குருவை சரணடைவோம்!

நமது உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மருத்துவரை நாடித் தீர்த்துக் கொள்கிறோம். ஆனால், மருத்துவப் பிடிக்குள் சிக்காத, மனரீதியான குடும்பத்தில் அமைதியின்மை, கணவன்-மனைவியிடையே பிரச்னை, குழந்தைப்பேறின்மை போன்ற பிரச்னைகளுக்கு என்ன செய்வது? ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ராசியான மருத்துவர் எப்படி இருப்பாரோ, அதுபோன்றே ஒவ்வொரு குடும்பத்துக்கும் ராசியான ஒரு புரோஹிதர் இருப்பார். இவரது முயற்சியாலேயே பல அலௌகிகமான பிரச்னைகள் தீருவதற்கு வாய்ப்புண்டு. அவர் தமது புத்திக் கூர்மையாலும், அனுபவத்தாலும் தீர்வு கண்டு பிரச்னை தீர உதவுவார். இது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் நடைமுறை பழக்கம்.
ரகு வம்சத்தில் அரசன் திலீபனுக்கு வெகு நாட்களாக பிள்ளைப்பேறின்றி இருந்தது. இதனால் அவன் தமது குலகுருவான வசிஷ்டரை மனைவியுடன் சென்று அணுகி, தனது பிரச்னையை எடுத்துக் கூறினான். இத்தருணத்தில் அரசனைக் கண்ட குலகுரு வசிஷ்டர், அவனது குடும்ப நலனைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தார். ‘நீயும், குடும்பமும், நாட்டு மக்களும் நலமா?’ என்று விசாரித்தவுடன் அரசன் திலீபன் கூறிய பதிலிதுதான்.
‘உபபன்னம் நனு சிவம் ஸப்தஸ்வங்கஷேு
யஸ்யமே
தைவீனாம் மானுஷீணாம்ச ப்ரதிஹர்த்தா த்வம்
ஆபதாம்’
அதாவது, என்னைப் போன்ற சீடர் பலருக்கு குருவாக விளங்கும் தவ ச்ரேஷ்டரே! எங்கள் நலனுக்காகவே ஒவ்வொரு நாளும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு நீங்கள் இருக்கும் வரை எங்களுக்குக் கவலையேது? * ஏழு நிலைகளில் அரசை சிறப்பாக ஆண்டு வரும் எனக்கு தெய்வங்கள் மூலமாகவும், கோள்களின் விபரீத மாறுபாட்டின் மூலமாகவும், மனிதர்கள் மூலமாகவும் வரக்கூடிய அனைத்து ஆபத்துக்களையும் நீர் விலக்கி என்னைக் காப்பாற்றுகிறீர்கள் என்பதால் எங்களுக்கு எவ்விதமான குறையுமில்லை" என்று பதிலளித்தான் திலீபன்.
இதன் பொருளாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதாவது என்னவென்றால், நம் வீட்டுப் பிரச்னைகளுக்கு நம்மால் தீர்வுகாண முடியாதபோது, நமது குருவை சரணடைந்து அவரது அறிவுரையின்படி வாழ்வதால் பல பிரச்னைகள் விலகி விடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதே ஆகும். ஆக, குலகுருவை சரணடைவோம். ஆபத்துகளை விலக்கி சந்தோஷமாய் வாழ்வோம்.
* ஏழு நிலைகள்: 1.அரசன், 2.அமைச்சர், 3.நண்பர்கள்,4.கஜானா, 5.ராஜ்யம், 6.கோட்டை, 7.சேனைகள்.

Comments