சகல சௌபாக்கியங்கள் தரும் சமயபுரம் மாரியம்மன்

தாலாட்டும் தாயாய் - சாய்ந்துகொள்ளும் தோளாய் - பரிவுக்கோர் தோழியாய் - வழிகாட்டும் ஒளியாய் - சுமைகள் தாங்கும் சுமைதாங்கியாய் - தீராத நோய்களையும் தீவினைகளையும் தீர்த்தருளும் தெய்வ உருவாய் கருணை உள்ளத்தோடு கண்ணனூர் என்னும் சமயபுரத்தில் அருள்மழை பொழிந்துகொண்டிருக்கிறாள் ஆயிரம் கண்ணுடையாள் என்று அழைக்கப்படும் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன். தமிழகத்தின் சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் விளங்கி வருகிறது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்.
இக்கோயிலுக்குப் பல்வேறு சிறப்புகள் இருப்பினும், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க விரும்பி அம்மன் தம்முடைய பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
இதுவரை நான்குமுறை திருக்குடமுழுக்கு நடை பெற்றுவிட்ட நிலையில், தற்போது 2017 பிப்ரவரி மாதம் 6ஆம் நாள் ஐந்தாம் திருக்குடமுழுக்கு வெகு விமரிசையாக ஆகமவிதிகளின்படி நடந்தது.
சமயபுரத்துக்கு கண்ணனூர், கண்ணபுரம், விக் கிரமபுரம், மாகாளிபுரம் எனும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. கோயில் நிர்வாகத்தின் கீழ் கண்ணனூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில், சமயபுரம் அருள்மிகு போஜீஸ்வரர் கோயில், இனாம் சமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயில், மாகாளிக்குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில், அருள்மிகு முக்தீசுவரர் கோயில் ஆகிய 5 கோயில்கள் உள்ளன.
கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்துப் பின் இறைவன் விருப்பத்தினால் அவ்விரு குழந்தைகளும் இடம் மாறின.
தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கியபோது அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன்" என்ற கண்கண்ட தெய்வமாய் அழைக்கப்பட்டாள்.
மாரியம்மன் உற்சவத் திருமேனி ஆதியில் விஜய நகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. பின்னர் அந்த ஆட்சிக்குத் தளர்ச்சி நேர்ந்தபோது - இந்தச் சிலையை, தந்தப் பல்லக்கில் எடுத்துச் சென்றனர். பல்லக்கைத் தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை சமயபுரத்தில் கீழே இறக்கி வைத்து உணவு உட்கொள்ளச் சென்றார்கள். பின்னர் வந்து தூக்க முயன்றபோது, பல்லக்கைத் தூக்க இயல வில்லை. பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் என்று செவிவழிச் செய்தி ஒன்று கூறுகிறது. இதைக் குறிக்கும் விதமாகவே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம்" என்ற முதுமொழியும் வழக்கில் உள்ளது.
அன்னை அருளாட்சி செய்யும் மாரியம்மன் கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை என்பதால் இத்திருக்கோயில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்று இல்லாமல் போய்விட்டது. எனினும் மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி என்று அழைக்கப்பெறும் ஊரில் உள்ள பாச்சில் அமலீசுவரம் சிவன்கோயில் கல்வெட்டில் - பனமங்கலம், துறையூர் போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. எனவே சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந் திருக்க வேண்டும். பின்னர் போசள மன்னர் காலத்தில் மேலும் சிறப்பு அடைந்திருக்க வேண்டும். சமயபுரம் கோயிலில் கொடிக் கம்பத்தை அடுத்துள்ள மண்டபத்தின் தூண்களில் கீழ்ப்பகுதியில் நாயக்க மன்னர்களின் உருவங்கள் சிற்பங்களாக அமைக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் 700 ஆண்டுகளுக்கு மேல் இக்கோயில் அமைந்துள்ளது என அறிய முடிகிறது.
பக்தர்கள் பாதயாத்திரை!
கோடை காலம் தவிர மற்ற மாதங்களில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் இருக்கின்றனர்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மஞ்சள் ஆடை உடுத்தி விரதமிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு காணிக்கைகளை ஏறெடுக்கின்றனர். காணிக்கைகளில் முக்கியமானது முடி காணிக்கையாகும். மேலும், துலாபாரம் செய்தல், தங்கரதம் புறப்பாடு, கோழி ஆடுகளை அளித்தல், பாத்திரங்களைக் காணிக்கையாக அளித்தல், குத்து விளக்கு காணிக்கை அளித்தல், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளைச் சுமந்து சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுதல், உப்பு நெட்டில், மண் உருவாரம் காணிக்கை, நவதானியக் காணிக்கை, அக்னிச் சட்டி எடுத்து வருதல், பால்குடம் ஏந்தி வருதல், அலகு குத்தி வலம் வருதல், அபிஷேகம், அர்ச்சனை செய்தல் என 27 வகையான காணிக்கைகளைப் பக்தர்கள் செலுத்துகின்றனர்.
மாரியம்மனின் தோற்றம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலின் கருவறையில் மூலவரின் திருவுருவம் மரத்தாலும், அதன்மேல் சுதை வேலைபாடுகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதும் புதுமையான ஒன்றாகும். பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இதனை மறுசீரமைப்புச் செய்கிறார்கள். கருவறை அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அம்மன் அமர்ந்திருக்கும் இடமே முதன்மை பீடமாகும். அன்னையின் தலைக்குமேல் ஐந்து தலை நாகம் குடையாக விளங்குவதும் சிறப்பானது.
தங்க ஜடா மகுடத்துடன் குங்கும மேனி, நெற்றியில் அழகியவைரப் பட்டைகள் மின்ன, கண்களில் அருள் ஒளி வீச, வைரக் கம்மல்களுடன் மூக்குத்தியும் சூரியன் சந்திரன் போல பேரொளி வீச நமக்குக் காட்சி தரும் மாரியம்மனின் கோலத்தை காணும்போது பக்திப் பரவசமும், ஆன்ம நிறைவும் நம்முள் நிறையும்.
ஆதி சக்தியாக விளங்கும் மாரியம்மன் தனது எட்டுக்கைகளில் இடதுபுறமாக கபாலம், மணி, வில், பாசம், வலதுபுறமாக கத்தி, சூலம், அம்பு, உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடது காலை மடக்கி, வலதுகால் தொங்கிய நிலையில், சுகாசனத்தில் அமர்ந்து அருள் வழங்கி வருகிறாள்.
வலது காலின் கீழே மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. சமயபுரம் அருள்மிகு மாரியம் மனை நார்த்தா மலை, அன்பில், புன்னை நல்லூர், வீரசிங்கம் பேட்டை ஆகிய கோயில்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களோடு சகோதரி முறையாகத் தொடர்புபடுத்திக் கூறும் முறையும் மக்களிடம் உண்டு.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரால் வணங் கப்பெற்ற பெருமையும், மகத்துவமும் இக்கோயிலுக்கு உண்டு. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமியின் ஈசான பாகத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகிய வடிவங்கள் கொண்டு சிருஷ்டிக் கப்பட்டதால், இக்கோயிலில் ஸ்ரீரங்கம் கோயிலின் மூலவரைப்போல, சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களையும் தன்னுள் கைக்கொண்டு 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மாரியம்மன் அருள்புரிந்து வருவது தனிச் சிறப்பாகும்.
பச்சைப் பட்டினி விரதம் பொதுவாக பக்தர்கள் கோயில்களில் எழுந்தருளி அருள்புரியும் அந்தந்த மூர்த்திகளை ஆராதனை செய்து உண்ணாநோன்பு கடைப்பிடிப்பது வழக்கம்.
ஆனால், இத்தலத்தில் மட்டும்தான் மரபுமாறி, அருள்மிகு மகாமாரியம்மன் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூர்த்திகளை நோக்கி, தன்னை நாடி வரும் பக்தர்களின் நலனுக்காகவும், அவர்களுக்கு எவ்வித தீங்கும் நேரா வண்ணம் காக்கவும் பச்சைப் பட்டினி விரதமிருந்து கடுமையான தவம் செய்து இச்சா, கிரியா, ஞானசக்திகளைப் பெற்று பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமான நிகழ்வு இது. ஆண்டுதோறும் மாசிமாதக் கடைசி ஞாயிற்றுக் கிழமை தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறுவரை 28 நாட்கள் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் மேற் கொள்வார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விரதம் 32 நாட்களாக இருக்கும். மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் காலத்தில் வழக்கமான நைவேத்தியங்கள் படைக்கப்படு வதில்லை. உண்ணா நோன்பு மேற்கொள்ளும் மாரியம்மனுக்கு உப்பில்லா நீர்மோர், கரும்பு பானகம், இளநீர் மற்றும் குளிரூட்டும் கனிவகைகள் மட்டுமே நைவேத்தியமாகப் படைக்கப்படும்.
பச்சைப் பட்டினி விரதத்தின் கடைசி நாளில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் தொடங்குகிறது. 10வது நாளில் தேரோட்டம் நடை பெறுகிறது. இத்தருணத்தில் அன்னையை வழி பட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். 12 ராசிகளின் அதிபதியாக அன்னையே விளங்கு வதால் அது தொடர்பான அனைத்து தோஷங்களை யும் அகற்றுகிறாள்.
பச்சைப் பட்டினி விரதத்தின் தொடக்க நாளில் பூச்சொரிதல் தொடங்குகிறது. மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று இவ்விழா வெகு விமரிசையாக நடை பெறும். இந்நாளில் காலை திருக்கோயில் பார்வதி மண்டபத்திலிருந்து பக்தர்கள் அனைவரும் புஷ்பக் கூடையுடன் திருவீதி உலா வருகின்றனர்.
காலை 8 மணிக்கு மேல் அம்மனின் பச்சைப் பட்டினி விரத காப்பு கட்டுதல் துவங்குகிறது. அன்று மாலை 3 மணிக்கு அம் மனுக்கு அபிஷேகம் நடை பெறுகிறது. அதையடுத்து மகா மண்டபத்தில் சாய ரட்சை பூஜை அம்பாளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதில் பச்சை மாவு, இளநீர், பாவாடை நைவேத்தியம் மற்றும் பழ வகைகள், நீர் மோர், வடை, பருப்பு பானகம், துள்ளுமாவு ஆகியன அன்று முதல் 28 நாட்களுக்குப் படைக்கப்படுகின்றன. பக்தர்கள் நலன் கருதி அன்று இரவு முழுவதும் திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைப் பல்வேறு மலர்களால் அலங்கரித்து வழிபட்ட வண்ணம் இருப்பர்.

பொதுவாகத் தேர்த் திருவிழா என்பது பிரம்மோத் சவத்தைக் குறிக்கும். இப்பெருவிழா இன்பத்திரு விழாவாய் பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழா வில் கொடியேற்று விழா, வாகனாதி விழா, தேர் விழா மற்றும் தீர்த்த விழா ஆகியவை முக்கியத் திருவிழாக்களாக நடைபெறும்.
அன்று காலை 10 மணிக்கு அம்பாள் திருக்கோயிலிலிருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேர்கிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்பாள் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதே தொடங்குகிறது. இரவு 10 மணி வரை திருத்தேரிலேயே பொதுமக்களுக்கு அம்பாள் காட்சி தருகிறாள். இரவு 10.30 மணிக்கு திருத்தோரை விட்டு இறங்கி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள்.
உற்சவ அம்பாளுக்கு தினமும் காலை 7.30 மணிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகத் தீர்த்தம் காலை சந்தி முடிந்தவுடன் திருக்கோயில் வடக்கு பிரகாரத்தில் தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள், உடல் நலக் குறைவு உள்ளவர்கள் அனைவரும் நோய்யின் தன்மை குறைந்து விரைவில் நலம் பெறுகிறார்கள் என்பதும் அனுதினமும் காணப்படும் உண்மை.
கிழக்கு, மேற்கு நுழைவுவாயில் ராஜகோபுரங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது தெற்கு, வடக்கு நுழைவுவாயில் அமைக்கப்பட்டு, புதிய ராஜகோபுரங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாயில் ராஜகோபுரத்தை 7 நிலைகள் கொண்டு அமைக்கத் திட்டமிட்டிருப்பதால் இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கவிருக்கின்றன.
பக்தர்கள் வசதிக்கான தங்கும் அறைகள், ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டணமில்லா மண்டபம், முடிகாணிக்கை மண்டபங்கள் என சுமார் ரூ.25 கோடிக்கு மேல் திருப்பணி களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்புப் பெட்டக வசதிகள் ஆகிய வற்றைக் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. தமிழகத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி
கோயிலுக்கு அடுத்து, ஆண்டு வருவாயில் (ரூ.50 கோடி) 2-ஆம் இடத்தில் திகழ்வது இத்திருத்தலம். சமயபுரம் கோயிலுக்குச் சாதாரண நாட்களில் 30,000 முதல் 50,000 பேரும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 75,000 முதல் 1 லட்சம் பேர் வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பற்றி நம்முடன் பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் எஸ்.கனகசபாபதி ஓதுவார்.
இறையருள் பெற சமயபுரத்துக்கு ஒருமுறை சென்று வருவோம். திருக்குடமுழுக்கு மிகச் சிறப் பாக நடந்து முடிந்திருக்கும் இத்தருணத்தில் அருள் மிகு சமயபுரம் மாரியம்மனை மனதாரத் தொழுது வணங்குவோம்.

Comments