கரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்

விநாயகர், முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுபவர். பல தலங்களில் அவர் கோயில்கொண்டு அருள்புரிந்து வருகிறார். அந்தவகையில் அவர் மூன்று தலங்களில்நிகழ்த்திய அருளாடல்கள் விசேஷமானவை. அவற்றை இங்கே காண்போம்...
கரையேற்று விநாயகர் - திருக்கோடிகா

`கா' என்றால் சோலை என்று பொருள். `கா' என முடியும் சிவத்தலங்கள் ஐந்து. இந்தத் தலங்களை `பஞ்ச கா ஸ்தலங்கள்’ என அழைப்பார்கள். திருஆனைக்கா (திருச்சி அருகில்), திருக்கோலக்கா (சீர்காழி அருகில்), திருநெல்லிக்கா (திருத்துறைப்பூண்டி அருகில்), திரு குரக்குக்கா (நீடுர், மயிலாடுதுறை அருகில்) திருக்கோடிகா (கும்பகோணம் - சூரியனார் கோயில் வழியில் கஞ்சனூரிலிருந்து 2 கி.மீ தொலைவு)... இந்தத் தலத்தில் திரிபுரசுந்தரி என்னும் வடிவாம்பாளுடன் திருக்கோடீச்வரர் என்னும் கோடிகாநாதர் அருள்பாலிக்கிறார். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசர் சுவாமிகளும் பாடிப் பரவிய இந்தத் தலம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. தற்போது இதை `திருக்கோடிக்காவல்’ என்று அழைக்கின்றனர். செம்பியன் மாதேவி திருப்பணி செய்த திருக்கோயில் இது.

`திரிகோடி' என்றால், மூன்று கோடி என்று அர்த்தம். மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இந்தத் தலத்தில் நீங்கியதால் `திருகோடிகா' என்று பெயர் உண்டாயிற்று. முக்தி வேண்டி மூன்று கோடி மந்திர தேவதைகள் இங்கே தவம் இருந்தனர். அப்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகரைத் துதித்து வேண்டினர். அவரும் அவர்களைக் கரையேற்றி அருள் பாலித்தார். அகத்தியர் மந்திர தேவதைகளுக்கு உபதேசித்து மணலால் விநாயகரைப் பிடித்து வைத்து பிரதிஷ்டை செய்தார். முக்கோடி மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சஹஸ்ர நாமத்தால் (ஆயிரம் திருப்பெயர் களால்) அர்ச்சனை செய்து பூஜித்தனர். கரையேற்று விநாயகர் இத்திருக்கோயிலில் தென் மேற்கு திசையில் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஆயிரம் மலர்களால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, எல்லாவிதமான சாபங்களும் தோஷங்களும் நீங்கும். இங்கே மூன்று கோடி தேவதைகள் நந்தியின் கொம்பால் உண்டான சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டனர். அப்போது அங்கிருந்து கிளம்பிய திவ்ய ஒளிப்பிழம்பில் அனைவரும் ஐக்கியமாகி விட்டதாகத் தல புராணம் விவரிக்கிறது.
செவிசாய்த்த விநாயகர் - அன்பில்

திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர் ஆகியோர் பாடியுள்ள திருத்தலம், அன்பில் ஆலந்துறை. `அன்பில்’ என்பது தலத்தின் பெயர். `ஆலந்துறை’ என்பது கோயிலின் பெயர். சம்பந்தப் பெருமான் இங்கே எழுந்தருளியபோது, கொள்ளிட நதியில் வெள்ளம் கரை புரண்டோடியதால், தென்கரையிலிருந்தே சம்பந்தர் பதிகம் பாடினார் என்பார்கள். அதை இறைவன் ஆணையின்படி அங்கிருந்த விநாயகர் செவிசாய்த்துக் கேட்டார். இதனால் அவருக்குத் `தேவாரம் கேட்ட விநாயகர்’ என்ற பெயரும் உண்டு. இதற்கு ஏற்ப இந்த விநாயகர் திருவுருவம் திருமுடியை வலதுபுறம் வளைத்து, செவிசாய்த்துக் கேட்கிற பாவனையுடன் அமைந்ததை நாமும் கண்டு ரசிக்கலாம். பராந்தகச் சோழன் வேத வேள்வியில் சிறந்த 108 அக்னிஹோத்ரிகளை அழைத்து வந்து, இந்தத் தலத்தில் குடியேறச் செய்தான். இந்த 108 குடும்பத்தார்களும் ஜைமினி சாமவேத வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய சாமவேத பாராயணத்தைக் கேட்டருளிய விநாயகர், சம்பந்தரின் பாடல்களையும் கேட்டதால் இவரை `சாமகானம் கேட்ட விநாயகர்’ என்றும் அழைப்பார்கள்.

`மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்றடையும் புனல் அன்பில் ஆலந்துறையே...’

என்பது சம்பந்தர் தேவாரம். `நிறைந்த பொழில் சூழ்ந்த அன்பில் ஆலந்துறையில் வேதம் ஓதும் சிறுவர்கள் கூட்டத்தில் ஒலி எழும்புகிறது. அங்குள்ள கிளிகள் அந்த வேத ஒலியைச் சந்தத்தோடு இசைக்கின்றன. அங்கே வீற்றிருக்கும் சிவ பெருமான் சடைபொருந்தியவர்; சாமர்த்தியமுடையவர்; முற்றாத இளம் சந்திரனைச் சூடியவர். அவரே இடபக் கொடியுடையவராகிய எந்தை’ என்று சம்பந்தர் மற்றொரு பாடலில் குறிப்பிடுகிறார்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரியின் வடகரையில் உள்ள இந்தக் கோயிலுக்கு, திருச்சி மற்றும் லால்குடியிலிருந்து செல்ல வசதிகள் உள்ளன. இங்கே இறைவன் `சத்யவாகீச்வரர்’, `பிரம்மபுரீச்வரர்’, `ஆலந்துறையார்’ என்றும் அம்பிகை, `சௌந்தர நாயகி’ என்றும் அழைக்கப் பெறுகிறார்கள்.
வருண விநாயகர் - திருவாடானை

சூரியனுக்கு ஒளி கொடுக்கும்படியாக ஆதிரத்னமாக இருந்து இறைவன் அருளிய திருத்தலம் திருவாடானை.

ஆடு - யானை சேர்ந்த விநோத உருவம் வழிபட்ட கோயில்.

 இறைவன், `ஆதிரத்னேச்வரர்’ என்றும் அம்பிகை, `அம்பாயிரவல்லி’, `சிநேகவல்லி’ என்றும் அழைக்கப்பெறுகிறார்கள்.

முற்காலத்தில் இந்தத் தலத்துக்கு, `பாரிஜாத வனம்’ என்றும், `ஆதிரத்னபுரி’ என்றும் பெயர்கள் இருந்தன. புஷ்ப பத்திரை என்னும் நதிக்கரையில் துர்வாச முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது வருணனுடைய மகன் வாருணி என்பவன் அவருடைய தவத்துக்கு இடையூறு செய்தான். துர்வாசர் கோபத்தில் அவனைச் சபித்தார். அதனால், ஆட்டுத்தலையும் யானை உடலும் கொண்ட விநோத வடிவத்தைப் பெற்றான். யானையில் உடல் ஏற்பட்டதால், பசியால் மிகவும் துன்பப்பட்டான். துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினான். 12 ஆண்டுகள் இதே வடிவத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டு மென்று தீர்மானமாகக் கூறிவிட்டார் துர்வாசர்.

வருணனும் அவரிடம் வேண்டி பணிந்தான். அதன்பின்னர் அவர் காட்டிய வழியில் பல தலங்களையும் தரிசித்து. தன் மகனுடன் பாரி ஜாத வனத்துக்கு வந்தான். அந்தத் தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் இருவரும் நீராடினார்கள். முதலில் விநாயகரைப் பூஜித்தான்.

வருணன் பிரதிஷ்டை செய்து பூஜித்த வருண விநாயகர் இங்கே பிராகாரத்தில் அருள்பாலிக்கிறார். வாருணி, ஆதிரத்னேச்வரரை முறைப்படி வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றான். ஆடும் யானையுமாக இருந்த வாருணி பூஜித்து சாபம் நீங்கியதால், ஆடானை என்று இந்தத் தலத்துக்குப் பெயர் ஏற்பட்டது. இதனால் இந்த இறைவனுக்கு, `அஜகஜேச்வரர்’ (அஜம் - ஆடு; கஜம் - யானை) என்ற பெயரும் உண்டு. காரைக்குடியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தேவக்கோட்டையில் இருந்து 28 கி.மீ தொலைவிலும் இந்தத் தலம் அமைந்துள்ளது. `இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும்’ என்று திருஞானசம்பந்தர் அறுதியிட்டுக் கூறுகிறார்.

Comments