திருப்பணிக்குக் காத்திருக்கும் அகத்தீஸ்வரர் ஆலயம்!

‘எந்நாட்டவர்க்கும் இறைவனாம் நம் ஐயன் சிவபெருமான், தென்னாடுடையவர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர் யார் தெரியுமா? சிவபெருமானுக்கும் மற்றுமுள்ள தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமாக சிவபெருமானால் நமக்கெல்லாம் அடையாளம் காட்டப்பெற்ற மாமுனிவர் அகத்தியர்தான்.  
அதற்குக் காரணமாக அமைந்தது கயிலையில் நடைபெற்ற            சிவ - பார்வதி திருமணம்தான். சிவ சக்தியரின் திருமணம் காண அனைவரும் வட திசையில் குவிந்துவிட்டதால், சமநிலை தவறிய பூமியைச் சமன்படுத்தவும், தமிழ்வளர்த்துப் பண்படுத்தவும் சிவபெருமானால் தென் திசைக்கு அனுப்பப்பட்ட அகத்தியர்தான், தென்னாடெங்கும் சிவபெருமானின் சாந்நித்யம் நிலைபெற்றிருக்கும் வகையில், பல இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.   
அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் எல்லாம் ஐயன் அகத்தீஸ்வரர் என்னும் திருப்பெயருடனே அருட்காட்சி தருகிறார். அகத்தியரின் சீடர்களும் பல இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அந்தத் தலங்களிலும் ஐயன் அகத்தீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்று அருள்வதாகவும் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது. அந்தவகையில் வந்தவாசிக்கு அருகில் உள்ள உளுந்தை என்னும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு அகத்தீஸ்வரரும், அகத்தியராலோ அல்லது அவர்தம் சீடர்களில் ஒருவராலோ பிரதிஷ்டை செய்யப்பெற்று வழிபடப் பெற்றிருப்பார் என்று நம்பப்படுகிறது. சுகநதி என்னும் ஆற்றின் கரையில்,  எழில்பூமியாகத் திகழும் உளுந்தையின் மேற்கு திசையில் பெருமாள் கோயில் அமைந்திருக்க, வடகிழக்கில் அமைந்திருக்கிறது  ஐயன் அகத்தீஸ்வரர் திருக்கோயில்.    
இப்போதிருக்கும் கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (1178-1218) கட்டப்பட்டதாகத் தெரியவருகிறது. மேலும் இங்குள்ள கல்வெட்டுகளில் இருந்து கோயிலை நிர்வகித்து வந்த ‘அரசு பட்டன்’ என்ற சிவாச்சார்யர் பற்றியும், கோயில்களில் தீபம் ஏற்ற பலர் அளித்த கொடைகளைப் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக மிகவும் சிறப்புடன் விளங்கி, நித்திய கால பூஜைகள் தவறாமல் நடைபெற்றுவந்த இந்தக் கோயிலின் இன்றைய நிலையைக் காணும்போது, மனம் வெடித்துச் சிதறும்படி பல இடங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. திருக்கோயில் விரைவிலேயே புதுப்பொலிவு பெற வேண்டும் என்று கண்ணீர் கசிந்துருக பிரார்த்தித்தபடி ஐயனின் ஆலயத்துக்குள் செல்கிறோம்.    
மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து சென்றால், ஐயனின் கருவறையை அடையலாம். கருவறையில் அருள்மிகு அகத்தீஸ்வரர் சற்றே பெரிய லிங்க வடிவத்தில் திருக்காட்சித் தருகிறார். மகா மண்டபத்தில் தெற்குப் பார்த்த சந்நிதியில் அம்பிகை அகிலாண்டேஸ்வரி மேலிரு திருக்கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தி, கீழிரு திருக்கரங்களில் அபய வரத ஹஸ்தம் காட்டி, எழிலார்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். மகா மண்டபத்தின் கிழக்குப் பகுதியில் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் சுவாமிக்கும் நந்தி தேவருக்கும் இடையில் ஒரு சாளரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் ஏதேனும் ஒரு தெய்விகக் காரணம் இருக்கவே வேண்டும். மேலும், இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், பைரவர் ஆகியோரின் திருவுருவங்கள் சரியான பராமரிப்பின்றி இருப்பதைக்கண்டு துடித்துப்போனோம்.  
உடன்வந்த கிருஷ்ணன் ஐயரிடம், ‘`எத்தனை வருடமாகக் கோயில் இப்படி இருக்கிறது?’’ என்று கேட்டோம்.  ‘`பல வருஷமாவே கோயில் இந்த நிலைமையில, ஒருவேளை வழிபாடுகூட இல்லாம இருந்திருக்கு. 1956-ம் வருஷத்துல ஒருநாள் என்னோட பெரியப்பா எஸ்.வெங்கட்ராம ஐயர்தான் மாடு மேய்க்கும் சிறுவன் மூலமா இந்தக் கோயிலைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டார். உடனே செடி கொடிகளை அப்புறப்படுத்தி, கோயிலோட இடத்தைச் சுத்தப்படுத்தினார். பிறகு காஞ்சி மகா பெரியவரைத் தரிசிச்சப்ப, இந்தக் கோயிலைப் பத்தி சொல்லியிருக்கார். மகா பெரியவா உத்தரவுப்படி உடனே திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்தார்.   
அதற்குப் பிறகு காஞ்சி மகா பெரியவா இந்தத் தலத்துக்கு வந்து சுமார் 15 நாள்களுக்கும் மேலாக தங்கியிருந்து பூஜைகள் செய்திருக்கிறதா சொல்றாங்க. அதற்குப்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவே இல்லை. அதனால் கோயிலும் கொஞ்சம்கொஞ்சமா சிதிலமடைய தொடங்கிடுத்து. 60 வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான், கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செஞ்சிருக்கோம். சீக்கிரமே கோயில் திருப்பணிகளை நல்லபடியா முடித்து, கும்பாபிஷேகம் செய்யணும்னுதான் நாங்க விரும்பறோம். அகத்தீஸ்வரர்தான் பக்கபலமா இருக்கணும்'’ என்றார். 
நம்முடைய முன்னோர்கள் திருப்பணிகள் செய்வித்ததும், நித்திய பூஜைகள் தடையின்றி நடைபெறச்செய்து, தெய்வ சாந்நித்யம் நிலைத்திருக்கச்செய்த திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் விரைவிலேயே புதுப்பொலிவு பெற்று, அங்கே நாளும் நித்திய பூஜைகள் முறைப்படி நடைபெற வேண்டும்; அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஐயன் அருள்மிகு அகத்தீஸ்வரரின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஊர் மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேற வேண்டும். அதற்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வது நம்முடைய கடமை மட்டுமல்ல; தமிழ் வளர்த்து பூமியைப் பண்படுத்த அகத்தியரை தென் திசைக்கு அனுப்பிய கயிலை நாயகனுக்கு நாம்பட்டிருக்கும் நன்றிக்கடனும்கூட. எனவே திருக்கோயில் திருப்பணிக்கு இயன்ற அளவு பொருளுதவி செய்து, ‘விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனும், மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானும், தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானும்’ ஆகிய சிவ பரம்பொருள் நம்மையும் நம் சந்ததியினரையும் வாழ்வாங்கு  வாழ்ந்திட அருள்செய்யும் என்பது உறுதி. 

உங்கள் கவனத்துக்கு...
தலத்தின் பெயர்:
உளுந்தை

சுவாமி: அகத்தீஸ்வரர்

அம்பாள்: அகிலாண்டேஸ்வரி

எப்படிச் செல்வது..?

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சோத்துப்பாக்கம் (மேல்மருவத்தூர்) - வந்தவாசி சாலையில், சாலவேடு என்ற கிராமத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு:
கிருஷ்ணன் ஐயர் (9443227217) 

Comments