குடும்பத்தில் ஒற்றுமை நிலவச் செய்யும் லட்சுமி நாராயணர்

பூத்துக் குலுங்கும் வேப்பம் பூக்கள் அந்த ஆலயத்தின் மேல் விழுவதைப் பார்க்கும் பொழுது உள்ளே சேவை சாதிக்கும் லட்சுமி நாராயணப் பெருமாளை வேம்பும் ஆராதிப்பது போலவே தோன்றுகிறது.
அந்தக் காட்சி நாம் கண்ட தலம், வேம்பத்தி நத்தக்காடு.
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல், பழமை வாய்ந்த இந்த லட்சுமி நாராயணர் ஆலயம் எப்போது யாரால் எழுப்பப்பட்டது என்ற விவரம் எதுவும் இல்லை. கோயிலில் உள்ளேயும் வெளியேயும் ஒன்றிரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
கிழக்கு நோக்கிய கோயிலுக்கு முன் நெடிய தீபஸ்தம்பம் உள்ளது.ஆயலத்துக்குள் நுழையும் முன் தனிச் சன்னதியில் அருளும் விநாயகரை வணங்கிவிட்டு வசந்த மண்டபத்தினுள் சென்றால் பலிபீடமும் தொடர்ந்து மகா மண்டபத்தின் இடதுபுறம் நாகரும், வலதுபுறம் வீர ஆஞ்சநேயரும் அர்த்தமண்டபத்தில் சிறு தெய்வங்களும் தரிசனம் தருகிறார்கள்.
கருவறையில் பெருமாள் வலது காலை தொங்கிவிட்டு, இடது காலை மடித்து, தனது இடதுபக்கம் லட்சுமி தாயாரை மடியில் வைத்து, தனது மேல் இரு கைகளில் சங்கு சக்கரம் இரண்டையும் தாங்கியும், கீழ் வலது கையை அபயம் அளிக்கும் வண்ணமும், கீழ் இடது கையால் லட்சுமி தாயாரை அணைத்த கோலத்திலும் லட்சுமி தாயார் தனது இடது கையில் தாமரை மலரை ஏந்தி, வலது கையால் பெருமாளை அணைத்த கோலத்திலும் காட்சி தருகிறார்கள். இந்த அமைப்பு ஒரு சில தலங்களில் மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.
இந்த லட்சுமி நாராயணப் பெருமாளை சேவித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தம்பதிகளுக்கிடையே உள்ள சுணக்கம் நீங்கும். திருமணத் தடையுள்ளவர்கள் தொடர்ந்து பதினொரு வாரம் சனிக்கிழமைகளில் இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும் நம்பிக்கை.
இத்தலத்தில் நடந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இங்க வழிபடப்படடு வந்த விநாயகப் பெருமான் சிலையை யாரோ களவாடிச் சென்றுவிட்டனராம். பின்னர், தவறையுணர்ந்து இரண்டாண்டுகள் கழித்த மீண்டும் அந்தச் சிலையை இந்தக் கோயில் முன் கொண்டு வந்து வைத்துவிட்டனராம். ஆதலால் தவறு செய்பவர்களையும், தீய எண்ணம் உள்ளவர்களையும் இங்குள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருத்தி விடுவார் என பக்தர்கள் கூறுகின்றனர். தவறான சிந்தனை உள்ளவர்கள். தீயபழக்கங்களுக்கு அடிமையானவர்கள் இத்தல விநாயகரை வழிபட்டு, லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நல்வழியில் செல்வர் என்பது நம்பிக்கை.
தினந்தோறும் ஒரு கால பூஜை நடக்கிறது. சனிக்கிழமைகளில் காலை 9 மணிக்க மேல சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அட்சய திருதியை அன்றும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மிகவும் விசேஷம். அந்நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள வீர ஆஞ்சநேயருக்கு விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. ஆனி மாதம் சித்தரை நட்சத்திர நாளில் மஹா சுதர்சன யாகம் வெகுவிமர்சையாக நடக்கிறது. இதில் கலந்து கொண்டு லட்சுமி நாராயணப் பெருமாளை சேவித்தால் தொழிலும் குடும்பமும் விருத்தியடையும்.துஷ்ட சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. வாழ்வில் வளம் பெற நீஙகளும் குடும்பத்தோடு வந்து இந்த லட்சுமி நாராயணப் பெருமாளை வழிபட்டுச் செல்லுங்களேன்.
எங்கே இருக்கு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் - ஆப்பக்கூடல் வழித்தட பேருந்தில் ஏறி நந்தக்காட்டுப் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அரை கி.மீ. தூரம் நடந்தால் கோயிலை அடையலாம். அந்தியூரிலிருந்து ஆட்டோ, கால் டாக்சி வசதி உள்ளது.

தரிசன நேரம்: காலை 9-10.30; சனிக்கிழமைகளில் காலை 9-12; புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 8.30-4

Comments