அரவம் தீண்டாத ஊர்

அரனின் அணிகலனாக விளங்கும் அரவம், தனக்கு வந்த இடரை நீக்கியதற்கு நன்றிக் கடனாக ஓர் ஊரில் எவரையும் தீண்டமாட்டேன் என்று வாக்குக் கொடுத்து, அதை இன்றளவும் நிறைவேற்றி வருகிறது. இந்தத் தலம், நாகமுகுந்தன்குடி.
அக்காலத்தில் வில்வவன க்ஷேத்திரமாகத் திகழ்ந்திருந்த இந்த வனப்பகுதியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. ஒருநாள் அங்கு வந்த வேடன் ஒருவன் வானரம் ஒன்றைப் பிடிக்க எண்ணினான். ஆனால் அது வேகமாகத் தாவிச் சென்று ஒரு வில்வ மரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டது. அதை எப்படியாவது பிடித்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மரத்தின் கீழ் காத்திருந்த வேடன், களைப்பின் மிகுதியால் கண்ணயர்ந்தான். இருந்தாலும் அவன் மேல் கொண்ட அச்சத்தால் வானரம் மரத்தை விட்டு கீழே இறங்காமல் வில்வ இலைகளை ஒவவொன்றாய்க் கீழே போட்டபடியே இருந்தது.
பொழுது விடிந்தவுடன் வேடன் அங்கிருந்து வெளியேறினான். பின்னர் கீழே இறங்கி வந்த வானரம், கீழே கிடந்த வில்வ இலைகளுக்கு மத்தியில் அற்புத ஒளியுடன் லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு அதை வழிபட, அங்கே இறைவன் தோன்றி, என்னை பூஜித்ததன் பலனாய் நீ மறுபிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாய் நாட்டை ஆள்வாய் என்று கூறி மறைந்தார்.
வானரம், முசுகுந்த சக்கரவர்த்தியாய் அவதரிக்கக் காரணமாக விளங்கிய தலம் முசுகுந்தன்குடி என அழைக்கப்பட்டு, பின்னர் நாக முகுந்தன் குடி என்றானது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமை கொண்ட இவ்வூரில் அருள்பாலிக்கும் இறைவன் நாகநாதர் என அழைக்கப்படுகிறார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் நடந்ததாக ஓர் அற்புத சம்பவம் சொல்லப்படுகிறது.
அப்போது தினமும் கோயில் வளாகத்திற்கு பெரிய நாகம் ஒன்று சர்வ சாதாரணமாக வருவதும் போவதுமாக இருந்து வந்தது. திடீரென சில நாட்கள் அந்த நாகம் யாருடைய கண்ணிலும் தென்படவில்லை. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் அந்தக் கோயில் அர்ச்சகர் கனவில் நாகம் தோன்றி, உடலெங்கும் இலந்தை முள் குத்தி நகர முடியாமல் கோயில் அருகேயுள்ள புதருக்குள் சுருண்டு கிடக்கிறேன். இரைதேடி அலையவும் முடியவில்லை. என்னை இந்த இக்கட்டிலிருந்து மீட்டுவிட்டால், இனி எக்காலத்திலும் உங்கள் ஊரில் யாரையும் அரவம் தீண்டாது இது சத்தியம் என்று சொல்லி மறைந்ததாம்.
மறுநாள் குறிப்பிட்ட அந்த புதரை அர்ச்சகர் விலக்கிப் பார்க்கும்போது, உள்ளே சோர்வாக நாகம் சுருண்டுக் கிடப்பதைக் கண்டார். உடனே அதன் உடலில் தைத்திருந்த முட்களை எடுத்துவிட, மீண்டும் அது சுதந்திரமாக அங்கிருந்து நகர்ந்து போனதாம். அன்று நாகம் கொடுத்த சத்தியப்படி இன்றுவரை நாகமுகுந்தன்குடியில் அரவம் எவரையும் தீண்டியதில்லையாம்.
நாகத்தின் அற்புதம் குறித்துச் சொல்லப்படும் மற்றொரு சம்பவமும் உள்ளத. ஒரு சமயம் இரவு நேரத்தில் இந்தக் கோயிலுக்குள் நுழைந்த திருடர்கள் பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு போய்விட்டார்களாம். மறுநாள் காலையில் பூஜை சாமான்கள் திருடுபோய் விட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், ஊர்ப் பெரியவரிடம் முறையிட்டார். பலரிடம் விசாரித்தும் இது குறித்த எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் கோயிலைத் திறந்த அர்ச்சகருக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.
ஆம்! திருடு போன பொருட்கள் எல்லாம் பத்திரமாக அங்கே திரும்பக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. கூடவே ஒரு கடிதமும்இருந்தது.
'நாகநாதர் கோயில் சாமான்களை களவாடிப் போன நாள் முதல் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை. இரவில் தூங்க ஆரம்பித்ததும் வீடு பூராவும் பாம்புகள் படையெடுத்து வந்து அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்து விடுவது போன்ற கனவுகள் வருகின்றன. சிவன் சொத்தை திருடிக் கொண்டு வந்ததால் தான் இந்த நிலை என்பதை நாங்கள் பரிபூரணமாக உணர்ந்து கொண்டோம். ஆகவே, கோயில் சாமான்களை பத்திரமாக திரும்பக் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டுச் செல்கிறோம்' என அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
ஊருக்கு வடகிழக்கே ஊருணிக் கரையில் மேற்குப் பார்த்த வண்ணம் உயரமான மதிற்சுவருடன் கோயில் அமைந்துள்ளது. பிரதான வாசல் தாண்டியதும் விஸ்தாரமான பிராகாரச் சுற்று காணப்படுகிறது. பலிபீடம், நந்தியைத் தொடர்ந்து மகா மண்டபத்தின் முகப்பில் சாளக்கோபுரமும் அர்த்த மண்டபம், கருவறை ஆகியவையும் அற்புதமான வேலைப்பாடுடன் உருவாக்கப் பட்டுள்ளதைக் காணலாம். அர்த்த மண்டப வாசல் வடபுறம் உள்ள தூணில் ஆதியில் வில்வ வனத்தில் எழுந்தருளி காட்சி தந்த லிங்கேஸ்வர மூர்த்தியை முசுகுந்தன் வானரவடிவில் பூஜை செய்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
கருவறை மூலவராக நாகநாதர் லிங்க வடிவில் எழுநதருளியுள்ளார். பெயரில் நாகம் இருப்பதால் இவரை வணங்கினால் நாகதோஜம் நீங்கும் என்பது நம்பிக்கை சுவாமி சந்நதியின் வடபுறம் தீர்த்தக் கிணறு உள்ளது. தலவிருட்சமான மாவிலங்கை பிராகாரச் சுற்றில் செழித்தோங்கி நிற்கிறது.
சௌந்தர நாயகி அம்பாள் தனிசந்நதியில், பெயருக்கு ஏற்றவாறு அழகு ரூபிணியாக தரிசனம் தருகிறாள். மகா மண்டபம் அர்த்த மண்டபம் கருவறை என அம்பாள் சந்நதி கலைநயத்துடன் விளங்குகிறது. பிராகாரச் சுற்றில் கன்னி மூலை கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் சந்நதிகள் அமைந்துள்ளன.
ஆலயம் பிற்காலப் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், அதாவது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்து முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
அன்றாடம் இரண்டு வேளை பூஜை நடத்தப்படுகிறது. சித்திரை தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி வௌ்ளிக் கிழமைகளில் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் குத்து விளக்கு வழிபாடு, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தனுர்மாத சிறப்பு பூஜை, தைப்பொங்கல், சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை வருடப் பிறப்பு, பிரதோஷம் ஆகியவை இங்கு விமர்சையாகக் கொண்டடப்படுகிறது.
நாகதோஷம் உள்ளவர்கள் மட்டுமன்றி வாழ்வில் சந்தோஷம் நிலவவேண்டும் என விரும்பும் எல்லோருமே ஒருமுறை நாகமுகுந்தன்குடி சென்று நாகநாதரை வழிபட்டு வரலாமே!
எங்கே இருக்கு: சிவகங்கை - இளையான்குடி நெடுஞ்சாலையில், புதுக்குளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்து சென்றால் நாகமுகுந்தன் குடியை அடையலாம்.

தரிசன நேரம்: காலை 8.30 - 12.30 மாலை 4.30 - 8.00

Comments