மூவேந்தர்களுக்கு அருளிய செல்லாண்டியம்மன் கோவில்

திருச்சி உறையூரில் உள்ள பாண்டமங்கலம் பகுதியில், வெக்காளி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்து உள்ளது செல்லாண்டியம்மன் கோவில். நாட்டில் உள்ள பல்வேறு திருத்தலங்களில் பலவித கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பராசக்தி, இந்த கோவிலிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறாள்.

ஆனால் இங்குள்ள அம்மனின் திருவுருவம் சற்று வித்தியாசமானது. இந்த அம்மனுக்கு தலை, கை, உடல் கிடையாது. இடுப்புக்கு கீழே உள்ள பகுதி மட்டுமே உள்ளது. அம்மனின் இந்த வித்தியாசமான உருவத்திற்கு காரணம் ஆராய்ந்தால், அதற்கு ஒரு கதையே கூறப்படுகிறது.
3.z
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. அவர்களுக்காக செல்லாண்டி அம்மன் தன்னைத்தானே மூவருக்கும் மூன்று பாகமாக பிரித்து அளித்து அவர்களது நாட்டில் எழுந்தருளியதாகவும், அதன்படி அம்மனை மூன்று பாகமாக பிரித்துக்கொண்டு மூவேந்தர்களும் தங்களது நாட்டில் கோவில் அமைத்து காவல் தெய்வமாக வழிபட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

அம்மனின் திருவுருவம் மூன்று பாகங்களாக பிரிந்து சென்றதற்கு சொல்லப்படும் செய்தியை நாம் இங்கே காண்போமா!.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் அவர்களிடையே எல்லை தகராறால் அடிக்கடி போர் மூண்டது. இதனால் நாட்டு மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். எனவே மக்கள் அனைவரும் காவல் தெய்வமான செல்லாண்டி அம்மனிடம் தங்களது குறைகளைச் சொல்லி வேண்டினர். அவர்களது குறைகளை தீர்த்து வைக்க முடிவு செய்த அம்மன், ஒரு மூதாட்டியாக உருவெடுத்து மூவேந்தர்களையும் சந்தித்தாள். அப்போது மூன்று பேரிடமும் ஒற்றுமையாக ஆட்சி புரியுமாறு அறிவுரை கூறினாள்.

ஆனால் மூவேந்தர்களும் எல்லை தகராறை விட்டுக்கொடுக்க முடியாது என்று அம்மனிடம் வாதிட்டனர். அவர்களது எண்ணத்தை புரிந்து கொண்ட அம்மன், கரூர் செல்லும் வழியில் உள்ள மதுக்கரை என்ற ஊரில் எழுந்தருளி தனது சுயரூபத்தை அவர்களுக்கு காட்டி விட்டு மாயமாக மறைந்து விட்டாள்.

தங்களுக்கு காட்சி அளித்தது செல்லாண்டி அம்மன் என்பதை உணர்ந்த மூவேந்தர்களும், தங்களது தவறை உணர்ந்து அம்மனை தங்கள் குலதெய்வமாக ஏற்றனர். அப்போது அவர்களிடம் அம்மன், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே என்னை முழு உருவில் வழிபடலாம். அப்படி இல்லாமல் உங்களுக்குள் நீங்கள் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டால் என்னையும் மூன்று பாகமாக எடுத்து சென்று வழிபடுங்கள் என்று அசரீரியாக ஒலித்தாள்.

ஆனால் மூவேந்தர்களும் தங்களுக்கு என்று எல்லையை வகுத்துக்கொண்டதால் அம்மனும் மூன்று பாகமாக பிரிந்தாள். அதன்படி தலைப்பாகம் சேர மன்னனுக்கு சொந்தமாக காங்கேயம் அருகில் கீரனூர் என்ற இடத்திலும், மார்பு பாகம் பாண்டிய மன்னனுக்கு சொந்தமாக மதுரை சிம்மக்கல்லிலும், இடுப்புக்கு கீழே பாதம் உள்ள பகுதி சோழ மன்னனுக்கு உரித்தானதாக திருச்சி உறையூரிலும் அமைந்துள்ளதாக தெரிவிக்கிறது அந்தக் கதை.

கிழக்கு நோக்கிய இந்தக் கோவில் வளாகத்தில் தென்கிழக்கு மூலையில் அரசும், வேம்பும் இணைந்த பெரிய மரத்தடியில் வலம்புரி விநாயகர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கி விட்டு கருவறையை நோக்கி சென்றால், வலது புறத்தில் மேலும் ஒரு வலம்புரி விநாயகரும், இடது புறத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் மட்டும் தனித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். செல்லாண்டி அம்மனின் பின்புறம் அம்மனின் முழு உருவச்சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிற்காலத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தை ஒட்டி உள்ள மகா மண்டபம் 20 தூண்களை கொண்டு திகழ்கிறது. மற்ற கோவில்களில் அம்மனுக்கு எதிரில் சிம்மம் காட்சி அளிக்கும். இங்கு சிம்மம் இல்லை. அதற்கு பதில் பலி பீடத்திற்கு அருகே வேல் ஒன்று நடப்பட்டு உள்ளது. கோவில் சன்னிதியின் முன் மண்டபத்தில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்ட பீடம் இருக்கிறது. இதனையும் அம்பாளாகவே பாவித்து பக்தர்கள் வணங்குகிறார்கள். அம்பாளுக்கு பூஜை செய்யப்படும்போது பாதத்திற்கும் பூஜை செய்யப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ள பெண்கள் பவுர்ணமியில் அம்மனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்மனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தாலி, எலுமிச்சை மாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்கிறார்கள்.

திருச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

பனை ஓலையில் அம்மன் திருவுருவம் :

வழக்கமாகவே அம்மன் கோவில்களில் ஆடி மாதம் பல்வேறு பூஜைகள் சிறப்பாக நடைபெறும். இங்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன. இந்த கோவில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் காளி ஓட்டத்திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. பொதுவாக கோவில்களில் திருவிழா காலங்களில் அம்பிகையின் பஞ்சலோக சிலையே உற்சவ அம்மனாக வீதியுலா எடுத்து செல்லப்படும். ஆனால் இங்கு பஞ்சலோக விக்கிரகம் இல்லை. அதற்கு பதிலாக பனை ஓலையில் செய்யப்பட்ட அம்மனை உற்சவ அம்மனாக கருதி வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும்போது பனை ஓலையில் அம்மனின் உருவத்தை செய்கின்றனர். இந்த ஓலையில் அம்மன் அருளுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை இருக்கிறது. விழாவின்போது பனை ஓலை அம்மனை இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு திடலுக்கு கொண்டு செல்கின்றனர்.

தொடர்ந்து 6 நாட்களுக்கு அம்மனுக்கு பிரதான நெய்வேத்தியம் படைக்கப்பட்டு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. ஐந்தாம் நாள் விழாவின் முடிவில் அம்மனை மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இந்த விழாவின்போது கோவிலில் இருந்து அம்மனை தூக்கிக்கொண்டு ஓடும் வழக்கம் இருந்தது. எனவே இந்த விழா காளி ஓட்டத்திருவிழா என்று அழைக்கப்பட்டது. இந்த வழக்கம் நாளடைவில் மறைந்து இப்போது நடைமுறையில் இல்லை.

Comments