திருமலை தோட்டத் திருவிழா!

மைசூர்-மேல்கோட்டை அருகே சிறு புத்தூர் எனும்கிறங்கூரில் கி.பி. 1053ல் சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் உதித்தவர் அனந்தன். திரு வரங்கத்தில் இருந்த ஸ்வாமி ராமானுஜரின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, அவரிடம் சீடராகச் சேர்ந்தார்.
ராமானுஜர் ஒரு முறை, ‘ஒழிவில் காலமெல்லாம்’ திருவாமொழிப் பாசுரத்தில், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’ என்பதற்குப் பொருள் சொல்லும் போது, ‘ஆழ்வார் ஆசைப்படி திருமலை சென்று தங்கி நந்தவனம் அமைத்து, மலையப்பனுக்கு பூமாலை கட்டிச் சாத்த எவரேனும் உளரோ’ என்று கேட்டார். சீடர் பலர் வாளாவிருக்க, அனந்தாழ்வான் எழுந்து, ‘அடியேனுக்கு நியமித்தால், தேவரீர் திருவுளப்படியே செய்கிறேன்’ என்றார். ‘அனந்தா! நீர் ஒருவரே ஆண் பிள்ளை’ என்று பாராட்டினார் ராமானுஜர். அதுமுதல் அவர் அனந்தாண்பிள்ளை எனப்பட்டார்.
ஸ்ரீ ராமானுஜர் நியமனப்படி வேங்கடம் சென்ற அனந்தாழ்வான் நந்தவனம் அமைத்தார். அதற்கு நீர் பாச்ச தாமே ஒரு ஏரியும் வெட்டத் தொடங்கினார். அப்போது, வேங்கடவன் சிறுவன் வடிவில் உதவ முன்வர, ‘ஆசார்யன் எனக்குக் கொடுத்த கைங்கர் யத்தில் பங்கு கேட்காதே’ என்று சொல்லி விரட்டினார். ஆனால், சிறுவன் அவர் மனைவியிடம் கெஞ்சி அவருக்கு உதவ, விவரமறிந்த அனந்தாழ்வான் கோபத்தில் கடப்பாரையை வீச, அதுபட்டு சிறுவன் முகவாக்கட்டையில் இருந்து ரத்தம் பெருகியது. அச்சிறுவன் கோயிலுக்குள் ஓடி மறைந்தான்.
வருந்திய அனந்தாழ்வான், சன்னிதிக்குள் சென்று பார்த்தபோது, பெருமாள் முகவாக் கட்டையில் ரத்தம் பெருகியது. ‘சிறுவனாக வந்தது பெருமாளே’ என்றுணர்ந்தவர், ரத்தப் பெருக்கை நிறுத்துவது தெரியாமல் திகைத்தபோது, அனந்தாழ்வானின் பாதத்தூளியைத்தன் மோவாயில் வைத்து அழுத்துமாறு கூறினான் வேங்கடவன். அப்படியே செய்ய ரத்தப்பெருக்கு நின்றது. இதனால் தான் இன்றும் பெருமானுக்கு முகவாக் கட்டையில் பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது. அதை ஸ்ரீபாதரேணு (திருவடிப் பொடி) என்பர்.
அனந்தாழ்வான் ஏற்படுத்திய நந்தவனத்தில் பெருமானும் தாயாரும் தினமும் இரவில் பூக்களைப் பறித்து விளையாடினர். ஒருநாள் காலை தோட்டத்தில் பூக்கள் சிதறியிருப்பதைக் கண்ட அனந்தாழ்வான், அவர்களைப் பிடித்து விடும் நோக்கில் காவல் இருந்தார். வழக்கம்போல் இருவரும் அரசன், அரசியாக உருக்கொண்டு விளையாடினர். அவர்கள் பெருமாளும் தாயாருமே என்றறியாத அனந்தாழ்வான், இருவரையும் பிடித்தார். பெருமாள் மட்டும் தப்பி, அப்பிரதட்சிணமாக கோயிலுக்குள் ஓட, பிராட்டி அகப்பட்டாள். அவளை ஒரு செண்பக மரத்தில் கட்டி வைத்தார்.
பிராட்டி, அனந்தாழ்வானிடம் தன்னை அவர் மகளாகக் கருதி விட்டு விடும்படி கேட்டும், அவர் விடவில்லை. மறுநாள் காலை அர்ச்சகர்கள் சன்னிதியைத் திறந்து பார்த்தபோது, பெருமான் திருமார் பில் நாச்சியாரைக் (அலர்மேல்மங்கை) காணாமல் திகைத்தனர். வேங்கடமுடையான் நடந்ததைக் கூறி, பிராட்டியை அழைத்து வருமாறு நியமிக்க, அவர்கள் அனந்தாழ்வானிடம் கூற, அவர்கள் பெருமாளும் பிராட்டியுமே என்றுணர்ந்தவர், பிராட்டியை செண்பக மரத்திலிருந்து விடுவித்தார். பிராட்டியும் அனந்தாழ்வானின் பெண்ணாகவே தன்னை ஆக்கி, வேங்கடமுடையானிடம் சென்று அவன் திருமார்பை அலங்கரித்தாள்.
எம்பெருமானும் ஆழ்வானுக்கு தன் மாலையை அணிவித்து கௌரவித்தான். அன்று முதல் வேங்கடவனுக்கு அனந்தாழ்வான் மாமனார் ஆனார். கோயிலுக்கு அப்பிரதட்சிணமாக ஓடிய இந்நிகழ்ச்சியை நினைவு கூரும் வண்ணம் புரட்டாசி பிரம்மோத்ஸவத்தில் ஒரு நாள் அப்பிரதட்சிணமாகவே அனந்தாழ்வானுடைய தோட்டத்துக்கு எழுந்தருள்கிறான் பெருமான்.
ஆடிப்பூர நாளில் அனந்தாழ்வான் உயிர் நீத்தார். அவர் திருமலையிலேயே வசிக்க விரும் பியதால், வேங்கடவன் அவர் பரமபதித்தபோது, இந்த நந்த வனத்திலேயே அவருக்கு சரம ஸம்ஸ்காரம் செய்யும்படி நிய மித்தார். ‘எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனுமாவேனே’ என்ற வகையில் மகிழ மரமாக எழுந்தருளியுள்ளார்.
கோயிலுக்கு அப்பிரதட்சிணமாக பெருமான் ஓடிய நிகழ்ச்சியை நினைவூட்ட, பிரமோத்ஸவம் முடிந்த மறுநாள் மாலை திருவேங்கடமுடையான் (உபய நாச்சிமார்கள் இல்லாமல் தனியாக) கோயிலுக்கு அப்பிரதட்சிணமாக அனந்தாழ்வான் தோட்டத்துக்கு எழுந்தருளி, அங்கு அமைந்துள்ள மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி, அனந்தாழ்வானுக்கு (மகிழ மரத்துக்கு) மாலை ஸ்ரீசடகோபன் முதலிய மரியாதைகளை அருளுகிறான். அதேபோல், அவர் பரமபதித்த ஆடிப்பூரத்தன்றும் உபயநாச்சிமார்களுடன் கோயிலுக்கு பிரதட்சிணமாக தோட்டத்துக்கு எழுந்தருளி மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி, அனந்தாழ் வானுக்கு (மகிழ மரத்துக்கு) மாலை ஸ்ரீசடகோபன் முதலிய மரியாதைகளை அருளுகிறான். எம்பெரு மானே திருவரசிற்கு எழுந்தருளி, மரமாக எழுந்தருளியுள்ள ஆசார்யருக்கு மரியாதை செய்வது, வேறு எந்த ஒரு ஆசார்யருக்கும், வேறு எந்த திவ்ய தேசத்திலும் நடைபெறாத ஒரு தனிச்சிறப்பு.
வேங்கடமலையில் அனந்தாழ்வான் கைங்கர்யம் செய்வதற்காக வெட்டிய ஏரி, பூக்களுக்காக அமைத்த நந்தவனம், அதில் அவர் நீராடுவதற்காக ஏற்படுத்திய ஸ்ரீராமானுஜ புஷ்கரிணி ஆகியவை இன்றும் நாம் காணும்படி அமைந்துள்ளன. இந்த நந்தவனத்தில் இருந்து தினமும் வேங்கடவனுக்கு புஷ்பங்கள் மற்றும் துளசி மாலைகள் சமர்பிக்கப்படுகின்றன.
கீழ் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் அனந்தாழ்வான் அவதரித்த சித்திரையில் அவர் திருநட்சத்திரம் கொண்டாடப்படும். அந்நேரம் திருமலையில் கொண்டாட முடியாததால் மாசி மாதம் அனந்தாழ்வான் தோட்டத்தில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இவ்விழா மார்ச் 4, 5ஆம் தேதிகளில் அனந்தாழ்வான் (மகிழ மரம்) திருமுன்பே கொண்டாடப்பெற்றது. ராமானுஜரின் ஆயிரமாவது அவதார ஆண்டில் அவர் சீடரின் விழாவையும் சேர்ந்து கொண்டாடிய இரட்டைச் சிறப்பு இவ்விழாவுக்குச் சேர்ந்தது. அதுவும் ராமானுஜருக்குப் பிடித்த திருமலையில்!
ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்யப்ரபந்த சேவை (ஓதுதல்), வேத பாராயணம், அறிஞர்களின் சொற்பொழிவு, ததீயாராதனம் இவற்றோடு இவ்விழா கொண்டாடப்பட்டது. திருமலை திருப்பதி பெரிய கோயில் கேள்வி ஜீயர் ஸ்வாமிகளும், இளைய கோயில் கேள்வி ஜீயர் ஸ்வாமிகளும் இவ்விழாவுக்கு தலைமை வகித்தனர். காஞ்சிபுரம் வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமியும் எழுந்தருளினார். திருவரங்கம், திருமலை, காஞ்சிபுரம், மேல்கோட்டை, திருவல்லிக்கேணி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்பூதூர் உள்ளிட்ட திவ்யதேசங்களில் இருந்து சுமார் 200 அருளிச்செயல் ஓதுபவர்கள் கலந்து கொண்டனர்.
4ம் தேதி காலை இயற்பா ஆயிரம் பாசுரங்கள், முதலாயிரம், பிறகு பெரிய திருமொழி சேவிக்கப்பட்டது. மறுநாள் காலை நம்மாழ்வாரின் திருவாய் மொழி, ராமானுச நூற்றந்தாதி, மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தினமாலை சேவிக்கப்பட்டு மாலை சாற்றுமுறை நடந்தது. தோட்டத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இரு நாட்களும் ராமானுஜர் குறித்தும், அனந்தாழ்வானை பற்றியும் சொற்பொழிவுகள் நடை பெற்றன. இவ்விழா அனந்தாழ்வான் வழித்தோன்றல்களின் முயற்சியிலும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒத்துழைப்பிலும் சிறப்பாக நடைபெறுகிறது.

Comments