சகலமும் சாயி! - பாபா மகா சமாதி 100-வது ஆண்டு

வர் யார்? எங்கு பிறந்தார்? அவர் வந்த வழிதான் என்ன?' என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண முடியாத புதிராக, அவதார புருஷராக ஷீர்டியில் தோன்றியவர் ஸ்ரீசாயிபாபா. பொறுமையோடும் நம்பிக்கையோடும் வழிபடும் பக்தர்களுக்கு ஸ்ரீசாயிபாபாவே சகலமும்.

ஷீர்டியில் மையம்கொண்டு உலகெங்கிலும் தமது அருள் கடாட்சத்தைப் பரப்பி, தமது கருணை மழையால் அடியவர்கள் அனைவரையும் வாழவைத்த கற்பகவிருட்சமாம் ஸ்ரீசாயிபாபா மகா சமாதி எய்திய தினம் விஜயதசமி; 1918-ம் ஆண்டு. இந்த வருடம் விஜயதசமி திருநாள் முதல், ஸ்ரீசாயிபாபா மகா சமாதி  அடைந்து 100-வது ஆண்டு தொடங்குகிறது.

இந்தத் தருணத்தில் ஷீர்டி ஸ்ரீசாயிபாபாவின் மகிமையை தியானிப்பதும் போற்றுவதும் மிகச் சிறப்பான ஆராதனையாக அமைந்து அவரின் திருவருளைப் பெற்றுத்தரும் அல்லவா?

ஷீர்டியில் இருந்த காலம் முழுவதும் எண்ணற்ற பல அற்புத அருளாடல்களை நிகழ்த்திய சாயிநாதர்,  ‘நான் என்னுடைய பூத உடலைத் துறந்து கல்லறைக்குச் சென்றாலும், இப்போது போலவே எப்போதும் உயிர்ப்புடன் இருப்பேன்; என்னைச் சரணடையும் பக்தர்களின் வாழ்க்கையில் அளவற்ற சந்தோஷத்தையும், நிம்மதியையும் தருவேன்’ என்று பக்தர்களுக்கு உறுதியளித்தார். அதற்கேற்ப இன்றைக்கும் தொடர்கின்றன அவரது அருளாடல்களும் அவர் நிகழ்த்தும் அற்புதங்களும்.

அவைபற்றி அறியுமுன், ஷீர்டி மகான் மகா சமாதி எய்திய அந்த விஜயதசமி திருநாளின் நெகிழ்வான தருணங்கள் குறித்துப் பார்ப்போம்.

சாயிநாதர், தம்முடைய மகா சமாதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, விரைவில் தாம் மகா சமாதி அடைய இருப்பதை மறைமுகமாகப் பக்தர்களுக்கு உணர்த்தவும் செய்தார். ஆனால், பக்தர்கள் அதை உணரவில்லை. பாபா எப்போதும் தங்களை விட்டுப் பிரியமாட்டார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

அது 1916-ம் ஆண்டு விஜயதசமித் திருநாள். ஏராளமான பக்தர்கள் ஷீர்டியில் குவிந்தனர். அன்றைக்கு ஷீர்டி கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மாலையில், ‘ஸீமோல்லாங்கன்’ எனும் சடங்கு நிறைவடைந்து அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது துவாரகாமாயியில் இருந்த பாபா திடீரென்று கடும்கோபம் கொண்டார். அவர் தம் தலையில் அணிந்து கொண்டிருந்த துணி, கப்னி என்ற அங்கி, கோவணம் அனைத்தையும் கழற்றிப் புனித நெருப்பு தணல்விட்டு பிரகாசித்த துனியில் வீசினார். பாபாவின் கண்கள் இரண்டும் நெருப்புக் கங்குகள் போல் ஜொலித்தன. அவருடைய திருமேனி முழுவதும் மிகுந்த சோபையோடு விளங்கியது.  திகம்பரராக நின்ற பாபா பலவாறாகக் வசைச் சொற்களைக் கூறினார். ஒருவருக்கும் பாபாவைச் சமாதானப்படுத்தத் துணிவில்லை. கடைசியில் பாபாவின் பக்தர்களில் ஒருவரான பகோஜி, பாபாவின் அருகில் நெருங்கி அவருடைய இடுப்பில் ஒரு கோவணத்தைக் கட்டிவிட்ட துடன், ‘‘பாபா, இன்று புனிதமான ஸீமோல்லாங்கன் தினம் அல்லவா? நீங்கள் ஏன் இப்படிக் கோபம் கொண்டு மக்களைப் பயமுறுத்துகிறீர் கள்?’’ என்று கேட்டார். அப்போதும் கோபம் அடங்காத பாபா, தமது கோலால் பூமியை அடித்து, ‘இன்றுதான்  எனது  ஸீமோல்லாங்கனம்’ என்றார். இரவு பதினோரு மணிக்குப் பிறகே பாபா கோபம் தணிந்து இயல்புநிலைக்குத் திரும்பினார். அதற்குப் பிறகு எதுவுமே நடக்காதது போல் நடந்துகொண்டார். அடுத்த இரண்டாவது ஆண்டு விஜய தசமியன்று பாபா மகா சமாதி அடைந்தார். அதற்குச் சில நாள்களுக்கு முன்பும், தாம் மகா சமாதி அடைய இருப்பதைச் சூசகமாக உணர்த்தவே செய்தார். 

பாபாவின் பக்தரும் பெரும் செல்வந்தருமான பூட்டி என்பவர் ஷீர்டியில் ஒரு பெரிய மாளிகையைக் கட்டி, அதன் நடுவில் முரளிதர கிருஷ்ணனின் சிலையை வைக்க பாபாவிடம் சம்மதம் கேட்டார். பாபாவும் அதற்குச் சம்மதித்தார். ‘‘கோயில் வேலை முடிந்த உடன் நான் அங்கே தங்குவேன்’’ என்று கூறினார். தான் கட்டிய மாளிகையில் பாபா வந்து தங்கப்போகிறார் என்பதை அறிந்து பூட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், உண்மையில் நடக்கவிருப்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

சாயிபாபா உடலைத் துறக்கப் போகும் நாளை அறிந்திருந்தார். பூட்டியின் மாளிகையைத்தான் சமாதி கோயிலாகத் தேர்ந்தெடுத் திருந்தார். அதன் காரணமாகவே முரளிதரனாகத் தானே வரப்போவதை மறைமுகமாக உணர்த்தினார்.

1918-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் ஒரு நாள்... பாபா மசூதியை விட்டு வெளியே சென்றிருந் தார். மாதவ்பாஸ்லே என்ற சிறுவன், வழக்கம்போல் துவாரகாமாயியைப் பெருக்கிச் சுத்தம்செய்து கொண்டிருந்தான். அப்போது, பாபா போற்றிப் பாதுகாத்து வந்த செங்கல் இருப்பதைக் கண்டான். புனிதமான அந்தச் செங்கல் மீது, குப்பைகள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அதை வேறு இடத்தில் வைக்கலாம் என்று கையில் எடுத்தான். அந்தச் செங்கல் கையை விட்டு நழுவி, தரையில் விழுந்து இரண்டு துண்டுகளானது. 

சற்று நேரத்தில் திரும்பி வந்த பாபா செங்கல் உடைந்திருப்பதைப் பார்த்து மிகவும் மனம் தளர்ந்தவராக, ‘உடைந்தது வெறும் செங்கல் அல்ல; என் விதிதான் உடைந்துவிட்டது. அதை அருகில் வைத்துக்கொண்டுதான் ஆத்ம தியானம் செய்து வந்தேன். என் உயிருக்கும் மேலான செங்கல் இன்று என்னை விட்டுப் பிரிந்துவிட்டதே’ என்று வருத்தம் மேலிடக் கூறினார். அந்தச் செங்கல் தன்னுடைய குரு தனக்கு அளித்த பரிசு என்று பாபா அடிக்கடி கூறியிருக்கிறார். ஆகவே, அது உடைந்ததும் மனம் தளர்ந்ததுபோல் காட்டிக் கொண்ட பாபா,  தன் உடலைத் துறப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். சில நாள்களுக்குப் பிறகு ஒருநாள் பாபா சில பக்தர்களிடம், ‘‘முதலில் நான்  போகிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள். என்னுடைய கல்லறை உங்களிடம் பேசும்; என் பெயரும் உங்களுடன் பேசும்; என்னுடைய புனித மண்ணும் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும்’’ என்றார். ஆனால், அப்போதும் பாபா கூறிய வார்த்தைகளின் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லை. 1918-ம் ஆண்டு தம் உடலை உதற வேண்டிய நாள் நெருங்கிய நிலையில், வஜே என்பவரை அழைத்து, ‘ராம விஜயம்’ என்ற நூலைத் திரும்பத் திரும்பப் படிக்கும்படிக் கூறினார். விஜய தசமிக்கு நான்கு நாள்களுக்கு முன்பு ஒரு பக்தையிடம், ‘‘அம்மா, எனக்கு துவாரகாமாயியும் சாவடியும் அலுத்துவிட்டன. நான் பூட்டியின் மாளிகைக்குப் போய் விடலாம் என்று நினைக்கிறேன். அங்கே பெரிய மனிதர்கள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள்’’ என்று கூறினார்.
பாபாவின் உடல்நிலை சிறிது சிறிதாக மோசம் அடையத் தொடங்கியது. விஜயதசமிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே பாபா லெண்டித் தோட்டத் துக்குச்  செல்வதையும், பிச்சை எடுக்கப்போவதையும் நிறுத்திவிட்டு மோனத் தவத்தில் மூழ்கிவிட்டார்.

1918-ம் ஆண்டு அக்டோபர் 15, விஜயதசமி திருநாள். நண்பகல் ஆரத்தி முடிந்தவுடன், காகா சாகேப் தீட்சித்தையும் பாபு சாகேப் பூட்டியையும் மதிய உணவுக்குப் போய் வரும்படி அனுப்பி விட்டார். லட்சுமிபாய் சிந்தே, பாகோஜி சிந்தே, பயாஜி, லட்சுமணன் பாலா சிம்பி, நானா சாகேப் நிமோண்கர் ஆகியவர்கள் அவர் அருகில் இருந் தனர். ஷாமா படிகளின் கீழே உட்கார்ந்திருந்தார்.

“எனக்கு மசூதியில் சௌகரியமாக இல்லை. என்னை பூட்டியின் ‘தகடி வாடாவுக்கு’ (கல் கட்டடத்துக்கு) எடுத்துச் செல்லுங்கள். அங்கே நான் நலமாக இருப்பேன்” என்று சொல்லியவாறே பாபா, பயாஜியின் உடலில் சாய்ந்து உயிரைத் துறந்தார். சாயி மகானின் மூச்சு நின்று போனதைக் கவனித்த பாகோஜி, கீழே அமர்ந்திருந்த நானா சாகேப் நிமோண்கரிடம் தெரிவித்தார். நானா சாகேப் சிறிது நீர் கொண்டுவந்து பாபாவின் வாயில் ஊற்றினார். ஊற்றிய தண்ணீர் வெளியே வழிந்தது. அதிர்ச்சியடைந்த நிமோண்கர் கதறி அழத் தொடங்கினார். அவர் மட்டுமா? பாபாவின் மறைவுச் செய்தி கேட்டு ஷீர்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மதங்களைக் கடந்த மகான் சாயிபாபாவின் புனித உடலை எப்படி அடக்கம் செய்வது என்பதில் முதலில் பக்தர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு பக்தர்களிடையே இணக்கம் ஏற்பட்டு, அவரது பொன்னுடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று, பாபாவின் விருப்பப்படி  பூட்டியின் மாளிகையில் முரளிதரனின் கருவறைக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அடக்கம் செய்தனர். சமாதி மந்திர், சர்வ சமய சமரச மந்திராக, சாந்தியும் சந்தோஷமும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஆலயமாகத் திகழ்கிறது.

அதேபோல், தம்முடைய வாக்கு, சத்திய வாக்கு என்பதை நிரூபிப்பது போல் இன்றளவும் தம் பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தவே செய்கிறார் ஷீர்டி ஸ்ரீசாயிபாபா.
அதற்குச் சாட்சியாய்  சில அற்புத அனுபவங்கள் இங்கே...

’பாபா எனக்கு அம்மா!’
சிவசங்கரி
“என் வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங் களிலும் பாபா இருக்கிறார்” எனச் சொல்லும் எழுத்தாளர் சிவசங்கரி, தமிழக இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவர்.  அவர் ஆன்மிகத் தளத்திலும் தனது இலக்கியப் பங்களிப்பைச் செய்துவருகிறார். ‘பாபா இன்றும் வாழ்கிறார்’, ‘சாய் சரித்திர தரிசனம்’ என சாயிபாபா பற்றிய இரண்டு நூல்களை மொழி யாக்கம் செய்திருக்கிறார்.
“பத்து வருஷத்துக்கு முன், என் அம்மாவுக்குக் கையில் ஓர் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அது முடிந்த இரண்டாம் நாள் மீண்டு மொரு அறுவைசிகிச்சை செய்தார்கள். அதைப் பார்த்து ரொம்பவும் வேதனையாக இருந்த நிலையில், பத்து நாள்கள் கழித்ததும் மூன்றாம் முறையாக அறுவைசிகிச்சை செய்யும் சூழல் இருப்பதாக டாக்டர் சொன்னார். 89 வயதான அம்மா எப்படித் தாங்கப்போகிறாரோ என நான் உடைந்துபோயிட்டேன். அந்த நேரத்தில் என் நண்பரைச் சந்திக்கச் சென்றேன். அவரது வீட்டில் பாபா கோயில் ஒன்றை எழுப்பியிருந்தார். அங்கு வழிபட்டேன். அந்த நண்பர், ‘பாபா சொல்றார்... உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் கிடையாது’ என்றார். அந்த வார்த்தை கொஞ்சம் ஆறுதலா இருந்தாலும், அது என்னைத் தேற்றுவதற்காகச் சொன்னதாகவே நினைத்தேன்.

மறுநாள் மருத்துவமனைக்கு அம்மாவை அழைத்துப் போனேன். அம்மாவை செக் பண்ணி விட்டு டாக்டர் சொன்னதுதான் எனக்கு ஆச்சர்யம். ‘ஆபரேஷன் எதுவும் வேண்டாம். இனிமே அவங்க டென்னிஸே விளையாடுவாங்க பாருங்க’ என்றார். இது என் வாழ்வில் மகத்தான வியப்பை உருவாக்கிய விஷயம்.
கிட்டத்தட்ட 10, 12 வருடத் தொடர் நிகழ்வு களால், பாபாகிட்ட நான் என்னைப் பூரண சரணாகதியா ஒப்படைச்சேன். பாபா என் மனதை முழுமையாக நிறைத்த ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. என்னுடன் இருக்கும் லலிதா ஒருநாள் ‘பாபாவின் ஒன்பது வார விரதம்’ புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் படித்த எனக்கு, ‘நாம் ஏன் இந்த ஒன்பது வார விரதத்தை மேற்கொள்ளக் கூடாது’ என்று தோன்றியது. நானும் அந்த விரதத்தை மேற் கொண்டேன். அது முடிவடையும்போது, எனக்கு என்னாச் சுன்னே தெரியவில்லை. நான் பாபாவோட தீவிர பக்தையாகிட்டேன். பாபா சொல்வார், ‘எனக்கு யார் வேண்டுமோ அவரைச் சிட்டுக்குருவிக்குக் காலில் கயிறு கட்டி இழுப்பது போல இழுப்பேன்’ என்பார். அதுபோலத்தான் ஆகிவிட்டதுபோல.

மயிலாப்பூரில் இருக்கும் ஷீர்டி சாயிபாபா கோயிலின் 75-ம் ஆண்டு விழா மலருக்கு என்னிடம் கட்டுரை கேட்டார்கள். நான் முதலில் தயங்கினேன். அவர்கள் தொடர்ந்து வற்புறுத்த, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ‘நானும் பாபாவும்’ என்ற கட்டுரையை எழுதினேன். அதை இமெயிலில் அனுப்ப, கம்ப்யூட்டர் ஆன் ஆகவே இல்லை. ‘என்ன பாபா... உன்னைப் பற்றிய கட்டுரை அனுப்ப உதவ மாட்டியா?’ எனக் கேட்ட அடுத்த நிமிஷம் கம்ப்யூட்டர் ஆன் ஆகிவிட்டது. நீங்கள் நம்பமாட்டீர்கள்... அந்தக் கட்டுரையை இமெயில் அனுப்பிய அடுத்த நிமிஷம் மறுபடியும் ஆஃப் ஆகிவிட்டது. இதைப் பார்த்த எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
பாபாவிடம் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம், அவருக்கு ஜாதி, மதம், ஆண், பெண், பணக்காரர், ஏழை என்ற வேறுபாடுகள் கிடையாது. ‘மற்றவரைப் பற்றிப் புறம் பேசினால் என்னைக் காயப்படுத்துவது போல’ எனச் சொல்வார். பக்தர்கள் தங்களை வருத்திக்கொண்டு, தன்னை வேண்டிக் கொள்வதை ஒருபோதும் அவர் விரும்பமாட்டார். நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மீட்டெடுத்துத் தருவார். அவர் எனக்கு அம்மா மாதிரி. மடியில் சாய்ந்துகொள்ள, மனசு சரியில்லை என்றால் தேற்ற என எனக்கு அம்மாவாகத்தான் இருக்கிறார் பாபா!”

மூதாட்டியாக வந்த பாபா!

சென்னையைச் சேர்ந்த ரகுராம் என்ற பாபாவின் பக்தர், தன் குடும்பத்தில் பாபா நிகழ்த்திய அருளாடலை விவரித்தார்.
‘‘என் மருமகள் பிரசவத்துக்காக விஜயநகரம் சென்றிருந்தார். அவருக்குப் பிரசவ வலி ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலி மறுநாள் வரை தொடர்ந்து இருந்ததே தவிர, பிரசவம் ஆகவில்லை. மருமகளோ வலியால் துடித்துக்கொண்டிருந்தார். டாக்டர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மறுநாள் இரவு போன் செய்து கேட்டபோதும் நிலைமை அப்படியேதான் இருப்பதாகத் தெரிவித்தார்கள். 
அதிகாலை 3 மணிக்கு, பாபாவின் படத்துக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, ‘சாயி, நானா சந்தோர்க்கர் என்ற பக்தரின் மகள் பிரசவ வலியால் துடித்தபோது, ஷீர்டியில் இருந்து நீ அனுப்பிவைத்த உதி பிரசாதத்தைச்  சிறிது வாயில் போட்டுக் கொண்டு, வயிற்றில் தடவிக்கொண்ட பிறகு அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆனதாக உன் சத்சரிதத்தில் படித்திருக்கிறேன்.  அதேபோல் என் மருமகளுக்கும் அருள் செய்’ என்று வேண்டிக்கொண்டேன். சுமார்  5  மணிக்கு  என் மருமகள் ஆண் குழந்தையைப் பெற்றதாகச் செய்தி வந்தது.

மறுநாள் என் மனைவியும் மகனும் சென்று மருமகளையும் பேரக்குழந்தையையும் பார்த்து விட்டு வந்தார்கள். அப்போது அவர்கள் சொன்ன தகவல் கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். நான் இங்கே பிரார்த்தனை செய்த சில நிமிடங்களில் அங்கே ஒரு மூதாட்டி என் மருமகளுக்கு அருகில் வந்து, ‘பயப்படாதே. உனக்கு சுகப் பிரசவம் ஆகும்’ என்று கூறி, பாபாவின் உதியை என் மருமகளின் நெற்றியில் இட்டுவிட்டு, வயிற்றிலும் பூசிவிட்டா ராம். அத்துடன் தூங்கிக்கொண்டிருந்த செவிலி யரை எழுப்பி, `பிரசவ நேரம் வந்துவிட்டது. உடனே கவனியுங்கள்' என்று கூறிச் சென்றாராம். அதன்படியே நடக்க, காலை 3.40 மணிக்கு சுகப் பிரசவம் நடந்தது என் மருமகளுக்கு.

இங்கே நான் பிரார்த்தனை செய்தது யாருக்கும் தெரியாது. விஜயநகரத்தில் நடந்ததும் என் மனைவி வந்து சொன்ன பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இது பாபா நிகழ்த்திய அருளாடலன்றி வேறென்ன?!’’

Comments