ராமருக்கும் செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் தொடர்பாக மக்கள் பயப்பட கூடாது என்பதற்காகவே ராமரின் வாழ்வு செவ்வாய் தோஷத்தை பின்னி பிணைந்துள்ளது.
ராமருக்கும் செவ்வாய் தோஷம்

ராமபிரானின் லக்னம் கடகம், சந்திரனும் கடகத்தில், ஆக லக்னம் சந்திரன் இரண்டுக்கும் ஏழில் செவ்வாய். ஆக ராமனின் ஜாதகம் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமாகும். ஆனால் செவ்வாய் மகரத்தில் உச்சம். அதனால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி பெற்றது என சொல்பவர்களும் உண்டு. ஆனால் அவரது காவியக்கதையை சற்று நினைத்துப் பாருங்கள். இளம் வயதினில் ராமர் 14 ஆண்டுகள் கல்லிலும், முள்ளிலும் நடந்து கானக வாசம் அனுபவித்தார்.

இதற்கிடையே ராவணன் குறுக்கீடு செய்தான். சீதையை பிரிய வேண்டிய நிலை வந் தது. ராவணனை வென்று சீதா பிராட்டியை மீட்டு வந்தாலும் பிரச்சினை தீர்ந்ததா இல்லையே.

அன்னை ஜானகி தேவி களங்கமற்றவர் என்பதை ஸ்ரீராமன் நன்கு உணர்ந்தவர். என்றாலும் ஊருக்காக உலகத்துக்காக அவரை தீக்குளிக்க அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னராவது நிம்மதியான வாழ்வு ஏற்பட்டதா என்றால் அதுவும் இல்லை. யாரோ ஒரு அயோத்தி நகர குடிமகன் இழிவாக பேசினான் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணியான ஜானகி தேவியை மீண்டும் தனியே கானகம் அனுப்ப வேண்டிய நிலை உருவானது. கானகத்திலே லவன், குஜன் என அழகிய புத்தி கூர்மையுள்ள இருமக்களை பெற்றெடுத்தும் ஸ்ரீராமபிரான் தன் குழந்தைகளை பார்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

முடிவில் தன் குழந்தைகளை ஸ்ரீராமபிரானிடம் கொடுத்துவிட்டு அன்னை சீதா பிராட்டி பூமாதேவியின் மடியில் ஐக்கியமாகிறார். ஸ்ரீராமபிரானும், சீதா பிராட்டியும் உலக சமுதாயத்திற்கு தெய்வமாக காட்சி தந்தாலும் அவர்களின் குடும்ப வாழ்க்கையை எண்ணி பார்க்கும் போது எவ்வளவு துயரம் காணப்படுகிறது. அவதார தெய்வம் ராமபிரான் இவ்வளவு சிரமங்களையும், இன்னல்களையும் அனுபவித்ததே நமக்கு படிப்பினை தருவதற்காகத்தான்.

ஒரு சமுதாயத்தின் தலைவனாக, அரசனாக சிறப்புற விளங்க வேண்டுமெனில் உன் சொந்த வாழ்வில் பல தியாகங்களை செய்தே ஆக வேண்டும். என்ன சிக்கல் ஏற்பட்டாலும் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட கூடாது. இருவரும் பிரிந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒழுக்கநெறி எப்போதும் ஒளிவீசிக் கொண்டே இருக்க வேண்டும்.

கடமையை நிறைவேற்றும் சமயம் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அதிக இடம் தரக்கூடாது. இவ்வளவு அரிய தத்துவங்களை நமக்கு போதிப்பதற்காக அந்த தெய்வீக அவதார தம்பதிகள் தங்கள் வாழ்வில் செவ்வாய் தோஷத்தால் இன்னல்களை அனுபவித்தார்கள் என்பதை மறக்கக்கூடாது.

இந்த உண்மைகளை நமக்கு உணர்த்திடவே ஸ்ரீராமபிரான் ஜாதகத்தில் செவ்வாய் உச்சமடைந்தாலும் லக்னத்துக்கு ஏழில் நின்று தோஷம் ஏற்படுத்தி பிரச்சினைகளை உண்டு செய்கிறார். ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தாயிற்று. நாளை பட்டாபிஷேகம். ஆனால் விதியின் வலிய சோதனையால் நிலைமை மாறுகிறது. தந்தை சொல்லை ஏற்று ராமபிரான் பதினான்கு ஆண்டு வனவாசம் செல்கிறார்.

ராமனின் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் நின்று உச்சமடைந்ததாலும் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதாலும் ஜீவனத்திற்கு, தொழிலுக்கு கடும்பாதிப்பை ஏற்படுத்தியது. செவ்வாய் தோஷம் தொடர்பாக மக்கள் பயப்பட கூடாது என்பதற்காகவே ராமரின் வாழ்வு செவ்வாய் தோஷத்தை பின்னி பிணைந்துள்ளது.

Comments