கவுசானி பைஜ்ய நாதர்!

உத்தரகாண்ட் மாநிலம், கவுசானி பைஜ்யநாத் நகரத்தில் கோமுகி நதிக்கரையில் அமைந்துள்ளது பைஜ்யநாதர் திருக்கோயில். இப்பகுதியில் உள்ள கட்யூர் பள்ளத்தாக்கில், அடர்த்தியான பைன் மரங்களுக்கு நடுவே அமைந்த மேட்டில், கட்யூரி மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது இக்கோயில். கடல் மட்டத்திலிருந்து 1,126 மீட்டர் உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோமுகி நதிக்கரையில்தான் சிவபெருமானுக்கும் - பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இது, சிவன் கோயில்தான் என்றாலும், இங்கே பார்வதி தேவிக்கே பிரதான இடம். தமிழகத்தில் அமைந்த சில சிவ ஆலயங்களில், சக்தியே முதன்மை தெய்வமாக அருள்பாலிப்பது போல், இங்கும் பார்வதி தேவியே முக்கியத்துவம் பெறுகிறாள்!
மலை மேல் அமைந்த கோயிலுக்குச் செல்ல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். வழிநெடுக பல கல்லால் ஆன சிறு சிறு வளைவுகளைக் காணலாம்.
சன்னிதியில் பார்வதி தேவி மிக அழகான கருப்புக் கல்லில், நேர்த்தியாகச் செதுக்கப்பட்டு நம்மை பக்தியுடன் வணங்க வைக்கிறார். இதுதவிர, தனித்தனி சன்னிதிகளில் சிவன், கணேஷ், சண்டிகா, குபேரர், சூரியன் மற்றும் பிரம்மா ஆகியோரும் காட்சி தருகின்றனர். கோயிலுக்குச் செல்லும் வழியில் கால பைரவர் அமர்ந்த கோலத்தில் நம்மைக் கண்காணிக்கிறார்!
கோயில் அமைந்த பைஜ்யநாத் பகுதி ஒரு கோடை வாசஸ்தலமும் கூட. இதனால் இங்கே கூட்டத்துக்குப் பஞ்சமில்லை. மலை மீது அமைந்த இக்கோயிலில் நின்று பார்த்தால், இமாலய மலையைக் கண்டுகளிக்கலாம். குறிப்பாக, திருசூல், நந்தாதேவி வெள்ளிப் பனிமலைகளைத் தரிசிக்கலாம்.
பக்தர்கள் வேண்டுதலுக்காக கோயிலில் மணி கட்டி வழிபடுகிறார்கள். வேண்டுதல்கள் பலித்ததை நிரூபிக்கும் விதமாக ஏராளமான மணிகளை இங்கே காண முடிகிறது.
சிவராத்திரி இங்கே மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போதும் இங்கு விழா உண்டு. ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் இங்கே குளிர்காலத்தில் கடும் பனி கொட்டுகிறது. மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை மழைக்காலம் என்பதால் அச்சமயத்தில் இங்கே செல்வதைத் தவிர்க்க வேண்டும். செப்டம்பர், நவம்பர் யாத்திரை செய்ய சிறந்த மாதங்கள்.
எப்படிச் செல்வது: தில்லியிலிருந்து அல்மோராவுக்கு நேரடி பேருந்து வசதி உண்டு. அல்மோராவிலிருந்து பைஜ்யநாத் 53 கி.மீ. கவுசானியிலிருந்து 17 கி.மீ. மொத்தத்தில் தில்லியிலிருந்து 507 கி.மீ.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை.


இக்கோயிலில் ஓரிரு நாட்கள் தங்க 1929ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இங்கே வருகைபுரிந்தார். அவருக்கு இந்த இடம் மிகவும் பிடித்துப் போகவே, பத்து நாட்கள் தங்கிச் சென்றார். இதுபற்றி அவர், ‘நவஜீவன்’ இதழில் எழுது போது...
நான் டார்ஜிலிங் மற்றும் சிம்லாவைப் பார்த்துள்ளேன். இந்த இடத்தை ஒப்பிடும்போது அவை ரொம்ப சாதாரணம். அந்த அளவுக்கு இது இயற்கைக் கொஞ்சும் பூமி" எனக் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்திக்கு இங்கு அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.

 

Comments