அல்லிக்கேணி முருகனுக்கு ஆலயம் எழும்பட்டும்!

சென்னை- திருவல்லிக்கேணி, என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது எட்டாம்படைவீடு முருகன் திருக்கோயில். சுமார் 150 வருடங்கள் பழைமையான, பரிகார வழிபாடுகளுக்குப் பிரசித்திப்பெற்று இந்த ஆலயம் .
முற்காலத்தில் திருப்போரூருக்குப் பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் திருவல்லிக்கேணியில் தங்கி இளைப்பாறிச் செல்வது வழக்கம். அப்படி அவர்கள் தங்கும் நாள்களில் முருகனை வழிபட             கட்டப்பட்ட கோயில் இது. இங்கு வந்து முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கும், மாங்கல்ய பலம் பெருகும், சஷ்டி தினங்களில் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் தொழில் வெற்றி, பதவி உயர்வு, வீட்டில் சுபகாரியம் தடையின்றி நிகழ என்று பல்வேறு வேண்டுதல்களை இந்த முருகனிடம் சமர்ப்பித்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.

இத்தகு மகிமைகள் கொண்ட இந்த ஆலயத்தைக் கற்றளியாகக்கட்டி, மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதற்கேற்ப மூன்று வருடங்களுக்கு முன்பாக 8.3.14 அன்று பாலாலயம் செய்யப் பட்டது. கர்ப்பக்கிரஹம் - விமானம் கற்றளியாகவே அமைய வேண்டும் என்ற முனைப்போடு திருப்பணிகளும் மெள்ள மெள்ளத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில்,  பொருளாதாரப் பற்றாக்குறையால் தற்போது பணிகள் முழுமை பெறாமல் தேங்கி நிற்கின்றன. உற்ஸவ மூர்த்திக்கே அனுதின ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

மாயோன் அருளும் திருத்தலத்தில் சேயோனுக்கும் திருக்கோயில் திகழ்வது மிகவும் சிறப்பல்லவா? அப்படியான சிறப்பை அடுத்தடுத்தத் தலைமுறையினரும் கண்டுணர்ந்து, வணங்கி வழிபட்டு வரம்பெற வேண்டாமா?

அல்லிக்கேணியில் அழகன் முருகனின் திருக்கோயில் மீண்டும் பொலிவுடன் எழும்ப நாமும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். எட்டாம்படைவீடு முருகன் திருக்கோயில் திருப்பணிக்குக் கரம் கொடுப்போம்;  முருகனின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்.

Comments