வாழை இலையில் முதலிடம் எதற்கு?

சுபகாரியங்களின்போதும், சுபச் செய்திகளைச் சொல்லும்போதும் மகிழ்ச்சியுடன் சர்க்கரை வழங்குவது வழக்கம். ஆனால் சில இடங்களில், வாழை இலையில் பரிமாறும்போது, உப்பையே முதலில் வைக்கிறார்கள்.  நீங்கள் சொல்லுங்கள்... வாழை இலையில் முதலில் பரிமாறப்படவேண்டியது உப்பா, இனிப்பா?

அறுசுவையில் எல்லோராலும் விரும்பப்படுவது இனிப்பு என்கிறது சாஸ்திரம் (ஸர்வப்ராணி மனோகரம்). உப்பு என்பது சுவை ஏற்றுவதற்குப் பயன்படுவது. இதை, சுவையின் முதல்வன் என்று சாஸ்திரம் கூறும் (ரஸானாம் அக்ரஜம்...). மாறுபட்ட கோணத்தில் இரண்டுக்குமே சிறப்பு உண்டு. ஒன்றுக்கு துயரம், மற்றொன்றுக்கு மகிழ்ச்சி என்று வரையறுப்பது நமது தனிப்பட்ட எண்ணமே! அவை இரண்டும் துயரத்தையோ மகிழ்ச்சியையோ குறிப்பதில்லை. இனிப்போ, உப்போ... இரண்டுமே அளவுக்கு அதிகமாக உடம்பில் தென்பட்டால், உடல் உபாதையைத் தோற்றுவிக்கும் என்கிறது ஆயுர்வேதம்.

எப்படி இருந்தாலும், விருந்தோம்பலில் இலையில் பரிமாறும்போது இனிப்பு வைப்பது சிறப்பு. உண்பவர் முதலில் இனிப்பைச் சந்திக்கும்போது, ஈடுபாட்டுடன் அந்த விருந்து உபசாரத்தை ஏற்பார். ஆகையால், எல்லோருக்கும் பிரியமான இனிப்பைக் கையாளுவதே சிறப்பு.

நீராடுதலின் நியதி குறித்து சாஸ்திரம் கூறும் அறிவுரை என்ன? சிலர், தீர்த்தங்களில் கால் நனைத்தால் போதும் என்கிறார்களே, இது சரியா?


 ஆறு-குளங்களில் நீராடும்போது, கால்கள்தான் முன்னே செல்லவேண்டும்; அதுவே நியதி. கால்கள் தண்ணீரைத் தொட்டால் நீராடியதாகாது; தலை முழுகினால்தான் நீராடியதாகும். 

இறையுருவத்தை வணங்கச் செல்லும் போது, கால்கள்தான் முதலில் ஆலயத்தில் நுழைகின்றன. எனவே, அப்போதே இறைவணக்கம் ஆரம்பித்துவிட்டதாகக் கருதுவது தவறு! கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்கும்போதுதான், வணக்கம் நிகழ்கிறது. அலுவலகத்தை மிதித்ததும், நமது வேலை ஆரம்பமாகிவிட்டது என்றா எண்ணு கிறோம்?!

நகரத்தில் வசிப்பதில் பெருமைப்படும் நாம், குவளைத் தண்ணீரைத் தலையில் கொட்டிக்கொண்டு நீராடுவதை முடித்துக் கொள்கிறோம். கிணற்றடி அல்லது குழாயடியில் குளிக்கும்போது, முதலில் தலைக்குத் தண்ணீர் விட்டுக்கொள்ள வேண்டும். வாளித் தண்ணீரை அப்படியே தலையில் கவிழ்த்து நீராடுவது, சிறப்பு.

தூக்கத்துக்குப் பின் உடலின் சூடு சற்று அதிகமாகவே இருக்கும். முதலில் உடலில் தண்ணீரைவிட, அதன் தாக்கத்தில் உள்ளிருக் கும் சூடு, தலையில் பரவும். அதன் தாக்கம், தலையில் உள்ள அறிவுப் புலன்களை பாதிக்கலாம். முதலில் தலையில் தண்ணீர் விட்டுக்கொண்டால், அதன் தாக்கத்தில் சூடு இறங்கும்போது, பாதிப்பு ஏதும் இருக்காது என்கிறது ஆயுர்வேதம். ஆகவே, சிரசில் தண்ணீர் விடப் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம்.

செயலில் சுறுசுறுப்பு பெற, சுகாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். இறையுருவங் களுக்கு நீராட்டு என்பதும், சிரசில் இருந்தே துவங்குவதைக் காணலாம்.


அறிவுப் புலன்களின் ஆற்றலே வாழ்வின் ஆதாரம். குளிர்சாதன அறைகள், டி.வி. பெட்டிகள், சொகுசு வீடுகள், வாகனங்கள், கைபேசிகள், அலங்கார ஆடைகள்... என தரத்தை மேம்படுத்தும் பொருளாதாரச் செழிப்பைக் கொண்டவர்கள், குளியலறையில் அகண்ட தொட்டி அமைத்து, மூழ்கிக் குளிக்கமுடியுமே!

கிராமங்களைப்போல் நகரத்திலும் அவ்விதமாகக் குளிக்க முடியும். தலைக்கு முதலில் நீர் விட்டுக் குளிப்பதே ஆரோக்கி யமானது!

 குழந்தையின் ஜனன நட்சத்திரம் ஒரே மாதத்தில் இரண்டு முறை வரும்போது எந்த நாளை பிறந்த தினமாக ஏற்பது?


இரண்டு முறை வரும் நட்சத்திரத்துடன் லக்னமும் திதியும் ஒட்டாமல் இருக்கலாம்; இரண்டிலும் ஒட்டிக்கொண்டும் இருக்க லாம். பிறந்த நாள் நட்சத்திரத்தை வைத்து வரும் அது... திதி, லக்னம், கிழமை மற்றும் தேதியுடன் சம்பந்தத்தை எதிர்பார்க்காது.

புனர்வசு நட்சத்திரம், மதிய வேளையில் இல்லாத நாளிலும் ஸ்ரீராம நவமி, வரும். நவமி கடக லக்னத்தைத் தொடாமலும் வரும்.

இரவு அஷ்டமி பிறக்கும் வேளையில் இல்லாமலும், ரோஹிணி நட்சத்திரம் அந்த வேளையில் இல்லாமலும் ஜன்மாஷ்டமி வரும். அவற்றில், பொதுமக்களின் பரிந்துரையை எதிர்பார்க்கவில்லை தர்மசாஸ்திரம்.

இக்கட்டான சூழலில் செயல்படும் விதத்தை, சந்தேகத்துக்கு இடமின்றி, பயனுள்ள முறையில் விளக்குகிறது தர்மசாஸ்திரம். நட்சத்திரத்தை வைத்து மாதத்தைக் கணக்கிடும் முறை உண்டு. 27x 10 = 270 என்பதை பத்து மாதங்களாக எடுத்துக்கொள்வது உண்டு. மகப்பேற்றை நிறைவு செய்வது நக்ஷத்திரமானம்.

365 நாட்களைக் கொண்ட சௌரமானத் தின் கணக்கிலான 10 மாதங்கள் வரை கருவறையில் தங்கும் குழந்தைகள் இருப்பது அரிது. பிறந்த நாட்களை சௌரமான அளவுகோலில் கடைப்பிடிப்போம். ஆகையால் 2-வது நட்சத்திரத்தை பிறந்த நாளாக ஏற்பது சிறப்பு என்று தர்மசாஸ்திரம் கூறும்.

முதலில் வருவதை ஏற்கும்போது, சில நேரம் 27 நாட்கள் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு. சௌரமானக் கணக்கைச் சரி செய்ய, இரண்டாவதைத் தள்ளவும் இயலாது மாதம் மாறிவிடும். ஆகையால் இரண்டாவது நட்சத்திரமே வருஷத்தை நிறைவு செய்வதில் நம்பிக்கைவைக்க உகந்தது.

புதிதாக வீடு கட்டி வருகிறோம்; வாசக்கால் வைக்கவுள்ளோம். வாசக்காலில், நவ ரத்தினங் களை எந்த தருணத்தில் இடவேண்டும்? மனைவியின் நட்சத்திரத்துக்கு தகுந்தபடிதான் வாசக்கால் வைபவ நாளை தீர்மானிக்க வேண்டுமா?

 !வீடு கட்டத் துவங்குவதற்கு முன்பு, மனையைத் தூய்மைப்படுத்தி, வாஸ்துவை வணங்கவேண்டும். அதனை, ‘கிரஹாரம்பம்’ என்பர். வாசக்கால் வைப்பதற்கு நல்ல வேளையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போதே, நவ ரத்தினங்களை வாசக்காலின் அடியில் வைக்கவேண்டும்.

கணவன், மனைவி- இருவரின் நட்சத்திரங் களையும் கருத்தில் கொண்டு, வாசக்கால் வைப்பதே உத்தமம். அதில், ஒருவருக்குக் குறை இருந்தாலும் இரண்டு பேரையுமே, அதாவது குடும்பத்தையே பாதிக்கும்.

 குடும்பத்துடன் சிவாலயம் சென்று வந்தோம். அங்கே, பிரசாதமாகத்  தரப்பட்ட பெரிய மாலை ஒன்றை வீட்டு வாயிலில் தொங்கவிட்டிருந்தார் என் மனைவி.

எங்கள் வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர்,  `இறைப் பிரசாதமான தெய்வ மாலைகளை இப்படிப் பயன்படுத்தக் கூடாது' என்று கூறினார். இதுகுறித்து தங்களது அறிவுரை என்ன?

! இறையுருவத்தில் சாத்திய மாலைகளை தரம் தாழ்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்தக் கூடாது. நீர் நிலைகளிலோ அரச மரத்தடியிலோ சேர்க்கலாம். இல்லத்தரசி களும், பெண் குழந்தைகளும் அந்த மலர் மாலைகளைத் தலையில் சூடிக்கொள்ளலாம். வீட்டு முகப்பிலும், வாகனங்களிலும் கட்டித் தொங்கவிடுவது சரியல்ல.

பிரசாதங்கள் போதுமான அளவில்தான் வழங்கப்பட வேண்டும். முழு மாலையாக பிரசாதத்தை வழங்கவேண்டிய கட்டாயம் இல்லை. முகர்ந்து பார்க்கும் அளவுக்கு புஷ்பத்தை வழங்குவதே சிறப்பு. பக்தனை மகிழ்விக்கும் எண்ணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில், அளவுக்கு மிஞ்சிய உபசாரம் தலைகாட்டுகிறது. இதைத் தவிர்த்து, இறைவனை மகிழ்விப்பதே இலக்காக இருக்க வேண்டும்!
 வீட்டு விலக்காகும் பெண்கள், தலைக்குக் குளித்து, எத்தனை நாட்கள் கழித்து வழிபாடுகளில் ஈடுபடலாம்?


நான்காம் நாளில் நீராடினால், பெண் தூய்மை பெறுகிறாள்' என்கிறது சாஸ்திரம். ஆகவே, பூஜை - வழிபாடுகளில் நான்காம் நாள் ஈடுபடலாம். ஆனால், குறிப்பிட்ட சில காரியங்களுக்கு... அதாவது, தர்மசாஸ்திரம் நடைமுறைப்படுத்தச் சொல்லும் காரியங்களுக்கு, ஐந்தாம் நாள்தான் அவர்கள் முழுமையாக சுத்தியடையும் நாள் என்கிறது தர்மசாஸ்திரம். அப்போதுதான் ஸம்ஸ்கார காரியங்களில் ஈடுபடுவதற்கு அவளுக்கு போதுமான அதிகாரம் கிடைக்கும் என்பது சாஸ்திரத்தின் அறிவுரை.
ஆனால் இன்றைக்கு, மாதவிலக்கு- நித்திய பூஜை ஆகியவை, அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி மாற்றி அமைத்துச் செய்யப்படுவது நடைமுறையாகிவிட்டது.

ஆசை மற்றும் பாசத்தைத் தள்ளிவைத்து, ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பெற, சாஸ்திரங்கள் சொல்வதன்படி செயல் படுகிறவர்களுக்கே மேலே சொன்ன நியதிகள் பொருந்தும். பழைய நடைமுறைகளைப் பற்றிய வெறும் தகவல்கள், அறிவு தராது; மேம்படுத்தாது!

Comments