சென்னையில் பொன்மாரி’

இன்று சென்னையில் தங்க நகைகளுக்குப் பேர்போன இடமான தி.நகரில் சுவர்ண லக்ஷ்மி நித்திய வாசம் செய்யக் காரணம் என்ன?

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று, அங்கு பெய்த பொன் மழைதான் அத்தனை ஐஸ்வர்யங்களும் அங்கு ஒருசேர விளங்கக் காரணம் என்று தோன்றுகிறது! ஆம்... 1958ஆம் வருஷம் மார்ச் மாதம் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, ‘கல்யாண் பாக்’ முகாமில் ஸ்ரீ பெரியவாளுக்கு நடந்த கனகாபிஷேகமே, பின்னாளில் தி.நகர் தங்க நகராக விளங்கக் காரணம் என்று தோன்றுகிறது!
அன்று நடந்த அந்த வைபவத்தை திரு.பரணீதரன் ‘ஆனந்த விகடன்’ இதழில் எழுதி வந்த, ‘சென்னையில் பொன் மாரி’ என்ற தொடரில் பதிவு செய்திருக்கிறார். 23.3.1958 தேதியிட்ட, ‘விகடன்’ இதழில் அவர் செய்த நேர்முக வர்ணனையில் சில பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகிறேன்.
ஐந்து மாதங்களாக சென்னையில் தங்கி பக்த கோடிகளுக்கு திவ்ய தரிசனம் தந்து பொன்மாரி பொழிந்து வரும் ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகளுக்குப் பொன்னால் அபிஷேகம் செய்து காண வேண்டும் என்று சென்னைவாசிகளுக்கு ஓர் அவா பிறந்தது. சுவாமிகள் பீடாரோகணம் செய்த ஐம்பத்தோறாவது வருடக் கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற வைபவத்தில் தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.
1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை தியாகராய நகர், இராமேஸ்வரம் சாலையில் சுவாமிகள் தங்கியிருக்கும் இடம், என்றுமில்லாத சோபை பெற்று விளங்கியது. சரியாக 9 மணிக்கு சுவாமிகள் மேடைக்குப் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தமது குடிலில் இருந்து, மங்கள வாத்தியம் முன்னே முழங்க, உபநிடத பாராயணம் பின்னே ஒலிக்க, இருவர் வெள்ளிப் பிரம்பை ஏந்தி முன் செல்ல, சத்ர சாமர உபசாரங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு வந்தார். ஆத்மாவின் பிரகாசத்தைத் திருமேனி பளிச்சிட்டுக் காட்ட, தெய்வீகத் திருநீறு உள்ளத்தின் தூய்மைக்குக் கட்டியம் கூற, ருத்ராட்ச, ஸ்படிக மணிமாலைகள் அசைந்தாட நிதான நடையுடன் ஒரு கையில் தண்டத்துடனும் மற்றொரு கையில் கடத்துடனும் கருணாமூர்த்தி பந்தலைச் சுற்றி பவனி வந்த காட்சி தேவர்களுக்கும் கிடைக்காத காட்சி.
ஞானமூர்த்தியான ஜகத்குரு மேடையில் வந்து அமர்ந்து தமது கருணா கடாட்ச வெள்ளத்தால் கூடியிருந்தவர்களின் இதயத்தைக் குளிரச் செய்தார். பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் பிரதம சீடரும் பட்டத்து இளவரசுமான புதுப் பெரியவர்கள் மேடைக்கு வந்தார். ரோஜா மாலையையும் வில்வ மாலையையும் துளசி மாலையையும் எடுத்து பரம பவ்யத்துடனும் உள்ளடங்கிய உற்சாகத்துடனும் பெரியவர்களுக்கு அணிவித்தார். (இக்காட்சியைக் அருகே உள்ள படத்தில் காண்க.)
வேத கோஷங்களின் முழக்கத்தினிடையே புதுப்பெரியவர்கள் சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் செய்தார். முதலில் புஷ்பங்களுடன் கலந்த சவரன்களை திருமுடியில் இட்டார். பிறகு சுவர்ணத்தால் ஆன வில்வ தளங்களையும் மோதிரங்களையும் பொற்காசுகளையும் யாவரும் காணும்படி கையை உயர்த்தி அபிஷேகம் செய்தார். புதுப் பெரியவர்கள் கற்பூர ஆரத்தி காட்டவும் கனகாபிஷேகம் இன்று பூர்த்தி பெற்றது.
பொன்மாரி பொழியப்பெற்ற ஸ்ரீஆசாரியாள் கடைசியில் ஆதிசங்கரர் குறித்த, குரு வணக்க சுலோகத்துடன் உபந்நியாசத்தை ஆரம்பித்தார்.
‘தினந்தோறும் பக்தர்கள் புஷ்ப மாலை, துளசி மாலை, வில்வ மாலை முதலியவற்றால் எனக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இன்று கனகாபிஷேகம் செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? ஸ்ரீபகவத் பாதரின் நாமத்தை நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதற்காகத்தான் இத்தனையும் நடைபெறுகிறது. பகவத் பாதாளுடைய திவ்ய நாமத்தை வைத்துக் கொண்டிருப்பதாலேயே இத்தனை விசேஷங்களும் நடைபெறுகிறதென்றால், அவருடைய ஆக்ஞையை சரியாகப் பரிபாலனம் செய்தால் நிச்சயம் உலகம் பூராவும் பொன்மாரி பொழிந்து எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாகும்.
எல்லோரும் சன்னியாசிகளுக்கு நமஸ்காரம் செய்கிறார்கள். உண்மையான சன்னியாசிகள் அவற்றை ஸ்ரீநாராயணனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். அதே போல், இப்போது செய்யப்பட்ட கனகாபிஷேகத்தை நான் ஸ்ரீபகவத் பாதாளுக்கு மானசீகமாக சமர்ப்பித்து விடுகிறேன். அவரது ஆக்ஞையை நிறைவேற்றினால் பிரதி தினமும் அவருக்குக் கனகாபிஷேகம் செய்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும்."
ஸ்ரீ பெரியவாளின் இந்த ஆசார்ய பக்தியை பிரதிபலிக்கும் வகையில், அவர் சந்திரமௌலீஸ்வர பூஜை நடத்திய மேடையில், ஆதிசங்கர பகவத் பாதாளுடைய சுதைத் திருமேனியை அழகுற வடிக்கச் செய்து ஸ்ரீபெரியவாளின், ‘கல்யாண் பாக்’ விஜயத்தை பதிவு செய்கிறார் திரு.கல்யாணராம ஐயர்.

Comments