பாலைவனத்தில் அருளும் பராசக்தி!

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகில், ஜெசல்மீர் பாலைவனப் பிரதேசத்திலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் தன்னோத் என்ற இடத்தில் அமைந்துள்ளது மாதா மாதேஸ்வரி திருக்கோயில். ஜெய்சல்மீர் எனும் பெயர் தோன்றுவதற்கு முன்பு இந்தப் பிரதேசத்தை ஆண்ட ரஜபுத்திரர்களின் தலைநகரான தனுக்கோட்டாவாக இந்த இடம் இருந்ததாம். அப்போதைய அரச பரம்பரையினரின் குல தெய்வமாக தன்னோத் மாதேஸ்வரி தேவி வழிபடப் பட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். பிற் காலத்தில் அரச பரம்பரையினர் மாறிய போது லொதர்வா, ஜெய்சல்மீர் என்று அவர்கள் ஆட்சிப் பீடத்தின் தலைநகர்களும் மாற்றப்பட்டன என்பது வரலாற்றுச் செய்தி.
இந்தப் பாலைவனப் பிராந்தியத்தை அலைக் கழிக்கும் மணல் காற்று, அதிக வெயில், அதீத குளிர் என்று மாறுபடும் சீதோஷ்ண நிலைகளே மாதா மாதேஸ்வரி தேவியின் திருக்கோயில் சிதைந்து போகக் காரணமாகி விட்டன.
1971ல் இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்ட சமயத்தில் எல்லைப் பகுதியைக் காக்க பாதுகாப் புப்படையினர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரம். அப்போது, பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து, இந்தப் பகுதி செக்போஸ்டை ஆக்கிரமித்தனர். அப்போது அவர்கள் எறிந்த வெடிகுண்டுகள் ஒன்று கூட வெடிக்கவில்லை. இது அவர்களை மிகவும் திகைக்க வைத்தது. அதுமட்டுமின்றி, அன்றே இரவோடு இரவாக இருட்டின் போர் வையில் ரகசியமாக முன்னேறி விடி வதற்குள் இந்திய எல்லைக்குள் நுழைந்து இன்னும் சில இடங்களைக் கைப்பற்றுவது அவர்களது திட்டமாக இருந்தது.
அதன்படி, நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கிளம்பிய சமயம் பாலைவனப் பிரதேசத்தில் வழி தெரியாமல் அவர்களுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் வெள்ளைப் புடைவை அணிந்த, அழகிய பெண் ஒருத்தி அவர்கள் முன் வந்து நின்றாள். ‘மனித சஞ்சாரமே இல்லாத இந்த பாலை வனப் பிராந்தியத்தில், அதுவும் நள்ளிரவு நேரத்தில் பெண்ணொருத்தி எப்படி இங்கே வந்தாள்’ என்று அவர்கள் குழப்பம் அடைந்தார்கள்.
அப்போது அப்பெண், வழி தெரியாமல் தடுமாறுகிறீர்களா? என் பின்னால் வாருங்கள் வழிகாட்டுகிறேன்" என்று கூறினாள். அதைக் கேட்ட பாகிஸ்தான் படையினர், அவள் முன்னே நடக்க, அவளது பின்னே நடந்தார்கள். அப்படி அவர்கள் எவ்வளவு தூரம், எத்தனை மணி நேரம் நடந்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை. கண்ணெதிரே நடந்து சென்று கொண்டிருக்கையிலேயே நடுவழியில் அந்தப் பெண் திடீரென்று மறைந்து காணாமல் போனாள். இதைக் கண்டுதிகைத்த பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து முன்னேற முடியாமல் அன்றைய இரவுப் பொழுதை அந்த இடத்திலேயே கழிக்கத் தீர்மானித்தார்கள்.
பொழுது விடிந்ததும் எழுந்து பார்த்த ராணுவ வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சி. தாங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பி, நெடுந்தூரம் வந்து விட்டது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது.
இதற்குள் எச்சரிக்கையான இந்திய ராணுவப் படையினர், தங்களது படை பலத்தை அதிகரித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு விட்டதால், மீண்டும் எதிரிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முடியாமல் போயிற்று.
போர் நிறுத்தமான பிறகு நடந்தது அனைத்தையும் உணர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர மான தேடலில் இறங்கினர். அப்போது, தன்னோத் பகுதியில் வெடிக்காமல் செயலற்றுப் போயிருந்த சில வெடிகுண்டுகளும், பளிங்கினாலான மாதேஸ்வரி
தேவியின் சிலையும் கிடைத்ததாம். வெடிகுண்டுகள் வெடிக்காமல் போனது, தேவியின் மகிமையே என்று உணர்ந்த அவர்கள், அம்பாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவ்விடத்தில் ஒரு கோயிலை எழுப்பி, அதில் அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழி பட்டனர்.
தேவியை இங்கே, ‘எல்லை காத்த அம்மன்’ என்றும், ‘மகா சக்தி’ என்றும் அழைக்கிறார்கள். பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வேண்டிக்கொண்டு, வண்ணத் துணிகளைக் கட்டிவைக்கும் கம்பங்கள் இங்கே காணப்படுகின்றன.
பாகிஸ்தான் படையினரால் வீசப்பட்டு, வெடிக் காமல் செயலிழந்து போன வெடிகுண்டுகள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மாதேஸ்வரி தேவியைத் தரிசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். பாலைவனத்தின் மத்தியில், பக்தியில் சிலிர்க்க வைக்கும் பின்னணியுடன் அமைந்த இதுபோன்ற ஒரு அம்பாளுக்கு அமைந்த ஒரு திருக்கோயிலை தரிசிக்கையில் பிரமிப்பு தான் ஏற்படுகிறது!

Comments