திருடு.. நன்றாய் திருடு!

கடவுளைத் தத்துவமாகப் பார்ப்பது ஒரு முறை. கவித்துவமாக அனுபவிப்பது மற்றொரு முறை. இந்து சமய ஞானிகள் பலரும் இரு வகையிலும் அனுபவித்திருக்கிறார்கள். சூஃபிக்களும் அப்படித்தான். ஓஷோவைப் போன்றவர்கள் தங்கள் உரைகளையே கூட, கவித்துவமாக வழங்குவதும் உண்டு.
ஒரு சொற்பொழிவில் ஓஷோ சொல்கிறார், கடவுள் உன் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். அடிக்கடி... பல தடவை... ஆனால், கதவைத் திறக்க - பதிலளிக்க - உபசரிக்க நீ அங்கு இருப்பதில்லை. வீடு மட்டும்தான் அங்கே. நீ எங்கோ, எதற்கோ வெளியில் திரிகிறாய்" என்பார். உண்மை. நாம் கடவுளைத் தேடுவதாக ஏக அமர்க்களம் செய்கிறோம். உண்மையில், அவர் கதவைத் தட்டியபோது வரவேற்கத் தவறி விடுகிறோம். ஒன்றல்ல... இரண்டல்ல... பல தடவைகள் நாம் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறோம்.
மணிவாசகர் இன்னும் பட்டவர்த்தனமாகப் பாடி வைக்கிறார். கடவுள் சேவகன். நம் வீடு வீடாக வருகிறவன். ஒரு வீடு கூட விடாமல் வருகிறவன்" என்ற பொருளில், ‘இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை’ என்று பாடுகிறார். வாக்கு சேகரிக்கிற வேட்பாளர் கூட எல்லா வீட்டுக்கும் வர மாட்டார். எதிர்க்கட்சிக்காரன் சின்னம் கதவில் ஒட்டியிருந்தால், ‘இவன் நமக்கு ஓட்டுப் போட மாட்டான்’ என்று புரிந்து கொண்டு அந்த வீட்டை விட்டு விடுவார். கடவுள் அப்படி இல்லையாம். ‘இல்லங்கள் தோறும்’ வருவாராம்... ஒரு வீடு விடாமல் வருவாராம்.
நம்மவர்கள் கோயில் கோயிலாகச் சுற்றுவதை ஒரு பிக்னிக்காகவே நடத்துகிறார்கள். அண்மையில் ஒரு நண்பர் என் வீட்டுக்கு வந்தார். பாடல் பெற்ற ஸ்தலங்கள் 172 போய் வந்திருக்கிறேன்" என்று பெருமை பொங்க மார்தட்டினார். சரி... ஒரு பாடல் சொல்லுங்களேன்" என்றேன். மனிதர் பேயறைந்த மாதிரி விழித்தார். மாறி மாறி கோயில் கோயிலாகப் போவதுதான் பக்தி என்று பிழைபடப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு கோயில் போனாலும் போதும். கடவுள் யார்? நாம் யார்? சம்பந்தம் என்ன? இந்த லயம் ஏற்பட்டால் பிறகு இன்னொரு கோயில் எதற்கு?
ஆ(ன்மா) லயிக்கும் இடம்தானே ஆலயம். ஆன்ம லயம் ஏற்படாமல் மாறி மாறி பரக்கப் பரபரக்க, ஓடி ஓடி பத்துக் கோயில் பார்ப்பதால் என்ன பயன்? அவன்தான் உன் வீட்டுக்கே வரத் தயாராக இருக்கிறானே. இன்னும் எதற்கு பக்திச் சுற்றுலா... பரபரப்புப் பயணப் பட்டியல். மக்கள் நிறையவே யோசிக்க வேண்டும்.
கோயிலுக்கு ஏன் போகிறோம்? எதற்குப் போகிறோம்? என்ன நிகழ வேண்டும் அங்கு? என்கிற புரிதலே இன்றி அலையாய் அலைவதில் என்ன நன்மை விளையப்போகிறது? காலையில் நாம் கண் விழித்து விட்டாலும் கூட, உண்மையான விழிப்பு பலருக்கும் நடப்பதில்லை. ஆன்மா தூங்குகிறது. ஆழமாகக் கும்பகர்ணத் தூக்கம் போடுகிறது. நன்கு தூங்கும் போது நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் நமக்குத் தெரியுமோ? தெரிவதில்லை. அதே இடத்தில் நாம் இருந்தாலும் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. இதே கதைதான். ஆத்மா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறபோது, கண் விழித்து காரியம் செய்தாலும் நாம் என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்பது புரிவதே இல்லை.
கூட்டமான இடங்களில் பலர் எவ்வளவு தவறாக நடந்து கொள்கிறார்கள். தொடர்பே இல்லாதவனைக் கூடத் தொடுவதற்கு வேட்கை கொள்கிறார்கள்... அவமானப்படுகிறார்கள்... அடி வாங்குகிறார்கள்... அசிங்கப்படுகிறார்கள். ஏன்? ஏன்? ஏன்? விழிப்பின்மை. தூக்கம்... ஆத்மாவின் தூக்கக் கலக்கம். மாயையாக வலை விரிக்கிறது. ஏன் செய்கிறோம்? எதற்குச் செய்கிறோம்? என்று தெரியாமலேயே எதையாவது செய்து விட்டுப் பிறகு வருத்தப்படுகிறார்கள். ஒரே காரணம்... விழிப்பின்மை. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... விழிப்புடன் மனிதன் தவறுகள் செய்ய முடியாது. எது சரி? எது தவறு? என்பதற்கு வேத புத்தகங்களையும் நீதி நூல்களையும் நீங்கள் ஆராய வேண்டும் என்பதில்லை. விழிப்பு மட்டுமே போதுமானது.
பௌத்த குருமார்களில் குறிப்பிடத்தக்க குருநாதர் நாகர்ஜீனர் என்பவர். அவரைக் காண பலரும் கூடிய கூட்டத்துக்கிடையே ஒரு பிரபல திருடனும் வந்து சேர்ந்தான். களவாடும் எண்ணம்தான். ஆனால், நாகர்ஜீனரின் உபதேசம், நடை, உடை, பாவனைகள் அவனை ஈர்த்தன. பலரும் கலைந்து போனபின் அவரை வணங்கி, நான் ஒரு திருடன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். குருவோ, எனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை என்னிடம் ஏன் கூறுகிறாய்? உன் பிரச்னை என்ன? அதைச் சொல் முதலில்" என்றார்.
ஐயா... நான் எந்தக் குருவிடம் போனாலும், ‘திருடாதே’ என்று போதிக்கிறார்கள். திருட்டை விட்டால் மட்டுமே என்னை ஏற்றுக் கொள்ள முடியும் என்கிறார்கள். என்னால் திருட்டை விட முடியாது. திருட்டை விடு என்பதைத் தவிர, வேறு எந்த உபதேசம் நீங்கள் செய்தாலும் நான் ஏற்க முடியும்" என்றான் திருடன்.
நீ குருவைச் சந்திக்கவில்லை. திருட்டுப் பயல்களைச் சந்தித்திருப்பாய். அவர்கள்தான் உன் திருட்டைப் பற்றியே யோசிப்பார்கள். நீ திருடன் என்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உன்னைச் சீடனாக ஏற்க நான் தயார். நீ என்னைக் குருவாக ஏற்கச் சம்மதித்தால் உபதேசத்தைத் தொடங்கி விடலாம்" என்றார். ஏற்கிறேன்... குருவே" என்று வணங்கினான் திருடன்.
நீ எவ்வளவு வேண்டுமானாலும் திருடலாம். எங்கு வேண்டுமானாலும் திருடலாம். ஒரே ஒரு நிபந்தனை. இதை மட்டும் நீ மீறவே கூடாது" என்று நிறுத்தினார் குரு. தான் ஒரு பொறியில் சிக்கப் போகிறோம் என்கிற உணர்வின்றி, சொல்லுங்கள் குருவே சொல்லுங்கள்" என்று பணிந்து எழுந்தான் திருடன். திருடு... நன்றாகத் திருடு. ஆனால், நல்ல விழிப்புணர்வுடன் இருந்து கொண்டே திருட வேண்டும். திருட்டு என்றில்லை. நீ வாழ்வில் எதைச் செய்தாலும் அதை முழு விழிப்புணர்வுடன் செய்யப் பழகு... விழிப்புடன் செய்... இதுவே என் உபதேசம்" என்றார் குரு.
ப்பூ... இதென்ன பெரிய வேலை. சுலபத்தில் செய்து விடலாம்" என்று திருடன் விடை பெற்றான். ஆனால், முழு விழிப்புணர்வுடன் இருந்தால் திருட முடிவதில்லை என்பதை விரைவில் புரிந்துகொண்டான். ஏதோ ஒரு மனோவசியத்தால் உந்தப்பட்டுத் தான் திருடுவது, புகை பிடிப்பது, தவறாக உண்பது, காமநுகர்ச்சி மேற்கொள்வது எல்லாமே நடக்கிறது. முழு விழிப்புப் பெற்றவன் திருடுதல் எங்ஙனம் சாத்தியம்? மீண்டும் குருவை வந்து தரிசித்ததும், ஐயா நீங்கள் மந்திரவாதி இல்லை. ஆனால், தந்திரசாலி. என்னைச் சிக்க வைத்துவிட்டீர். முழு விழிப்புணர்வுடன் என்னால் திருட முடியவில்லை. விழிப்பு நிலை பற்றி ருசி கண்டதால் விடவும் முடியவில்லை. திருடினால் விழிப்புணர்வு போய் விடுகிறது. தடுமாறுகிறேன். உதவுங்கள் ஐயா" என்று காலில் விழுந்தான்.
குருவோ, திருட்டைப் பற்றி எனக்குக் கவலையில்லை. விழிப்புணர்வு பற்றி மட்டும் பேசு. விழிப்புணர்வு தேவையா... தேவையில்லையா... அதை மட்டும் முடிவு செய்" என்றார். திருடன் மன்றாடினான். நேற்று அரண்மனையில் திருடப் போனேன். கஜானாவைத் திறந்து விட்டேன். அப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. பொக்கிஷம் பெரிதாகத் தோன்றவில்லை. ஆசையோ, தூண்டலோ என்னிடம் எழவில்லை. சிறிது விழிப்புணர்வு மறைந்தாலோ, மூடினாலோ ஆசை கொப்புளிக்கிறது. விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் நான் ஒரு புத்தனாகி விடுகிறேன். அவை மதிப்பற்றவை என்றே முடிவு செய்து வெளியேறி விட்டேன்" என்றான். ஆக, விழிப்புணர்வு பெற்றால் ஒழிய, நமது மனோவசியத்தின் பிழைகளிலிருந்து வெளி வர முடியாது.
இன்று பெருவாரியான மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள் போன்றே செயல்புரிகிறார்கள், பேசுகிறார்கள், வாழுகிறார்கள். புத்தர் சொல்கிறார்... விழித்திருப்பவர்களுக்குப் பொதுவாக ஒரே ஒரு உலகம்தான் உண்டு. ஆனால் உறங்குபவர்களுக்கோ, ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கே சொந்தமானதொரு தனிப்பட்ட உலகம் இருக்கும்" என்கிறார்.
கணவன், மனைவி இருவரும் ஒரே வீட்டில், ஒரே அறையில், ஒரே படுக்கையில் இருந்தாலும் வேறு வேறு உலகத்தில் வாழுகிறார்கள். அதனால்தான் ஓயாத சண்டை, மோதல்கள். இருவரும் விழிப்படைந்தால் மட்டுமே சண்டையை நிறுத்த முடியும். மனிதர்கள் எவ்வளவு விழிப்பின்றிப் பேசுகிறார்கள் என்பதற்கு ஒரு கதை... படித்தது சொல்லி விடுகிறேன்.
நான்கு என்ஜின்கள் பூட்டிய ஆகாய விமானம் பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் ஒரு குலுக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து விமானி அறிவிப்புச் செய்தார். எதிர்பாராதவிதமாக விமானத்தின் நான்கு என்ஜின்களில் ஒன்று பழுதாகி விட்டது. அதனால் திட்டமிட்டபடி நாம் குறித்த நேரமான 8.10க்கு அமெரிக்காவின் விமான நிலையம் சென்றடைய வாய்ப்பில்லை. இரண்டு மணி நேரம் தாமதம் நேரலாம். சங்கடங்களுக்கு வருந்துகிறோம்" என்றார்.
சிறிது நேரம் அதை உன்னிப்பாகக் கேட்ட இரு பயணிகள், ம்... இரண்டு மணி நேரம்... படு போர்" என்று அலுத்துக் கொண்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு இன்னும் ஒரு என்ஜின் செயலிழந்ததை விமானி அறிவித்ததும் ஒரு பயணி, அடடா இன்னும் கூடுதலான நேரம்... ஆக, நான்கு மணி நேரம்" என்று தாமாகக் கணக்குப் போட்டு அலுத்துக் கொண்டார். மூன்றாவது என்ஜினும் செயலிழந்தது. அப்போது ஒரு பயணி அலுப்புடன், ச்சீ... நாலாவது என்ஜினும் பழுதாகி விட்டால்... இன்று இரவு முழுவதும் ஆகாயத்திலேயே கழிக்க வேண்டி வரும். கொடுமையடா சாமி" என்று நீட்டி முழக்கினார். எவ்வளவு முட்டாள் தனம் பாருங்கள். நான்காவது என்ஜினும் செயலிழந்த பிறகு பறக்கவா முடியும்?
நிறைய பேர் கண் விழித்த பின்னும் தூக்கத்தில்தான் பேசுகிறார்கள். இல்லை என்றால் உலகம் முழுவதும் இத்தனை உளறல்கள் கேட்குமா என்ன? ஜாதி, மதம், சகலமும் ஆன்மாவின் தூக்கம்தானே. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பணச் சுருட்டல் எல்லாமே ஆன்மாவின் உறக்கம்தானே. மரணம் பற்றிய விழிப்பு ஏற்பட்டால் மனிதன் அடுத்தவனைச் சுரண்டி சொத்து சேர்ப்பானா என்ன? அதுவும் ஐயாயிரம் கோடி... பத்தாயிரம் கோடி என்று... மூடர்கள். இந்தத் தூக்கத்திலிருந்து விழித்ததன் அடையாளம்தானே திருவாசகத்தின், ‘பொன் வேண்டேன் புகழ் வேண்டேன்’ என்கிற அறிவிப்புகள். ‘யானே பொய் என் நெஞ்சும்பொய் என் அன்பும் பொய்’ என்று விழித்தவர்கள்தானே வெளியிட முடியும்?

Comments