ஜல்லிக்கட்டு என்பதே ஆன்மிக அடிப்படையில்

மாட்டுக்கு ஒரு புல்லுக்கட்டுகூட காட்டாதவர்கள், நாட்டு மாட்டினம் காக்கப்பட வேண்டும் என்று கூறி, ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டினார்கள் பார்த்தீர்களா?" என்று அங்கலாத்தார் நண்பர். இது நல்லாருக்கே! புல்லுக்கட்டு போட்டாதான் ஜல்லிக்கட்டு பத்தி பேசணும்னு கட்டாயமில்லீங்க; அக்கறை இருக்கறயார்ன்னாலும் குரல் கொடுக்கலாம் இல்லியா?" என்றேன்.
காளையில் தொடங்கி, பசு என தர்க்கம் தொடர்ந்தது. அது சரி, உயிர்னு பார்த்தா ஆடு, கோழிகூடத்தான் இருக்கு! மாடு மட்டும் புனிதம்னு ஏன் சொல்றீங்களோ?" என அலுத்துக் கொண்டார் நண்பர். சொல்லப்போனால், ஜல்லிக்கட்டு என்பதே ஆன்மிக அடிப்படையில் அமைந்ததுதானே! நம் மண் சார்ந்த வழிபாட்டின் அங்கம்! எனவேதான், வழிபடும் காளைகளைத் துன்புறுத்தாமல், மனிதனும் காளையும் இயைந்து தழுவி பாச உணர்வுடன் இருக்க கிராமத்தினர் வற்புறுத்தினர்.


இன்றும் கோயில்களில் பார்க்கலாம், பசுவை கோமாதா என்று வழிபடுவதும், காளைக்கு பூஜை செய்து பிரதோஷ காலத்தில் சிவன் கோயில்களில் வழிபடுவதும். கஜ பூஜை என யானைக்கு பூஜை செய்வதும்! ஜல்லிக்கட்டு காளைக்கான பூஜையும் அப்படித்தான். கிராம தேவதையிடம் அனுமதி பெற்று, பூஜை செய்து கோயிலுடன் இணைந்த ஆன்மிக விழாவாகத்தான் அது இன்றளவும் நடைபெறுகிறது. விடையேறி என பெருமான் காளையின் மீதேறிக் காட்சி தருகிறார் சிவத்தலங்களில்! பிரதோஷ காலத்தில் நந்தியெம்பெருமானின் காதில் குறைகளைச் சொல்லிப் புலம்பும் பழக்கம் தெரிந்தோ தெரியாமலோ பலருக்கும் வந்து விட்டது.
நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. தாயின் கருவறையில் இருந்து வந்தாலும், பின்னாளில் உடலுக்கு உரம் சேர்ப்பது இந்த மண்ணின் நீர், பயிர் எல்லாம்! உடலுக்குள் சேரும் உணவும் நீரும் எந்த மண்ணில் இருந்து உற்பத்தி ஆகிறதோ அந்த மண்ணின் மீது பிடிப்பு ஏற்படுவது இயல்பு! இல்லாவிட்டால், ‘உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறாயே! சொந்த மண்ணுக்கு துரோகம் இழைக்கிறாயே!’ என்றெல்லாம் சொல்வோமே! அப்படி, நம் உள் செல்லும் நீர், உணவு இவற்றில் எந்த அணுதுகள்கள் இருந்து நம் உடலின் அணுக்களுடன் ஒன்றிக் கலக்கிறதோ அவை அதன் தன்மையையும் பாச உணர்வையும் நிச்சயம் நமக்குள் கிளர்ந்தெழச் செய்யும். அதனால்தான் தீயவர்கள், மனதுக்கு ஒப்பாதவர்கள் தரும் உணவை நாம் உண்ணக் கூடாது என்று பெரியோர்கள் சொல்லிவைத்தார்கள்.
தாய் ஊட்டும் பாலுக்கு அடுத்து உடலுக்கு ஊட்டம் அளித்து, தாக்கு அடுத்த ஸ்தானத்தைப் பெறுபவை பசுக்கள். ஆநிரை என்பதில் மாட்டு இனம் எல்லாம் அடங்கும். வீட்டுக்கு வீடு பசு வளர்த்து பால் கறந்து, பசுவை லட்சுமி எனும் பேர் சொல்லி, குடும்ப உறுப்பினரில் ஒன்றாகக் கவனித்ததை ஓரிரு தலைமுறைக்கு முன்பு வரை பார்த்திருப்போம். இன்று கூட்டுக் குடும்பம் சிதைந்து விட்டது. தனி நபர்களாகிவிட்டோம். முன்னர் தனியாக இருந்த பசுவின் அடையாளம் இன்று கூட்டாக வளர்க்கப்பட்டு பால் பாக்கெட்டாக வந்துவிடுகிறது. ஒரு மாட்டுப் பால் குடித்தவரை மாட்டின் பாசத்தை உணர்ந்த நாம், இன்று கேள்வி கேட்கிறோம்.
திருமூலரின் திருமந்திரம், ‘யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’ என்று வலியுறுத்துகிறது. தீவனம் விலை ஏறிவிட்டது, தட்டுப்பாடு, மேச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு விட்டன, பசுவை வளர்ப்பது பெரும் செலவினம்தான்! நம்மால் வளர்க்க இயலாவிட்டாலும், வளர்க்கப் படும் இடங்களுக்குச் சென்றாவது, திரு மூலர் வாக்கை மெப்படுத்துவோமே!

Comments