குராவடியில் அருளும் குமரன்!

சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில், திருக்கடவூருக்கு அருகே உள்ளது திருவிடைக்கழி என்று அழைக்கப்படும் திருக்குராவடி அருள்மிகு காமேசுவரி அம்பாள் சமேத அருள்மிகு காமேசுவரர் திருக்கோயில். இக்கோயிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி மிகவும் விசேஷமானவர். அருணகிரிநாதர் தமது திருப்புகழில், ‘திருக்குராவடி நிழல்தனில் உறைவோனே...’ என இத்தல முருகப்பெருமானைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, கோயில் கொடி மரத்தின் அடியில் விநாயகர் காட்சி தருவார். ஆனால், இத்திருக்கோயில் கொடி மரத்தின் கீழ் விநாயகப் பெருமானுடன் வேலவனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கின்றார். மூலவர் முருகப்பெருமான், ஒரே திருமுகம் விளங்க, இரு கரங்களில், வலக்கரம் அபயம் காட்ட, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவரது வலது காலில் பூணும், திருப்பாதங்களில் வீரக்கழலும் அணிந்து, சுமார் ஐந்தரை அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
முன்புறம் ஸ்படிக லிங்கமும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வலப்புறம் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், இடப்புறம் வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம். முருகப்பெருமானுக்கு வாகனமாக யானை காட்சி தருகின்றது. கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருந்தாலும் இத்தலத்தில் பார்வதி தேவிக்கு தனி சன்னிதி இல்லை. இதற்கு பதிலாக தெய்வானைக்கு தெற்கு நோக்கிய சன்னிதி அமைந்துள்ளது.
திருச்செந்தூரில் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்தபோது, அவனுடைய இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன் பித்ரு கடன் செய்ய வேண்டி போரிலிருந்து பின்வாங்கி தரங்கம்பாடி கடலில் மச்ச உருவம் எடுத்து மறைந்திருந்ததை அறிந்த முருகப்பெருமான் அவனையும் சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிவபக்தன் என்பதால் அவனைக் கொன்ற பாவம் தீர, இடைக்கழி திருத்தலத்தில் ‘குரா’ மரத்தடியில் அமர்ந்து ஈசனை வழிபட, ஈசன் பாவ விமோசனம் தந்து இத்தலத்தில் முருகப்பெருமானை முன்நிறுத்தி, தான் பின் அமர்ந்ததாக தல வரலாறு.
சூரபத்மனின் புதல்வன் இரண்யாசுரனை வைகாசி, சதய நட்சத்திரத்தன்று சம்ஹாரம் செய்ததால் உற்ஸவர், ‘இரண்யாசுர சம்ஹார மூர்த்தி’ எனச் சிறப்பிக்கப்படுகிறார். இவரது திருக்கரங்களில் வேலோடு வில்லும் காணப்படுவது தனிச்சிறப்பு. இவரே இத்தலத்தின் சபாநாயகர் (நடராஜர்) ஆவார். இவருக்கு எதிரில் சேந்தனாரும் அருணகிரிநாதரும் வீற்றிருக்கிறார்கள்.
இத்திருத்தலத்தில் ‘சர்வம் சுப்ரமணியம் ஜகத்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர் நடராஜர், சந்திர சேகரர், சொமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும் வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி சொரூபமாகவே அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சன்னிதியில் சிவசண்டிகேஸ்வரரும் குக சண்டிகேஸ்வரராக திருக்கரத்தில் மழுவை ஏற்றாமல் வஜ்ர வலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.
இத்திருக்கோயிலில் 16 விநாயகர் மூர்த்தங்கள் உள்ளது விசேஷம். வெளிப்பிராகாரத்தில் இத்தலத்தின் ஆதிமூர்த்தியாகிய ஸ்ரீ திருக்காமேஸ்வரருக்கு சன்னிதி அமைந்துள்ளது. இச்சன்னிதிக்கு நேரே முருகப்பெருமான் உலவிய, சிவபெருமானை வழிபட்ட, குரா விருட்சம் காணப்படுகிறது. தில்லையில் பொன்னம்பலக் கூத்தனுக்குத் திருவாதிரை நாளில்களி நிவேதனம் செய்தவரும், பல்லாண்டு அருளித் திருத்தேரினை தில்லை திருவீதிகளில் நடத்தியவருமான சேந்தனார், இத்தலத்தில் திருக்குரா மரத்தின் அடியில் முக்தி பெற்றது ஒரு தைப்பூச நன்னாள். அன்றைய தினம் இவருக்கு அபிஷேக, ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.
நான்கு கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் அர்த்தஜாம பூஜையில் மட்டும் குமரப்பெருமான் குரா மரத்தின் நிழலில் சிவபெருமானை சிந்தித்துத் தவம் செய்த இடத்தில் உள்ள பலிபீடத்துக்கு (பத்ர லிங்கம்) அபிஷேக, ஆராதனை நடைபெறுகின்றது. இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோயில்கள் உள்ளன. இது, பிரம்மன், சேந்தனார், வசிட்டன், அருணகிரிநாதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட பெருமை கொண்டது.
ராகு பகவான் இத்தலத்தில் முருகனை குராமரத் தடியில் வழிபட்டதால் (குரா - ராகு) இப்பெயர்
தோன்றியது. ராகு தோஷம் உள்ளவர்கள் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு, பிரார்த்தனை செய்ய, திருமணம் விரைவில் நிறைவேறும். நாக தலம் எனும் சிறப்பு பெற்ற இத்தலத்தில் கணவன், மனைவி இடையே ஒற்றுமை உண்டாக ஏராளமானோர் வழிபடுகின்றனர். நவ கோள்களின் நாயகனான முருகனே இத்தலத்தில் உறைவதால் இங்கு நவக்கிரக சன்னிதி கிடையாது. எனவே, இங்கு வழிபடுவோருக்கு எத்தகைய நவக்கிரக தோஷம் இருந்தாலும் விலகி விடும்.
தல விருட்சம் சிறப்பாக அமைந்த தலங்களில், காஞ்சி மாவடியும், திருவிடைக்கழி குராவடியும் குறிப்பிடத்தக்கன. முருகப்பெருமான் விரும்பி அணியும் மலர்களில் குரா மலர் மிகவும் சிறப்புடையது. இந்த மலரில் முருகனின் திருப்பாதம் மறைந்திருக்கிறது. இளவேனிற் காலத்தில் பூக்கும் வெண்மை நிறமுடைய இம்மலர் பூக்கும் தருணம் மணம் மிகுந்து காற்றில் கலந்து வீசும். பலவித சிறப்புகளைக் கொண்ட தலம் திருவிடைக்கழிக்குச் சென்று திருமுருகன் அருளைப் பெறலாமே.
அமைவிடம்: திருக்கடவூரிலிருந்து தென்மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதி குறைவு என்பதால் ஆட்டோவில் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதி குறிப்பிட்ட நேரங்களில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை. மாலை 4 மணி முதல் 8.30 வரை.

Comments