குறை தீர்ப்பான் பத்துமலை முருகன்!

மலேசியாவின் பினாங்கு, ஈப்போவில் தைப்பூசம் மிகவும் கோலாகலமாக நடைபெறும் திருவிழாவாகும்! அன்று, திரும்பிய திசையெல்லாம் திருவிழா காட்சியாக மலேசியா களைகட்டத் தொடங்கி விடும். பக்திப் பரவசத்தில் பக்தர்களின், ‘கந்தா! முருகா!’ எனும் கோஷம் விண்ணதிரக் கேட்கும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதை மெப்பிக்கும் விதமாக மனித சமுத்திரத்தில் அன்று மூழ்கிவிடும் பத்துமலை!
பண்டிகை, விசேஷம் எல்லாம் ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையில் வரும். ஆனால், தைப்பூச விழா மட்டும் இங்கே ஜாதி, சமயங்களைத் தாண்டி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணையும் ஒரு விழாவாகத் திகழ்கிறது. இந்து மதத்தின் உட்பிரிவுதான் சீனர்களின் மதமோ என்று நினைக்கும் வகையில், சீனர்கள் இந்துக்களுக்கு இணையாக மொட்டை போடுதல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்று கொண்டாடுவது இந்தத் தைப்பூச தினத்தைத்தான். இஸ்லாமியர், கிறிஸ்துவர்களும் மத வேற்றுமை மறந்து, வேண்டுதல்களை நிறைவேற்றும் நாளாகத் திகழ்கிறது இந்த விழா.
27 நட்சத்திரங்களில் எட்டாவதாகத் திகழ்வது பூசம். தைப்பூசம், பெரும்பாலும் பௌர்ணமி நாளாக இருக்கும். தை மாதம் உத்தராயண காலத்தின் துவக்கம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுது. பௌர்ணமி தினத்தில் சிவாம்சமான சூரியன், மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய, சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க, தைப்பூச திருநாள் அமைகின்றது.
‘தகப்பன்சாமி’ என்று பெயர் பெற்ற முருகப்பெரு மான், தைப்பூச நாளில்தான் தாருகாசுரனை வதம் செய்தாராம். சிவபெருமானுக்கு உரிய நாளாக தைப் பூசம் சிறப்புப் பெற்றிருந்தாலும், முருகப்பெருமானுக்கும் முக்கியத்துவம் பெற்றது தைப்பூசம். முருகன் சிவாக்கினியில் இருந்து தோன்றியதால் ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம் என்பர் சிலர்.
தமிழகத்தின் அறுபடை வீடுகளைத் தாண்டி, வெளிநாட்டில் முக்கியமான ஆலயமாகத் திகழ்வது பத்துமலை. ஈழத்தில் கண்டி கதிர்காமம் புகழ் பெற்ற தைப் போல், மலேசியாவில் பத்துமலை. எந்த புராணத் தொடர்புகளும் இல்லை. இதிகாச வரலாறுகளும் இல்லை. ஆனாலும், பத்துமலை தனிச் சிறப்புப் பெற்றுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன மலை இது. வரிசையாக அமைந்த குகைக் கோயில்களை இங்கே காணலாம். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. தைப்பூசத்தில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகின்றனர்.
இது, சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவான கோயில். தமிழ் ஆர்வலர் தம்புசாமிபிள்ளை கனவில் தோன்றிய ஆதிபராசக்தி, ‘குமரனுக்கு பத்து மலையில் கோயில் காண்பா’ என்று உத்திரவிட்டாராம். அதனால் அதிசயித்த அவர், தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு, இந்த மலைக்கு வந்து குகையை ஆய்வு செய்தாராம். ஒரு நன்னாளில் மூங்கிலை வெட்டி வேல்போல் சீவி அதை முருகனாக பாவித்து அக்குகையில் நாட்டினர். இதுவே, முருக ஆலயத்துக்கு முதல் சுழி! இது நடந்தது 1860ல். படைவீடுகளைக் கொண்ட தமிழகத்தில் கூட இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த முருகன் சிலை (140.09 அடி) பத்துமலையில் தான் உள்ளது.
தைப்பூச நாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம் மன் கோயிலிலிருந்து பத்துமலைக்கு அதிகாலை தொடங்கி ஊர்வலமாக நடந்து வருவர். அவர்கள் ஆலயம் வந்து சேர குறைந்தது எட்டு மணி நேரமாகும். சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோயிலுக்கு 272 படிகள் ஏறி வருகின்றனர். ஜாலான் பண்டாரிலுள்ள ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி ரத ஊர்வலம் புறப்பட்டு, பத்துமலை திருத்தலத்தை அடைந்த பின், மீண்டும் ஜாலான் பண்டார் ஆலயத்துக்கு ரதம் திரும்பும் வரை மூன்று நாட்கள் விழா தொடர்ந்து நடைபெறும்.
தைப்பூசம் அன்று மட்டுமில்லாமல், ஒரு வாரம் முன்பே அசைவம் நீக்கி விரதம் இருப்பவர்கள் அதிகம். தைப்பூச நாளில் அதிகாலை எழுந்து நீராடி, திருநீறு, ருத்ராட்சம் அணிந்து, முருகனை காண ஆயத்தமாகிறார்கள். நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தும், பல்லாயிரக்கணக்கானவர்கள் காவி உடை அணிந்தும், காவடி தூக்கியும், பெண்கள் பால்குடம் ஏந்தியும் வருகின்றனர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி, சேவல் காவடி என விதவிதமான காவடிகள் ஆயிரம் ஆயிரமா ஆட் டம், பாட்டம், கொண்டாட்டமா, பக்திப் பரவசத்துடன், ‘முருகா முருகா’ என்று கோஷமிட்டபடி வருகின்றனர்.
மயில் தோகையால் அலங்கரித்த காவடிகளை சீனர்கள் தூக்கி வருவது கண்கொள்ளாக் காட்சி. அலகு எனப்படும் ஊசிகளை உடலில் குத்தி, சிறிய வடிவிலான தேர்களை இழுத்து வருகிறார்கள். சிலர் கன்னத்தில் வேலை செருகி எலு மிச்சை மாலை அணிந்து வருகின்றனர். மாவிளக்கு போடுதல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களும் உண்டு.
தண்ணீர்மலையில் தைப்பூசம்:
பத்துமலைக்கு இணையாக, பத்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்களின் வருகையால் இன்று தண்ணீர் மலையே ஓர் அங்குலம் பூமிக்குள் புதைந்ததுபோல் இருக்கும். அரோகரா சொல்லி காவடி எடுத்தாடியும், அலகு குத்தி பக்தியை வெளிப்படுத்தியும் பக்தர்களின் ‘வெற்றிவேல்... வீரவேல்’ எனும் கோஷத்தால் அந்த இடமே அமர்க்களப்படுகிறது. தைப்பூசத்துக்கு அடுத்த நாள் புறப்படும் ரத ஊர்வலம் மறுநாள் இரவு தான் ஆலயம் வந்தடையும். ரத ஊர்வலத்தின் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான தேங்கய்களை உடைத்து மலைக்க வைக்கிறார்கள். இன்று தேங்காய் தண்ணீர் ஆறுபோல் சாலைகளில் ஓடுகிறது. வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஊர்வலத்தில் வருபவர்களுக்கு களைப்பாற தண்ணீர் மற்றும் நீர் மோர், குளிர்பானங்களைத் தருகிறார்கள்.
‘தாள் தொட்டு பணிவோர்தம் தோள் தொட்டு காத்தருளும் தூயவன் அல்லவா நம் குமரன்’ என்பார் கவிஞர் கண்ணதாசன். அதனால்தானோ என்னவோ பக்தர்களின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பினாங்கு மாநில அரசும் தைப்பூசத்தை பொதுவிடுமுறையாக அறிவித்திருக்கிறது. இங்கு தைப்பூசம் மூன்று நாள் கொண்டாட்டம்.
சிங்கப்பூரில் தைப்பூசம்:
சிங்கப்பூரில் தைப்பூசத்துக்கு முதல் நாளில் இருந்தே விழாகளைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோயிலில் வேல்தான் மூலவர். இவருக்கு பாலபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகப் பெருமான் வெள்ளித் தேரில்லயன் சித்தி விநாயகர் கோயில் வரை ஊர்வல மாக வந்து, மீண்டும் மாலை கோயிலை வந்த டைவார். பக்தர்கள் பால் காவடி எடுப்பர். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்வர். சீனர்களும் முருகனுக்கு வேண்டுதல் செய்து, பூசத்தன்று நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தைப்பூச காவடி ஊர்வலம் 2 கி.மீ. நீளம் இருக்கும். சிங்கப்பூரில் மேளதாளம் இசைப்பது மிகப்பிரபலம். உள்ளுர் தமிழர்கள், சீனர்கள் மட்டுமல்லாமல், ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் இதை ஆச்சரிய மாகக் காண்பது தைப்பூச விழாவன்றுதான். சிங்கப்பூரில் குப்பைகளை சாலையில் போட்டால் அபராதம் விதிப்பார்கள். ஆனால், தைப்பூசத்தன்று இந்த சட்ட நடைமுறைகள் தளர்த்தப்படுகிறது.
உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்ளாமல் அல்லது மறந்து விடாமல் பாதூகாப்பதில் தமிழர்கள் எப்போதுமே முதன்மையானவர்கள். சிங்கப்பூர், மலேசியா இதற்கு நல்ல உதாரணம். அழகென்ற சொல்லுக்கு முருகன், அறிவென்ற சொல்லுக்கு முருகன், அருள் என்ற சொல்லுக்கு முருகன் என்பதை மெப்பிக்கும் சிவகுமாரனை, தைப்பூச தினத்தில் வணங்கி அருள் பெறுவோம்.

Comments