குழந்தைப் பேறு அருளும் கைலாசநாதர்

திருச்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று, மலைக்கோட்டை, இங்குள்ள தாயுமானவர் கோயிலைச் சுற்றி நாகநாதர், பூலோகநாதர், காசி விஸ்வநாதர், வெளிகண்டநாதர், கைலாசநாதர் என ஐந்து நாதர் ஆலயங்கள் உள்ளன.இதில், ஊரில் நடுநாயகமாய், அமைந்துள்ளது, சுமார் எண்ணூறு ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் ஆலயம்.கிழக்கு நோக்கியுள்ள ஆலத்தின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம், நந்தி, பலிபீடம், அர்த்த மண்டபம் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் கைலாசநாதர் லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கிறார்.இறைவன் சன்னதியின் இடதுபுறம் அன்னை கமலாம்பிகை மேல் இருகரங்களில் கமலம் மலர்களைத் தாங்கி, கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.அடுத்து நவகிரக சன்னதி, சூரியனை அபிமுகமாகக் கொண்டு அமையப் பெற்றதும், சூரியனும், சனியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைந்திருப்பதும் சிறப்பு. இறைவன், இறைவி சன்னதிக்கு நடுவே சனிபகவான் சன்னதி உள்ளது.பக்தர்கள் வலம் வரும் போது இறைவன், இறைவி, சனிபகவான் நவநாயகர்கள் என நான்கு சன்னதிகளையும் சேர்த்துதான் வலம் வர இயலும். இந்த அமைப்பு மிகவும் அபூர்வமானது என்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஆயலத்தை சனிபகவான் ஆலயம் என்றே பக்தர்கள் அழைத்து வந்துள்ளனர். அந்த அளவுக்கு இங்குள்ள சனிபகவானுக்கு வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அங்கு செல்ல இயலாதபோது, இந்த சனிபகவானிடம் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்கின்றனர். சனிப்பெயர்ச்சி நாட்களில் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.இங்கு இறைவியின் அருகே மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதும் ஓர் அபூர்வ அமைப்பே.தினசரி நான்கு கால ஆராதனைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.திருச்சுற்றில் நால்வர், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நாகர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சனேயர், சூரியன், பைரவரும், தேவகோட்டத்தில் தட்சிணாமூர்ததி, நாகர், மங்கல துர்க்கை ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி நான்கு ரிஷிகளுடன் அமையப் பெற்றுள்ளார்.இங்குள்ள காசி விஸ்வநாதரை காசிக்கு நிகராகவே பக்தர்கள் போற்றுகின்றனர். தங்கள் கரங்களாலேயே தீர்த்தம், பால் போன்றவற்றால் விஸ்வநாதருக்கும் விசாலாட்சிக்கும் அபிஷேகம் செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். அதேபோல் பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் வடைமாலை, வெற்றிலை மாலையுடன் வெண்ணெய் சாத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.இத்தல துர்க்கை மங்கல ர்க்கை இருகரங்களில் கமலத்துடன் அருள்பாலிக்கிறாள். வௌ்ளிக்கிழமை ராகு காலபூஜையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. சண்டிகேஸ்வரர் பாதத்தில் தாமரை மலருடன் அமர்ந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.ஆடி மாதம் மூன்றாவத திங்கள் அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் ருத்ராபிஷேகமும், யாகமும் நடைபெறுகிறது. அன்று இறைவனுக்கு நடைபெறும் விபூதி அபிஷேகம் மிகவும் சிறப்பானது. அந்த அபிஷேக விபூதியே ஆண்டு முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. தைப்பூசத்தன்று இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுடன், காவிரி நதியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் 108 பெண்கள் நடத்தும் குத்துவிளக்கு பூஜை காணவேண்டிய ஒன்று.பிராகாரத்தின் வட கிழக்கு மூலையில் அமைந்திருக்கும் இறைவன் - இறைவி பள்ளியறையில் இரவு அர்த்தஜாம பூஜையின் போது மகப்பேறு வேண்டியும் திருணம் விரைந்து நடக்க வேண்டியும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. பிரார்த்தனை முடிந்து வழங்கப்படும் பால் பிரசாதம் உண்டவர்களுக்க அவர்கள் வேண்டுதல் விரைந்து பலிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.எங்கே இருக்கு: திருச்சி பெரியகடைவீதியில் நடுநாயகமாய் அமைந்துள்ளது இந்தக் கோயில், மலைக்கோட்டைக்கு அருகிலேயே உள்ளது.தரிசன நேரம்: காலை 7-11; மாலை 5-9

Comments