உடுப்பி கிருஷ்ணனுக்கு நாள்தோறும் நவ பூஜை!

உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் என்பது பாலகிருஷ்ணன் உறையும் திருக்கோயில்.
ஊரின் நடுவில் அமைந்துள்ள வைணவத் தலம் இது. ஸ்ரீமத்வாச்சாரியார் நிறுவிய மடம். மத்வர் தம்முடைய மடத்தில் பாலகிருஷ்ண விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டு முறைகள் வகுத்துள்ளார். மத்வரின் சீடர்கள் இன்று வரை முறை மாறாமல் வழிபட்டு வருகின்றனர். துறவிகளான அவர்கள் மட்டுமே பாலகிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்வது, நைவேத்தியம் படைப்பது, ஆராதனை செய்வது என்று முறைப்படுத்தியிருக்கிறார்கள். வேறு யாருக்கும் இத்தகைய உரிமை கிடையாது.
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் இரவு வரை ஒன்பது விதமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் பாலகிருஷ்ணனை பூஜிக்கும் சுவாமிகள் ஒவ்வொரு பூஜையும் தொடங்குவதற்கு முன்பாகத் திருக்குளத்தில் நீராடுவர். இவ்வாறு தினமும் ஒன்பது முறை நீராடி விட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திருக்கோயிலில் பூஜைகள் அனுதினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நான்கு மணிக்கே தொடங்கி விடுகின்றன. மேள தாள வாத்தியங்கள் முழங்க, உத்ஸவமூர்த்தியாகிய கண்ணபிரானை, ‘ஸ்ரீமத்வ புஷ்கரணி’ திருக்குளத்துக்கு எடுத்துச் சென்று திருமுழுக்காட்டுகிறார்கள். அதிகாலை ஐந்து மணி முதல் தொடங்குகிறது இப்பூஜைகள்.
நிர்மால்ய விசர்ஜனம்
இப்பூஜையின்போது பகவானுக்கு முன் இரவு அணிவித்த ஆடை அலங்காரம், அணிமணிகள், மாலைகள் அனைத்தும் களையப்படுகின்றன. பின் அழகிய துளசி மாலையை அணிவிக்கின்றனர். அவல், தயிர், கடலை, இஞ்சி, வெல்லம் போன்ற பிரசாதங்கள் உத்ஸவருக்கு முன்பாகப் படைக்கப்படுகின்றன. தொடர்ந்து தூப தீப ஆராதனை வழிபாடுகள் நடைபெறுகின்றது. அதற்கடுத்து வரிசையாக நடைபெறும் பூஜைகள்...
உஷத் கால பூஜை
இந்தப் பூஜையின்போது அபிஷேகங்கள், சந்தன அலங்காரம் செய்து, துளசி மணிமாலை மற்றும் மணமுள்ள மலர் மாலைகளை அணிவிக்கின்றனர். உத்ஸவருக்கு முன்பாக அன்னம், பால், தயிர் போன்ற நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெறுகின்றன.
கோ பூஜை
சுவாமியின் பாலரூப அலங்காரம் களையப் பெற்றுத் தங்கக் காசுகளால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து பால், நெய், தயிர், தேன், இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது. உத்ஸவருக்கு முன்பாக அரிசியும், அரிசிப் பொரியும், வெல்லமும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தூப தீபாராதனை முடிந்ததும் நிவேதனமாகப் படைக்கப்பட்ட பொருட்களை மடத்திலுள்ள பசுக்களுக்கு வழங்குகின்றனர்.
உத்வார்த்தன பூஜை
மூன்றாவதாக நடக்கும் இப்பூஜையின்போது பகவானைப் பன்னீரால் நீராட்டி மாவினால் தேய்த்து விடுகின்றனர். பின் தங்கம் மற்றும் வெள்ளிக்கலச நீரால் உத்ஸவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இளநீர், பால், வெண்ணெய் முதலிய நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. தூப தீபாராதனைக்குப் பின் நைவேத்தியப் பிரசாதத்தை மத்வ சரோவரிலுள்ள மீன்களுக்கும் கருடனுக்கும் படைக்கிறார்கள். மறுபடியும் கண்ணபிரானை அலங்கரித்த பின்னர் அபிஷேக தீர்த்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்ரீமத்வ புஷ்கரணி திருக்குளத்து நீரே பகவானின் அபிஷேக நீராகும். அன்னம், தோசை, பாயசம் போன்ற நைவேத்தியங்கள் படைக்கப்பெற்று, அதையே ஆஞ்சநேயமூர்த்திக்கும் படைத்து வழிபடுகின்றனர்.
அலங்கார பூஜை
இந்த ஐந்தாவது பூஜையின்போது பகவானுக்குப் பட்டுப் பீதாம்பரம் அணிவித்து அழகுபடுத்துவர். தங்க, வைர மணிமாலைகள் சூட்டுவர். தசாவதாரத் திருக்கோலங்களும், இதர அலங்காரங்களும் செய்விக்கின்றனர். அன்னம் மற்றும் பல தின்பண்டங்கள் நைவேத்தியமாகப் படைக்கிறார்கள். விசேஷமாக வெள்ளிக்கிழமையிலும் நவராத்திரியின்போதும் கண்ணபிரான் மோகினி வடிவம் கொண்டு அருள்பாலிக்கிறார்.
மகா பூஜை
ஆறாவதாக நடக்கும் இப்பூஜை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், பாலகிருஷ்ணனைப் பிரதிஷ்டை செய்த ஸ்ரீமத்வாச்சாரிய சுவாமிகளே இப்பூஜையை நடத்துவதாக நம்புகின்றனர். இந்த மகா பூஜைக்கு முன்பாகப் பலவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்பெற்று தூப தீப ஆராதனையுடன் ஒரு சிறு பூஜை நடைபெறுகிறது. இதற்கு, ‘சனகாதி பூஜை’ என்று பெயர். மகா பூஜையின்போது பெரிய பெரிய பாத்திரங்களில் அன்னம் தின்பண்டங்கள், பஞ்சகஜ்யம், பாயசம், கனி வகைகள் போன்றவற்றை இறைவனுக்கு முன்பு வைத்து விட்டு ஸ்ரீ கிருஷ்ண மடத்துச்சுவாமி வெளியே வந்து விடுவார். அப்போது ஸ்ரீமத்வாச்சாரியாரே அவற்றை பாலகிருஷ்ணனுக்கு ஊட்டுவதாகவும் நம்புகிறார்கள். சிறிது நேரம் கழித்து சுவாமி உள்ளே சென்று தீபாராதனை செய்து வழிபடுகிறார். அப்போது மகா பூஜைக்குரிய வேட்டுச் சத்தங்கள் ஒலிக்கின்றன. மகா பூஜைக்குப் பிறகு மதியம் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. பாலகிருஷ்ணன் உறையும் கருவறை வாயில் எப்போதும் மூடியே இருப்பதால், ஜன்னல் வழியாகவே எப்போதும் தரிசிப்பதால் கோயில் கருவறை மூடப்படுவது என்பதே இல்லை.
சாமர பூஜை
ஏழாவது பூஜையாக இரவு ஏழு மணிக்கு பால கிருஷ்ணனுக்கு சாமர சேவை நடைபெறுகிறது. அப்போது கருவறை முன்புள்ள முகமண்டபத்தில் உத்ஸவரும், சாளக்கிராம மூர்த்தியும் வைக்கப்படுவர். அரிசிப் பொரி, வெல்லம், தேங்காய், லட்டு நைவேத்தியங்களாக வைக்கப்படுகின்றன. மடத்துச் சுவாமி தங்கக் கைப்பிடியுடன் கூடிய இரு வெண்சாமரங்களைப் பகவானுக்குப் பவ்யமாக வீசுவதுதான் சாமர பூஜையாகும். அப்போது கருவறையைச் சுற்றி அகல் விளக்குகள் ஏற்றி அழகு சேர்க்கின்றனர்.
ரங்க பூஜை
இந்த எட்டாவது பூஜை ஆஞ்சநேயரின் சன்னிதியில் நடைபெறுகிறது. தலைவாழை இலை பரப்பி அதில் சுவையான பஞ்சகஜ்யம் எனும் பிரசாதம் படைக்கின்றனர். உத்ஸவ மூர்த்தியை வெள்ளிப் பல்லக்கில் வைத்து இருமுறை கருவறையைச் சுற்றி வருகின்றனர். திருவிழாக் காலங்களில் தங்கப் பல்லக்கில் பவனி வருவார். பல்லக்கில் ஒய்யாரமாகப் பவனி வந்த கிருஷ்ண பரமாத்மா பின்னர் மண்டபத்திலுள்ள வெள்ளித் தொட்டிலில் வந்து அமருகிறார். அங்கு அவருக்கு தூப தீப நைவேத்திய ஆராதனை முடிந்து கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது.
ஏகாந்த சேவை
கடைசி பூஜையாக இது நடக்கிறது. கருவறையில் வெள்ளித் தொட்டிலில் உள்ள பட்டு மெத்தையில் பகவானை எழுந்தருளப் பண்ணுகிறார்கள். ஆஸ்தானப் பாடகர் ஒருவர் இனிமையான குரலில் தாலாட்டுப் பாடுகிறார். சுவாமியைத் தூங்கச் செய்து வைக்கத் தொட்டிலை ஆட்டுகிறார். ஆலயம் எங்கும் அமைதி காக்கப்படுகிறது. இறுதியில் சங்கநாதம் முழங்க அன்றைய பூஜைகள் நிறைவு பெறுகின்றன.
இப்படியாக, உடுப்பி ஸ்ரீபாலகிருஷ்ணனுக்கு தினந்தோறும் நவ பூஜைகள் எனப்படும் ஒன்பது வகை பூஜைகள் முறை மாறாமல் இன்றும் நடைபெற்று வருகின்றன.

Comments