தரணியைக் காக்கும் தவம்!

கண்ணுக்குத் தெரிகின்ற சில இயற்கைச் சீற்றங்களைப் பார்க்கிறோம். மனது பரபரக்கிறது. அழிவுகளைக் கண்டு மனம் சஞ்சலம் அடைகிறது. துக்கம் சூழ்கிறது. இது சாதாரண மனிதர்களுக்குத் தானா? மகான்களுக்கு இல்லையா? ஆன்மிகத்தில் தோந்த அனுபவஸ்தர்களுக்கு இல்லையா? மகானின் மனதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது, சொல்ல முடியாத சோகம்தான்" என்றார் தம் சொற்பொழிவில் திருமூர்த்திமலை, ஸ்ரீபரஞ்சோதி மகான். அவர் மேலும் பேசியது...


மகான்கள் ஏன் சோகப்பட வேண்டும்? எது மகான்களைத் தாக்குகிறது? ஒரு குடும்பச் சூழலா அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினுடய ஒரு சாயலா என்று பார்க்கும்போது, அவர்களின் சோகத்துக்குரிய காரணம் பலவாக இருக்கும். பொதுநல நோக்கில் பார்ப்பது மகான்களின் இயல்பு. நாம் எல்லோருமே மகிழ்ச்சியை நோக்கியே பயணிக்கிறோம். சந்தோஷத் தின் சாயலை சாத்துவிட துன்பம் நம்மைச் சூழும் போதுதான், மனம் சஞ்சலம் அடைகிறது.
வரும் முன் காப்பது யோகம். வாழ்வாகிய இந்த வேள்வியின் ஒரு முக்கியத்துவத்தை மெய்யுணர்வாளர்கள் உணர்ந்திருப்பீர்கள். அந்தத் துரிய தவம் என்ற உச்சி தவத்தின் மூலம் ஓர் அற்புதமான எண்ண அலைகளை நிரப்புகின்றபொழுது, அதற்கு உண்டான சூழல்கள் ஏற்படும். எங்கிருந்தோ ஒரு குரலை கொடுத்தால், எதன் மூலமாகவாவது ஏதாவது ஒன்று வந்து நம்மைக் காக்கும். இறைவன் நேரடியாக வர மாட்டார். இறைவன் ஏதாவது ஓர் உருவில் வந்து நமக்குப் பாதுகாப்பைக் கொடுத்தே தீருவார்.


வார்தா புயல் வந்தது. எத்தனை துன்பங்களைத் தந்தது! இருப்பினும், அதையும்விட வேகமாக ஏற்பட்டிருக்கின்ற சூழலும் இருந்திருக்கிறது. அப்படிப் பட்ட புயலை ஒரு பக்கம் நிறுத்தினோம் என்றால் இயற்கையினுடைய சீற்றம் இன்னொரு பக்கம் போய்ச் சேரும்.


அந்தச் சீற்றத்தை மகான்கள்தான் தாங்கிக் கொள்கிறார்கள். மக்களுக்காக வாழ்கின்ற அரசன் மக்களுக்கு நல்லது செய்கின்றான். உலகத்துக்காக வாழ்கின்ற மகான்கள் பூவுலகைக் காப்பது மட்டுமல்லாமல்; சூரிய மண்டலத்தைக் காப்பது மட்டுமல்லாமல்; பிரபஞ்சத்தையே காக்கிறார்கள். நமது வேள்வியினுடைய நோக்கம் பிரபஞ்ச தவம் என்பதுதான்.

தவம் இயற்றுவது சாதாரண விஷயமல்ல; மகான் மேற்கொள்ளும் தவத்துக்கு அன்பர்கள் ஒன்று சேர்ந்து உதவினால், இந்தப் புவிக்கு வருகின்ற வினைகளை ஒன்று சேர்ந்து நம்மால் நீக்க முடியும். இந்த உலகம் நன்றாக இருக்க, ஒவ்வொரு கணமும் வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த எண்ண அலைகள் நிச்சயம் நல்ல பலனைத் தந்தே தீரும். மனதின் சக்திக்கு வலு அதிகம்.


மனம் ஏதோ ஒரு நிலையில் அலைபாந்து கொண்டே இருக்கிறது. எதையோ சிந்தித்துக் கொண்டு, ஏதோ ஒரு நிலைக்கு ஆட்பட்டு, உடல் இயக்கத்தின்பாற்பட்டு நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அந்நேரம் நாம் நம் பாதையை மறந்திருக்கலாம். பாதை திடீரென்று மாறுகிறது என்றால், அது நம் கவனக்குறைவு என்றாகிறது. கவனக்குறைவால் ஏற்பட்ட அந்த நோக்கச் சிதறலை, இறை சிந்தனை நிறைந்த மனத்தால் நீக்க முடியும். இறை சிந்தனையிலேயே மனத்தால் ஒன்றி இருக்கும்போது, மனத்தில் வலி தெரியாமல் அது மறக்கச் செய்து விடுகிறது. அதனால் துன்பம் என்பது எப்போதும் நீடித்து இருப்பதில்லை. அது சிறிது காலத்துக்குத்தான் சஞ்சரித்து, மனத்தில் சஞ்சலத்தைக் கொடுக்கும்.


இப்பொழுது உலக அமைதிக்காக நாம் எல்லோரும் உள்நோக்கிச் சென்று தியானிப்போம். கட உள் நிலையில் சாதாரண உடல் நிலை அல்ல; மனநிலை அல்ல; அறிவு நிலை அல்ல; கடந்த உள் நிலை. அந்தக் கடந்த உள்நிலையில் இருந்து நாம் எதை நினைக்கிறோமோ அதை நம்மால் உருவாக்க முடியும். எனவே, உடலை தளர்வாகவைத்துக் கொள்ளுங்கள். உடலைச் சற்று தளர்த்திய நிலையில் உங்களுடைய வலது ஆட்காட்டி விரல் லேசாக உங்களுடைய மூக்கு நுனி மீது படும்படி வைத்து லேசாகக் கண்களைக் மூடி மூக்கு நுனியைக் கவனியுங்கள். விரலை மூக்கு நுனியில் வைத்ததும் ஆச்சர்யமான நிலையை உணர் வீர்கள். இப்போது, அலைபாயும் மனம் தானாகவே ஒரு நிலைக்கு வருவதை உணர்வீர்கள். உங்கள் மனத்துக்கு நீங்கள் இதைச் சொல்லிக் கொள்ளுங்கள்.


‘மனமே! இப்போது நீ வெளி உலக நினைவுகளைக் கடந்து, மூக்கு நுனிக்கு வருவாயாக.’
‘மனமே! மூக்கு நுனியில் இரு பக்க மூச்சின் இயக்கத்தைக் கவனிப்பாயாக.’
‘மனமே! இப்பொழுது உயிருக்குள் உயிராய் விளங்குகின்ற அந்த உயிரின் ஒளியாய், ஒளிக்குள் உணர்வாய், அந்த உணர்வுக்குள் செல்கிறாய்.’
‘மனமே! உடல் கடந்து, மூச்சைக் கடந்து, உயிரையும் கடந்து, அங்கே மூச்சு சக்தி என்ற மன சக்தியையும் கடந்து, நீ ஆத்ம சக்தியாய் விளங்குகின்றாய்.’
‘மனமே! நீ ஆத்ம சக்திக்குள் ஒடுங்குகிறாய்.’

‘மனமே! நீ இப்பொழுது ஆத்ம சக்தி. பருவுடல் கடந்து, நுண்ணுடல் கடந்து, அறிவுடல் கடந்து, உள்ளிருக்கின்ற ஒரு கடவுள் சக்திக்குள் நீ அதுவாகிறாய். கடந்த உள் நிலையிலே நீ அமைதியாகிறாய். இந்த அமைதியில்தான் அற்புத சக்தி இருக்கிறது. விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்றையும் கடந்து நீ உள்ளே செல்கிறாய்.’
விழிப்பு, கனவு, உறக்கம் மூன்று நிலைகளையும், கடந்த உள்நிலை இது. இங்கே எதையும் பார்ப்ப தில்லை; கேட்பதில்லை; நுகர்வதில்லை; சுவைப்ப தில்லை; பேசுவதில்லை; தொடுவதில்லை. ஐந்து அறிவுகளும் இல்லை. கடந்து உள்ளே நீ கடவுள் நிலையோடு ஒன்றுகிறாய். இந்த நிலையில் நீ எதை நினைக்கிறாயோ அது உருவாகிறது.


மனமே! நீ உடல் நிலையில் நின்று சிந்திக்கவில்லை; மனநிலையில் இருந்து சிந்திக்கவில்லை. இவற்றை எல்லாம் கடந்து உள்ளே கடவுளாய் சிந்திக்கிறாய். அங்கே நீ எதை சிந்திக்கிறாயோ, அங்கே நீ எதை உருவகப்படுத்துகிறாயோ, அதுவே செயலாகிறது. துரிய தவத்தில் யோகி நினைத்தால் அந்த நினைப்பே செயலாகிறது.
நீங்கள் எல்லோரும் யோகியர்கள். நீங்கள் எல்லோரும் ஞானியர்கள். நீங்கள் நினைத்தால் இந்த பிரபஞ் சத்தை, எதையும் மாற்றுகின்ற ஆற்றல் அதற்கு உண்டு. அந்த பிரபஞ்ச சக்திக்கு, அந்த மகா சக்திக்கு, காக்கும் சக்திக்கு எதையும் மாற்றி அமைக்கும் சக்தி உண்டு. கடந்து வருவாய் மனமே, கடந்து வருவாய். ஆத்ம சக்தியாய் உள்ள குருவோடு இணைவாய். அங்கே ஒரு சொல், சிறு சொல், குரு சொல் அந்த குரு சொல்லுக்கு இணங்கி அனைத்தும் செயல்படுகிறது. அங்கு குருவோடு ஒன்றுவாய். அங்கே ஆத்மாவோடு ஒன்றுவாய். அங்கே பிரம்மத்தோடு ஒன்றுவாய்; அப்படி ஒன்றிய நிலையில் இந்த உலகத்தை வாழ்த்து.


ஆன்மிகம் கலந்த அரசியலால் நிச்சயம் தமிழகத்துக்கு மட்டுமல்ல. பாரதத்துக்கும், பாரதத்தின் மூலம் வையகத்துக்கும் ஒரு மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். இத்தகைய தவமே தரணியைக் காக்கும். மனித குலத்தை இனி, அடுத்த கட்டத்துக்கு, அடுத்த தெய்வ நிலைக்கு அழைத்துச் செல்வதே தவம். இந்த யோகம் மனித குலத்தை நல்லிணக்கத்துக்கும் நல் உறவுக்கும் அழைத்துச் செல்லும். வருங்கால உலகம் யோக பூமியாக, ஞான பூமியாக, புண்ணிய பூமியாகத் திகழ, தவம் செய்வோம்... தவம் செய்வோம். உயிர்கள்யாவும் இன்புற்று வாழ, இந்த உலகம் சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும் அடையட்டும்."

Comments