விநாயகருக்கு பெருச்சாளி வாகனமானது எப்படி?

விநாயகர் பெருச்சாளியை தனது வாகனமாக ஆக்கிக் கொண்ட ஆன்மிக கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கு பெருச்சாளி வாகனமானது எப்படி?
முன்னொரு காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் இறைவனிடத்தில் தன்னை யாரும் கொல்ல முடியாதபடி வரம் கேட்டான். அந்த அரிய வரத்தைப் பெற்றதன் காரணத்தினால் பலரைத் துன்பப்படுத்தி வந்தான். அதனால் அவனை கொல்வதற்காக இறைவன், ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை யானை (கஜம்) மூகத்தோடும், மனித உடலோடும் தோற்றுவித்தார்.

பிறகு அசுரனை வதம் செய்யும்படி அனுப்பி வைத்தார். விநாயகர் தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அக்கொம்பினால் அசுரனைக் கொன்றார். உடனே அசுரன் ஒரு பெருச்சாளி உருவம் தாங்கி விநாயகரை எதிர்த்துப் போரிட, விநாயகர் பெருச்சாளியை வென்று அதனைத் தன் வாகனமாக ஆக்கிக் கொண்டார்.

விநாயகர் அவதாரம் கதை
உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
விநாயகர் அவதாரம் கதை
‘விநாயகர் என்றால் ‘மேலான தலைவர்’ என அர்த்தமாகும். ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும் ‘ஐங்கரன்’ என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தமாகும். ‘கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது தனக்கு காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.

எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.



நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், தலை இல்லாமல் கிடந்த கோலத்தைக் கண்டு கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

சிவன் அந்தப் பிள்ளையாருக்கு ‘கணேசன்’ என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என ‘நாரதபுராணத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும். இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

Comments