அம்மையாருக்காக ஆடல்புரிந்த அதிசய ஸ்தலம் திரு ஆலங்காடு

தமிழகத்தின் வடபகுதியில் இருக்கும் திரு ஆலங்காடு சென்னையிலிருந்து திருவள்ளூர் சென்று திருத்தணி திருப்பதி நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சுங்கச்சாவடி வரும். அங்கிருந்து 9 கி.மீ பெருஞ்சாலையிலிருந்து உள்ளே பிரிவு சாலையில் 5 கி.மீ கடக்க வேண்டும். அதாவது திருவள்ளுரிலிருந்து 20 கி.மீ தொலைவு, அரக்கோணத்திலிருந்து 14 கி.மீ தொலைவு, திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்திலிருந்து கோவிலுக்கு 4 கி.மீ ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோவில் பயணிக்க வேண்டும்.

அப்படி என்ன சிறப்பு அந்த ஊருக்கு?

நடராச சபை :

சிவபெருமான் நடனமிடும் சபைகள் மொத்தம் ஐந்து. அதில் முதன்மையானது ரத்தின சபை என்னும் திருவாலங்காடு. இங்கே அருளல் தொழில் செய்து ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார்.

சிதம்பரம் பொற்சபையில் ஆனந்த தாண்டவமாடி ஐந்தொழில் செய்கிறார். மதுரை வெள்ளி சபையில் சந்தியா தாண்டவமாடி காத்தல் புரிகிறார். நெல்லை தாமிர சபையில் முனி தாண்டவமாடி படைத்தல் தொழிலையும் ஆற்றுகிறார்.

அழகிய தொண்டை நாட்டுக் கிராமச் சூழலில் அமைந்த இச் சிற்றூரில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம். நந்திதேவரின் அனுமதி பெற்று எதிரே பார்த்தால் மதில் சுவருடன் மூன்று நிலை ராஜகோபுரமும், இருபுறமும் விநாயகரும், முருகனும் இருக்கின்றனர்.

வட ஆரண்யேசுவரர் :

உள்ளே நுழைந்தால் கருவறையில் கிழக்கு நோக்கியவராக லிங்கத் திருமேனியில் காட்சிதரும் மூலவர் வடவாரண்யேசுவரர் என்றும் ஆலங்காட்டு அப்பன் என்றும் அழைக்கப்படுகிறார்.

உள் பிரகாரத்தில், கன்னி மூலையில் கணபதியும், வடமேற்கு மூலையில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானும் அருள் பாலிக்கின்றனர். வடமேற்கில் மாந்தீஸ்வர் இருக்கிறார். சனீசுவரனின் புதல்வர் மாந்தி வழிபட்டு, தோஷங்   களைப் போக்கிக் கொண்ட தலம் என்பதால் இங்கே மக்கள் சனிக்கிழமைகளில் வந்து சனி தோஷத்துக்குப் பரிகாரம் செய்து வழிபடுகின்றனர்.

தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதியில் ‘வண்டார்குழலி’ என்னும் திருப்பெயர் தாங்கி அம்பிகை அருள் ஆட்சி செய்கின்றார். இங்கே இருக்கும் நடராச சபையில், சிவபெருமான் ஆடும் ஊர்த்துவ தாண்டவம், நடனத்தின் உச்சம் என்று கருதப்படுகிறது.

ஒருகாலைத் தலைக்குமேல் தூக்கி சுழன்றாடும் காட்சி பரவசப்படுத்துகிறது. ஆடலைக் கண்டு தரிசிக்க அமர்ந்த நிலையில் இருக்கும் காரைக்கால் அம்மையாரின் விக்ரகம் இத்தலத்தின் ரத்தினசபையினை சிறப்புற வைக்கின்றது.அதனைப் பார்த்து பரவசப்படும் சிவகாம சுந்தரி அம்மைக்கு ‘அருகிருந்து வியந்த நாயகி’ என்ற சிறப்புப் பெயர் உள்ளது. முஞ்சிகேச, கார்கோடக முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காளியின் கர்வத்தை அடக்க, சிவன் நடனம் ஆடிய தலம். கோபுரத்தின் மாடத்தில் வடக்கு நோக்கி காளியின் உற்சவ விக்கிரகம் உள்ளது. கோவில் மதிற்சுவருக்கு வெளியே வடமேற்கு மூலையில் பத்ரகாளி தனிக் கோவிலில் சிறிய உருவில் வடதிசை நோக்கியிருந்து அருள்புரிகிறார். அங்கே இருக்கும் மிகப்பெரிய ஆழமான திருக்குளம் ‘சென்றாடு தீர்த்தம்’ என்றும் ‘முக்தி தீர்த்தம்’ என்றும் புகழப்படுகிறது.

திருக்கோவிலின் வெளிச் சுற்றில் வடமேற்கு மூலையில் பரந்து விரிந்த ஆலமரம் ஆலங்காடு என்ற ஊரின் பெயருக்கு ஏற்ப தலவிருட்சம் என்ற சிறப்பில் நிமிர்ந்து நிற்கிறது.

வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேலை
அண்டா ஆலங் காடாஉன் அடியார்க்கு அடியேன் ஆவேனே

என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், அப்பர் பெருமானும், சம்மந்தர் பெருமானும் மட்டுமல்லாது இத்தலத்தை காரைக்கால் அம்மையாரும் பாடிப்பரவிய பெருமைக்குரியது.

காரைக்கால் அம்மையார் :

கணவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கக் கூடிய அழகிய பெண்ணுருவை விட்டுப் பிரிந்து எலும்புக் கூடாய்ப் பேயுரு எடுத்து தலையாலே நடந்து சென்று கயிலை மலையில் உமையொருபாகரால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட புனிதவதி என்றும் காரைக்கால் அம்மையார் அவரது விருப்பப்படி திருவாலங்காடு திருத்தலத்துக்கு தலையாலேயே ஊர்ந்து வந்தார். அங்கே தாண்டவம் ஆடும் இறைவனின் திருக்காட்சி கண்டு பரவசமிட்டு அவர் திருவடியின்கீழ் இருந்து என்றும் பாடி மகிழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மூத்த திருப்பதிகம் உட்பட பல திருப்பதிகங்களைப் பாடிய சிவன் சேவடி நிழலிலேயே என்றும் இளைப்பாறல் அடைந்தார்.

ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார், தலையால் நடந்து வந்த பதி என்பதனை அறிந்து, அதனை காலால் மதிக்க அஞ்சி ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞான சம்மந்தர் அருகில் உள்ள பழையனூரிலேயே தங்கி திரு ஆலங்காடு திருத்தலத்தைக் கருத்தாற்கண்டு கவிபாடியதாக வரலாறு சொல்லுகிறது.

எனவே திரு ஆலங்காடு திருக்கோவில் மிகப்பழமை வாய்ந்தது என்பது வரலாற்றுத் தகவல் ஆகும்.

Comments