தண்ணீர்த் திருவிழா! - அப்பரின் ஆசிபெற்ற அற்புத கிராமம்

வீட்டுக்கு வீடு உழவாரக் கருவி. ஒவ்வொருவரின் மார்பிலும் ருத்திராட்சம். கேட்டால், ‘திருநாவுக்கரசரின் அடையாளம்’ என்று பெருமிதத்தோடும் பக்தி பூரிப்பு மாகச் சொல்கிறார்கள் அந்தக் கிராமத்து அன்பர்கள்.

காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் அரவணைப்பில் அமைந்துள்ள அழகான கிராமம் அது.  சமயக்குரவர்களில் ஒருவரான ‘அப்பர்’ என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் காட்டிய வழியில் இன்றுவரை நடைபோடும் கட்டுப்பாடான கிராமம்.
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகேயுள்ள ‘ஆண்டார்பந்தி’ என்ற அந்தக் கிராமத்தில் நுழையும் போதே மா, பலா, வாழை, பாக்கு மற்றும் எலுமிச்சை எனப் பச்சை மரங்களின் வனப்பு கச்சைக்கட்டி வரவேற்கும். 

இக்கிராமத்தின் அருகிலுள்ள திருவிழிமிழலைக் கோயிலில் திருநாவுக்கரசர் தங்கி, சிவத்தொண்டாற்றி வந்த காலத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தைத் தீர்க்க இறைவன் தங்கப்படிகாசு தந்தருளினார். அதைக் கொண்டு அருகிலுள்ள அய்யன்பேட்டையில் பொருளை வாங்கி ஆண்டார்பந்தியில் உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கியிருக்கிறார் திருநாவுக்கரசர்.  ‘ஆண்டார்’ என்றால் தொண்டர் என்று பொருள்.  தொண்டர்களுக்குப் பந்திவைத்ததால் ஆண்டார்பந்தி என்று ஊருக்குப் பெயர்க் காரணம் சொல்கிறார்கள். 

சுமார் 140 வீடுகளுடன் திகழும் இந்தக் கிராமத்தினருக்கு திருநாவுக்கரசருடன் சேர்ந்து கோயில்களில் புல் பூண்டுகளை அகற்றும் உழவாரப்பணி செய்வது தொழிலாக இருந்திருக்கிறது. அதற்கு அடையாள மாக உழவாரம் என்ற கருவி இன்றும் அனைவர் வீடுகளிலும் உள்ளது.  அதைக் குலதெய்வமாக வணங்கும் பொருளாகப் பாதுகாக்கிறார்கள்.
கடுமையான கோடை வெப்பம் தணிக்க, தொண்டர்களோடு எலுமிச்சைச் சாறு அருந்திய திருநாவுக்கரசர், ஊரை விட்டுப் போகும்போது எதிர்காலத்தில் உங்கள் குடும்ப வருமானத்துக்கு இது உதவும் என்று கூறி, எலுமிச்சை விதைகளை இந்த ஊர் கொல்லைகளில் தெளித்துச் சென்றாராம்.
பல நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை ஒவ்வொருவர் வீட்டுக் கொல்லைகளிலும் ஆண்டு முழுவதும் இடைவிடாது காய்க்கும் எலுமிச்சை மரங்கள் உள்ளன.  இங்குள்ளவர்கள் அனைவரும் சமையல் தொழிலைக் குலத் தொழிலாகச் செய்கிறார்கள்.  பட்டம் பயின்ற வர்கள்கூட விடுமுறை நாளில் இப்பணிக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.  திருநாவுக்கரசரின் அடையாளமாக அனைத்து ஆண்களும் கழுத்தில் ‘ருத்திராட்சம்’ அணிந்திருக்கிறார்கள்.
அக்கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பழனி, “இந்த ஊர்ல 35 ஏக்கர் நஞ்சை, 35 ஏக்கர் புஞ்சை நிலம் இருக்கு. அனைவர் வீட்டுக் கொல்லையிலும் இருக்கும் புஞ்சை நிலத்தில் ஆண்டாண்டு காலமாய் எலுமிச்சை மரங்கள் இருக்கு. அதுல, ஊடுபயிராக மா, பலா, வாழை, பாக்கு போன்றவற்றை வளர்த்து அதிலிருந்தும் பணம் சம்பாதிக்கிறோம்.  வீட்டுக்குத் தேவையான அனைத்து காய்கறிகளையும் பயிர் செய்றோம். வெளியில எதுவும் வாங்குறது இல்லே. அதேபோல், நல்ல உணவுகளைச் சாப்பிடுறதால ‘சுகர், பிரஷர்'ன்னு நோய்நொடி அதிகமில்லே. எல்லோரும் உறவினரா இருக்குறதால வம்பு, சண்டைன்னு போலீஸ் ஸ்டேஷன் போனதில்ல. பெரும்பாலும் பிரச்னை வராது. அப்படி வந்தா எங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக்குவோம்.  அப்பரின் ஆசீர்வாதத்தில் குறையில்லாம நிறைவாகவே வாழறோம்.  இதுவே பெரிய கொடுப்பினை” என்றார்.

சமையல்காரரான மகாலிங்கம், ‘‘சமையல் எங்கள் குலத்தொழில்’’ என்கிறார். அவரே தொடர்ந்து,  “ஆண்டார்பந்திக்காரங்க சமையல் னாலே சைவ சாப்பாடு சூப்பரா இருக்கும்னு எல்லாரும் சொல்வாங்க. உலகத்தமிழ் மாநாட்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு சமைச்சிக் கொடுத்திருக்கோம்.  பட்டப்படிப்புப் படிச்ச புள்ளைங்ககூட சமையல் கலையை கத்துப்பாங்க” என்றார்.

உண்மைதான். திருநாவுக்கரசரின் வழியில், உணவு உபசரிப்பு செய்வதில் அகமகிழ்கிறார்கள் இந்தக் கிராமத்தினர்.
“பஞ்சமில்லா ஊரு. நெஞ்சில் வஞ்சமில்லா ஜனங்க. இந்த ஊருக்கு வந்தவங்க யாரும் பசின்னு போனதில்ல.  திடீர்னு 10 விருந்தாளிங்க வந்தாலும், பக்கத்து வீட்டுல பொரியல் எடுத்து, எதிர்வீட்டுல ரசம் எடுத்து, பத்து நிமிஷத்துல பந்திபோட்டுப் பரிமாறிடுவோம்’’ என்று கூறிச் சிரிக்கிறார் இவ்வூரைச் சேர்ந்த மல்லிகா.
இவ்வூரின் மற்றொரு சிறப்பம்சம் தண்ணீர்த் திருவிழா!

ஊரின் காவல்தெய்வமான சூளப்பிடாரி அம்மன் அரசலாற்றின் வழியாக ஊருக்கு வந்ததாக ஐதீகம்.  அந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆற்றில் தண்ணீர்வந்ததும் 10 நாள்கள் தண்ணீர்த் திருவிழா நடத்தி வருகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக உரிய காலத்தில் ஆற்று நீர் வராததால் திருவிழா தடைபட்டுப் போனது. தற்போது தாமதமானாலும், அரசலாற்றில் தண்ணீர் வந்திருப்பதால் மிகவும் உற்சாகமாகத் திருவிழாவைக் கொண்டாடினார்கள்.
இந்த ஊரின் எல்லையில்தான் அரசாலாற்றிலிருந்து நூலாறு என்ற கிளையாறு பிரிகிறது. 10 நாள்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எல்லை ஓட்டம் நவம்பர் 1-ம் தேதி மதியம் தொடங்கியது.

அப்போது, சூளப்பிடாரிக்குச் சிறப்பு வழிபாடு செய்து அரசலாற்றுத் தண்ணீரில் இறக்கி, இரண்டு பக்கமும் கயிறுகட்டி, தண்ணீரில் மூழ்கியபடி இழுத்துவந்தார்கள் பக்தர்கள். ஊரைச் சுற்றியுள்ள வாய்க்கால்களைக் கடந்து இறுதியாக ஆபத்து நிறைந்த நூலாற்றின் வழியாக தாமரைக் குளத்துக்குக்கொண்டு வந்ததுடன் சூளப்பிடாரியின் தண்ணீர் உலா நிறைவுபெற்றது. தாமரைக்குளம் அருகே உள்ள பாம்பு புற்றில் சூளப்பிடாரியைக் கரையேற்றிவைத்து மீண்டும் ஒரு சிறப்பு வழிபாட்டுடன் எல்லையோட்ட விழா இனிதே நிறைவுபெற்றது.
திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் மேளதாளத்துடனும் வாணவேடிக்கையுடனும் மக்கள் வரவேற்க, சூளப்பிடாரியும், காளியம்மனும் வீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.

விளைநிலம் மற்றும் காய்கறித் தோட்டத்தை நம்பிவாழும் இக்கிராம மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரம் தண்ணீர்தான்.  அதை ஊருக்குக் கொண்டும்வரும் ஆறுகள், வாய்க்கால்கள் வழியாக சூளப்பிடாரி வலம்வருவதால் தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்பது கிராமத்தினரின் நம்பிக்கை.  அந்த வகையில் கொண்டாடப்படும் எல்லை ஓட்டம் என்ற தண்ணீர்த் திருவிழா வேறு எங்கும் கொண்டாடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments