உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 2

பிறை ஊரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர்  
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானும்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே.


திருநாவுக்கரசர் (6 - 71 - 4)

கருத்து: பிறை தவழும் சடைமுடிச் சிவ பெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப் புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னும் இவற்றைத் தொழத் துன்பங்கள் தொடராது.

யிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, நம் முன்னோர்களும் நம்மை ஆண்ட மன்னர்களும் கட்டி வைத்த ஆலயங்கள் எல்லாம் ஆன்மிகம் வளர்க்க மட்டுமன்று; அலைபாயும் மனதை அமைதிப்படுத்தவும்தான். அகத்தில் தூய்மையான நேர்மறை எண்ணங்கள் நிறைவதும் அகத்திலும் புறத்திலும் நல்ல அதிர்வலை களை ஏற்படுவதும்கூட ஆலயங்களில்தானே!

அதுமட்டுமில்லாமல், அவன் குடியிருக்கும் கோயிலான இந்த உடலுக்கு ஏதேனும் ஒன்றென்றா லும் அதைத் தீர்த்துவைக்கும் மருத்துவனும் அந்த ஆலயத்தில் உறையும் ஐயன்தானே!  உள்ளப்பிணி போக்குவதோடு, உடல் பிணியையும் தீர்த்துவைக்கும் அற்புதமான ஆலயங்கள் நம் பாரத மண்ணில் ஏராளம், ஏராளம்! அப்படியான தலங்களில்... கட்டடக்கலை, சிற்பக்கலை, வரலாற்று முக்கியத்துவம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட ஒரு திருத்தலம்தான் ஊட்டத்தூர்.

இத்தலத்தின் சிறப்புகள் ஒன்றா, இரண்டா! வாருங்கள்... புராணங்களில் `ஊற்றத்தூர்’ என்று வழங்கப்படுவதும், பஞ்ச மங்கலங்களும் ஒருங்கமைந்த சிறப்பைப் பெற்றதும், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகவும் திகழும் ஊட்டத்தூரை உள்ளம் களிகூரத்  தரிசித்து வருவோம்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கிறோம்.  திருச்சிக்கு 40 கி.மீ முன்பாகவே வருகிறது பாடாலூர். இந்த ஊரில் இருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் 5 கி.மீ தொலைவில் சென்றால் ஊட்டத்துரை அடைந்துவிடலாம்.

ஊர்... உள்ளத்துக்கு ஊட்டம் தரும் ஊர்தான்.  இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால், ‘ஊற்றத்தூர்’ என்றழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் ஊட்டத்தூர் ஆகியுள்ளது.

தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று என்பது இதன் முதல் சிறப்பு. வேறு ஒரு தேவாரப் பாடலில் இந்தத் தலத்தைப் பற்றிய சிறப்பை வைத்துப் பாடியிருப்பதால், இது ‘வைப்புத் தலம்’ ஆகப் போற்றப்படுகிறது.
அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப் பயணத்தின்போது, ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்தார். ஆனால், ஊரின் எல்லையிலேயே திகைத்து நின்றுவிட்டார். காரணம், அங்கிருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக  உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது  சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் நின்று அவர் பாடிய இடம்தான் ‘பாடலூர்’ என அழைக்கப்பட்டு, இப்போது பாடாலூர் ஆகியுள்ளது.

ஓர் ஊரில் நதி, தீர்த்தம், வனம், புறம் (ஊர்), மலை ஆகிய ஐந்தும் அமைந்திருந்தால், அது ‘பஞ்ச மங்கலம்’ என்று அழைக்கப்படும். அந்த வகையில், ஊட்டத்தூர் ‘பஞ்ச மங்கலம்’ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. நதி - நந்தியாறு. தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம். வனம் - வில்வாரண்யம் (முற்காலத்தில் இந்த இடம் முழுவதும் வில்வ வனமாக இருந்ததாகக் குறிப்பு இருக்கிறது). புறம் - ஊற்றத்தூர். மலை - சோழீஸ்வரர் கோயில் இருக்கும் மலை ஆகிய ஐந்து மங்கலங்களும் திகழும் ஊர் இது.

இந்த ஊரைப் பற்றிய புராணம், சுமார் 700, 800 ஆண்டுகளுக்கு முன், ‘ரத்தினகிரி புராணம்’ என்று விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் சீடர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் அந்தப் புராணத்தில், ‘பெருநாட்டு ஊற்றத்தூர்’ என்று இந்த ஊரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘காவிரி ஓடும் திசையிலிருந்து ஒரு யோசனை தூரத்தில் ‘பஞ்ச மங்கலம்’ அமைந்துள்ளது. அதன் பெயர் ஊற்றத்தூர்’ என்று ரத்தினகிரி புராணம் இவ்வூரைப் புகழ்கிறது. பிரம்மா வழிபட்ட தலம் என்பதால், இதை ‘பிரம்ம புரம்’ என்றும் அழைத்துள்ளனர்.

இப்படி, புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் மிகுந்த இந்த ஊட்டத்தூரிலும் அதனைச் சுற்றியும் அமைந்துள்ள கோயில்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. அவற்றுள் முதன்மையான இடத்தில் வருவது, இங்கு அமைந்துள்ள அருள்மிகு சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயில்.

சோழர் காலத்து கோயில். ஏழுநிலை ராஜகோபுரத்தோடு கம்பீரமாகக் காட்சி தருகிறது. சுற்றிலும் நெடிதுயர்ந்த மதிலோடு, பலப்பல சக்திகளையும் செய்திகளையும் தன்னுள்ளே வைத்து, அமைதி ததும்பும் சூழலில் அற்புதமாய் இருக்கிறது, இக்கோயில்.

தாழம்பூவை பொய்சாட்சி சொல்ல வைத்து, இறைவனின் முடியைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரம்மனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம் என்கிறது புராணம்.

ஒருமுறை, பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. ‘தங்களுள் யார் பெரியவர்’ என்பதை நிரூபிக்க இருவரும், சிவபெருமானின் முடியையும் அடியையும் தேடிப்போவது என்றும், யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்றும் முடிவானது. அன்னத்தின் உருவம் எடுத்த பிரம்ம தேவன், சிவனின் முடியைத் தேடி உயரே சென்றார். சிவனின் அடியைத் தேட வேண்டிய விஷ்ணுவோ, வராக (பன்றி) உருவம் எடுத்து பூமியைத் தோண்டியபடி கீழ்நோக்கிச் சென்றார். வெகு நீண்ட நேரத்துக்கு இருவரும் மேலும் கீழும் போய்க்கொண்டே இருக்க, சிவனின் அடியையோ முடியையோ அவர்களால் காணவே முடியவில்லை.

போகும் வழியில் சிவபெருமானின் தலையிலிருந்து உதிர்ந்த தாழம்பூ ஒன்றைக் கண்டார் பிரம்மன். தான் சிவனின் தலையைக் கண்டதாக சாட்சி சொல்லுமாறு தாழம்பூவிடம் பிரம்மா கேட்க, அதுவும் சம்மதித்து, அவ்வாறே பொய்சாட்சி சொன்னது. எனவே, பிரம்மா ‘‘வெற்றி பெற்ற நானே பெரியவன்’’ என்று அறிவித்தார். விஷ்ணு தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மா பொய் சொன்னதை அறிந்த சிவபெருமான் கோபமுற்று, பிரம்மனுக் கென்று தனியாக பூவுலகில் எங்குமே கோயில் இருக்காது என்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ இனி சிவபூஜைக்கு உகந்ததாகாது என்றும் சாபமிட்டார்.
தன் தவற்றை உணர்ந்து, சிவனிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு, தனக்கு சாப விமோசனம் அருளும்படி வேண்டினார் பிரம்மா. உலகில் உள்ள அத்தனை புனித நதிகளில் இருந்தும் நீர் கொணர்ந்து தனக்கு அபிஷேகம் செய்து வணங்கும்படி கூறினார் இறைவன். ஊட்டத்தூருக்கு வந்த பிரம்மன், அங்கே ஓர் ஊற்றை உருவாக்கி, அதில் உலகின் அனைத்து நதிகளின் புண்ணிய தீர்த்தத்தையும் கொண்டு வந்து சேர்த்தார். அதுதான் ஊட்டத்தூர் கோயிலில், இறைவன் சந்நிதிக்கு எதிரே உள்ள, என்றும் வற்றாத பிரம்ம தீர்த்தம். ஊற்று உருவான ஊர் என்பதால்தான் இது ஊற்றத்தூர் ஆனது. அந்த தீர்த்தத்தின் மூலம் இறைவனுக்கு அபிஷே கமும் பூசைகளும் செய்ய, அவருடைய சாபம் நிவர்த்தியாகி, விமோசனம் பெற்றார் என்கிறது புராணக் கதை.

இப்போதும்கூட, பிரம்ம தீர்த்தத்தில் இருந்து எடுக்கும் தண்ணீரால்தான் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதோடு, பல நோய்களையும் தீர்க்கிறது. பிரம்மனுக்கே சாப விமோசனம் கிடைத்த ஊர் என்பதால், எத்தகைய துன்பத்துக்கும் பாவத்துக்கும் இங்கே விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

உண்மையில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த  இக்கோயிலை, தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜராஜ சோழன்தான் கண்டெடுத்துக் கட்டியுள்ளார். அவருக்குப் பின் அவருடைய மகன் முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் பேரன் ராஜாதிராஜன் ஆகியோர் வரை பராமரித்திருக்கிறார்கள். அவர்கள் மூவரின் திருப் பணிகள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன. இந்தத் திருக்கோயிலின் நாயகனாம் அருள்மிகு சுத்த ரத்தினேஸ்வரரை, ராஜராஜ சோழத்தேவர் கண்டடைந்த திருக்கதையும் அதியற்புதமானதுதான்!

Comments