பேதைமை விலங்கொடித்த மால்மருகன்!

அருணகிரிநாதருடைய திருப்புகழ் பாடல்களில், அவர், மகாவிஷ்ணுவைப் பலவாறாகத் துதித்திருப்பதை எங்கணும் காணலாம். தெய்வங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிப்பது, எந்தவிதமான பலனையும் தராது என்பதை விளக்கும் திருவிளையாடல் இது.
குருகையூரில் வைணவ அந்தணர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பெருமாளிடம் மிகவும் அதிகமான பக்தி உண்டு. விஷ்ணு பக்தர்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி! அவர்களைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவார். அதேசமயம் மற்ற சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலோ, அவர்களைத் தூற்றுவார். இதன் காரணமாக அவருக்கு, ‘இவர் மிகவும் கொடியவர்’ என்ற அவப்பெயர் உண்டாகியிருந்தது. அந்த பக்தர் கல்வியறிவில் தலை சிறந்தவர், அருந்தமிழ்ப் பாடல்களைப் புனைவதில் மிகவும் வல்லவர். அந்தக் கல்விமானைத் தடுத்து ஆட்கொள்ளத் தீர்மானித்தார் முருகப்பெருமான்.
ஒரு நாள் இரவு, புலவர் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவர் கனவில் அந்தணர் வடிவில் ஆறுமுகப் பெருமான் எழுந்தருளி, நீ திருமால் மருகனாகிய முருகன் மீது பாமாலை புனைந்தால் நல்ல பயன் பெறுவா" என்று கூறி மறைந்தார்.
திடுக்கிட்ட புலவர், விழித்தெழுந்து தீயில் அகப் பட்ட புழுவைப் போலத் துடித்தார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் வருந்தினார். மறுநாள் பொழுது விடிந்தது. மகாவிஷ்ணுவின் சன்னிதியில் நின்று, அரவணையில் துயிலும் ஆதிப்பரம்பொருளே! இந்த எளியேன் மீது உனக்குக் கருணையில்லை போலிருக்கிறது. வேடர்களால் போற்றப்படும் அந்த முருகனா எனக்கு அருள் செய்யக் கூடியவன்? தாங்கள் எனக்குத் திருவருள் புரிந்திருந்தால், அந்த முருகன் வந்து இவ்வாறு சொல்லுவானா?" என்று பலவாறாக முறையிட்டு விட்டு, அன்றிரவு கோயிலிலேயே உறங்கினார். அந்த நேரத்தில், ஒரு கையில் வேலாயுதமும், மற்றொரு கையில் சக்ராயுதமும் கொண்டு ஒரு திருவடிவம் புலவருக்கு முன்னால் தோன்றியது. இந்த வடிவத்தைப் பார்த்தாயல்லவா! திருச்செந்தூர் முருகனை நீ புகழ்ந்து பாடத் தடை என்ன?" என்று கூறி மறைந்தது.
விழித்தெழுந்த புலவர், துன்பத்திலேயே ஆழ்ந்திருந்தாரே தவிர, அதை விட்டு வெளியில் வரவில்லை. அன்று இரவும் அவர், கோயிலிலேயே உறங்கினார். அதற்காகவே காத்திருந்ததைப்போல, அவரது கனவில் நான்கு திருத்தோள்கள், சங்கு, சக்கரம் முதலியவற்றோடு மகாவிஷ்ணு தரிசனம் தந்தார். பார்த்த புலவருக்குப் புல்லரித்தது. வணங்கி எழுந்து கைகளைக் கூப்பி, தேவாதி தேவா! புலித்தோல் உடையான் மகனா என்னைக் கொண்டு கொள்பவன்? நேற்றிரவு அவன் தங்களுடைய சக்ராயுதத்தையும் தன்னுடைய வேலாயுதத்தையும் கொண்டு என் முன்னால் தோன்றி, தன்னைப் புகழ்ந்து பாடுமாறு கட்டளையிட்டான். மறந்து போக்கூட நான் அதைச் செய்வேனா" என்று பலவாறாகக் கூறினார்.
அதைக் கேட்ட பகவானோ, பக்தனே! வீணாக மயங்காதே! பல கடவுளர்களின் வடிவமும் ஒன்றாகுமே அல்லாமல் பலவாக ஆகாது. இந்த வடிவத்தில் நீ இதைப் பார்க்கிறா; அந்த வடிவத்தில் நீ அதைப் பார்க்கிறா. முருகக் கடவுளும் எமது கூறே. எந்தக் கடவுளரும் எனது கூறும், திருவின் கூறும் ஆவதல்லா மல்வேறொன்றாக ஆக மாட்டார்கள். ஆண வத்தால் அல்லல் கடலில் வீழாதே" என்று கூறியருளி மறைந்தார்!
விழித்தெழுந்த புலவர் விசனப்பட்டார். ‘இதுவும் அந்த முருகனின் கூத்துதான். நம்மை ஏமாற்றுவதற்காகவே, இப்படி மாறுவடிவத்தில் வந்துள்ளான். முருகன் இவ்வளவு செய்தும், மகா விஷ்ணு நமக்குத் திருவருள் புரியவில்லையே! ஆறுமுகனுக்கு அடிமை செய்வதைவிட, உயிர் துறப்பதே உத்தமம்’ என்று தீர்மானித்தார். அதற்கான வழி வகைகளை ஆலோசிக்கவும் செய்தார்.
அதேசமயம், திருநெல்வேலியை நிர்வாகம் செய்து வந்த வடமலையப்பப்பிள்ளை என்பவர், குருகையூருக்கு வந்திருந்தார். அவர் கனவில் போய்த் தரிசனம் தந்த முருகப்பெருமான், வடமலையப்பா! இவ்வூர் திருமால் கோயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வேதியப்புலவன், பொழுது விடிந்தவுடன் தற்கொலை செய்து கொள்வதாகத் தீர்மானித்திருக்கிறான். அவன் அவ்வாறு செய்யாமல், வெள்ளி விலங்கு பூட்டிப் பாதுகாப்பாயாக" என்றருளி மறைந்தார்.
கனவு கலைந்த வடமலையப்பரும் அவ்வாறே செய்தார். வீரர்கள் போய், புலவரை அழைத்து வந்தார்கள். அவர் வந்ததும், அவரை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்த வடமலையப்பர், அவரை வணங்கி, புலவர் பெருமானே! கந்தக் கடவுள் கனவில் எழுந்தருளி, தங்களுக்கு வெள்ளி விலங்கிடும்படிக் கட்டளையிட்டு அருளியிருக்கிறார். அதன்படிச் செய்யவே தங்களை அழைத்து வந்தேன்" என்று விவரம் சொல்லி, வெள்ளி விலங்கிட்டார்.
அதுமட்டுமல்ல, காவலர்களை அழைத்து, இப் புலவரை மிகவும் எச்சரிக்கையுடன், எல்லா விதமான மரியாதைகளும் செய்து பாதுகாக்க வேண்டும். இவருக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால், உங்கள் உயிருடன் எம் உயிரும் போவிடும் ஜாக்கிரதை" என எச்சரித்து அனுப்பினார். அத்துடன் தானும் அங்கேயே தங்கி, நிர்வாகம் செய்யத் தொடங்கினார்.
சில நாட்களாயின. சிறைச்சாலையில் இருந்த புலவர் துன்புற்றிருந்தார். முருகன் திருவருள் கைகூடும் வேளை நெருங்கியது. முருகப்பெருமான் மீது, ‘பதிற்றுப்பத்தந்தாதி’ எனும் நூலைப் பாடத் தொடங்கினார் புலவர்.
புலவரைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலர்கள், அவர் பாடும் தமிழமுதத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இரவு நேரம். எட்டாவது பாடல்...
‘செய்வதொன்றறிகிலேன் செழுமென்
போதுதான்
பெவதொன்றறிகிலேன் பேதையேன் சுடர்
வைதிகழ் வேற்படை முருக என்தளை
கொதெனக் கிரங்கியாட் கொள்ள வேண்டுமால்’
- எனும் பாடலைப் பாடி முடித்த வேளையில்...
‘படீர்... படீர்’ என ஓசையோடு, புலவரின் கைகளிலிருந்த வெள்ளி விலங்குகள் பொடிப்பொடியாகப் போயின. காவல் காத்த வீரர்கள் அஞ்சினார்கள்.
அப்போது, வடமலையப்பரின் கனவில் வள்ளி மணாளன் காட்சியளித்து, சிறையிலடைக்கப்பட்ட புலவன், நம்மைப் பாடத் தொடங்கிப் பாடுகிறான். யாம் அவன் விலங்குகளைத் தறித்து விட்டோம். அந்நூல் முடிந்த பிறகு, நீயும் உடனிருந்து கேட்டு, அந்நூலை அரங்கேற்றம் செய்வாய்யாக" என்றருளி மறைந்தார்.
கனவு கலைந்து வடமலையப்பர் மகிழ்ச்சியோடு எழுந்தபோது, வீரர் இருவர் விரைந்து வந்து நடந்த வற்றை அறிவித்தார்கள். வடமலையப்பர் உடனே விரைந்து போப் புலவரைக் கண்டு, அவர் கால்களில் விழுந்து வணங்கினார்.
ஒருசில நாட்களில் நூல் நிறைவு பெற்றது. இரவு பகலாகப் புலவரைப் பாதுகாத்த வீரர்களுக்கு, அள்ளிக் கொடுத்து வாழ்த்தினார் வடமலையப்பர்.
திருச்செந்தூரில் செந்திலாண்டவன் சன்னிதியில் அரங்கேற்றத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. அழகாக அலங்கரிக்கப்பட்ட அவையில், புலவர்களும் அறிஞர்களும் கூடியிருக்க, நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
அந்நூலுக்கு, ‘சிறைவிடு அந்தாதி’ எனப்பெயர் சூட்டப்பட்டது. சிறையிலிருந்து புலவரை விடுவித்த வடமலையப்பர் ஏராளமான பொருள், ஆடை, அணி கலன், பல்லக்கு எனப் பலவற்றையும் அளித்து, புலவரைப் பெருமைப்படுத்தினார்.
‘சிறைவிடு அந்தாதி’ எனும் அந்நூலிலிருந்து ஒரு சில பாடல்கள் இங்கே வெளியாகின்றன. ஓதுவோம்! இன்னல்கள் ஒழிப்போம்!
‘சிறுமை எதினும் தீவினை எதினும் சிறியேன்
வறுமை எதினும் வாழினும் மறப்பனோ
மலர்த்தாள்
உறுபெரும்பொருள் உணர்த்தும் ஓங்கார
உள்ஒளியே
அறுமுகப் பெருங்கடவுளே! அமரர் நாயகனே!
பரமாகிய நின் பதபங் கயநின் (று)
றி(இ)ரவா துகழிந் தனன்இத் தனைநாள்
அரவா பரணன் தருமா றுமுகா
கரமா றிருதோள் தருகான் முளையே
செல்வமும் சிறப்பும் மனைவியும் மகவும்
நிதியமும் தீதிலா நலனும்
கல்வியும் கவினும் என்பதற்குனது
கருணையின் அன்றிமற் றுளதோ?
வல்வினைச் சிறியேன்அறிந்தவா றுனது
மலரடி வழுத்துதற் கிரங்கிப்
புல்வினை அறுத்த செந்தில்வாழ் குமரா!
புரந்தருள் அத்தனே! அபயம்!’
சிறைவிடு அந்தாதி எனும் இந்நூல் உரையுடன் இன்றுவரை உலவி வருகிறது

Comments