புத்திரப் பேறு தரும் கம்பத் திருமஞ்சனம்!

மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் சிந்துப்பட்டியில் உள்ளது, ‘தென் திருப்பதி’ என்று போற்றப்படும் ஸ்ரீவேங்கடாசலபதி கோயில். அழகிய கோபுரம், கோயிலின் உள்ளே ஒரு கிணறு, பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சன்னிதிகள், சக்கரத்தாழ் வாருக்கு தனி சன்னிதி எனத் திகழ்கிறது ஆலயம். மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதி. தாயார் அலர்மேல் மங்கை. திருமலையில் உள்ளது போன்ற அமைப்பு. ஆனால் பெருமாள் இங்கே, ஸ்ரீதேவி - பூதேவி என உபய நாச்சிமாரோடு காட்சி தருகிறார்.
கி.பி.12,13ஆம் நூற்றாண்டுகளில், வடக்கே சுல் தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்களுக்கு எதிராகத்தான் விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் அதன்பின் புத்துயிர் பெற்றன. திருப்பதி, சந்திரகிரிக் கோட்டை உள்ளிட்ட பகுதிகள் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் ஆளுகையில் இருந்தது. அவருக்குப் பிறகு, சுல்தான்கள் சந்திரகிரிக் கோட்டையை தாக்கி சின்னாபின்னப்படுத்தினர். அப்பகுதியில், கஞ்சி தேசத்தைச் சேர்ந்த நாயக்கர் இனத்தவர் ஏராளமானோர் இருந்தனர். அவர்களில் சிலர் விஜயநகர வம்சாவளியினர். சுல்தான்களால் பல கொடுமைகளை அனுபவித்தனர். அவர்கள் இனத்துப் பெண்களை வலுவில் மணந்து, அந்தப்புரத்தில் தள்ளினர். இவ்வாறு, தங்கள் இனப் பெண்கள், சுல்தான்களின் அந்தப்புரத்தில் அவதியுறுவதை விரும்பாத குடும்பங்கள், இரவோடு இரவாக அவ்வூரை விட்டுக்கிளம்பி தெற்கு நோக்கிச் சென்றன. அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவி-பூதேவி விக்கிர கங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். இரவு நேர மாகிவிட்ட படியால் ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது. பொருட்களை ஓரிடத்தில் வைத்து, உடன் எடுத்து வந்த விக்கிரகங்களுக்கு பூஜை செய்து பத்திரப்படுத்தினர்.
பொழுது விடிந்தது. தொடர்ந்து பயணிக்க எண்ணி, பூஜைப் பொருள்கள் மற்றும் பெருமாள் விக்ரஹம் வைத்திருந்த பெட்டிகளைத் தூக்க முயன்ற போது, அவற்றை அசைக்க முடியவில்லை! வேறு வழியில்லாமல், பெட்டிகளோடு அங்கேயே தங்கினர். அன்று இரவு, ஒரு பெரியவர் கனவில் பெருமாள் காட்சி தந்து, யாரும் பயம் கொள்ள வேண்டாம். இப்பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். நாளை காலை, பெட்டியிலிருந்து ஒரு வஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று கண்மாக்குக் கீழ்ப்புறத்தில் புளிய மரத்தில் போட்டு, மூன்று முறை குரல் எழுப்பும். அந்த இடத்தில் என் விக்ர ஹத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புங்கள்" என்று சொல்லி மறைந்தார். கண் விழித்த பெரியவர், இதைச் சொல்ல, பெருமாள் அருளை வியந்து போற்றினர்.
மறுநாள், வானத்தில் வட்டமிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, அருகிருந்த புளிய மரத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்கிரகத்தை அமைத்து, தேவியர் சகிதராக பெருமாளை பிரதிஷ்டை செய்து, கோயிலும் எழுப்பி வழிபட்டனர். புளியம் பழத்தை தெலுங்கில், ‘சிந்த்த பண்டு’ என்பர். புளிய மரத்தின் அருகே கோயில் அமைந் ததாலும், வஸ்திரம் புளிய மரத்தில் விழுந்து இடத்தைக் காட்டிக் கொடுத்ததாலும், அந்த இடம் ‘சிந்த்த பண்டூர்’ எனப்பட்டது. அதுவே, பின்னாளில் மருவி சிந்துப்பட்டி ஆனதாம். மேலும், இங்கு பெருமாள் மீது சிந்துப் பாடல்களை சிலர் பாடியிருக்கிறார்களாம். அதனாலும், இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
அனைத்து பெருமாள் கோயில்களிலும் கொடிமரம் கருடக் கொடியோடு திகழும். ஆனால், இக்கோயிலில் கருப்பண்ணசாமி கொடிமரம் காணப்படுகிறது. அதோடு, பெருமாள் கோயில்களில் துளசியும் தீர்த்த மும்தான் பிரசாதமாகத் தருவார்கள் ஆனால், இங்கே, பிரசாதமாக விபூதியும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் இந்தக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் செவிப்பதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறை வேறப் பெறுகிறார்கள். இதற்கு, ‘கம்பம் கழுவுதல்’ என்று பெயர். விளக்கெண்ணெய் மற்றும் தயிர் கலந்து, கொடிமரத்தின் மேல் உச்சியில் இருந்து தடவி, அதற்கு திருமஞ்சனம் நடக்கிறது. பிறகு, கொடிமரத்துக்கு மிகப் பெரிய வஸ்திரம் சாத்தி, விபூதி அர்ச்சனை செய்யப்படுகிறது. பின்பு, அதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப் படுகிறது.
கொடி மரத்துக்குப் பின், கருடாழ்வார் சன்னிதி. எதிரே, ஸ்ரீதேவி-பூதேவி உடன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள். முன்மண்டபத்தின் வெளிப்புறம், அலர் மேல் மங்கை தாயாருக்கு தனி சன்னிதி. அழகான ஊஞ்சல் மண்டபம், உத்ஸவ மண்டபம்! பிராகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சன்னிதி அமைத்திருக்கிறது.
ஊருக்குள் நுழையும்போதே, கருப்பர் சன்னிதி ஒன்றைக் காணலாம். அவருக்கு முதலில் பூஜை செய்த பின்பே, இந்தக் கோயிலுக்கு வருவார்கள். அவரே இவர்களுக்கு காவல் தெய்வம். இந்தக் கொடிமரத்துக்கும் அந்தக் கருப்பண்ணசாமிக்கும் தொடர்பு உண்டென நம்பப்படுகிறது!
வைகாசி பிரம்மோத்ஸவம், ஆடித் திருவிழா, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை தீபம், மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, தை மாதப் பிறப்பு ஆகியவை விசேஷ உத்ஸவங்கள். மகிஷாசுரவத நிகழ்ச்சி இங்கே வித்தியாசமானது. வானமாமலை ஜீயர் போற்றி, வணங்கி அபிமானித்த தலம் இது. சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாந்த கோயில்.
திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரி யத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றுகிறார்கள். இக்கோயில் பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், பக்தர்கள் அங்கப் பிர தட்சிணம் செய்து, பாவங்கள் நீங்கப் பிரார்த்திக்கிறார்கள். கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட, குழந்தைப் பேறு உண்டாகும்; தடைப்பட்ட திருமணம் நடந் தேறும்; தொலைந்துபோன பொருள் கிடைக்கும் என்பது பெரியோர்வாக்கு. கோமாதா வழிபாடு செய்ய வழக்கில் வெற்றி பெறலாம். புதுமணத் தம்பதியர் விஜயதசமி நாளில் இக்கோயிலில் நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து பெருமாள் தாயார் அருள் பெற்றுச் செல்வதை, ‘மகர் நோன்பு’ என்கிறார்கள். இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது.
அமைவிடம்: திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில் சுமார் 16 கி.மீ., தொலைவில் உள்ளது.

Comments