அந்தமோ ஆகண்டலா?

காவியம் பாடும் ஆற்றல், இந்திரனுக்குக் கட்டளை இட்டு உடனே மழையை நிறுத்தும் ஆற்றல், கேட்ட மாத்திரத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செய்யுள் பாடும் ஆற்றல்... எனப் பல விதங்களிலும் முருகனின் அருளை வெளிப்படுத்திய அடியவர் ஒருவரின் வரலாறு இது!

தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து’ எனும் பெருமை பெற்ற தொண்டை நன்னாட்டில், ‘கல்வியில் கரையிலாக் காஞ்சீ’ எனப் புகழ்பெற்ற காஞ்சியில் செங்குந்தர் மரபைச் சேர்ந்த சிவானந்தர் என்பவர் வாழ்ந்து வந்தார்.
பல காலமாக மகப்பேறு இல்லாமல் வருந்திய அவர், தனது மனைவி அமுதாம்பிகையோடு பல வகையான நோன்புகளையும் நோற்று வந்தார். அதன் பலனாகவோ என்னவோ, ஒரு நாள் ஏகாம்பரேஸ்வரரைத் தரிசிக்கப் போன சிவானந்தருக்கு, ஏகாம்பரேஸ்வரரின் கட்டளை கிடைத்தது. அக்கட்டளைப் படி, சிவானந்தர் முருகப்பெருமானுக்கு ஒரு திருக்கோயில் அமைத்து, ‘குகனேரி’ எனும் தடாகமும் அமைத்து, பூஜை, திருவிழா முதலியவற்றை நடத்திக் கொண்டிருந்தார்.
நாளாவட்டத்தில், ‘அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே’ எனும் அருணகிரி நாதரின் வாக்குக்கேற்ப, சிவானந்தர்-அமுதாம்பிகை தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, ‘குகனேரியப்பன்’ எனப் பெயர் சூட்டினார்கள்.
ஐந்து வயதானதும் குகனேரியப்பனுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார் தந்தை. ஏகாம்பரேஸ்வரர் உத்தரவுப்படி கோயில் கட்டி, குளம் வெட்டிப் பிறந்த பிள்ளையல்லவா? கல்வி, கேள்விகளில் தலை சிறந்து விளங்கினான் குழந்தை குகனேரி. குமரக்கோட்டத்து சிவாசாரியாரும் முருகனருள் கைவரப்பெற்றவருமான கச்சியப்ப சிவாசாரியாரைக் குருவாகக் கொண்டு, ஞான நூல்களை எல்லாம் கற்றறிந்தான்.
அது மட்டுமா? கச்சியப்ப சிவாசாரியாரிடம் சமய தீக்ஷை பெற்று, சம்ஸ்கிருதத்தைக் கற்று அம்மொழியில் உள்ள நூல்களையும் குகனேரியப்பர் கற்றறிந்தார். அதன்பின் சிவ பூஜை முறைகளைக் கடைபிடித்துப் பூஜை செய்து வந்ததுடன், முருக வழிபாட்டிலும் முனைந்து நின்றார். வழிபாடுகள், திருவிழாக்கள் ஆகியவற்றைச் சிறப்பாக நடத்தி வந்தார்.
ஒரு சமயம்... திருவிழா நடந்து கொண்டிருந்தது. முருகப்பெருமான் திருவீதி உலா வந்து கொண்டிருந்தார். ஏராளமானோர் கூடியிருந்தார்கள். யாருமே எதிர் பார்க்காத விதமாக அப்போது, திடீரென்று பெரு மழை பெய்யத் தொடங்கியது. குவிந்திருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். விழாவை முன்னின்று பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்த குகனேரியப்பர், திருவுலா தடையாகிறதே என வருந்தி,
‘கார்க்கு மழைக்குங் கவலேங் கடுஞ்சிறையால்
சூர்க்குடைந்த நின்னைச் சுகத்திருத்தி -
ஊர்க்குள் விடும்
கந்தன் விழாவைக் கருதாது பெய்வித்தல்
அந்தமோ ஆகண்டலா’
- எனப் பாடி வேண்டினார்.
ஆகண்டலன் என்பது தேவேந்திரனைக் குறிக்கும். தேவேந்திரனிடம் முறையிட்டுக் கேட்பதாகத் தோன்றும் இப்பாடலில், எச்சரிக்கையும் தொனிக்கின்றது.
‘தேவேந்திரா! சூரபத்மனுடைய சிறையில் நீ பட்ட துயரெல்லாம் உனக்கு நினைவில்லையா? மறந்து போய் விட்டதா? சூரபத்மன் சிறையிலிருந்தும், உன்னை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த துயரங்களில் இருந்தும் உன்னை விடுவித்து, உனக்கு சொர்க லோக பதவியை மறுபடியும் அளித்து, உன்னைச் சுகத்தில் இருத்தியவரல்லவா இந்த முருகப்பெருமான்! இவரது திருவீதி உலாவின்போது, இவ்வாறு மழை பெய்து இடையூறு செய்வது உனக்கு அழகா?’ எனும் பாடலைக் குகனேரியப்பர் பாடி முடித்த அதே விநாடியில், மழை நின்றது. முருகப்பெருமானின் திருவீதி உலா சிறப்பாக நடந்து முடிந்தது.
முருகப்பெருமானிடம் முழுமையான பக்தியும், அதன் காரணமாகப் பெற்ற சொல்லாற்றலும் படைத்த குகனேரியப்பர், கச்சியப்பர் கந்தபுராணம் பாடி அரங்கேற்றியபோது, உடன் இருந்தவர்.
முருகப்பெருமானாலேயே ‘திகட சக்கர’ என, முதலடி எடுத்துக் கொடுக்கப்பட்டது; முருகப் பெருமான் தமது திருக்கரங்களாலேயே சரிபார்த்துத் திருத்தியது; அரங்கேற்றத்தின்போது முருகப் பெருமானே நேருக்கு நேராகப் புலவர் வடிவில் வந்து இலக்கண விளக்கம் சொன்னது - எனப் பலவிதமான பெருமைகள் கொண்டது கந்த புராணம்.
10,345 பாடல்கள் கொண்ட கந்தபுராணம், சம்பவ காண்டம்; அசுர காண்டம்; மகேந்திர காண்டம்; யுத்த காண்டம்; தேவ காண்டம்; தக்ஷ காண்டம் என ஆறு பகுதிகளைக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக உள்ள உபதேச காண்டம் எனும் பகுதியைக் கச்சியப்பர் தான் எழுதாமல், தன் சீடனான குகனேரியப்பரை எழுதச் சொன்னார்.
குருநாதர் கட்டளையைச் சிரமேற்கொண்ட குகனேரியப்பர், முருகப்பெருமானை வணங்கி, ‘கந்தக் கடவுளே! எம் ஆசிரியருக்கு அடியெடுத்துக் கொடுத்ததுபோல் எமக்கும் அடியெடுத்துக் கொடுத்தால், அவர் கட்டளைப்படி உபதேச காண்டத்தைப் பாடி முடிப்பேன்’ என வேண்டினார்.
அப்போது முருகப்பெருமான், ‘குழவி வெண் பிறை’ என அடியெடுத்துக் கொடுக்க, அதையே முதலடியாக வைத்து, உபதேச காண்டத்தைப் பாடி முடித்தார். 4,348 பாடல்களால் ஆன அந்நூல் சொற் சுவையும் பொருட்சுவையும் நிறைந்தது.
குகனருளால் உருவான அந்நூலை, குகனேரியப்பர், தன் குருவான கச்சியப்பர் முதலான அறிஞர்கள் முன்னிலை வகிக்க, அரங்கேற்றம் செய்தார்.கச்சியப்பரே அந்நூலுக்கு வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்தார்.
கனவிலும் நனவிலும் கந்தனை மறவாத குகனேரியப்பர், திருத்தணிகைக்கு ஸ்வாமி தரிசனம் செய்யச் சென்றிருந்த நேரத்தில், குகனேரியப்பரின் அருந்தமிழ் ஆற்றலை அறிந்த சிலர், குகனேரியப்பரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்கள்.
ஐயா! ‘அம்பிறை’ எனும் சொல் மூன்று இடங்களில் அடுக்கி வர வேண்டும். முருகப்பெருமான் திருநாமமும் வள்ளியம்மையின் சிறப்பும் இருக்க வேண்டும். பின் முடுகு வெண்பாவாக இருக்க வேண்டும். பாங்கி தலைவர்க்கு உணர்த்தும் துறையில் அமைய வேண்டும். இப்படிப்பட்ட பாடல் ஒன்றை, உடனே பாட வேண்டும்" என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.
குகனேரியப்பர் திருத்தணிகை ஆண்டவனை மனதார வணங்கி, ‘தண்டமிழ்க் கடவுளே! தமிழ்ச் சங்கத் தலைவரா இருந்து தமிழ் வளர்த்த தெய்வமே! உள்ளத்தில் நின்று பாடு’ என வேண்டி, அதே விநாடியில்...
‘அம்பிறைக்கு மைந்து மலரம் பிறைக்கு
நொந்துமிக
அம்பிறைக்குங் கண்ணாட் கருள்புரிவாய்-
நம்புதணி
கைக்கிரிக்குள் உற்றசித்ர கச்சுடைத் தனக்குறத்தி
யைக்களித் தணைத் தவத்தனே’
- எனும் பாடலைப் பாடினார்.
அபூர்வமான பாடலிது. 1.அம்பிறை - அழகிய நிலவு; 2.ஐந்து மலர் அம்பு இறை - மலர் அம்புகள் ஐந்து கொண்ட மன்மதன்; 3.அம்பிறை - கண்ணீரை இறைக்கும்.பாங்கி தலைவர்க்கு உணர்த்துவதாகப் பாடப்பட்ட இப்பாடலில், ‘நிலவுக்கும் ஐந்து மலர் அம்புகளை ஏவும் மன்மதனுக்கும் நொந்து, தலைவனைப் பிரிந்து கண்ணீர் சிந்தும் பெண்ணுக்கு இரங்கி அருள்புரிவாய்!’ எனும் இப்பாடலில் தணிகை, முருகன், வள்ளி என்பன அமைய; பின்முடுகாக அமைந்துள்ளது.
பாடலின் பின் பகுதியான,
கைக்கிரிக்குள் உற்றசித்ர கச்சுடைத் தனக்குறத்தி
யைக்களித் தணைத் தவத்தனே
- என்பதைச் சற்று வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தால், பின் முடுகு வெண்பா என்பதன் பொருள் விளங்கும்.
பாடலைக் கேட்ட தணிகை அன்பர்கள் வியந்து, குகனேரியப்பரைப் பாராட்டி வணங்கினார்கள். ஆறுமுகனுக்கும் அவனருளால் பெற்ற தமிழுக்கும் தொண்டு செய்த குகனேரியப்பர், முடிவில் குகப் பெருமான் திருவடிகளை அடைந்தார்.

Comments