திருமணத்தடை, வேலைவாய்ப்பு அருளும் விரதம்

நரசிம்மரை தொடர்ந்து விரதமிருந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்மருக்கும் விரதம் அனுஷ்டிக்கும் முறையை பார்க்கலாம்.
திருமணத்தடை, வேலைவாய்ப்பு அருளும் விரதம்
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலைஅந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

நரசிம்ம ஜெயந்தியன்று பக்தர்கள் அதிகாலை குளித்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். அவரது படத்தை பூஜை அறையில் கிழக்குநோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28, என பாராயணம் செய்ய வேண்டும்.



நரசிம்மரின் சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.

நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். ‘உன்னையே சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந்தருள்வதும் இனியே’ என்ற தேவார பாடலுக்கு இணங்க, நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு நரம்சிம்மர் வாரி வழங்குவார்.

நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறிவழிபட்டால் மரண பயம் நீங்கும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் மூலவர் சன்னிதியோடு பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச்சன்னிதிகள் இருந்தாலும் நரசிம்மருக்கு தனிச்சன்னிதி இருப்பது குறைவு. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

Comments