விரும்பிய பணி கிட்டச் செய்யும் தட்சிணாமூர்த்தி

தஞ்சை பூமியின் காவிரிக் கரை எங்கும் பிரமாண்டமான சிவாலயங்களை எழுப்பினர் சோழ மன்னர்கள். திருவாரூர் எல்லையில் பாயும் காவிரிக் கிளை நதியான ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆலயங்களும் ஒன்று சேஷபுரீஸ்வரர் ஆலயம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் கண்டதுதான் அதன் பின் காலப்போக்கில் சரியான பராமரிப்பு இன்றி, இன்று பரிதாப நிலையில் உள்ளது. ராஜகோபுரம் இல்லை. மொட்டை கோபுரமே உள்ளது. ஆனால், ஒரு காலத்தில் இதன் மீது பெரிய ராஜகோபுரம் இருந்ததாகவும் திருப்பணி வேண்டி, அந்த பழை கோபுரத்தை இடித்ததாகவும், ஏனோ இடையில் ஏற்பட்ட தடையால் மீண்டும் திருப்பணி தொடங்கப் படாமல் நின்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
போக்குவரத்து நிரம்பிய நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே அரை கி.மீ. தூரம் தள்ளி இருக்கிறது சிற்றாரான ராப்பட்டீஸ்வரம். சோழ மண்டலத் திருக்கோயில்களுக்கே உரிய கம்பீரத்தோடுதான் விளங்குகிறது சேஷ புரீ்ஸ்வரர் ஆலயம்.
நுழைவாயில் வானளாவி உள்ளது வாயிலைக் கடந்ததும் பலிபீடம் நந்தியை வணங்கிச் சென்றால் எதிரே லயத்தின் அடுத்த வாயில் வாயிலின் இருபுறமும் வழக்கமாக கணபதியும், சுப்பிரமணியமும் இருப்பார்கள். இங்கோ, விஷ்ணு துர்க்கைகள் உள்ளனர். அடுத்து பெரிய மண்டபம், இங்கு தெற்கு நோக்கிய சந்நதியில் அம்பிகை அந்தப்புர நாயகி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் அழகிய வடிவம்.
மண்டபத்தின் இடதுபுறம் சுப்பிரமணியர் மயில் மீது ஆரோகணித்து வீற்றுள்ளார். எழிலார்ந்த, பிரமாண்டமான சிற்பம். முருகனுக்குப் பக்கத்தில் வள்ளியும் தெய்வானையும்!
கருவறையில் மூலவர் சேஷபுரீஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.
இந்த ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப் பெரிய சிலாரூபம் கொண்டவர். வழக்கமாக தட்சிணாமூர்த்தி வெளிகோஷ்டத்தில்தான் தென்முகம் காட்டி அமர்ந்திருப்பார். இங்கோ, ஆயல மண்டபத்தின் உள்ளேயே அமர்ந்திருக்கிறார். முகத்தில் அருட் கடாட்சம் பொங்க, சற்றே புன்னகைக்கும் தோற்றத்தில் தட்சிணாமூர்த்தியைக் காணும்போது, இவரை வடித்த சிற்பியும், நம் நினைவில் தோன்றி நெஞ்சில் நிறைகிறார்.
இந்த தட்சிணாமூர்த்தி பெரிய வரப்பிரசாதி இந்த ஆலயத்து அம்பாளும், சுவாமியும் குழந்தைப்பேறு அருளும் மகிமை மிக்கவர்கள் என்றால், இந்த தட்சிணாமூர்த்தி உத்தியோக பாக்கியம் அருள்வதில் வல்லவர்.அதற்கென இவருக்கு ஒரு சிறப்பு வழிபாடு காலம் காலமாக நிலவுகிறது. அதாவது வியாழக் கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி இவரை வணங்கி, தங்கள் உத்தியோக பாக்கியம் சம்பந்தமாக பிரார்த்தித்து வழிபட வேண்டும். இப்படி நான்கு வியாழக்கிழமைகள் நெய் விளக்கு ஏற்றி, கடலைமாலை சாற்றி வழிபட்டால் அரசு மற்றும் விரும்பிய தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் 5ம் இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தாவம் என்பது புத்திர பாக்கியத்தையும் அவரது முற்பிறவியில் செய்துள்ள புண்ணியங்களையும் அதனால் இப்பிறவியில் அவர் அனுபவிக்க உள்ள இன்ப துன்பங்களையும் குறிப்பிடுவது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வாற ஒருவரது ஜாதகத்தில் ஐந்தாமிடமாகிய பூர்வ புண்ணிய ஸ்நானம் பாதிக்கப் பட்டிருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் அந்த தோஷம் அடியோடுநீங்கி, நல்வாழ்வு கிடைக்கப் பெறுவார்கள் என்று இத்தலத்து சிறப்பைக் கூறுகிறது தல புராணம்.
இந்த ஆலயத்தில் பைரவர் ரொம்ப விசேஷம் அஷ்டமி நாட்களில் இவருக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் உண்டு.
ஒரு சுற்றுப் பிராகாரம் கொண்ட ஆலயம் இதில் புல் மண்டிக் கிடப்பதோடு, சில தெய்வங்களும் சிலா ரூபங்களும் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன. விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஊர் மககள் ஒன்றுகூடி முயற்சி செய்து வருகின்றனர். இந்து அறநிலையத் துறையும் இதற்கு முயற்சி எடுத்துக் கொண்டால், கோயில் புதுப்பொலிவு பெற்று, சாந்நித்யம் மிக்கதாக விளங்குவது உறுதி.
எங்கே இருக்கு: திருவாரூர் - குடவாசல் நெடுஞ்சாலையில், திருவாரூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. மணக்கால் - ராப்பட்டீஸ்வரம்.

தரிசன நேரம் : காலை 9-12 மாலை 4-7

Comments