குலை வாழை எடை குறைந்த அதிசயம்!

பரசுராம க்ஷேத்ரமான கேரளாவில் ராமபிரானுக்கு அமைந்த நான்கு கோயில்களுள் தனிச்சிறப்பானது, தலைச்சேரி, திருவெண்காடு ஸ்ரீராமசுவாமி திருக்கோயில்.
பரசுராமரால் அர்ப்பணம் செய்யப்பட்ட இத்திருத்தலம், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது.
ஒரு சமயம் அகத்திய முனிவர், வழக்கமான ஆசார, அனுஷ்டானங்களைச் செய்ய காவிரியை நோக்கி வந்த போது நீலன், சுவேதன் என்னும் இரு அரக்கர்கள் வழி மறிக்க, அவரகளை அகத்தியர் சபித்தார். தவறை உண்ரந்த அவரகள் சாப விமோசனம் வேண்ட, சிவனை வேண்டித் தவமிருந்தால் சாப விமோசனம் கிட்டம் என்றார். அப்படியே தவமிருந்து சிவசீலர்களான அவர்கள், இருவரும், நீலரிஷி, சுவேதரிஷி எனப்பட்டனர்.
நீலரிஷி தவமிருந்த இடம், நீலேஸ்வரம், சுவேதரிஷி தவமிருந்த இடம் சுவேதாரண்யம் என்கிற பெயரை பெற்றன. சுவேதாரண்யம் தமிழில் திருவெண்காடு என்றழைக்கப் பெற்றது.
ஹரியும் சிவனும் ஒன்றென உணர்ந்த சுவேதரிஷி அவ்விடத்தில் ஓர் ஆலயத்தை நிறுவி அங்கே ஸ்ரீராமபிரானின சிலையை பிரதிஷ்டை செய்தார். கோயிலில் ராமருக்கு இடதுபுறத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.
போர்க்களி தேவி நமஸ்கார மண்டபத்திலும், மேற்கில் சுப்ரமணியர், தெற்கே மகா கணபதி, தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உள்ளனர்.
நெய்யமிர்தம், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, மாலை ஆகிய வழிபாடுகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன. அவல், சர்க்கரை, வாழைப்பழம் தேங்காய் துருவல் கலவை வைத்த அரிசி போன்றவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் விஷூ மகோத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏழு நாளத்து பெருமாள் என்னும் சிறப்புடன் யானைகள் அணிவகுத்து வர, அலங்கரிக்கப்பட்ட குடைகள், அரசு சின்னங்கள் வில் அம்பு ஏந்திய காலாட்படை, கத்தி, கேடயம், கொடிகள், பஞ்ச வாத்தியம், பாண்டி மேளம் முழங்க, ராமர் பவனி வரும் காட்சி அற்புதமானது. மகர (தை) மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளன்று கொண்டாடப்படும் பட்டதானம் விழாவும் குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை இப்பகுதியில் சப் கலெக்டராக இருந்த ஹார்வி-பாபர் என்னும் ஆங்கிலேயர் இக்கோயில் வழியே தன் குதிரையில் சென்று கொண்டிருந்தார். கோயில் வளாகத்தினுள் குதிரை மேல் செல்வது கூடாது என்று கோயில் ஊழியர்கள் கூறினர். அதையும் பொருட்படுத்தாமல் பிராகாரத்தை அவர் சுற்றி வர முயல திடீரென குதிரை முரண்டு பிடித்து அவரை கீழே தள்ளியது. சில நாட்கள் கழித்து மறுபடியும் ஏனோ தெய்வத்தை சீண்டிப்பார்க்கும் ஆசை அவனுக்கு ஏற்பட்டது.
அந்நேரம் கோயிலுக்குள் பெரிய வாழைப்பழக் குலையை எடுத்துச் சென்ற குருக்களை இடைமறித்து 'இத்தனை பெரிய வாழைக்குலையை உங்கள் சாமி ஒரே மூச்சில் தின்றுவிடுமோ?'என்று கிண்டலாகக் கேட்டான்.
'எங்கள் கடவுள் எளிதாக இதைச் சாப்பிட்டு விடுவார்' என்று குருக்கள் சொல்ல, அந்த ஆங்கிலேயன், 'ஓ அப்படியா, எங்கே உங்கள் கடவுளின் சக்தியை சோதித்து விடுகிறேன்' என்று கூறி, அந்தப் பழக் குலையைத் தராசில் வைத்த நிறுக்கச் சொன்னான்.பின்னர், 'உங்கள் சாமி இந்தப் பழங்களைத் தின்றதற்கு அடையாளமாக நைவேத்யம் செய்து முடித்த பின்னர் பழங்களின் எண்ணிக்கையோ அல்லது எடையோ குறைந்திருக்க வேண்டும்' என்றான். கோயில் தரப்பில் இந்த சவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நைவேத்யம் முடிந்ததும் வாழைப்பழம் குலை வெளியே வந்ததும், மறுபடியும் வாழைப்பழக்குலையை தராசில் வைத்து எடைபோட பழக்குலையின் எடை பாதிக்க பாதியாகக் குறைந்திருந்தது.
மிகவும் பயபக்தியுடன் தன் சிறுமையை ஒப்புக் கொண்ட ஆங்கிலேயன், தன் செலவிலேயே அக்கோயிலின் மிகப் பெரிய வெளிப்பிராகாரச் சுவரைக் கட்டிக் கொடுத்திருக்கிறான்.
கோயிலுக்க வரும் பக்தர்கள் பயபக்தியுடன் குளித்துவிட்டு மூன்று முறை வலம் வந்து கைநிறைய நவதானியங்களை திருக்குளத்தில் இட்டால், தலைக்காவேரியில் நீராடிய பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இத்திருக்கோயிலில் வருடாந்திர திருவிழா மேஷ மாதம் (சித்திரை) விஷு நாளன்று தொடங்குகிறது. தமிழ் மாதமான சித்திரையை மலையாளத்தில் மேஷமாசம் என்று கூறுவார்கள். வருடாந்திர திருவிழா காலத்தில் சாக்கையர் கூத்து மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

எங்கே இருக்கு: கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து 23 கி.மீ. தொலவில் தலைச்சேரியில் திருவெண்காடு ஸ்ரீராமசுவாமி ஆலயம் அமைந்துள்ளது.

Comments