ராம காவியத்தில் ராஜ நீதி!

ராமாயணம், மகாபாரதம் இரண்டு இதிகாசங்களும் பாரத நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷங்கள். இவற்றில் கதை ஒரு பக்கம் இருந்தாலும் அன்பு, வீரம், தயை, தர்மம், ராஜ நீதி எல்லாமே நிறைந்துள்ளன. அரக்கர் குலத்திலும் அறத்தை அறிந்தோர் இருந்தார்கள். மகாபாரதத்தில் துரியோதனனுடன் பிறந்த நூறு சகோதரர்களில் விகர்ணன் நல்ல தர்மவான். துர்புத்தியுள்ள துரியோதனனுக்கு தர்மங்களையும்,
நீதிகளையும் எடுத்துச் சொல்கிறான். விதுரர், பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள் திருதராஷ்டிர மன்னனுக்கும், துரியோதனனுக்கும் பல நீதிகளை எடுத்துச் சொல்கின்றனர்.
அவை எக்காலத்து அரசியலுக்கும் ஏற்றதாகவே அமைந்துள்ளன. ஸ்ரீமத் ராமாயணத்தில் வால்மீகி, அதில் வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை எடுத்துக் காட்டுகிறார். தசரதன் கைகேயிடம் உள்ள அபரிமிதமான பிரேமையால் அடைந்த பலவீனம், ராமன் வனம் போகும்போது லட்சுமணன் அடைந்த சீற்றம், ராமனை கானகம் அனுப்பும்போது கௌசல்யா தேவியின் தவிப்பு இப்படி எத்தனையோ...
வால்மீகி ராமாயணம் இந்து மதத்தின் பல அடிப்படைக் கொள்கைகளை நன்றாக விளக்குகிறது. யுத்த காண்டத்தில் ராவணனுக்கு அவனுடைய சகோதரர்களான, கும்பகர்ணன், விபீஷணன், மனைவி மண்டோதரி உள்பட, தர்மங்களைச் சொல்கிறார்கள். கும்ப கர்ணன் தர்மத்தை பேசினாலும் சகோதரனுக்காக தர்மத்திலிருந்து விலகி யுத்தம் செய்து மாண்டான். விபீஷணனோ, தர்மமே பெரியது என்று நாடு, நகரம், உற்றார், உறவினர் எல்லாவற்றையும் விட்டு ஸ்ரீ ராமனிடம் சரண் புகுந்தான்.
ராவணன் இவர்கள் சொல்வதை எதையுமே ஏற்க வில்லை. இறுதியாக, ராவணனின் பாட்டனார் மால்யவான் அவனுக்குப் பல உபதேசங்களைச் சொல்கிறார். இவர் முதிர்ந்த அனுபவம் உள்ளவர். வீராதி வீரன். மதியும் நிறைந்தவர்.
ஸ்ரீராமன் வானர சேனையோடு இலங்கையை அடைந்து விட்டார். யுத்தம் ஆரம்பிக்கும் நெருக்கடி. எங்கு பார்த்தாலும் யுத்தம் பற்றியே பேச்சு. ராம பிரானுடைய வீரத்தைக் கண்டு இலங்கையில் உள்ள எல்லோருமே பிரமித்து நிற்கிறார்கள். ராவணன் சற்றே கலங்கினாலும், சீதா தேவியை எக்காரணத்தைக் கொண்டும் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக உள்ளான்.
மந்திரி சபையைக் கூட்டினார்கள். போர் வீரர்களும், மந்திரி, பிரதிநிதிகளும் சபையில் கூடினர். ராவணனு டைய பிடிவாதத்தைக் கண்டு எல்லோரும், ‘எப்படி அவனுக்கு ஆலோசனை சொல்வது’ என்று குழம்பிய வேளையில் மால்யவான் ஆழ்ந்த கருத்தோடு பேசுகிறார்.
அரசே, ராஜ தர்மத்தை உணர்ந்தவன்தான் ராஜ்யத்தை பாதுகாக்க முடியும். ராஜ தர்மம் ஒரே நிலையில் இருப்பது இல்லை. வெற்றி, தோல்வி இரண்டுக் குமே அரசன் தயாராக இருக்க வேண்டும். இவை இரண்டாலும் அரசனுக்கு நன்மை, தீமை சம்பவிக்கும். தோல்வி அடைந்தால் அரசன் வருத்தமுறுகிறான். வெற்றி அடைந்தால் தோற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாகிறான். தோற்றுப்போனவர்கள் மீண்டும் யுத்தம் செய்து இவனை பழிவாங்கும் சமயத்தை எதிர் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தோல் வியைக் காட்டிலும் இது ஆபத்தானது.
இதைத் தவிர்க்க ஒரு மார்க்கம் உண்டு. அதுதான் சமாதான மார்க்கம். இதில் இருவருமே ஒத்துப் போவதால் வெற்றிக்கோ, தோல்விக்கோ இடமே இல்லை. சமாதானம் மூலமாக ஏற்படும் முடிவு ஸ்திரமானது. சமாதான வழியில் நிற்கும் அரசன் தானும் வெற்றியோடு வாழலாம். சத்ருக்களையும் தன் வசமாக்கலாம். இருந்தாலும் சமாதான வழியும் யோசித்தே செயல்பட வேண்டும். யாரோடு, எப்போது சமாதானமாக போவது என்பதை அரசனே முடிவு செய்ய வேண்டும். நல்ல வழியில், காலத்தே சமாதான வழியை பின் பற்றினால் ஐஸ்வர்யத்தை அடையலாம். பிறரையும் வாழச் செய்யலாம். சமாதானம் செய்து கொள்வது என்பது அந்தந்த இடத்தைப் பொறுத்துள்ளது. எப்போதுமே சமாதானத்தால் சாதிக்க முடியாததை யுத்தத்தாலும் சாதிக்க முடியாது.
தன்னைக் காட்டிலும் வலிமையில்லா தவர்களிடம் யுத்தம் செய்து வெற்றியை எளிதாக அடைந்து விடலாம். சத்ருக்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக அவர்களை அவமானம் செய்யக் கூடாது. தன்னை விட வலிமை உள்ளவர்களோடு யுத்தம் செய்ய நேர்ந்தால் எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்போது சமாதானமாகப் போக வேண்டும்.
அரசனே, இப்போதுள்ள சூழ்நிலையில் ராமனோடு சமாதானமாகப் போவதுதான் உசிதமான காரியம். பலத்தில் ராமன் நம்மை விட தாழ்ந்தவனாக இருக்கலாம். ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் ராமனோடு சமாதானமாகப் போவதே நல்லது.
தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள் முதலான நல்லோர்கள் யாவருமே ராமன் பக்கம் இருக்க, ராமனின் வெற்றியையே வேண்டுகிறார்கள். ராமனோடு யுத்தம் வேண்டாம். சமாதானமாக நாம் போனால் எல்லோருமே நன்மை அடைவார்கள். எந்த சீதையை அடைவ தற்காக ராமன் யுத்தம் செய்ய வந்திருக்கிறானோ, அந்த சீதையை திருப்பிக் கொடுத்து விடுவோம்.
மன்னா, இப்பொழுது உள்ள சூழ்நிலை இந்த விதமாக உள்ளது. இந்த சமயம் அதர்மம் அடங்கி தர்மம் ஓங்கி நிற்கிறது. நாம் எல்லோரும் அதர்மத்தின் வழியே நிற்பவர்கள். அதனால் நாம் அடங்கித்தான் நடக்க வேண்டும். அரசே, ஒரு உண்மையைச் சொல்கிறேன். ஆதி காலத்தில் பிரும்ம தேவன் இரண்டு வழிகளைப் படைத்தார். ஒன்றுக்கு தர்மபக்ஷம் என்றும், மற்றொன்றுக்கு அதர்மபக்ஷம் என்றும் பெயர். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டே நிற்கும். அடிக்கடி மோதிக் கொள்ளுபவை. மனிதவர்க்கம் வாழவும், வளரவும் உதவுவது தர்மம். மனித வர்க்கத்தை முன்னேற விடாமல் தடுத்து அழிவுப் பாதைக்குச் செல்ல உதவுவது அதர்மம். தேவர்கள் தர்ம பக்ஷத்தை சேர்ந்தவர்கள். தர்மம் ஓங்கும் காலத்தில் தேவர்களுடைய பக்ஷம் ஜெயிக்கும். அதர்மம் ஓங்கும் காலத்தில் நம்முடைய பக்ஷம் ஜெயிக்கும்.
அசுரர்களும், நம்மைச் சேர்ந்தவர்களும் தர்மத்தின் கை ஓங்கி, அதர்மத்தின் கை தாழ்ந்து இருக்கும் காலத்தில் எந்தக் காரியம் செய்தாலும் வெற்றியை கொடுக்காது. தர்மம், அதர்மம் இரண்டும் மோதிக் கொள்ளும் காலத்தில் தர்மம் ஜெயித்தால் கிருத யுகம் ஏற்படும். அதர்மம் ஜெயித்தால் கலி யுகம் ஏற்படும். அதர்மம் ஜெயித்த காலத்தில் நாம் செய்யும் காரியங்கள் பயன் உள்ளவையாக ஆயின. அன்று நாம் எடுத்த காரியங்கள் கை கூடின. ஆனால், இன்று உள்ள நிலைமை வேறு. இந்த நிலையில் நாம் வெற்றி பெறவே இடம் இல்லை. ஆங்காங்கு யாகங்கள் நடக்கின்றன. உரத்தக் குரலில் வேதத்தை ஓதுகிறார்கள். ரிஷிகளுடைய அக்னிஹோத்ர சாலையிலிருந்து கிளம்பும் புகை நான்கு பக்கங்களிலும் பரவி நிற்கின்றன. இந்நிலையில் ராக்ஷஸர்களுக்கு ஜயம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அது மட்டுமல்லாமல், எங்கும் அபசகுனங்களும் காணப்படுகின்றன" என்று மால்யவான் ராவணனுக்கு பலவாறாக உபதேசிக்கிறார்.
இந்த உபதேசத்தின் மூலம் தர்மம் உலக வாழ்க்கைக்கு உதவுவது வெளியாகிறது. தர்மம் ஓங்கி நிற்கும் காலத்தின் அடையாளமும் காணப்படுகிறது.

Comments