சாளக்ராமத்தில் ஆவிர்பவித்த பெருமாள்!

சேய்ஞலூர் - பல சிறப்புகளை தன்னுள் அடக்கிய சிற்றூர். முருகப்பெருமான் தனது தந்தைக்கே குருவாகி பிரணவ மந்திரத்தை உபதேசித்தார். தந்தையை கை கட்டி, வாய் பொத்தி, பாடம் கேட்க வாத்த பாவம் தீர ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, இறைவனை பிரதிஷ்டை செய்து வணங்கிய ஊராகையால் சே (முருகன்) நல்லூர் என்று அழைக்கப் பட்டு இன்று, ‘சேங்கனூர்’ என்று திரிந்துள்ளது. ஒரு சமயம், வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, ஆதிசேஷன் மேரு மலையை தனது உடலால் இறுகப் பிடித்து கொள்ள, வாய்யு சூறைக் காற்றை சுற்றி அடிக்க வைக்க, மேரு மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்தது. அது சத்தியகிரி என்று அழைக்கப் பட்டது. அதன் மேல் முருகன் சிவனாரை பிரதிஷ்டை செய்ததால் ஈசன், ‘சத்யகிரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுமட்டுமல்ல, வைஷ்ணவர்களின் ஆதார நூலாக விளங்கும் ஆழ்வார்களால் பாடப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை பிறந்த ஊராகும். யாமுனசூரி - நாச்சியாரம் மாள் தம்பதியினரின் மகனாக வைணவ பிராமண குடும்பத்தில் அவதரித்தார் பெரியவாச்சான் பிள்ளை. இவர் பெற்றோர் இவருக்கு ஸ்ரீ கிருஷ்ண சூரி என்று பெயரிட்டு அழைத்தனர். சிறு வயது முதலே கல்வி, கேள்விகளில் மட்டுமல்லாமல், இறை உணர்விலும் வழிபாட்டிலும் சிறந்து விளங்கினார் கிருஷ்ண சூரி. பெற்றோர் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அவருக்கோ மண வாழ்வில் நாட்ட மில்லை. மனம் எப்பொழுதும் திருமலையானையே நாடியது. பெற்றோர் அவரையும் அவர் மனைவியையும் திருமலை யாத்திரைக்கு அனுப்பிவைத்தனர்.
திருமலைக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்ட பெரியவாச்சான் பிள்ளை, அங்கேயே இருந்து விட எண்ணினார். ஏழுமலையானை விட்டுப் பிரியமனமே இல்லை அவருக்கு. ஆனால், அவர் தாய், தந்தையருக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவருக்கு நினைவூட்டிய இறைவன், ஒரு பிரம்மச்சாரியின் வடிவில் தோன்றி, அவரை ஊருக்குத் திரும்பப் பணித்தார். ஆனால், பெரியவாச்சான் பிள்ளையோ, சம்சாரம் ஒரு நோய் என்றும் தாம் அதிலிருந்து விடுபட்டு இறைவனை நாட விரும்புவ தாகவும் கூறினார். அந்த பிரம்மச் சாரி ஒரு சாளக்ராமத்தை அவரிடம் கொடுத்து, இது ஸ்ரீநிவாச பெருமாள். இதை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பு" என்றார். இதில் உருவ மில்லையே" என்று பிள்ளை கேட்க, உனக்கு பக்தி இருந்தால் இதில் இறைவன் ஆவிர்பவிப்பார்" என்று கூறினார்.
சாளக்ராமத்தைப் பெற்றுக் கொண்ட பெரியவாச்சான் பிள்ளை மனமின்றி திருமலையை நீங்கினார். சேங்கனூர் அடைந்ததும், கொள்ளிடம் ஆற்றங்கரையில் கணவனும் மனைவியும் நீராடினர். அப்போது ஆற்றங்கரையில் வைத்திருந்த சாளக்ராமம் காணாமல் போய் விட்டது. இதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார் பெரிய வாச்சான் பிள்ளை. பக்தி இருந்தால் இறைவன் ஆவிர்பவிப்பார் என்று பிரம்மச்சாரி கூறினாரே, எனக்கு பக்தியே இல்லை போலும். அதனால்தான் சாளக்ராமம் என்னை விட்டுப் பிரிந்து விட்டது" என்று எண்ணி அரற்றினார். இவ்வாறே நாட்கள் கழிந்தன. அப்போது இறைவன் அவர் கனவிலே தோன்றி, நீ சாளக்ராமத்தை தொலைத்த இடத்தில் நான் தோன்றி உள்ளேன்" எனக் கூறினார்.
உடனே, பெரியவாச்சான் பிள்ளை பேருவகையுடன் ஆற்றங்கரைக்குச் சென்று மணலில் இறைவனை தேடினார். ஓரிடத்தில் இறைவனின் முகம் அவருக்கு தென்பட்டது. உடனே அங்கு ஆழமாகத் தோண்ட, ஸ்ரீனிவாசபெருமாள் முழு உருவமாக அங்கு மணலிலே காட்சி அளித்தார். பெரியவாச்சான் பிள்ளை ஆனந்தக் கூத்தாடினார். ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டு இறைவனை ஏற்றி வந்தார். தற்சமயம் ஸ்ரீனிவாசர் ஆலயம் அமைந்துள்ள இடம் வந்ததும் வண்டியின் அச்சு முறிந்தது. இங்குதான் இறைவன் வீற்றிருக்க அருளுள்ளம் கொண்டுள்ளார் என்று எண்ணிய பெரியவாச்சான் பிள்ளை, அங்கே இறைவனை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார்.
பின்னர், அவர் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத ஸ்வாமியை தரிசிக்க எண்ணினார். அங்கு அவருக்கு நம்பிள்ளை ஆச்சார்யராக அமைந்தார். அவர் வழி காட்டுதலின் பேரில் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு பாஷ்யம் அமைத்தார். பெரிய பெருமாளே அவருக்கு, ‘அபயப்ரதராஜன்’ என்றும் ரங்கநாயகித் தாயார் அவருக்கு, ‘வியாக்யான சக்ரவர்த்தி’ என்றும் விருது வழங்கி கௌரவித்தனர்.
பல காலம் ஸ்ரீரங்கத்தில் இன்னும் பல நூல்களை இயற்றிய அவர், தன் இறுதி காலம் நெருங்குவதை அறிந்து சேங்கனூர் திரும்பினார். அங்கு அவருக்காக அர்ச்சாவதாரமாக எழுந்தருளிய ஸ்ரீனிவாசப் பெருமானை அடைந்து, சரணாகதியாக அவர் பாதத்தில், ‘அடிக் கீழமர்ந்து புகுந்தேனே’ எனக் கூறி ஐக்கிய மானார். இன்றும் ஸ்ரீனிவாசப் பெருமானின் பாதத்தில் சாளக் ராம ரூபத்தில் பெரியவாச்சான் பிள்ளை காணப்படுகிறார். அந்த சாளக்ராமத்தில் சாஷ்டாங்க மாக அவர் பெருமாளின் பாதத்தில் விழுந்திருக்கும் அமைப்பு இருப்பதாக பட்டர்கள் கூறுகின்றனர். கோயிலை இவ்வூரிலேயே பிறந்த ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் அமைப்பின் மூலம் பராமரித்து வருகின்றனர். கோயில் சுற்றுப் பிராகாரம் முழுவதும் பெரிய வாச்சான் பிள்ளை வரலாறும் ஸ்ரீனிவாசப் பெருமாளின் மேல்
ஸ்ரீ அண்ணா அவர்கள் இயற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீனிவாசர் வேறு எங்கும் இல்லாத படி, இடது முன் கரத்தை இடுப்பில் வைத்திருப்பதைக் காணலாம். வழக்கமாக, ஸ்ரீனிவாசப் பெருமாள் அபய மற்றும் வரத ஹஸ்தத்துடன் அமைந்திருப்பது வழக்கம். ஆனால், இங்கோ இடுப்பில் கை வைத்து மிக ஒயாரமாக பெரியவாச்சான் பிள்ளைக்காக எழுந்தருளி இருக்கிறார். திருப்பதியில் நடக்கும் முக்கிய உத்ஸவங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. மேலும், அங்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளையும் பக்தர்கள் இங்கு நிறைவேற்றுகிறார்கள். பெரியவாச்
சான் பிள்ளை திருநட்சத்திரமான ஆவணி ரோஹிணியும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கோயிலுக்கு அடுத்த தெருவில் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த திருமாளிகை அமைந்துள்ளது. அதில் அவர் ஓவியம் மற்றும் ஸ்வாமி படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாவின் பூர்வீக இல்லத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆராதித்த விக்ரஹங்கள் பாதுகாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகின்றன.
அமைவிடம்: திருப்பனந்தாளில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தகவலுக்கு: 90250 25031

Comments