுக்கு இறைவன் கட்டமுது வழங்கிய அருளை நினைவுகூரவே ஆகும். மேலும், அனைவரின் உணவையும் ஒன்றாகக் கலந்துவிடுவதால், உழவாரப் பணியில் ஈடுபடும் அடியார்களுக்குள் பேதம் இல்லாமல் இருப்பது போலவே, உணவிலும் பேதம் இல்லாத நிலை ஏற்பட்டு விடுகிறது’’ என்றார்கள் பரவசத்தோடு.

Comments