விளக்குகளும் விளக்கங்களும்!

கார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜோதிடர் பண்டித காழியூர் நாராயணன்.
உலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.
இறைவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளாகவும், அந்தப் பொறிகளால் உணரப்படும் ஐம்புலன்களாகவும் காண்கின்றார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும் கண்டு மகிழ்கின்றார்.
இங்ஙனம் எல்லாம் தானாய் விளங்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை பொய்கையாழ்வார். இறைவன் தகுதிக்கு ஏற்பப் பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார். எனவே இம்மண்ணுலகத்தையே தகளியாகக் கொண்டார்; அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் உதய ஞாயிற்றையே (சூரியன்) அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார். அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் கருதியிருக்கும் ஆன்மாக்களுக்கு வீடுபேறு அளிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று.

-பொய்கையாழ்வார்.
‘செங்கதிர் தேவனின் இளியே’ என்று காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. ‘ஆயர் குலத்து தோன்றிய மணி விளக்கு’ என்று ஆண்டாள் போற்றுகிறார். ‘தீப மங்கல ஜோதி’ என்று முருகனை அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். லலிதா சகஸ்ரநாமம் முடிவில் தேவியை ‘அஞ்ஞானம் அகற்றும் தீபம்’ என்று துதிக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் சிவனை ‘ஆதியும் அந்தமுமில்லா அருட்பெரும் ஜோதியே’ என்று குறிப்பிடுகிறார்.
எந்த ஒரு பிரார்த்தனையும், தபசும், யாகமும், பூஜையும் விளக்கு இல்லாமல் முழுமை அடையாது. ஏனென்றால் பஞ்சபூதங்களில் ஒன்றான இந்த உலகில் உள்ள எந்த ஒரு சக்தியையும் ஆண்டவனிடம் எடுத்துச் செல்லும் ஆற்றல்,
சக்தி விளக்கிற்கு உண்டு. விளக்கு ஒன்றே மேல் நோக்கி எரியக்கூடியது. ஒரு விளக்கு எத்தனை ஆயிரம் ஒளியை ஏற்றினாலும் தன் ஒளியை இழப்பது இல்லை. தோஷங்களை நீக்கும் சக்தி விளக்குக்கு உண்டு.
விளக்கின் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்:
முற்காலத்தில் உலோகங்களால் விளக்குகள் செய்ய உளிகளும், சுத்தியல்களும் கிடையாது என்பதால் மக்கள் மண் விளக்கையே பயன்படுத்தியுள்ளனர். மருதநில மக்கள் மண் விளக்கில் கலை அம்சத்தைப் புகுத்தியுள்ளனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
மக்கள் உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் கல் விளக்குகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பிறகு பல்வேறு வேலைப்பாடுகள் கொண்ட, கலை அம்சம் நிறைந்த விளக்குகள் வர ஆரம்பித்து விட்டன. உதாரணமாக திருவிளக்கில் குத்துவிளக்கு, தூக்கு விளக்கு, நந்தா விளக்கு, அன்னப்பட்சி விளக்கு, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு, சரவிளக்கு, கிளை விளக்கு என ஏராளமான விளக்குகள் உள்ளன.
கை விளக்கு: இது ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல வசதியாகச் சிறிய விளக்காக இருக்கும். இதற்குக் கைப்பிடியும், அரசிலை போன்ற பாதமும் இருக்கும். கைப்பிடியில் இஷ்டதெய்வத்தின் திரு உருவங்கள், இலை, கொடிகள், யானை, மயில் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
குத்துவிளக்கு: பழங்காலத்தில் விளக்குகள் மரத்தண்டின் மீது இரும்பு அகல் பொருத்தி பயன்படுத்தப்பட்டன. மரப் பகுதியை மண்ணில் ஊன்றி நட்டுப் பயன்படுத்தினர். இதனால் இது குத்துவிளக்கு எனப்பட்டது. இது உயரத்தில் இருந்து ஒளி வீசியதால் ஒளி எங்கும் பரவியது. மக்களைப் பெரிதும் கவர்ந்தது. பிற் காலத்தில் இதை பித்தளை,வெண்கலம், ஐம்பொன் போன்ற உலோகங்களில் செய்யும் போது நான்கு பாகங்களாகப் பாதம், தண்டு, அகல், உச்சி எனப் பிரித்தனர். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா, நடுத்தண்டு விஷ்ணு, உச்சிப்பகுதி சிவன் என்றும், விளக்கின் சுடர் மகாலக்ஷ்மி என்றும், ஒளி சரஸ்வதி என்றும், வெப்பம் பார்வதி என்றும் சமய சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிளை விளக்கு : குத்துவிளக்கில் பல கிளைகள் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கிளைகளில் சங்கிலி இணைக்கப்பட்டு அதில் குத்துவிளக்கின் உச்சிப்பகுதி (எண்ணெய் விடும் பகுதிக்கு மேல்) இணைக்கப்பட்டிருக்கும். இதன் உச்சியில் கலை அம்சம் நிறைந்த அன்னம், மயில், கிளி, தெய்வ உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இவை கோயில்களிலேயே ஏற்றப்படுகிறது.
தூண் விளக்கு: இதுவும் கேரள கோயிகளில் அதிகம் காணப்படும். கொடிமரம் போல இருக்கும் இந்த தூண் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டதும் அதன் வெளிச்சத்தைப் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் கோயிலுக்கு வர வசதியாக இருக்கும்.
தீபச்சட்ட விளக்கு: இவை பெரும்பாலும் கேரள கோயில்களில் அதிகம் காணப்படும். கோயிலைச் சுற்றி மரச் சட்டம் அடிக்கப்பட்டு அதில் இரும்பு, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகத்தினாலான அகல் விளக்குகளை வரிசையாகப் பொருத்தியிருப் பர். இதில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்ற முடியும். விசேஷ தினங்களில் எல்லா விளக்குகளும் ஏற்றப்பட்டு கோயில் ஒளி வெள்ளத்தில் காண, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
மாவிளக்கு : பெருமாளுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் - திருவோணம் நட்சத்திரத்தில் போடப்படும் மாவிளக்கு விசேஷம். புரட்டாசி மாதம் எல்லா சனிக்கிழமைகளிலும் மாவிளக்குப் போட்டு வழிபடுவது நன்மைபயக்கும். பச்சரிசியை ஊறவைத்து மாவாக்கி, வெல்லம் கலந்து அகல் விளக்கு போல் செய்து சுத்தமான நெய், பஞ்சுத் திரி இட்டு விளக்கு ஏற்றப்படும். அம்பாளுக்கும் மாவிளக்கு விசேஷம்.
எலுமிச்சை விளக்கு: எலுமிச்சை விளக்கு ராகு காலத்தில் துர்க்கா பூஜையில் முக்கிய இடம் பெறுகிறது. ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி அன்னையை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி சாறைப் பிழிந்துவிட்டு மூடியைத் திருப்பி பஞ்சு திரி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அம்பாளை நினைத்து வீட்டிலும் ஏற்றலாம்.
திருக்கார்த்திகை தீபம்: கார்த்திகைத் திங்களில் கொண்டாடப்படும் தீபத்திருநாளே திரு விளக்கின் சமயத்தொடர்பை விளக்கும். அக்னி தலமான திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றப்படுவதும் திருக்கார்த்திகை தினத்தில்தான். கார்த்திகைப் பெண்கள் குழந்தை முருகனை எடுத்து வளர்த்ததால் கிருத்திகை முருகனுக்கு உரிய நடசத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. கிருத்திகை தினத்தில் எல்லா ஆலயங்களிலும் தீபத்திருநாள் நடைபெறும். ஐப்பசி, கார்த்திகை மாதம் மழைக் காலம். இந்தச் சூழலில்தான் அதிகமான பூச்சிகள், நோய்க் கிருமிகள் பரவும். இதனைப் போக்கத்தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டின் முன் வாசலிலும், புழக்கடையிலும் விளக்கேற்றி வைப்பர். பூச்சிகள் விளக்கு சுடரில் பட்டு இறந்துவிடும்.
சிறுவர்கள் ‘சொக்கட்டான்’ சுற்றுவார்கள். அதாவது பனங்காயில் நுங்கை எடுத்து விட்டு அதில் கரி, மரத்தூளைப் போட்டு கயிறு கட்டிச் சுற்றுவார்கள். இது பூச்சிகளை, நோய்க் கிருமிகளை அழிக்கும். கோயில்களில் ‘சொக்கப்பனை’ கொளுத்துவார்கள். இதிலிருந்து வெளிப்படும் புகை, நோய்க் கிருமிகளை அழிக்கும்.
வாயில் புறத்தில் விளக்கேற்றுவது போல் புழக் கடைப் பகுதியில் தவறாமல் விளக்கேற்றுவார்கள். இதனால் பாம்பு, தேள் போன்ற தீயசக்திகள் வீட்டுக்குள் நுழையாது.
விளக்கும், பெண்ணும்: பழங்காலம் முதல் பெண்தான் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள். திருமணமாகிப் பெண் முதன் முதலில் வீட்டுக்கு வந்தவுடன் விளக்கேற்றச் சொல்கிறோம். வெளிச்சத்தைக் கொண்டு வரும் அடிப்படை ஆதாரம் விளக்கு. இருளைப் போக்கும் பொருள். பெண் குடும்பத்தின் விளக்காக இருக்கிறாள். எனவே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு காரணம், ஒரு பெண்ணுடைய சிக்கனக் குணம், கையாளும் தன்மை, பதற்றமற்ற நிலை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முறையைக் கவனிக்கவும், கற்றுக் கொடுக்கவும்தான். குடும்பத்தில் என்றென்றும் ஒளி பிறக்கச் செய்கிற பொறுப்பு, கடமை, அவளிடம் உள்ளது என்பதைக் குறிக்கத்தான்.
தீபம் ஏற்றும் நேரம்: தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாகக் கருதப்படுவது, அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்), மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையும்தான் (சூரிய அஸ்தமத்திற்குப் பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் வெற்றி பெறும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் தீபமேற்றினால் திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதிகம். மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
விளகேற்றும்போது சொல்லும் ஸ்லோகம்:
வீட்டில் விளக்கேற்றும்போது இந்த ஸ்லோகத்தை சொல்ல, தீங்குகள் விலகும். செல்வமும் பெருகும்.
தீப ஜோதியானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனு தினமும் காத்திடுவாய் நமஸ்காரம்

மேலும் திருவிளக்கு அகவல் படிப்பது நன்மை உண்டாகும்.
விளக்கு குளிரவைத்தல்: விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக் கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருக்கக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிரவைப்பதே நன்மை தரும்.
விளக்கு துலக்க உகந்த நாட்கள்: குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்குக் காரணம், திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கைக் கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதிகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்க நிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
தீபம் எத்தனை முகம் ஏற்றலாம்:
ஏக முகம்: பிணி நீக்கும்.
துவி முகம்: குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
த்ரி முகம்: சகோதர பிணக்குகள் நீங்க, நல்லுறவுகள் பலப்பட.
சதுர்முகம்: வியாபாரம் வளர, மேல்நாடு செல்ல.
பஞ்ச முகம்: பூர்வஜென்ம புண்ணியம் ஏற்பட, மாத்ரு-பித்ரு தோஷங்கள் விலக, பூர்வ ஜென்ம பாவங்கள் விலக.
சன் முகம்: ரோகம், சத்ரு கடன் தீர.
சப்த முகம்: திருமணம் நடை பெற, இல்லறம் நல்லறமாக.
அஷ்ட முகம்: மரணபயம், விபத்துக்கள் அகல, வழக்குகள் வெற்றிபெற.
நவ விளக்கு: குடும்ப ஷேமம், புத்திர பௌத்திராதிஷமம், மகிழ்ச்சி.
தச முகம் : தொழில், உத்தியோகம், பதவி, புகழ் கிட்ட.
ஏக தசை முகம் : லாபங்கள் கூட, பணம் சேர, சொத்துக்கள் வாங்க
துவாச முகம்: நஷ்டங்கள் அகல, எதிர்ப்பு- இடைஞ்சல் விலக, பகை நீங்க.
சோடஷ முகம் (16 முகம்): கோயில்களில் மட்டுமே ஏற்றுவர்.
திருவிளக்குத் துளிகள்:
* வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.
* திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
* விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.
* வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும்.
* அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம்.
திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்.

 

Comments