புல்லரிக்கும் புற்றுக் கோயில்

வேப்பம்பட்டு கிராமத்தில் இருந்து வந்து வேப்பிலை ஆடை அணிந்து, பிரார்த்தனை நிறைவேற்றினர் வெண்ணிலா மற்றும் அவரது கணவர் மாரிமுத்து. அம்மை போட்டிருந்துச்சு. குணமானதும், வேப்பிலை ஆடை அணிந்து வர்றதா வேண்டிக்கிட்டேன்" என்றனர் பக்தியுடன்!
சென்னை - திருப்பதி செல்லும் சாலையில் பெரியபாளையம் என்னும் திருத்தலத்தில் புற்று ஒன்றில் வசித்துவந்தாள் அகிலம் காக்கும் பவானி அம்மன் என்ற பேர்கொண்ட ஆதிபராசக்தி. அந்தப் புற்றில் இரும்புக் கம்பி ஒன்று எதையோ தேட நுழைந்தது. அந்த ஆயுதம் அன்னையின் மேனியில் காயம் ஒன்றை ஏற்படுத்தி அதிலிருந்து குருதி வழிந்தது. ஏன் இந்த விபரீதம்?
முன்னொரு காலத்தில் வணிகர்கள் பொருட்களை விற்பதற்காக சென்னப்பன் பட்டினம் (இன்றையை சென்னை) வருவார்கள். அவர்களில் வளையல் வியாபாரிகளும் அடக்கம். தெலுங்கு பேசும் பகுதிகளில் இருந்து வண்ண வண்ண வளையல்களை மூட்டைகளில் அடுக்கிக்கொண்டு, வியாபாரி ஒருவர், சென்னையில் இருந்து தன்னுடைய இருப்பிடத்துக்கு (தற்போதைய ஆந்திரா) சென்று கொண்டிருந்தார்.
வழியில் வளையல் மூட்டையைப் பக்கத்திலே வைத்துக்கொண்டு, கண்ணயர்ந்தார். விழித்துப் பார்த்தால் வளையல் மூட்டையைக் காணவில்லை. பதறினார்; தேடினார். பக்கத்திலே ஒரு புற்றினுள் வளையல் மூட்டை இருப்பது தெரிந்தது; ஓர் இரும்புக் கம்பியைப் புற்றினுள் விட்டுத் துழாவினார். ‘டங்’ என்ற சத்தம். அதைத் தொடர்ந்து புற்றிலிருந்து ரத்தம் கொப்பளித்துப் பீறிட்டது. பயந்து போனார் வளையல் வியாபாரி.
மூட்டையை எடுக்க முயற்சிக்காமல் தமது ஊர் நோக்கி நடையைக் கட்டினார்.
அன்று இரவு அம்மன் அவர் கனவில் தோன்றினார். அப்பனே! அஞ்ச வேண்டாம். ரேணுகாதேவி பவானியம்மனாகிய நான்தான் இதுவரை புற்றில் இருந்தேன்; அனைவரும் என்னைக் கண்டு வணங்கவே உனது வளையல் மூட்டையை எனது புற்றில் வரச்செய்தேன். அந்த இடத்தில் எனக்கு ஓர் ஆலயம் எழுப்பு. அனைவருக்கும் நான் அங்கமர்ந்து அருளாசி வணங்குவேன்" என்றார்.
வியாபாரியும் ஊர் மக்களிடம் இதைத் தெரிவித்தார். புற்று இருந்த இடத்திலேயே அனைவரும் அம்மனுக்குக் கோவில் ஒன்றைக் கட்டினர். புல்லரிக்க வைக்கும் அந்தப் புற்றுக்கோவில்தான் பெரியபாளையத்து அம்மனின் ஆலயம்!
அன்னை இங்கே கொண்டிருப்பது அமர்ந்த திருக்கோலம். தமது நாற்கரங்களில் சக்தம், சக்ராயுதம், சங்கு மற்றும் கபாலம் ஆகியனவற்றை ஏந்தி இருப்பது அபூர்வக் காட்சியாகும். ஆலயம் முழுவதும் சுவர்களில் நாகங்களின் உருவங்கள் சிலை வடிவில் வண்ணம் தீட்டப்பட்டு மிளிர்கின்றன.
இங்கே நிறைவேற்றப்படும் சடங்குகள் பக்தர்களின் நம்பிக்கைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. புதுமணப் பெண்தன் தாலிக் கயிறை அம்மனுக்குக் காணிக்கையாக்கி விட்டு, பதிலுக்கு அம்மன் சன்னதியில் இருந்து பெற்ற மஞ்சள் கோர்க்கப்பட்ட கயிற்றை அணிந்துகொள்கிறாள். மங்கல வாழ்வை அன்னை கொடுப்பாள் என்பது ஐதீகம்.
தேங்காய் உருட்டும் பிரார்த்தனையும் உண்டு! ஒரு தேங்காயை உருட்டி விட்டு, அது நிற்கும் இடத்தில் நமஸ்கரித்து, மீண்டும் உருட்டி விடுகின்றனர். இப்படித் தாங்கள் வேண்டிக்கொண்ட எண்ணிக்கை அளவுக்கு வெளிப்பிராகாரத்தில் சுற்றி வருகின்றனர்.
அடிப்பிரதட்சணம் செய்வோரும் அநேகம்.
இன்னொரு விசித்திர வழிபாடு ‘வேப்பிலை ஆடை வேண்டுதல்’.
ஆம்! தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வேப்பிலைகளால் மட்டுமே கோர்க்கப்பட்ட ஆடைகளை உடுத்தி பிராகாரத்தைப் பக்திசிரத்தையுடன் சுற்றி வருவோரைப் பார்க்கையில் மெசிலிர்த்துப் போகிறோம்!

Comments