தேனினும் இனியவர்!



மதுசூதனா போற்றி...

மகாபாரதத்திலும், கீதையிலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பல இடங்களிலும், ‘மதுசூதனா’ என்று அழைக்கப்படுகின்றார். அதிலும், அர்ஜுனனால் இப்படிப் பலமுறை அழைக்கப்படுகின்றார் ஸ்ரீகிருஷ்ணர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஒவ்வொரு திருநாமமும் சிறப்புக்குரியதுதான். குறிப்பாக, ‘மதுசூதனா’ என்ற திருநாமத்துக்குப் பல பொருள்கள் உண்டு.
தேனுக்கு, ‘மது’ என்ற பெயரும் உண்டல்லவா? தேனினும் இனியவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்ற பொருளில், ஸ்ரீபாத வல்லபாச்சாரி யார் தனது மதுராஷ்டகத்தில், ‘அதரம், மதுரம், வதனம் மதுரம்... மதுராதிப தேர் அகிலம் மதுரம்’ என்று பாடுகிறார்.
குருக்ஷேத்ரப் போரில் தனக்கு ஏற்பட்ட சொகத்தை நீக்க அர்ஜுனன், ‘கதம் பீஷ்மம் அகம்சங்க்யே த்ரோ ணம் மதுசூதன...’ என்று புலம்பி அழுகின்றான். இதன் பொருளாவது, ‘எதிரிகள் பலரை அழித்தவரே... ‘மது’ என்ற அரக்கனை வதைத்தவரே... என் பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் முதலானோரை எப்படி என்னால் எதிர்த்திட முடியும்?’ என்பதே.
பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் செவிகளில் இருந்து பிறந்த இரண்டு அசுரர்கள், மது மற்றும் கைடபன். மகாலட்சுமியைத் துதித்து கடுமையான தவமிருந்த இவர்கள் இருவரிடமும், அவர்கள் வேண்டும் வரம்யாது எனக் கேட்டாள் லட்சுமி. ‘எங்களது மரணம் நாங்கள் விரும்பியபோது மட்டுமே நிகழ வேண்டும்’ என்ற வரத்தை இருவரும் பெற்றனர்.
கர்வம் மிகுந்த இரு அரக்கர்களும் பிரம்மதேவனைத் தாக்கி அவரிடமிருந்த நான்கு வேதங்களையும் கவர்ந்து சென்றனர். பிரம்மதேவன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு, உதவி கேட்டார்.
பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தது போல, குதிரை தலையுடன் ஹயக்ரீவராக அவதரித்தார் மகாவிஷ்ணு. பணிவோடு இரு அரக்கர்களின் முன் சென்ற ஹயக்ரீவர், அவர்களிடம் தனக்கு ஒரு வரம் தர வேண்ட, தற்பெருமையில் மூழ்கியிருந்த இரு அரக்கர்களும், ‘எந்த வரமானாலும் தருகிறோம்’ என்றனர்.
பகவான், உங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும்’ என்ற வரத்தை வேண்டினார். சிந்திக்காமல், ‘அவ்வாறே ஆகட்டும்’ என்ற இரு அரக்கர்களையும் சுலப மாகவதம் செய்தார் ஸ்ரீ மகாவிஷ்ணு. இதனாலேயே, ‘மதுசூதனா’ என போற்றப்படுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த லீலை கிருஷ்ணாவதாரத்துக்கு முன்பே நிகழ்ந் தது.
தேவகியின் கர்ப்பத்தில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணர்
தோன்றியபோது அந்தத்தாய், ‘மதுசூதனா’ என்று அவரைக் கொஞ்சினாளாம்.
‘மதுசூதனா! உங்களுடைய அவதாரத்தினால் நான் மேலும் கம்சனை நினைத்துக் கவலைப்படுகின்றேன். அந்தப் பாவி கம்சனுக்கு நீங்கள் பிறந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியாதபடி செய்யுங்கள்’ என்று அந்த அன்னை பிரார்த்திப்பதை ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகின்றது.

Comments