பால் காவடி... பன்னீர் காவடி!

தேவர் குறை தீர்க்கும்பொருட்டு, தென்றலினும் சுகமாய், தேனினும் சுவையாய், அழகென்ற சொல்லுக்கு அடையாளமாய் உதித்த முத்துக்குமரன், தோன்றியதோ வெம்மையின் அடையாளமாம் தீச்சுவாலையிலிருந்து எனும்போது, அவன் விந்தையிலும் விந்தையானவன்தான் என எண்ணத் தோன்றுகிறது. வெள்ளிப்பனித்தலை முடித்த ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆகாய வெளியில் மிதக்க, அதை வாயு பகவான் தாங்கிச் சென்று பூமியில் அமைந்த நீர் நிலையான சரவணப் பொகையில் சேர்ப்பிக்கின்றான். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், பஞ்ச பூதங்களும் பாதம் பணியும் சொரூபம் இவன் என்பதை.
சரவணப் பொகையில் சேர்க்கப்பட்ட ஆறு தீச்சுவாலைகள், ஆறு தாமரைகளின் மீது ஆறு அழகுக் குழந்தைகளாய் வடிவம் பெற்றுத் திகழ்ந்தன. அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்தனர். அசுரனை வதைக்க அவதரித்த அழகுக் குமரனை வளர்த்ததால், அக்கார்த்திகைப் பெண்கள் நட்சத்திரப் பேறு பெற்றுப் போற்றப்படுகின்றனர். பெருமைமிகு கார்த்திகை நட்சத்திரப் பெண்களைப் போற்றும் பேறு பெற்றதுதான் கார்த்திகை திருநாள்.
மாதந்தோறும் கார்த்திகை எனும் கிருத்திகை நட்சத்திர திருநாள் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் இந்நாள் மிகவும் விசேஷமானது. உலகமெங்கும் வியாபித்துள்ள தமிழ் மக்கள் தங்களது பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் முருகப் பெருமானுக்குச் செலுத்தும் முக்கியத் திருநாளாக இது கொண்டாடப்படுகிறது. இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதியுலா என விமரிசையாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, காவடிப் பிரியனான கந்தபெருமானுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறுவிதமான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும், திருக்கோயில்களிலும் வீடுகளிலும் விரதம் இருந்து, கந்தபுராணப் பாராயணம், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்திப் பாமாலைகளை பக்தி சிரத்தையுடன் போற்றிப் பாடி விரதத்தை நிறைவு செய்கின்றனர்.
அறுபடை வீடுகளிலும் இத்திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், திருத்தணிகையில் இந்நாள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இருக்கும் இடத்திலிருந்தே மனதால் வழிபட்டாலும், ‘திருத்தணிகை முருகா’ எனும் பெயரை உளமாரச் சொன்னாலும் தீவினைகள் அகலும் என்பது அருளாளர் வாக்கு. முருகப்பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலை தாங்கி நிற்கிறார். முருகப்பெருமானின் பதினாறு வகை திருக்கோலங்களில் இது, ‘ஞான சக்திதரர்’ திருக்கோலம்.
கிரகங்களின் செவ்வாய் கிரகத்தின் அம்சம் முருகப் பெருமான். இப்பெருமானைப் போற்றி வழிபடுவதால் திருமணத் தடை, செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கி நலம் பெறலாம். குரு, செவ்வாய் தசை நடப்பவர்கள் ஆடிக் கிருத்திகை நாளன்று முருகப்பெருமானை பக்தியுடன் பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நிச்சயம்.

Comments