அபரஞ்சி கழுத்தில் அரங்கன் மாலை!

உள்ளூர் மாடு விலை போகாது என்று நம் தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு பழமொழி உண்டே! சித்தர் கருவூராருக்கும் அப்படித்தான் ஆனது!
கருவூராரின் பெருமையை உலகம் உணர்ந்து கொண்டு ஆராதிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால், அவர் தோன்றிய ஊரான கருவூரிலோ அதற்கு நேர் மாறாக இருந்தது. கருவூரார் மதுவும் மாமிசமும் வைத்து வழிபாடு செய்பவன், ஒழுக்கமும் அறிவும் அற்றவன். கோயிலைத்திறந்து இறைவனைக் காட்டும் நம்மைவிட அவனுக்கு அதிகம் தெரிந்து விடுமா?" என்று தூற்றி அந்தணர்கள் அவரை அவமானப்படுத்தினர். அகந்தையின் உச்சம் தொட்ட அவர்களின் பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாக கருவூரார் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அவர்களை நல்வழிப்படுத்த பொறுமையுடன் வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துச் சொன்னார்.
ஆனால் அவர்களோ, வெளியூர்க்காரர்கள் ஏதோ தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால், நாமும் அவன் பேச்சைக் கேட்டு அடிபணிந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறானே இவன்" என்று கருவூராரை மேலும் அவமானப்படுத்தினர். இனி, இவர்களிடம் பேசிப் பலனில்லை என்று முடிவு செய்த கருவூரார், நேரே பெருமானிடம் முறையிட்டார்.
கருவூராரின் திறனை உலகறியச் செய்ய எண்ணிய பெருமானும், அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கினார். அன்று நடுப்பகல் நேரம். தகிக்கும் சூரியனின் கிரணங்கள். கருவூராரின் வாய்மொழி முறையீட்டைக் கேட்ட நொடிப் பொழுது, திடீரென இருள் சூழ்ந்தது. கருமேகங்கள் திரண்டன. இடியும் மின்னலும் இன்னல் விளைவிக்க, அமராவதி அசராமல் ஓடியது. ஆற்றுப் பெருவெள்ளத்தில் எல்லோரும் அலைக்கழிந்தனர். ஆலயத்தின் கதவுகள் தாமேதிறந்தன. ஒருசிலர் இதை கருவூராரின் அதிசயமாய்ப் பார்க்க, வேறு சிலரோ இறைவன் செவி மடுத்ததாய் உணர, ஆலய அந்தணர்களோ, ‘கருவூரான் ஸித்து வேலை செய்கிறான்’ என்று கூறி நகைத்தனர்.
சொல்லுக்கு மதிப்பற்ற இடத்தில் சொர்க்கத்தையா காட்ட முடியும்? துயரம் சூழக் கிளம்பி விட்டார் கருவூரார். கால்போன போக்கில் கிளம்பிப் போனவருக்கு, அந்தப் பெருமானே வெகுமதி அளித்தார்.
பிறந்த ஊரில் சிறப்பு கிட்டவில்லை. உடனிருந்த மக்களே அவமானப்படுத்தினர். ஆயினும், அவர்கள் மீது கோபம் கொள்ளாது, பரிதாபமே மிக இருந்தது கருவூராருக்கு! ‘நம் போதனைகளை நற்சாதனைகளாக ஏற்காமல், சொதனைகளையே தாங்கிக் கொள்கிறார்களே! இம்மக்களைக் கடைத்தேற்றுவது யாரோ? நல்லன போதித்தால், நமக்குக் கைக்கொள்ளத் தக்கது இதுவல்ல என்கிறார்களே! அவரவர் கர்ம வினையின் படிதான், அவரவர் வாழ்க்கையும் அமையும். அவரவர் வினைப்படியே மண்ணும் பொன்னும் பெண்ணும் அமையும் என்பது சரிதான்போலும்’ என்று எண்ணிய வாறேகால் போனதிக்கில் சென்றார்.
கங்கைகொண்ட சோழபுர ஈசன், அவர் கண்களில் தெரிந்தார். கருத்தும் அவர் மீது பதிந்தது. உலகத்து மக்களின் ஒட்டாத இயல்புகளையே சிந்தித்து வந்தவர், சித்தத்தை சிவனில் வைத்ததும் சிந்தனைக் கினிய தமிழால் பாடலும் புனைந்தார். சித்த புருஷரின் வாய்யில் இருந்து வந்த சொற்களுக்கு மதிப்பளிக்கும் விதமா சிவனே தோன்றி, அவர் சிரத்தில்தம் கரம் வைத்து தீட்சையும் தந்து குருவாகி ஆசியளித்தார்!
கண்ணுதற் கடவுளின் கருணையை எண்ணி வியந்தபடி வெளியில் வந்தார் கருவூரார். அவர் கவனம் கலைக்கும்வண்ணம் காகம் ஒன்று, ‘கா... கா’ வெனக் கரைந்து பறந்து வந்தது. காலிற் சுமந்து வந்த ஓலைச் சுருளொன்றை அவர் பக்கம் வீசிச் சென்றது. கருவூராரின் கருத்தைக் கவர்ந்த காகத்தின் செயல், தம் குருநாதரின் ஆணை எனப் புரிந்தது. ஓலை நறுக்கைப் பிரித்தார், படித்தார். குருநாதர் போகர் அவரை வாவென அழைத்திருந்தார்.
குரு போகரின் அழைப்பை ஏற்று அவரைச் சென்று பணிந்தார் கருவூரார். சீடரின் மனநிலை புரிந்த போதும், பெருமானின் தீட்சை பெற்று தீட்சண்யமா விளங்கும் கண்ணொளி கண்டு போகருக்கு ஆனந்தம். போகர் சொன்னார், கருவூரா! பூதவுடல் உள்ளபோதே புகழுடல் கிடைத்தல் அரிது. பெருமானருளால் உனக்கு அது கிடைத்துள்ளது. கோபத்தை விடுத்து, முயற்சியைக் கூட்டு. வாழ வழிகாட்டுபவர்களுக் குத்தான் உலகம் அளவில்லாத கவலையைக் கொடுக்கும். ஆனாலும், அவர்களைக் காப்பது நம் கடமை" என்று சொல்லி, ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினார்.
மனபாரம் சற்றே இறங்கப்பெற்ற கருவூரார், போகரிடம் விடை பெற்று, தம் மனத்துக்குகந்த தெய்வ மான உபய காவேரி மத்தியில் அரிதுயில் கொள்ளும் பரந்தாமன் அரங்கனின் ஆலயத்துக்கு வந்தார். பெருமாள் புன்னகைத்தார். இவரை வைத்து ஒரு திருவிளையாடலை நிகழ்த்ததம் மனத்துள் சங்கல்பித்துக் கொண்டார். அதற்குக் கட்டியம் கூறும் முகமாக, தாசிப் பெண் அபரஞ்சி அவர் முன் நின்றாள்.
அற்புதமான சித்த புருஷர், அனுபவ சாதனை மிக்க இவரிடம் இருந்து நாம் இந்த வாழ்வைக் கடைத்தேற்றும் சாதனை வழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மனத்தில் எண்ணியவளா, சித்தரைத் தம் இல்லத்துக்கு வருமாறு அழைத்தாள்.
சிந்தனைத் தெளிவு கொண்ட சித்தர் பெருமானும், இவள் ஒரு தாசிதானே என்று நினையாமல், அவளின் அழைப்பை ஏற்றார். ‘யோக சாதனையில் முன்னேற்றம் கண்ட இவள், எளிதாக நம்மை அடையாளம் கண்டு கொண்டாள். இவள் முன்னேற்றத்துக்கு நாம் வழிகாட்டலாம்’ என்று எண்ணினார் கருவூரார்.
‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது பழமொழி. சாதனா மார்க்கத்தில், பாம்பு என்பது குண்டலினி யோகத்தைக் குறிக்கும். அவ்வாறே, ஒரு சாதகராக உள்ள இவள், நம்மை அடையாளம் கண்டு கொண்டாளே என்ற ஆச்சரியத்தில் அவள் வீடு நோக்கி நடந்தார். சித்தர் பெருமானைத் தம் இல்லத்துக்கு வரவழைத்த அபரஞ்சி, இரு நாட்கள் அவரைத் தங்க வைத்து, அவரிடம் இருந்து யோக சாதனா மார்க்கத்தைக் கற்றுக் கொண்டாள்.
தாசியின் பக்குவ நிலையும் பக்தி நிலையும் கண்ட சித்தர் கருவூராருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி உருவானது. இன்றைய உலகில் உனைப் போல் தெளிவு கண்டவர்களைப் பார்ப்பது அரிது. சித்த சாதனையில் தலைசிறந்த சாதகியான உனக்கு பள்ளி கொண்ட பிரானாகிய அரங்கன் அளித்த பரிசு" என்று கூறி, ஒரு நவரத்தின மாலையைப் பரிசளித்தார்.
அபரஞ்சி வியந்தாள். விழுந்து வணங்கியவளிடம் அவர் சொன்னார், அபரஞ்சி நீ நினைக்கும் நேரத்தில் நான் அங்கு வருவேன்" என்று கூறி அங்கிருந்து நொடியில் அகன்றார்.
கதிரவன் குண திசைச் சிகரம் அடைந்து நிற்க, அங்கே அரங்கன் திருமுற்றத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடப்பெற்றது. அரங்கனின் சன்னிதிக் கதவினைத் திறந்து விளக்கேற்றினார். திடீரென ஏதோ ஒரு வித்தியாசம் அரங்கன் மீது தெரிந்தது. அப்போதுதான் கவனித்தார், அரங்கனின் மார்பில் அசைந்தாடிய அந்த நவரத்தின மாலையைக் காணோமே என்பதை!
அடுத்த நொடி அலறினார். அரங்கனுக்கு அணி செய்த ஆபரணத் தைக் காணவில்லை என்று! அவரது அலறல் சத்தம் கேட்டு அனைவரும் அங்கே குவிந்தனர். அந்த நேரத்தில்தான், அபரஞ்சியும் அங்கே அரங்கனின் தரிசனத்துக்காக வந்து கொண்டிருந்தாள். அவள் கழுத்தில், சித்தர் கருவூரார் அளித்த நவரத்தின மாலை மின்னியது. அன்பர்கள் சிலர் அதைக் கண்டு திடுக்கிட்டனர்.
அரங்கன் மாலை, அபரஞ்சியின் கழுத்தில் எப்படி வந்தது? அவள்தான் இதனைத் திருடியிருக்க வேண்டும்! ஆனால், எப்படி...?" ஆளாளுக்குக் குரல் எழுப்பினர். அபரஞ்சியோ அசரவில்லை. அமைதியாக, அரங்கன் சார்பில் இதனை கருவூரார் எமக்களித்தார்; அவன் இன்று இரவும் வருவார்" என்று கூறினாள்.
அங்கிருந்தோர் கருவூராரை ஏகத்துக்கும் திட்டித் தீர்த்தனர். ஒரு தாசியிடம் மயக்கம் கொண்ட பித்தரோ! இவரெல்லாம் சித்தரா? வரட்டும். இன்று இரவு அவரை விடப் போவதில்லை" என்று கூறிய அன்பர் கூட்டம், அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக அந்த மாலையைப் பறித்து, அவமானப்படுத்தி விரட்டியது.
அவள் மாலை கிடைத்தபோது மகிழவுமில்லை, பறித்தபோது வருந்தவுமில்லை. சித்த சாதனையில் தேர்ந்தவளாகி விட்டாள். அரங்கன் திருவுள்ளத்தைச் சிந்தித்தபடி தன் இல்லம் சென்றவள், சித்தரை மனத்தில் தியானித்தாள். அவளுக்குக் கொடுத்த வாக்குப்படி, கருவூராரும் அவள் முன் வந்து நின்றார்.
அதேநேரம், அபரஞ்சியின் வீட்டுக்கு வெளியில் காத்து நின்ற வீரர்கள், அவள் இல்லத்துள் நுழைந்தார்கள். கருவூராரைப் பிடித்து, கைகள் இரண்டையும் கட்டி, இழுத்துக் கொண்டு போய் அரங்கன் ஆலய நிர்வாகிகள் முன் நிறுத்தினர். அபரஞ்சியும் பின்னாலேயே ஓடினாள். வேடிக்கை பார்த்தனர் பலர். கருவூராரோ, அரங்கனை தியானித்தார்.
அதிகாரி கேட்டார், கருவூராரே! உங்களுக்கும் இந்த தாசிக்கும் என்ன தொடர்பு?
நீங்கள்தான் இதனைக் கொடுத்ததாக சொல்கிறாள். சித்த புருஷர் ஆண்டவன் சொத்தை அபகரிக்கலாமோ?" என்றார். அதற்கு கருவூரார், இவள் என் சிஷ்யை. இவளை தாசி என்று நினைக்கிறீர்கள். ஆனால், அவளது பக்திக்கு மெச்சி அரங்கன் தன் அடியார்க்கு அடியேன் மூலம் அளித்த பரிசு அது" என்றார்.
அதை அரங்கன் முன் சொல்வீரா?" என்று அதிகாரி கேட்க, வாருங்கள் அரங்கனிடமே செல்வோம்" என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு சன்னிதி முன் நின்றார். அனைவரும் கூடியிருந்தனர். அரங்கன் சன்னிதி உள்ளிருந்து அசரீரியாக் குரல் கொடுத்தான், நீங்கள் எனக்கு அலங்காரம் செய்து பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நானோ என் அடியார்க்கு அலங்காரம் செய்ய ஆசைப்படுகிறேன். நானே கருவூரார் மூலம் என் பக்தை அபரஞ்சிக்கு இதனைச் சேர்ப்பித்தேன்" அமைதியைக் கிழித்துப் பாந்த இடியென அந்த அசரீரி ஒலித்தது. அனைவரும் நடுங்கினர். அரங்கனிடம் அபசாரப்பட்டோமே என்று அஞ்சினர்.
கருவூராரிடமும் அபரஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டு, அந்த நவரத்தின மாலையை அவளிடமே கொடுத்தனர். அபரஞ்சியோ, இது கடல் நிறக் கடவுளும் கருவூராரும் நிகழ்த்திய அருளாடல். இந்த மாலை அரங்கன் திருமார்பில் அணி செய்ய வேண்டியது. அடியவளுக்கு அல்ல" என்று கூறி அதனைத் திருப்பிக் கொடுத்தாள். அவள் உள்ளன்பு கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
இதன் பின் கருவூரார் தம் ஊருக்கே திரும்பினார். முன்பு போலவே அவர் மீது வஞ்சம் கொண்டனர் அவ்வூர் அந்தணர். ஆசாரம் கெட்டு, நியமம் இன்றி, ஆண்டவன் ஆலயத்தைக் கெடுக்கிறார் கருவூரார். அனாசாரப் பூஜை செய்யும் அவரை அடித்து விரட்டுங்கள்" என்று புகார் கூறினர் மன்னரிடம். மன்னரும் காவலர்களிடம் சொல்ல, காவலர்கள் கருவூரார் வீட்டில் சென்று பார்த்தபோது, அங்கே பூக்களும் வைதிகச் சடங்குக்கு உரிய பொருட்களுமே இருந்தன. தகவல் அறிந்து மன்னர் கருவூராரிடம் மன்னிப்பு கோரினார்.
ஆனாலும், கருவூராரின் கழுத்தை அறுத்தேனும் காரியத்தைச் சாதித்திட கங்கணம் கட்டி ஒரு கூட்டம் முனைந்தது. ஒரு நாள் அமராவதியில் நீராடப் போன கருவூராரின் கழுத்தை அறுக்க சிலர் துரத்த, அவர்களின் துரத்தலுக்குப் போக்குக் காட்டி, ஆநிலையப்பர் ஆலயத்துள் ஓடினார் கருவூரார். பசுபதீசா, இவர்களின் விதி இப்படித் தூண்டுகிறது. எனக்கு இனி இந்த உலகமே வேண்டாம். எனை உன்னுடன் சேர்த்துக்கொள்" என்று அவனைத் தழுவி இரண்டறக் கலந்தார்.
தாம் செய்த தவறு இன்னதெனத் தெரிந்ததும் துரத்தி வந்தவர்கள் துக்கித்து நின்றனர். தம் தவறுக்குப் பிராயச்சித்தமா, அந்த ஆலயத்தினுள்ளேயே கருவூராருக்கு ஒரு சன்னிதி அமைத்து, அவர் திருவுரு சமைத்து, ஆராதனையும் செய்யத் தொடங்கினர். இன்றளவும் அந்த ஆராதனை சித்தர் கருவூராருக்கு கரூர் பசுபதீசர் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது!

Comments