சகல தோஷமும் போக்கும் சிங்கிரிகுடி நரசிம்மர் கோவில்

உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
சகல தோஷமும் போக்கும் சிங்கிரிகுடி நரசிம்மர் கோவில்
மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் 4-வது அவதாரம்தான் நரசிங்கரின் தோற்றம். இரண்யகசிபு, தான் அரசன் மட்டுமல்ல அனைத்துலகத்துக்கும் இறைவன் என்று மக்கள் அனைவரையும் தன் நாமத்தை உச்சரிக்கும்படி வற்புறுத்தினான். ஆனால் அவனது மகனான பிரகலாதனோ ‘நாராயணரே கடவுள்’ என்று அவரது நாமத்தையே உச்சரித்து வந்தான். இதனால் தந்தையாலேயே பல இன்னல்களுக்கு ஆளானான் பிரகலாதன். ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலை வரும்போதும், அவனை நாராயணர் காத்து அருள்புரிந்தார்.

ஒரு கட்டத்தில் ‘நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறான்?’ என்று மகன் பிரகாலதனைப் பார்த்து கேட்டான் இரண்யகசிபு.

அதற்கு பிரகலாதன், ‘அவர் எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்றான்.

உடனே இரண்யகசிபு, ‘இந்த தூணில் இருக்கிறானா?’ என்றபடி அருகில் இருந்த தூணை உடைக்க, அதில் இருந்து சிங்க முகமும், மனித உடலுமாக நரசிங்க அவதாரத்தில் திருமால் கர்ஜித்தபடி வெளியே வந்தார். பின்னர் தன்னுடைய கூரிய நகங்களைக் கொண்டு இரண்யகசிபுவை வதம் செய்தார் என்கிறது புராணம்.

உக்கிர நரசிம்மர் :


இரண்யகசிபுவை வதம் செய்தது போலவே, உக்கிர தோற்றத்தில் இறைவன் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர தோற்றத்தில் நரசிம்மர் மேற்கு திசை பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அவர் வீற்றிருக்கும் கருவறை விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் இரண்யகசிபுவின் உடலை கிழித்த படியும், மற்ற கரங்களில் பதாககிஸ்தம், ப்ரயோக சக்கரம், ஷீரிகா எனும் குத்துக்கத்தி, காணம், ராட்சசனின் தலையை அறுத்தல், கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், இரண்யனின் காலை அழுத்தி பிடித்தல், சங்கம், வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது என்று காட்சி தருகிறார்.

மூலவருக்கு கீழே இடது புறம் சுக்ரர், வசிஷ்டர், பிரகலாதன், நீலாவதி ஆகியோர் உள்ளனர். இங்கே இருக்கும் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். அவரது பெயராலேயே இத்திருக் கோவில் விளங்குகிறது.

இந்த ஆலயம் ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு 10-ம் நூற்றாண்டில் ராஜராஜசோழன், 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயரால் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு இந்தக் கோவில் விளங்குவதால், திருமணம் கைகூடும், வேலைவாய்ப்பு கடன் நிவர்த்தி உண்டாகும். பில்லி சூனியம் அண்டாது என்று கூறுகிறார்கள். நவக்கிரக பரிகாரம் போன்ற பிரார்த்தனைகள் நல்ல பலனைக் கொடுப்பதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.



ஆலய அமைப்பு :

மேற்கு திசை நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் இருக்கிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் இடது புறம் வேப்பமரத்தடியில் சிறிய துர்க்கை கோவிலும், வலதுபுறம் நாகர் கோவிலும் இருக்கின்றன. அதனை ஒட்டி கோவில் தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. அதைக் கடந்தால் கிழக்கு நோக்கியவாறு நெற்றியில் நாமமிட்டவாறு, விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். அவருக்குத் தோப்புகரணம் போட்டுவிட்டு உள்ளே சென்றால், பலி பீடமும், கொடி மரமும் நம்மை வரவேற்கின்றன. அதை அடுத்தாற்போல் கருங்கல் தூண்களோடு கூடிய பழங்கால மண்டபத்தில் பெரிய திருவடி என்ற பெயர் கொண்ட கருடாழ்வார் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் வடக்கு வெளிச் சுற்றில் ஆண்டாள் நாச்சியாருக்கு தனிச்சன்னிதியும், தெற்குச் சுற்றில் கிழக்கு பார்த்தவாறு தல நாயகியான கனகவல்லித் தாயாரின் சன்னிதியும் உள்ளன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு தாயார் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தாயார் சன்னிதியை அடுத்து தெற்கு நோக்கிய சிறிய சன்னிதியில், சீதா, லட்சு மணர், ஆஞ்சநேயர் சூழ இருக்கும் ராமபிரானின் ஐம்பொன் திருமேனியை தரிசிக்கலாம். இந்த சன்னிதியின் எதிரே வில்வமரம் ஒன்று தல விருட்சமாக இருப்பது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

பிரகாரத்தின் வடமேற்கு மூலையின் ஓரிடத்தில் நின்றால் சுவாமி, தாயார், ஆண்டாள், கருடாழ்வார், ராஜகோபுரம், கருவறை விமானங்கள் மற்றும் கொடிமரத்தை ஒருசேர தரிசிக்க முடியும். பொதுவாக நரசிம்ம மூர்த்தியின் தோற்றம் சிங்கமுகத்தோடு இருப்பதால், பார்ப்பவர்களுக்கு அச்ச உணர்வு தோன்றலாம். ஆனால் அவர் பக்தர்களுக்கு கருணையை வாரி வழங்குபவர்.

அசுர வதம் முடிந்ததும் உக்கிரமான கோபத்துடன் அக்னி போன்று இருந்த சுவாமியை அனுகுவதற்கு தேவர்களும், முனிவர்களும் பயந்தனர். ஏன்... மகாலட்சுமியே கூட அவரது அருகில் செல்லத் தயங்கினாள். ஆனால் கும்பிட்ட கரங்களுடன் தன்னைத் தொழுது நிற்கும் பக்த பிரகலாதனை வாரி அணைத்து மடியில் வைத்துக் கொண்டார் நரசிம்மர் என்கிறது புராணக்கதை ஒன்று. அவர் அசுரர்களுக்குத்தான் உக்கிரமானவர், தன்னை வணங் கும் பக்தர்களுக்கு அல்ல என்பதையே அந்தக் கதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிங்கிரிகுடியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூவரசன் குப்பம், விழுப்புரம் - திருச்சி ரெயில் மற்றும் பஸ் மார்க்கம் அருகே உள்ள மடப்பட்டு, கெடிலம் கூட்ரோடுக்கு அருகில் உள்ள பரிக்கல் ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நரசிம்மர் ஆலயங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் சென்றால் தவளகுப்பம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ உள்ளே சென்றால் அபிஷேகபாக்கம் என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கேதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. பெயரிலேயே ‘சிங்கர்’ என்றிருப்பதால், நரசிங்கர் குடியிருக்கும் தலம் என்பது பொருத்தமானதாகவே அமைந்திருக்கிறது.

Comments