பயணிகள் கவனத்துக்கு...

ன்னுடைய சின்ன வயதில் இந்தச் செய்தியைப் படித்திருக் கிறேன். இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி தன் இறுதிப்  படுக்கையில் இருந்தார். எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலையில் அவருடைய விழிகள் மெள்ளத் திறந்தன. தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்தார் மகா ராணியார். ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை’ என்ற பெருமிதத்தைச் சொல்லாமல் சொல்லும் வகையில் செல்வச் செழிப்புடன் அமைந்திருந்த அந்த அறையில் மகாராணியைச் சுற்றிலும் உயர் பதவி வகிக்கும் மனிதர்கள் நின்றிருந்தனர்.

அவர்களைச் சலனமே இல்லாமல் மகாராணியாரின் கண்கள் பார்க்க, ‘இனி எல்லாம் சில நொடிகளுக்கு மட்டும்’ என்று உதடுகள் முணுமுணுக்க, அவருடைய சுவாசம் நின்றது.

‘இனி எல்லாம் சில நொடிகளுக்கு மட்டும்’ என்ற வார்த்தை கள் ஆழ்ந்த பொருள் கொண்டவை. எப்போது வேண்டுமானா லும் உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடக்கூடும். இதுவரை தனக்கு உரியதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கும் உறவுகள், பொருள்கள் அனைத்திடமிருந்தும் தான் எப்போது வேண்டுமானாலும் விடை பெறலாம். எதுவும் தன்னுடன் வரப்போவதில்லை என்ற உண்மையை உணர்த்தும் வார்த்தைகள் அவை.

இந்த வார்த்தைகள் அவருக்கானது மட்டுமே அல்ல. பொருள்களிடமும் மனிதர்களிடமும் நாம் கொண்டுள்ள பற்றையும், பூமியில் நாம் நம்முடைய பயணத்தை முடித்துக் கொள்கிறபோது, சிறு துரும்பையும் உடன் எடுத்துச் செல்ல இயலாத நிலைமையையும் உரைக்கின்ற கையறு வார்த்தைகள்.

நாம் ஒவ்வொருவருமே நமக்கு உரிமையானவை என்று நம்பிக்கொண்டிருக்கும் சில ஏக்கர் நிலங்கள், பட்டம், பதவிகள், புகழ் என்று எல்லாமே நம்மிடமிருந்து வலுக்கட்டாய மாக அகற்றப்படுகையில், அநியாயத்துக்குத் துயரம் அடைகிறோம். அவற்றை நம்முடன் பந்தப்படுத்தி, அவற்றுடன் அழுத்தமான இணைப்பை ஏற்படுத்தி, அவைதான் நாம் என்றும் அவை இல்லாமல் நாம்  இல்லை என்றும் எண்ணத் தலைப்படுகிறோம். எதுவும் நம்முடன் வரப் போவதில்லை என்று நம் எல்லோருக்கும் தெரிந் திருந்தபோதும், ஒவ்வொன்றையும் இழக்கும் போதும், இதுவரை உலகத்தில் யாருக்கும் ஏற்படாத துயரம் நமக்கு நேர்ந்துவிட்டதுபோல் துயரம் அடைகிறோம். இது நமக்கானது என்ற உணர்வு எத்தனை அழுத்தமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வலியின் வேதனை அதிகரிக்கிறது.

‘பணம் வரும், போகும்; வரும்போது தனியாகத் தானே வந்தோம், போகும்போதும் தனியாகத்தான் போக வேண்டும்’ என்றெல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டாலும், அனுபவிக்கிறவர்களுக்கு மட்டும்தான் தெரியும், பிரியமான ஒன்று கைநழுவிப் போகும்போது ஏற்படும் துயரத்தின் வலி. ‘எதுவும் என்னுடன் இல்லையே ஏன்... எனக்குப் பிரியமானவர்கள் ஏன் என்னை விட்டுப் பிரிகிறார்கள்?’ என்பது போன்ற கேள்விகள் தரும் வலிகள் ஒவ்வொரு நொடியையும் ரணமாக்கி நகர்த்துபவை.

‘நான் மட்டும் வந்தேன், நான் மட்டும் செல்கிறேன்’ என்று இறுதிப் பயணத்தை இயல்பாக எடுத்துக்கொள்ள, நமக்கு தர்மபுத்திரரின்  இறுதிப் பயணம் உதவுகிறது.

தங்கள் காலம் முடிந்துவிட்டதாக உணர்ந்த பாண்டவர்கள், ஆட்சிப் பொறுப்பை விட்டு விலகி, மரவுரி தரித்து, சொர்க்கத்தை நோக்கிப் பயணிக்கும் யாத்திரை அது. ஆனால் இலக்கை அடைந்தது தர்மபுத்திரர் மட்டும்தான்.

பயணத்தின்போது முதலில் பாஞ்சாலி கீழே விழுகிறாள். அதன் காரணத்தை பீமன் கேட்கிறான். அவனிடம், `‘பாஞ்சாலி ஐந்து பேரையும் சமமாக நினைக்கக் கடமைப்பட்டவள். ஆனால், அர்ஜுனனை அதிகமாக நேசித்தாள்’' என்று விளக்கினார் தர்மபுத்திரர்.

அடுத்து சகாதேவனின் வீழ்ச்சிக்கு, ‘தானே மிகுந்த புத்திசாலி’ என்ற அவனுடைய நினைப்பை யும், நகுலனின் வீழ்ச்சிக்கு, அவனுக்குத் தன் அழகில் இருந்த கர்வத்தையும், அர்ஜுனனின் வீழ்ச்சிக்கு, ‘மற்றவர்களை விடவும் தான் திறமையானவன்’ என்ற அதீத நம்பிக்கையையும் காரணமாகக் கூறினார் தர்மபுத்திரர்.

இந்த நிலையில் பீமனும் வீழ்ந்தான். அப்போது  தன் வீழ்ச்சிக்கு அவன் காரணம் கேட்டபோது,   அவன் தனது வலிமையின்மீது கொண்டிருந்த பற்றுதான் காரணம் என்றார் தர்மபுத்திரர். 

ஆனால், இந்தக் கதைக்கு இன்னொரு விளக் கமும் இருக்கிறது. பாஞ்சாலியைப் பற்றி வியாசர், துருபத மன்னனிடம் கூறுகையில், `பாஞ்சாலி லட்சுமியின் அம்சம்' என்கிறார்.

ஆம், பாஞ்சாலி பாண்டவர்களிடம் வந்த பிறகே அவர்களிடம் செல்வமும் அதிகாரமும் சேர்ந்தன. பாஞ்சாலி வீழ்வது ஒருவனின் செல்வம் உடன் வரப் போவதில்லை என்பதை உணர்த்துகிறது.

சகாதேவன் அறிவின் குறியீடாகக் காட்டப்படு கிறான். துரியோதனனே மதித்து ஆலோசனை கேட்கும் அளவுக்கு நுட்பமான அறிவுத்திறன் கொண்டவன். அவனுடைய வீழ்ச்சி, ஒருவனின் அறிவு, புத்திசாலித்தனம் எதுவுமே உடன் வரப் போவதில்லை என்பதின் குறியீடு. நகுலனின் வீழ்ச்சி, அழகும் நம்முடன் வரப்போவதில்லை என்பதைக் காட்டுகிறது. திறமையும் வலிமையும் கூட அப்படித்தான் என்பதையே அர்ஜுனன் மற்றும் பீமனின் வீழ்ச்சி உணர்த்தும்.

இப்படி தர்மபுத்திரர் இழப்பவை எல்லாம், ஒருவனின் இறுதிப் பயணத்தில் செல்வம், அறிவு, அழகு, திறமை, வலிமை எதுவுமே உடன் வராது என்பதன் குறியீடே. அப்படியானால், தர்ம புத்திரருடன் இறுதிவரை உடன் வந்த நாய்? தர்மபுத்திரர் இழக்க விரும்பாத நாய்?
அது, தர்மபுத்திரரின் மனசாட்சியின் குறியீடாகும். அதை அவரால் உதறவே முடியாது. மனசாட்சி மட்டுமே நம்முடன் வரும். நாம் நினைத்தாலும் அதை உதற முடியாது. 

இந்தப் பூமி உங்களுக்கான சுற்றுலாத் தலம். பார்க்கலாம், ரசிக்கலாம், அனுபவிக்கலாம். அதற்கு மட்டும்தான் உரிமை தரப்பட்டிருக்கிறது.

உங்களுடைய பூமிப் பயணத்தில், எப்போது பிரச்னை ஆரம்பிக்கிறது என்றால், நீங்கள் அனுபவிக்கும் பொருள்களாகவே நீங்கள் மாறி விடும்போதுதான். அவற்றுடன் உங்களைப் பிணைத்துக்கொள்ளாதவரை, அவை உங்களுக்குத் துன்பம் தரப்போவதில்லை.

 எனவே, மனசாட்சிக்கு விரோதமில்லாத செயல்களைச் செய்தபடி பயணம் செய்தால், உங்களின் சுற்றுலா இனிமையாகவே இருக்கும்.

Comments