சதுர் ராம தரிசனம்!

ஸ்ரீமந் நாராயணரின் அர்ச்சாவதார நிலைகள் நான்கு. நின்ற, இருந்த, நடந்த, கிடந்த கோலங்களில் பெருமான் தரிசனம் அளிக்கிறார். இவற்றில், நின்ற, இருந்த, கிடந்த கோலங்களே நாம் பெரும்பாலும் தரிசிப்பது. நடந்த கோலமாகிய திரிவிக்ரமரெனும் வாமனர் கோலத்தை வெகு சில தலங்களிலேயே தரிசிக்க முடியும்!
மகாவிஷ்ணுவின் அவதார மாகிய ஸ்ரீராமபிரானை, பொதுவாக நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த கோலத்திலோ தரிசிக்க முடியும். சயனக் கோலத்தில் திருப்புல்லாணி திவ்ய தேசத்தில் தர்ப்ப சயன ராமராக தரிசிக்கலாம். இந்த மூன்று கோலமும் சேர்ந்தவாறு ஸ்ரீராமபிரானை தரிசிக்கும் ஒரே திருத்தலமாக, செங்கல்பட்டு அருகிலுள்ள பொன்விளைந்த களத்தூர் திகழ்கிறது.
பொன்விளைந்த களத்தூர்! கிராமத்தின் பெயரே லக்ஷ்மிகரமாகத் திகழ்கிறது. இங்கே வரிசையாக மூன்று கோயில்கள். எல்லாமே ஓரளவு பெரிய கோயில்கள்!
களத்தில், அதாவது வயலில் பொன் விளைந்ததால் இந்த ஊர் பொன்விளைந்த களத்தூர். அந்தப் பொன்னின் பதர்கள் காற்றில் பறந்து சென்று விழுந்ததால் அந்த ஊரின் பெயர், ‘பொன்பதர்க் கூ(ட்)டம்!’ இந்த நான்கு ராமர் கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் வறுமை அகன்று செல்வம் சேரும். வணங்கு பவர் இல்லங்களில் பொன் முதலான ஐஸ்வர்யங்கள் பெருகும்.
சுமார் 700 வருடங்களுக்கு முன், வைணவ ஆசார்ய ரான சுவாமி தேசிகன், ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் களத்தூரில் ஒரு நாள் தங்கினார். தன்னுடன் ஹயக்ரீவர் விக்ர ஹத்தைக் கொண்டு வருவதும், அதற்கு இரு வேளையும் திருவா ராதன பூஜை செய்வதும் அவர் வழக்கம். ஒருநாள், மாலை பூஜையின்போது நிவேதனத்துக்கு பிரசாதம் எதுவும் கிடைக்காததால், துளசி தீர்த்தத்தையே ஹயக்ரீவருக்கு நிவேதனம் செய்து, அதையே தானும் பருகி உறங்கச் சென்றார்.
அந்த ஊர் ஏழை விவசாயி ஒருவர், இருந்த தமது கொஞ்சம் நிலத்தில் நெல் விளைவித்திருந்தார். மறு நாள், களத்தில் நெல் அறுக்க வேண்டிய தினம். திருடர்கள் கதிரை அறுத்து விடுவார்களோ அல்லது காட்டு மிருகங்களால் பயிர்க்கு ஏதேனும் சேதம் ஏற்படுமோ என்ற கவலையில், அன்றிரவு தன் நிலத்தைப் பார்வையிடக் கிளம்பினார்.
அப்போது, ஒரு பெரிய வெண்குதிரை அந்த ஏழை விவசாயியின் நிலப் பயிரை மேந்து கொண்டிருந்தது. கோபத்தில் அவன் குதிரையைத் துரத்த, அது அங்கிருந்து ஓடி, ஸ்வாமி தேசிகன் தங்கியிருந்த வீட்டுக்குள் வந்து மறைந்தது. ஸ்வாமி தேசிகரிடம் விவசாயி முறையிட, அவருக்கு உடல் சிலிர்த்தது. மேந்தது சாதாரண குதிரையில்லை. துளசி தீர்த்தம் போதாத, குதிரை முகக் கடவுளான ஹயக்ரீவரின் லீலை அது என்று புரிந்தது. பெருமானின் திருக்காட்சி கண்ட புண்ணியப் பிறவியப்பா நீ" என்று அவனிடம் சொல்லி, களத்துக்கு ஓடினார். அங்கே வெண்குதிரை பயிரை மேந்த இடங்களில் காணாமல் போன நெல் மணிகளுக்கு பதிலாக பொன் மணிகள் விளைந்திருந்தன. இதனாலேயே இத்தலம், பொன் உதிர்ந்த களத்தூரென்றும், பொன்விளைந்த களத்தூர் என்றும் பேர் பெற்றுத் திகழ்ந்தது.
மகத்துவம் மிக்க இந்த ஊரில்தான் முற்காலத்தில் லட்சுமி நரசிம்மர் கோயில் கொண்டார். இங்குள்ள உத்ஸவர் விக்ரஹம் மிகப் பழைமையானதும் மகிமை கொண்டதுமாம்! இவர் மகாபலிபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில் நரசிம்மரின் உத்ஸவர். முன்னொரு சமயம் முகலாயர் படையெடுப்பில் கோயில்கள் பாதிக்கப்பட்டபோது, மகாபலிபுரத்தில் இருந்த நரசிம்மப் பெருமான் கோயில் உத்ஸவரை சுமந்து கொண்டு சிலர் பாலாற்றைக் கடந்து வந்தனர். அப்போது, ‘எங்கே உடன் புறப்பட்டு வரும் கருடன் நிற்குமோ அங்கேயே பெருமானை பிரதிஷ்டை செய்யும் படி’ அசரீரி சொல்ல, அதன்படி இங்கே கருடன் அமர்ந்து காட்டித் தர, இங்கேயே கோயில் கொண்டார் பெருமான். இன்றும், இத்தல மூலவரை திருக்கடல்மல்லையாகிய மகாபலிபுரத்தில் தரிசிக்கலாம். அவ்வகையில் இவர் திவ்யதேசப் பெருமாள் தொடர்பில் ஆகிறார்" என்றார் ஆலய அர்ச்சகர் வசந்த் பட்டர்.
இந்த ஆலயத்தில்தான் நெல்லைப் பொன்னாக்கிய ஹயக்ரீவரும் சன்னிதி கொண்டிருக்கிறார். பெருமானின் அழகிய உத்ஸவ விக்ரஹம் நம் கருத்தைக் கவர்கிறது. இங்கே மூலவர் லட்சுமி நரசிம்மர் சிங்கமுகப் பெருமானாக இல்லாமல், நாராயண ரூபியாகவே காட்சி தருகிறார். ‘சிங்க முகத்துடன் சேவை சாதித்தால் என் போன்ற குழந்தைகள் பயப்படுவார்களே’ என்று பிரகலாதன் கேட்டபடி, சாந்த ரூபியா, அழகுக் கோலத்தில் நரசிம்மர் காட்சியளித்தபடி அகோபிலவல்லித் தாயாருடன் காட்சி தருகிறார் நரசிம்மர்.
ஆண்டாள், அழகிய வடிவில் நின்ற கோலத்தில் கோதண்டராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் ஆகியோரும் இங்கே அருள்பாலிக்கிறார்கள்.
இக்கோயிலை அடுத்து அமைந்திருக்கிறது கோதண்டராமரான பட்டாபிராமர் திருக்கோயில். தனிக்கோயிலில் மூலவர் பட்டாபிராமர், பட்டாபி ஷேகக் கோலத்தில் சீதா பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்டுள்ளார். லட்சுமணர் வலப்புறத்தில் கைகூப்பிய நிலையில் காட்சி தர, கருவறையிலேயே ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீனிவாசப் பெருமாளும், ஸ்ரீதேவி பூதேவியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இவரின் திருவடிவு மிகப் பிரமாண்டமாக உள்ளது.
மூன்றாவதாக அமைந்திருப்பது தர்ப்பசயன சேது ராமர் திருக்கோயில். இந்தக் கோயில் உத்ஸவ மூர்த்தி, அருகே உள்ள கிணற்றில் இருந்து கிடைத்தவர். இந்த மூர்த்தியின் சிரசிலும் பாத பீடத்திலும் எழுதப்பட்டிருப்பதை வைத்து இவர் தர்ப்பசயன ராமரின் உத்ஸவர் என்று கொண்டு, இங்கே சன்னிதி அமையப் பெற்றதாம். இங்கே ராமபிரான், திருப்புல்லாணியில் சேதுக்கரையில் உள்ளதுபோல் சயனித்த கோலத்தில் காட்சி தருகிறார். சீதை, லக்குமனுடன் தற்போது அனுமன் உத்ஸவ மூர்த்தியும் அழகு செய்ய, சன்னிதி அருமையாகத் திகழ்கிறது. உபந்யாசகராகத் திகழ்ந்த சேலம் விஜயராகவாச்சாரியாரின் கைங்கரியத் தில் இந்த சன்னிதி விரிவடைந்ததாம். இந்த வகையில், ராமபிரானை இவ்வூரில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலத்திலும் தரிசிக்க முடியும்.
பொன்விளைந்த களத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்பதர்கூடம். இங்கேதான் ஸ்ரீராமபிரானின் சதுர்புஜ ராமர் கோலத்தை தரிசிக்க முடிகிறது. மிக அழகான, அற்புதத் திருக்கோலம். ராமனாக அவதரித்த மகாவிஷ்ணு, தன் தாய் கோசலை, பக்தன் ஆஞ்சநேயர், சீதையிடம் பரிவு காட்டிய திரிசடை, ராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியவரா, விஷ்ணு ரூபியாக் காட்சி தந்தார். இதேபோல தனக்கும் திருக்காட்சி அருள வேணுமென தேவராஜ மகரிஷி பெருமானை வேண்டித் தவமிருந்தார். அதன்படி, சங்கு சக்கரம் ஏந்தியவரா, நான்கு கரங்களுடன் காட்சி தந்தார் ஸ்ரீராமபிரான். அவர் வேண்டிக்கொண்டபடி, இங்கே எழுந்தருளிய சதுர் புஜ கோதண்டராமனுக்கு பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
கருவறையில் ராமபிரான், வலது புறம் சீதையுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து, மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இடப்புறம் லட்சுமணர் நின்றிருக்க, எதிரே இம்மூவரையும் வணங்கியபடி, வலது திருவடியை சற்று முன்புறமாக வைத்து, வலக்கரத்தை வாயில் வைத்துப் பொத்தியபடி, அனுமன் விநயக் கோலத்தில் திகழ்கிறார். அந்த மூலவரை நாம் கருவறை உள் சென்றுதான் தரிசிக்க முடியும். அனுமனின் உத்ஸவ மூர்த்தியும் அதே அழகுக் கோலம்!
ராமன் இங்கே விஷ்ணுவாகக் காட்சி தந்த தலம் என்பதால், இவர் மார்பில் மகாலட்சுமி இருப்பது விசேஷம். தைப்பொங்கல் நாளில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம். அன்று அவர் பாரிவேட்டைக்குச் செல்வார்.
சதுர்புஜ கோதண்டராமர் உத்ஸவ மூர்த்தி அதி அற்புத அழகுடன் திகழ்கிறார். விரல் நகம், கை ரேகைகள், கணுக்கால், முட்டி, உருண்டு திரண்ட கால் சதை, தோள்கள் என தத்ரூபமாக ராமனின் அழகு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து உணர்ந்து செய்துக்கப்பட்ட சுந்தர பிம்பம். இவர் இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். சீதையை மணந்துகொள்ளும்முன் ராமர், இடதுகாற் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்தபடி ஒடித்தார். இதன் அடிப்படையில் இவ்வாறு விக்ரஹத்தை வடித்துள்ளனர்.
மகான் தர்மதிஷ்டருக்கு ஒரு சாபத்தால் ஏற்பட்ட தோல் நோய் குணமாக இங்கே ராமனை வழிபட்டார். ராமனருளால் அவர் நோய் நீங்கியது. எனவே, தோல் நோய்யால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சுவாமிக்குத் துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து நோய் குணமடைய வேண்டிக் கொள்கிறார்கள். தம்பதியர் ஒற்றுமை வேண்டியும், பிரிந்த தம்பதியர் சேரவும் இங்கே வேண்டிக் கொள்கின்றனர்.
பெருமான் இங்கே புஷ்பக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். லட்சுமி நாராயணர், விஷ்வக்
ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர் ஆகியோரும் இங்கே அருள் பாலிக்கின்றனர்.ஸ்ரீராமநவமி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திர திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய விசேஷங்கள்.
ஸ்ரீராமநவமியை ஒட்டி, இந்த நான்கு ராமர்தரிசனத்துடன், ஐந்தாவதாக, செங்கல்பட்டில் உள்ள கோதண்டராம ஸ்வாமி கோயிலில் ஒரே பீடத்தில் திகழும் சீதா பிராட்டி சமேத கோதண்டராமரையும், லட்சுமணரையும் அருகே பிராகாரத்தில் சனியை அடக்கிய நிலையில் திகழும் அனுமனையும் தரிசித்து வரலாம்.
சென்னையில் இருந்து வருபவர்கள், இந்த நான்கு ராமர் கோயில்களையும் தரிசிக்க அருமையான வாய்ப்பு. மாலை 3 மணிக்கு மேல் கிளம்பி, செங்கல்பட்டு வந்து, திருச்சி செல்லும் சாலையில் சற்று தொலைவு வந்து, நீதிமன்ற வளாகம் கடந்ததும் வரும் இடதுபுற சாலையில் திரும்பி (7 கி.மீ. தொலைவு) ஒத்திவாக்கம் ரயில்வே கேட் கடந்ததும் வரும் வலதுபுறம் திரும்பினால் பொன்விளைந்த களத்தூர். இருப்பினும், அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பொன்பதர் கூடத்துக்கு முதலில் சென்று (சரியாக 5 - 5.30 மணி அளவில் திருவாராதனம் செய்ய அர்ச்சகர் வருவார்) சதுர்புஜ ராமரை தரிசித்து, அதன் பின் பொன்விளைந்த களத்தூரில் மூன்று ராமர்களை யும் தரிசித்து, பின் செங்கல்பட்டு கோதண்டராமரை தரிசித்து சென்னை திரும்பலாம்!

 

Comments